சினிமா

‘மெர்சல்’ விவகாரம்: விஜய்க்கு ஆதரவாக களத்தில் குதித்த பிரபல தயாரிப்பாளர்

Published On 2017-10-28 10:59 GMT   |   Update On 2017-10-28 10:59 GMT
‘மெர்சல்’ விவகாரத்தில் அனைவரையும் மதிப்பவர் விஜய். அவரை மதத்தை குறிப்பிட்டு விமர்சிப்பதா? என்று எச்.ராஜாவுக்கு சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘மெர்சல்’ படம் சர்ச்சை தொடர்பாக விமர்சனம் செய்த பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் விஜய் கிறிஸ்தவர் என்று சுட்டிக்காட்டி பேசினார். இதற்கு திரைஉலகினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் படத்தயாரிப்பாளரும், பா.ஜனதா அறிவுசார் பிரிவு மாநில துணை தலைவருமான பி.டி.செல்வகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விஜய் நடித்த மெர்சல் படகாட்சிகள் பற்றி கூறிய எச்.ராஜா மதத்தை சுட்டிக்காட்டி விஜய்யை விமர்சனம் செய்தது தவறு. அவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். மனித நேயத்துடன் அனைத்து ரசிகர்களையும் ஜாதி, மதம் கடந்து நேசிக்கிறார்.

அவருடைய ரசிகர் மன்ற மாநில தலைவர் புஸ்சி ஆனந்த் இந்து மதத்தை சார்ந்தவர். அவரிடம் பணிபுரிபவர்கள் அனைவரும் இந்து. ஜாதியை அவர் பிரித்து பார்ப்பது இல்லை.



அனைவரையும் சமமாகவே நினைத்து பழகுகிறார். கடந்த 25 வருடங்களாக மனித நேயத்தை மட்டுமே மதிக்கிறார். எந்த வித வேறுபாடும் இல்லாமல் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் படிக்க உதவி செய்து வருகிறார். கட்சி பாகுபாடு கூட அவர் பார்ப்பது இல்லை. கார்கில் போர் நேரத்தில் தமிழ்நாட்டில் அதிக நிதி திரட்டி கொடுத்தவர் விஜய். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நேரில் களம் இறங்கியவர். நீட் தேர்வு விவகாரத்தில் இறந்த மாணவி வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

மெர்சல் படத்தில் விஜய் நெற்றியில் பட்டை தீட்டி, குங்குமம் வைத்து இந்துவாகவே நடித்திருக்கிறார். அவர் மத வேற்றுமை கருதி இருந்தால் அப்படி நடிக்க மறுத்து இருக்கலாம். பொதுவாக தென்மாவட்டங்களில் இந்து கோவில், கிறிஸ்தவ தேவாலயம் எல்லாவற்றையும் கோவில் என்று தான் சொல்வார்கள்.

படத்தில் வரும் வசனத்தை வைத்து எச்.ராஜா போன்றவர்கள் மாத பிரிவினையை தூண்டுவது மோசமான முன் உதாரணம்.



நமது இந்திய நாட்டில் பல்வேறு மதம், இனம் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் உலகில் நமக்கு பெருமை தருகிறது. மதத்தை பிரித்து பார்க்க பிரதமர் மோடி சொல்ல வில்லை.

விஜய் மன்றத்தை சேர்ந்தவர்கள் பா.ஜனதாவிலும் இருக்கிறார்கள். எச்.ராஜா போன்றவர்களால் பா.ஜனதாவுக்கு கெட்ட பெயர் ஏற்படும். குறுகிய மனப்பான்மையை இனியாவது அவர் கைவிட்டால் பா.ஜனதாவுக்கு நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News