சினிமா

மலையாள சினிமாவில் ஆணாதிக்கம் : பாவனா குற்றச்சாட்டு

Published On 2017-09-10 11:36 GMT   |   Update On 2017-09-10 11:36 GMT
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த நடிகை பாவான, மலையாள பட உலகில் ஆணாதிக்கம் அதிகம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மலையாள பட உலகில் பிரபலமாக இருப்பவர் நடிகை பாவனா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் இவருக்கு மலையாள பட உலகில் உள்ள சில நடிகர்களுடன் மோதலும் உருவானது.

இதனால் நடிகை பாவனா பட வாய்ப்புகளை இழந்தது உள்பட பலசோதனைகளையும் சந்திக்கும் சூழ்நிலை உருவானது. ஆனாலும் தனது துணிச்சலை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. இதனால் அவர் தனக்கு நேர்ந்த சோதனைகளில் இருந்து மீண்டுவிடுகிறார்.

தனது திரையுலக அனுபவங்கள் பற்றி நடிகை பாவனா கூறியதாவது:-

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எந்தவித சுதந்திரமும் கிடையாது. கதாநாயகர்களை மையமாக வைத்துதான் மலையாள சினிமா உலகம் இயங்குகிறது. மலையாள சினிமாவில் ஆணாதிக்கம் நிறைந்து காணப்படுகிறது.

திரைப்படம் விற்பனை முதல் அனைத்தும் கதாநாயகர்களை முன்வைத்தே நடக்கிறது. எந்த நடிகைக்காகவும் யாரும் படத்தை போட்டிபோட்டு வாங்குவது கிடையாது. சம்பளத்தையும் உயர்த்தி தரமாட்டார்கள்.

மலையாள திரையுலகில் நடிகைகள் என்றால் எப்போதும் அவர்களுக்கு 2- வது இடம்தான் கொடுப்பார்கள். பட வாய்ப்புகளுக்காக நடிகைகள் இறங்கிச் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நான் பட வாய்ப்புக்காக யாரிடமும் இதுவரை கெஞ்சியது இல்லை.

சினிமா துறையில் பல இடையூறுகள் இருந்தாலும் பெண்கள் தைரியமாக இந்த துறைக்கு வரவேண்டும். சினிமாவில் நடைபெறும் சில அசம்பாவிதங்களை பார்த்து பெண்கள் வீட்டிலேயே முடங்கிவிடக்கூடாது. பெண்களுக்காக மலையாள திரையுலகில் தனி சங்கமே உள்ளதால் அவர்களுக்காக அந்த சங்கம் போராடும்.

எனது வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான சில சம்பவங்களில் இருந்து நான் மீண்டு வருவதற்கு எனது ரசிகர்கள் அளித்த மனவலிமையும், எனது குடும்பத்தினர் கொடுத்த மன தைரியமும் பெரிதும் உதவியது. எந்த சோதனை வந்தாலும் என்னை யாராலும் வீழ்த்தமுடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News