சினிமா

கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் துணையாக இருக்கும்: விஷால் பேட்டி

Published On 2017-07-20 06:40 GMT   |   Update On 2017-07-20 06:41 GMT
அமைச்சர்களுடன் மோதல் விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் துணையாக இருக்கும் என்று நடிகர் விஷால் கூறினார்.
விஷால் நடித்துள்ள புதிய படம் ‘துப்பறிவாளன்’. பிரசன்னா, பாக்யராஜ், சிம்ரன், வினய், ஆண்ட்ரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். மிஷ்கின் டைரக்டு செய்துள்ளார்.

இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. நடிகர் விஷால், நடிகை சிம்ரன், டைரக்டர்கள் மிஷ்கின், சுசீந்திரன், பாண்டிராஜ், தயாரிப்பாளர்கள் கே.ஈ.ஞானவேல்ராஜா, நந்தகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நான் சிம்ரனின் ரசிகன் அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. திருட்டு வி.சி.டியை ஒழிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

திருட்டு வி.சி.டி.க்கு காரணமானவர்களை அடையாளம் கண்டுவிட்டோம். இன்னும் 2 வாரத்தில் அவர்கள் யார்? என்பதை வெளியிடுவோம். தயாரிப்பாளர்கள் சங்கமும் நடிகர் சங்கமும் ஆக்கப்பூர்வமான பணிகளில் தொடர்ந்து ஈடுபடும்.

நான் காமராஜரைப்போல் இருப்பதாக சொன்னார்கள். நேர்மையாக இருப்பேன். ஆனால் திருமணம் செய்து கொள்வேன். திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்றால் லட்சுமிகரமான பெண் வருத்தப்படுவார்.

அமைச்சர்களுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையே வார்த்தைப்போர் நடந்து வருகிறது. இது குறையும் என்று எதிர்பார்க்கிறேன். கமல்ஹாசன் தெளிவானவர். விஷயங்கள் தெரிந்தவர். கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதால் அவருக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் நடிகர் சங்கம் அவருக்கு துணையாக இருக்கும்.

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் கட்சி ஆரம்பித்தால் யாருக்கு ஆதரவு? என்று என்னிடம் கேட்கப்படுகிறது. இருவரும் அரசியலுக்கு வருவதுபற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர்கள் அரசியலுக்கு வந்தால் யாருக்கு ஆதரவு? என்று சொல்கிறேன்.

சினிமாவுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்தால் திரையுலகுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். எனவே இந்த வரியை ரத்து செய்ய வேண்டும் என்று அரசிடம் வற்புறுத்தி இருக்கிறோம். வருகிற 24-ந்தேதி இதுகுறித்து அரசு குழுவினருடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. அப்போது எங்களுக்கு சாதகமான முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம், உணவு பண்டங்கள் கட்டணம், பார்க்கிங் கட்டணம் என்று படம் பார்க்க வருபவர்கள் அதிகம் செலவிட வேண்டி உள்ளது. கட்டணங்களை குறைத்து ரசிகர்கள் அதிகமாக படம் பார்க்க வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

இவ்வாறு விஷால் கூறினார்.
Tags:    

Similar News