சினிமா

நடிகராக கூடாது என்று பெற்றோர் என்னை தடுத்தனர்: அமீர்கான்

Published On 2016-10-25 03:27 GMT   |   Update On 2016-10-25 03:27 GMT
“சினிமா மீது என் பெற்றோருக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. நான் நடிகராவதை தடுத்தார்கள்” என்று அமீர்கான் கூறியுள்ளார்.
நடிகர் அமீர்கான் இதுகுறித்து மும்பையில் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் கதாநாயகனானது எதிர்பாராமல் நடந்த ஒன்று. எனது பெற்றோருக்கு சினிமா மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. நான் நடிகராவது அவர்களுக்கு பிடிக்கவில்லை. சினிமா ஆசையை சொன்னபோது கடுமையாக எதிர்த்தார்கள். நன்றாக படித்து டாக்டராகவோ அல்லது என்ஜினீயராகவோ ஆகச்சொன்னார்கள்.

அந்த இரண்டு வேலைக்கும்தான் சமூகத்தில் மரியாதை உள்ளது. நன்றாக சம்பாதிக்கலாம். அது நிரந்தரமான தொழில் என்று ஆசை காட்டினார்கள். அது பிடிக்கவில்லை என்றால் சார்ட்டட் அக்கவுண்டுக்கு படி என்றனர். சினிமா நிரந்தரமான தொழில் கிடையாது. நடிகராக அங்கு நிலைத்து நிற்பது கடினம் என்றும் பயமுறுத்தினார்கள்.

சினிமாவில் நடித்து முன்னுக்கு வருவது கஷ்டம் என்று எனது தந்தை கூறினார். அவர் ஏற்கனவே டைரக்டராக இருந்தவர். ஆனாலும் நான் நடிக்க வருவதை விரும்பவில்லை. ஆனால் நடிப்பு ஆசையை என்னால் விட முடியவில்லை. வீட்டுக்கு தெரியாமல் புனேயில் உள்ள திரைப்படக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன். முதல் தடவையாக எனது நண்பர் எடுத்த குறும்படத்தில் நடித்தேன். அந்த படத்தை நடிகை சபனா ஆஸ்மி பார்த்தார்.

என்னை அவர் அழைத்து சிறப்பாக நடித்து இருந்ததாக பாராட்டினார். சினிமாவில் நீ நடித்தே தீர வேண்டும் என்றார். அது உற்சாகமளித்தது. அதன் பிறகு சினிமா வாய்ப்பு தேடினேன். கதாநாயகன் வாய்ப்பு கிடைத்து, இன்று உயர்ந்த இடத்துக்கு வந்து விட்டேன்.”

இவ்வாறு அமீர்கான் கூறினார்.

Similar News