சினிமா

‘பத்மாவதி’ படத்தை ரிலீஸ் செய்ய தடை கேட்ட வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

Published On 2017-11-28 07:03 GMT   |   Update On 2017-11-28 07:03 GMT
‘பத்மாவதி’ திரைப்படம் வெளிநாடுகளில் வெளியிடுவதை நிறுத்தக்கோரிய வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், ‘பத்மாவதி’.

‘வியாகாம் 18’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல மாநிலங்கள் இந்த படத்துக்கு தடையும் விதித்து உள்ளன.

இந்த படத்துக்கு தணிக்கைக்குழு இன்னும் சான்றிதழ் வழங்காததால் வருகிற 1-ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்த தயாரிப்பு நிறுவனம், தற்போது வெளியீட்டு தேதியை தள்ளிவைத்து உள்ளது. எனினும் வெளிநாடுகளில் 1-ந்தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ‘பத்மாவதி’ திரைப்படத்தை இந்தியாவுக்கு வெளியே 1-ந் தேதி வெளியிடுவதை நிறுத்துமாறு தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிடக்கோரி எம்.எல்.சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.



இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்திய தணிக்கைக்குழு சான்று அளிக்கும் வரை ‘பத்மாவதி’ திரைப்படத்தை எங்கும் வெளியிடப்போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News