சினிமா

இறுதி கட்டத்தில் நடிகை கடத்தல் வழக்கு: திலீப்புடன் தொடர்புடைய மேலும் 2 பேர் விரைவில் கைது

Published On 2017-08-05 06:36 GMT   |   Update On 2017-08-05 06:36 GMT
நடிகை கடத்தல் வழக்கில் திலீப்புடன் தொடர்புடைய மேலும் 2 பேர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும், விசாரணை இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் பிரபல நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

நடிகையை காரில் கடத்திச் சென்றவர்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததை செல்போனில் படம் எடுத்தனர். வழக்கின் முக்கிய சாட்சியமான அந்த செல்போனை கண்டுபிடிக்க போலீசார் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் இதுவரை அந்த செல்போன் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதுபற்றி இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி பல்சர் சுனில் கூறும்போது, வழக்கின் பின்னணியில் பெரும் முதலைகள் உள்ளது. உண்மை விரைவில் வெளியா கும். அப்போது பலரது முகமூடி கிழியும் என கூறி இருந்தார்.

இதையடுத்து நடிகையை கடத்திய சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது யார்? நடிகர் திலீப் என்றால் அவருக்கு பின்னணியில் இருந்து உதவி செய்தவர்கள் யார்? யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கினர்.



இது தொடர்பாக திலீப்பின் இப்போதைய மனைவி காவ்யா மாதவன், அவரது தாயார் ஷியாமளா, எம்.எல்.ஏ.வும், நடிகருமான முகேஷ், நடிகர் இடவேள பாபு, பாடகியும், டெலிவி‌ஷன் தொகுப்பாளினியுமான ரிமிடோமி ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இதில்,பல முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதுபற்றி விசாரணை குழுவில் இடம் பெற்ற அதிகாரி ஒருவர் கூறும்போது, நடிகை கடத்தல் வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. முக்கிய தடயங்கள், தேவையான சாட்சிகளை திரட்டி விட்டோம். இந்த வழக்கு தொடர்பாக வெகு விரைவில் 2 பேர் கைது செய்யப்பட உள்ளனர். அதன் பிறகு இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்றார்.

நடிகை கடத்தல் வழக்கில் அடுத்து கைதாக போகும் 2 பேர் யார்? என்ற பரபரப்பு மலையாள திரையுலகில் கிளம்பி உள்ளது. ஆனால் அதுபற்றிய எந்த விவரத்தையும் போலீசார் வெளியிடவில்லை.



இதற்கிடையே திலீப்புக்காக ஐகோர்ட்டில் இதுவரை ஆஜராகி வந்த வக்கீலுக்கு பதில் புதிய வக்கீல் ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர், காவ்யாமாதவன் விவாகரத்து வழக்கில் காவ்யாமாதவனின் முதல் கணவர் நிஷால் சந்திராவுக்காக கோர்ட்டில் ஆஜரான ராமன் பிள்ளை என தெரிய வந்துள்ளது. இவரை தனக்காக வாதாட வருமாறு திலீப்பே உறவினர் ஒருவர் மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அதனை அவர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

திலீப்பின் ஜாமீன் மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி ஆன நிலையில் மீண்டும் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். அப்போது ராமன்பிள்ளை, திலீப்புக்காக ஆஜராவார் என தெரிகிறது.

Tags:    

Similar News