சினிமா

நடிகை கடத்தல் வழக்கில் சிக்கினால் பல்சர் சுனிலுக்கு ரூ.3 கோடி: போலீஸ் தரப்பு வக்கீல் தகவல்

Published On 2017-09-28 05:43 GMT   |   Update On 2017-09-28 05:43 GMT
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கினால் பல்சர் சுனிலுக்கு ரூ.3 கோடி தருவதாக திலீப் கூறியதாக ஜாமீன் மனு விசாரணையில் போலீஸ் தரப்பு வக்கீல் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பிரபல நடிகை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அந்த காட்சி செல்போனிலும் ஆபாசமாக படம் பிடிக்கப்பட்டது.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் முதலில் பிரபல ரவுடி பல்சர் சுனில் மற்றும் அவரது கூட்டாளி கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். பல்சர் சுனில் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டதாக நடிகர் திலீப்பும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

தனக்கு ஜாமீன் கேட்டு நடிகர் திலீப் தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கனவே 4 முறை கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் 5-வது முறையாக திலீப் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் நடந்தது.



அப்போது திலீப்பின் வக்கீல் வாதாடும்போது திலீப் மீது போலீசார் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய பல்சர் சுனில் கூறியதை வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரை விசாரணை கைதியாக மாற்றவும் போலீசார் முயற்சி செய்கிறார்கள். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று வாதாடினார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான வக்கீல் கோர்ட்டில் திலீப்புக்கு எதிராக மேலும் பல ஆவணங்களை தாக்கல் செய்தார். மேலும் அவர் வாதாடும்போது திலீப் தற்போது ஜெயிலில் இருந்தாலும் சாட்சியங்களை கலைக்க முயற்சிக்கிறார். நடிகையை கடத்தி ஆபாச படம் எடுக்க பல்சர் சுனிலுக்கு ரூ.1½ கோடி கொடுப்பதாக திலீப் பேரம் பேசியிருந்தார். மேலும் பல்சர் சுனில் போலீசில் சிக்கிக்கொண்டால் அந்த தொகையை ரூ.3 கோடியாக உயர்த்தி கொடுப்பதாகவும் அவர் உறுதி அளித்திருந்தார் என்று குறிப்பிட்டார்.



மேலும் இந்த வழக்கில் இதுவரை 21 பேரிடம் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சினிமாதுறையை சேர்ந்த மேலும் 4 பிரபலங்களிடம் இருந்து ரகசிய வாக்குமூலம் பெற வேண்டியது இருப்பதாகவும் போலீஸ் தரப்பு வக்கீல் கூறினார்.

அப்போது இந்த வழக்கில் முக்கிய ஆதாரமான நடிகையை ஆபாசமாக படம் பிடித்த செல்போன் கிடைத்து விட்டதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த போலீஸ் தரப்பு வக்கீல் செல்போனை கைப்பற்றுவது தான் இந்த வழக்கில் மிகப்பெரும் சவாலாக உள்ளது. அதற்கான முயற்சி களை தீவிரமாக மேற் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார். இது போன்ற சூழ்நிலையில் திலீப்புக்கு ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதைதொடர்ந்து திலீப்பின் ஜாமீன் மனு மீதான உத்தரவை தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார். இதனால் திலீப்புக்கு ஜாமீன் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலவுகிறது.

Tags:    

Similar News