சினிமா

போதை பொருள் விவகாரம்: நவ்தீப்பிடம் தீவிர விசாரணை நடத்திய அதிகாரிகள்

Published On 2017-07-25 05:47 GMT   |   Update On 2017-07-25 05:47 GMT
போதை பொருள் கும்பலுடன் தொடர்பு விவகாரத்தில் நடிகர் நவ்தீப்பிடம் விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.
தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நடிகர்கள் நவ்தீப், தருண், பி.சுப்புராஜூ, தனிஷ், நந்து, நடிகைகள் சார்மி, முமைத்கான், டைரக்டர் பூரி ஜெகன்னாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே.நாயுடு உள்ளிட்ட 12 பேர் பெயர்களை வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து 12 பேருக்கும் சிறப்பு விசாரணைக்குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இவர்களில் இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர்கள் தருண், பி.சுப்புராஜூ ஆகியோர் சிறப்பு விசாரணைக்குழு முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை அளித்துவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று நடிகர் நவ்தீப் சிறப்பு விசாரணைக்குழு முன்பு ஆஜரானார். அவரிடம் விசாரணைக்குழு அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறிய விசாரணைக்குழு அதிகாரிகள் நடிகைகள் சார்மி மற்றும் முமைத்கான் ஆகியோரும் விரைவில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் கூறினர்.
Tags:    

Similar News