சினிமா

துருக்கி எல்லையில் விக்ரம் படக்குழுவினருக்கு சிக்கல்

Published On 2017-09-10 09:47 GMT   |   Update On 2017-09-10 09:47 GMT
துருக்கி எல்லையில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படக்குழுவினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் சில முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், துருக்கி எல்லையில் அதிகாரிகள் சிலர் படக்குழுவினரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளது படக்குழு. இது தொடர்பாக கவுதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் படக்குழுவினர் துருக்கி எல்லையில் சிக்கியுள்ளனர். 24 மணி நேரங்களுக்கு மேலாக சாலையில் நிற்கின்றனர். படக்குழுவிடம் சட்டபூர்வமான ஆவணங்கள் இருந்தும் படப்பிடிப்பு சாதனங்களுடன் குழுவை உள்ளே விட அதிகாரிகள் அனுமதி மறுத்து வருகின்றனர்.

படக்குழுவினர் ஜார்ஜியாவிலிருந்து சாலை மார்க்கமாக இஸ்தான்புல் செல்கின்றனர். கேமரா, மற்றும் படப்பிடிப்புக்குத் தேவையான ஆடைகளுடன் சென்றனர். இப்போது எல்லையில் அனுமதி கிடைக்காமல் சிக்கியுள்ளனர். அதிகாரிகளின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை.

உங்கள் அழகான நாட்டில் ஒரு படம் எடுப்பதை நாங்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குகிறோம் இதை வாசிப்பவர்கள் யாராக இருந்தாலும் தயவுகூர்ந்து உதவவும். என் படக்குழு குறித்து கவலையடைந்துள்ளேன்.

இவ்வாறு கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமுடன் ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.
Tags:    

Similar News