சினிமா

நானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்வோம்: தாடி பாலாஜி மனைவி பேட்டி

Published On 2017-10-14 04:58 GMT   |   Update On 2017-10-14 04:58 GMT
போலீசார் என்னை தொடர்ந்து மிரட்டினால் நானும் எனது மகளும் தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என்று நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கூறியுள்ளார்.
திரைப்பட நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும்(வயது 30) இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் போலீசில் புகார் செய்துள்ளனர். நித்யா தனது மகளுடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னை பற்றிய வதந்திகள் பரவுவதால் மிகுந்த மனவேதனையாக உள்ளது. தினந்தோறும் புதிது புதிதாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இது என்னோடு நின்றுவிடாமல் என் குழந்தையின் வாழ்க்கையையும் பாதிக்கும். போலீசாரிடம் முறையிட்டாலும் பலன் இல்லை. பாலாஜி ஒரு நடிகர் என்பதால் அவருக்கு அரசியல் கட்சியினர், போலீசார், தொலைக்காட்சியினர் உதவி செய்து வருகின்றனர்.

பாலாஜி திருமணமான சிறிது காலத்திலேயே என்னை சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கிவிட்டார். அவரது முதல் மனைவியிடமும் இதேபோன்று நடந்ததால் தான் அவர் விவாகரத்து பெற்றுள்ளார். பாலாஜியை மனநல மருத்துவரிடம் காண்பித்து 2 முறை கவுன்சிலிங் அழைத்து சென்றேன். அதன்பின்னர் அவர் மருத்துவரிடம் வர மறுத்துவிட்டார்.

அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவுக்கும், எனக்கும், போலீஸ்காரர் மனோஜுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது டப்பிங் செய்யப்பட்டது. நவீன் என்பவர் எனக்கு உதவுபவர்போல் நடித்து, கடைசியில் பாலாஜிக்கு உதவி செய்து என்னை ஏமாற்றிவிட்டார்.



பாலாஜி, சமூக அந்தஸ்தை பாதுகாப்பதற்காகவும், எனக்கு என் பெற்றோர் தந்த வீட்டில் அவர் இருந்தால் படவாய்ப்புகள் கிடைத்து வருமானம் அதிகம் வரும் என்ற தவறான எண்ணத்தாலும் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறுகிறாரே தவிர நானோ, எனது மகளோ அவருக்கு முக்கியம் அல்ல.

எனது மகளை என்னிடம் இருந்து பிரித்து சென்றுவிட்டால், நான் அவருடன் சென்றுவிடுவேன் என்று எண்ணி அதற்கான முயற்சிகளை செய்து வருகிறார்.

நான் கொடுத்த புகாரில் வழக்கு பதிவு செய்த பிறகும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஒன்றும் செய்யாத என்னை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று இரவு 11.30 மணி வரை போலீஸ் நிலையத்தில் காத்திருக்க வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறார்கள்.

வில்லிவாக்கம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், நான் வீடியோ வெளியிடக்கூடாது, பத்திரிகையாளர்களை சந்திக்கக் கூடாது என என்னை மிரட்டுகிறார். நான் மனவலிமை உள்ளவளாக இருந்தாலும், இதுபோன்ற நிலை தொடர்ந்தால் நானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறுவழி தெரியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News