சினிமா

'சி-3' படத்தை வெளியிடுவதாக அறிவித்த இணைய தளம் முடக்கம்

Published On 2017-02-11 10:04 GMT   |   Update On 2017-02-11 10:04 GMT
சிங்கம்-3 படத்தின் ஒரு சில காட்சிகளை ‘லைவ்’ ஆக பேஸ்புக்கில் வெளியிட்ட இணைய தளம் முடக்கப்பட்டது. அது குறித்த செய்தியை பார்ப்போம்...
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள படம்‘சி-3’. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் இந்த படத்தை இணைய தளத்தில் வெளியாகாமல் தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. கோர்ட்டும் இந்த படத்தை இணையத்தில் வெளியிட தடைவிதித்துள்ளது. சூர்யா அவரது ரசிகர்களுக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வேண்டுகோளில், ‘சி-3’படம் அனைவரையும் திருப்திப்படுத்தும் என்று நம்புகிறேன். உங்கள் அன்பு ஆசீர்வாதத்துக்கு நன்றி.

அனைவரும் தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பாருங்கள் என்று எனது பணிவான வேண்டுகோளை வைக்கிறேன்’ என்று தெரிவித்து இருந்தார்.

இயக்குனர் ஹரியும், “ எல்லோரும் இதை தியேட்டரில் பாருங்கள். யாராவது இணையதளத்தில் வெளியிட்டு எங்கள் கடினமான உழைப்பை வீணாக்கி விடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, “இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்கள் வெளியிடப்படுவதை கடுமையாக சாடி இருந்தார்.

தமிழ்நாட்டில் இந்த படம் வெளியான 300-க்கும் அதிகமான தியேட்டர்களில் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளம் ‘சி-3’ படத்தை நேரடியாக வெளியிடப் போவதாக பகிரங்கமாக சவால் விட்டது. படம் திரைக்கு வந்ததும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தின் ஒரு சில காட்சிகளை ‘லைவ்’ ஆக பேஸ்புக்கில் வெளியிட்டது. ஆனால் அது உடனடியாக முடக்கப்பட்டது. வேறு இணைய தளங்களில் வந்தாலும் முடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர திருச்சியில் ‘சி-3’ படத்தை செல்போனில் பதிவு செய்த 8 பேர் பிடிப்பட்டனர்.

Similar News