செய்திகள்
கோப்புப்படம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு

Published On 2019-06-10 11:47 GMT   |   Update On 2019-06-10 11:47 GMT
மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 328 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 919 கனஅடியாக அதிகரித்தது.
மேட்டூர்:

கடந்த சில மாதங்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாத காரணத்தாலும், கடும் வறட்சி காரணத்தினாலும் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 100 கனஅடிக்கு குறைவாகவே வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருந்ததால் நீர்மட்டமும் படிப்படியாக சரிந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சிலநாட்களாக தமிழக - கர்நாடக எல்லையில் காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் காவிரி உப நதியாக பாலாறு நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது.

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 328 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 919 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை இது மேலும் அதிகரித்து 930 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 45.63 அடியாக உள்ளது.

தற்போது கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கர்நாடகத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றான கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் கபினி அணையில் இருந்து காவிரியில் உபரி நீர் திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந்தேதி நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கி உள்ளதாலும், மேட்டூர் அணையில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததாலும் நாளை மறுநாள் (12-ந்தேதி) மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கமுடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனால் இந்த ஆண்டும் குறுவை சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழை ஏமாற்றியதால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பருவமழை பெய்தால் மட்டுமே காவிரி டெல்டா விவசாயத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News