செய்திகள்

சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

Published On 2019-05-21 05:01 GMT   |   Update On 2019-05-21 05:01 GMT
சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் பழனியில் நடந்தது.

பழனி:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் பழனியில் நடந்தது.

இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தபால் அட்டையில், 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி பழனி தலைமை தபால் அலுவலகம் முன்புள்ள பெட்டியில் போட்டனர்.

இதுகுறித்து மாவட்ட செயலாளர் கூறுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக அரசியலமைப்பு சட்டத்தின்படி தமிழக கவர்னருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது என்றார்.

இதேபோல தேனியிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கவர்னருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News