சினிமா

சசிகலாவின் சொகுசு வசதிகளை அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி. ரூபா - கமலஹாசனுடன் திடீர் சந்திப்பு

Published On 2017-11-27 16:41 GMT   |   Update On 2017-11-27 18:16 GMT
பெங்களூரு சிறையில் சசிகலாவின் சொகுசு வசதிகளை அம்பலப்படுத்திய டி.ஐ.ஜி ரூபா, நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசியுள்ளார்.
சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் வாங்கப்பட்டு இருப்பதாக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார். சிறையில் சசிகலா சுதந்திரமாக நடமாடுகிறார் என்றும் கைதி உடை அணியவில்லை என்றும் சமையல் செய்து சாப்பிட அறை ஒதுக்கி கொடுத்து இருப்பதாகவும் அம்பலப்படுத்தினார். இச்சம்பவம் தமிழகத்திலும் கர்நாடகாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டது, ரூபா வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பெங்களூரு சிறையில் மோசடியை வெளிப்படுத்திய ரூபா, நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேசினார். நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் ஈடுபட தயாராகி வருகிறார். கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். லஞ்ச ஊழலுக்கு எதிராக கமல்ஹாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிப்பதாக குற்றம்சாட்டிய டி.ஐ.ஜி ரூபா டெல்லியில் கமல்ஹாசனை சந்தித்து உள்ளார்.

இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு உள்ள ரூபா, ஒருவரை நான் சந்திப்பதாலோ அல்லது அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதாலோ நான் அவருடைய கொள்கைகளையும், செயல்பாடுகளையும் ஏற்றுக் கொள்வதாக ஆகிவிடாது. மேலும் இது எனது பணியில் ஒரு போதும் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஒருவர் பல தரப்பினரையும் சந்தித்து பேசுவதால் அவர் தனது சுயதன்மையை இழந்துவிடுவது இல்லை என கூறியுள்ளார்.
Tags:    

Similar News