சினிமா

ராக்கி சவந்துக்கு பிடிவாரண்டு: பஞ்சாப் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-08-09 06:18 GMT   |   Update On 2017-08-09 06:18 GMT
சர்ச்சைக்குரிய கருத்து தெரித்த நடிகை ராக்கி சவந்தை கைது செய்ய பஞ்சாப் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
பிரபல இந்தி நடிகை ராக்கி சவந்த், டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “வால்மீகி ஒரு கொலைகாரர்” என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவர், “நான் யாரையும் புண்படுத்துவதற்காக இதை சொல்லவில்லை. இருப்பினும் அறியாமையினால் நான் இதை சொல்லி விட்டேன். அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என கூறினார்.

இருப்பினும், இது தொடர்பாக பஞ்சாப் மாநிலம், லூதியானா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நரிந்தர் ஆதித்யா என்ற வக்கீல் வழக்கு தொடுத்துள்ளார். அதில் வால்மீகி இனத்தவரை நடிகை ராக்கி சவந்த் புண்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டி, நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளார்.

இந்த வழக்கில் ராக்கி சவந்த் முன்ஜாமீன் கேட்டு மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த செசன்ஸ் நீதிபதி குர்பிர் சிங், அவர் 7-ந் தேதி (நேற்று முன்தினம்), மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்து, ஜாமீன்தாரர்களை ஆஜர்படுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவர் அதன்படி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடையவில்லை. அவர் அமெரிக்காவில் இருப்பதால் சரண் அடைய இயலவில்லை என்று அவரது வக்கீல் கூறியதை கோர்ட்டு ஏற்கவில்லை.

இதையடுத்து நடிகை ராக்கி சவந்தை கைது செய்ய மாஜிஸ்திரேட்டு விஷாவ் குப்தா பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை அவர் செப்டம்பர் 5-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதற்கிடையே ராக்கி சவந்த் சரண் அடைவதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு அவரது வக்கீல்கள், மாவட்ட செசன்ஸ் கோர்ட்டை நாடி உள்ளனர்.
Tags:    

Similar News