சினிமா

நடிகை கடத்தல் வழக்கில் திலீப் ஜாமீன் மனு விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு

Published On 2017-08-18 09:55 GMT   |   Update On 2017-08-18 09:55 GMT
நடிகை கடத்தல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணையை 22-ந் தேதிக்கு தள்ளிவைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டார். படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு வீடு திரும்பியபோது கடந்த பிப்ரவரி மாதம் 17-ந்தேதி இந்த கொடூர சம்பவம் நடந்தது.

நடிகை கொடுத்த புகாரின் பேரில் பிரபல ரவுடி பல்சர் சுனில், அந்த நடிகையின் கார் டிரைவர் மார்ட்டின், பல்சர் சுனிலின் கூட்டாளிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு அதிரடியாக நடிகர் திலீப் (வயது 48) கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி கைது செய்யப்பட்டு ஆலுவா கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.



இதைதொடர்ந்து நடிகர் திலீப் தனக்கு ஜாமீன் கேட்டு அங்கமாலி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் திலீப் தனது வக்கீல் ராமன் பிள்ளை மூலம் கடந்த 10-ந்தேதி கேரள ஐகோர்ட்டில் 2-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி 18-ந்தேதிக்கு (இன்று) விசாரணையை தள்ளிவைத்தார்.

அதன்படி திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் திலீப்புக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜாமீன் மனு விசாரணை வருகிற 22-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) நீதிபதி தள்ளிவைத்தார். ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைக்கப்பட்டதால் நடிகர் திலீப் இன்றுடன் 40-வது நாளாக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
Tags:    

Similar News