சினிமா

ரஜினியை மிரட்டியது கண்டிக்கத்தக்கது: டைரக்டர் வீ.சேகர்

Published On 2017-05-15 06:49 GMT   |   Update On 2017-05-15 06:49 GMT
ரஜினியை மிரட்டியது கண்டிக்கத்தக்கது என்று நெல்லையில் டைரக்டர் வீ.சேகர் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
பிரபல சினிமா டைரக்டர் வீ.சேகரின் திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் ‘சரவணப்பொய்கை‘ என்ற படம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை வீ.சேகர் டைரக்டு செய்ய, அவருடைய மகன் காரல் மார்க்ஸ் கதாநாயகனாகவும், அருந்ததி கதாநாயகியாகவும், விவேக், கருணாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபலப் படுத்தும் வகையில் வீ.சேகர், காரல் மார்க்ஸ் ஆகியோர் நேற்று நெல்லைக்கு வந்திருந்தனர். நெல்லை சந்திப்பில் உள்ள பேரின்பவிலாஸ் தியேட்டரில் தொழிலாளர்கள் மத்தியில் ‘சரவணப்பொய்கை‘ சினிமா பாடல் மற்றும் ஸ்டிக்கர்களை வெளியிட்டனர்.

பின்னர் வீ.சேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் பெரும்பாலும் குடும்பப்பாங்கான படங்களை எடுத்து உள்ளேன். ஏற்கனவே 17 படங்களை டைரக்டு செய்து உள்ளேன். என்னுடைய படங்களை 80 சதவீதம் பெண்கள் பார்ப்பார்கள். ஆனால் தற்போது பெண்கள் டி.வி. சீரியல்களில் மூழ்கி கிடக்கின்றனர். தியேட்டருக்கு கல்லூரி மாணவ, மாணவிகளும், தொழிலாளிகளும் மட்டுமே வந்து படம் பார்க்கின்றனர்.



இந்த நிலையில் தற்போது 18-வது படமாக ‘சரவணப்பொய்கை‘ படத்தை டைரக்டு செய்து உள்ளேன். தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப இந்த படத்தில் காதல் கதையை கூறிஉள்ளேன். சினிமாவின் ‘டிரண்ட்‘ மாறும்போது டைரக்டர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் சினிமாவில் வெற்றி பெற முடியும். இந்த படத்தில் என்னுடைய மகன் காரல் மார்க்ஸ் சினிமா தியேட்டரில் வேலை செய்யும் தொழிலாளியாக நடித்து உள்ளார். அவருக்கு தியேட்டர் முதலாளியின் மகளுடன் ஏற்பட்ட காதல் வெற்றி பெற்றதா? என்பதை விறுவிறுப்பாக கூறிஉள்ளேன்.

புதிய படங்களின் சி.டி., டி.வி.டி.க்கள் தயாரித்து விற்பனை செய்வது பெருமளவு குறைக்கப்பட்டு உள்ளன. இணையதளம் மூலம் புதிய படங்கள் வெளியாவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தகைய இணையதளங்களை முடக்க வேண்டும்.

நடிகர் ரஜினிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. பொதுவாக பிரபலமானவர்கள் வரலாற்றை சினிமா எடுக்க விரும்பினால் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் பிரச்சினையை சட்டப்பூர்வமாக மட்டுமே அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News