சினிமா

டி.வி.களுக்கு ஏன் படங்களை இலவசமாக வழங்க வேண்டும்: காப்புரிமை பிரச்சனை எழுப்பும் ஞானவேல்ராஜா

Published On 2017-03-22 02:46 GMT   |   Update On 2017-03-22 02:46 GMT
இளையராஜாவை தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்தும் காப்புரிமை பிரச்சனை எழும்பத் தொடங்கி உள்ளது. டி.வி. சேனல்களுக்கு ஏன் பாடல், படங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியன் இடையேயான காப்புரிமை பிரச்சனை சினிமா வட்டாரங்கள் மட்டுமின்றி, அவர்களது  ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த பிரச்சனையில் இளையராஜா செய்தது சரியே என்று ஒருதரப்பினரும்,  அவரது முடிவு தவறு என்று மற்றொரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.  

எனினும் இந்த பிரச்சனைக்கு இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், மற்றொரு காப்புரிமை பிரச்சனையும் அதனுடன் இணைய  உள்ளது. அது என்னவென்றால், தயாரிப்பாளர்கள் தங்களது படங்கள், பாடல்கள் மற்றும் காமெடிகளை தொலைக்காட்சி  சேனல்களுக்கு ஏன் இலவசமாக வழங்க வேண்டும். அதற்கு தயாரிப்பாளர்களாகிய எங்களிடம் காப்புரிமை உள்ளது. எனவே  அதற்குரிய தொகையை ஏன் வசூலிக்கக் கூடாது என்று ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தலைவரும், தயாரிப்பாளருமான  கே.இ.ஞானவேல்ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.



தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருகிற ஏப்ரல் 2-ந் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் டி.சிவா, கேயார், விஷால்  உள்ளிட்ட 5 அணிகள் களமிறங்குகின்றன. இதில் விஷால் அணி சார்பாக மதுரையில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள  ஞானவேல்ராஜா இதனை தெரிவித்தார்.

மேலும் அவருடன் இயக்குநர் மிஷ்கின், பாண்டிராஜ், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும்  காப்புரிமை தொடர்பான முடிவுகள், தேர்தலுக்கு பின்னர் எடுக்கப்படலாம்.

Similar News