செய்திகள்

அந்தமான் தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - திருச்சி பூகம்ப ஆய்வாளர் எச்சரிக்கை

Published On 2019-05-06 07:59 GMT   |   Update On 2019-05-06 07:59 GMT
இன்னும் 2 வாரங்களில் அந்தமான் தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக திருச்சி பூகம்ப ஆய்வாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். #AndamanIsland #Earthquake
திருச்சி:

திருச்சியை சேர்ந்தவர் பிரகாஷ். இயற்பியல் பட்டதாரியான இவர் பல ஆண்டுகளாக பூகம்பங்களும், அதனால் ஏற்படும் தொடர் மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்காவின் நாசா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், ஜரோப்பிய பூகம்பவியல் ஆய்வு மையங்களுக்கு அவ்வப்போது மழை எச்சரிக்கை மற்றும் அதை தொடர்ந்து ஏற்படவுள்ள பூகம்பங்கள் குறித்த ஆய்வுகளை அனுப்பி வருகிறார்.

இந்நிலையில் பானி புயல் உருவான நிகோபார் தீவு பகுதிக்கு அருகில் வடக்கு அந்தமான் பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கான வாய்ப்புகள் உருவாகி கொண்டிருப்பதாக பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒடிசாவை புரட்டி போட்ட பானி புயல், நிக்கோபார் தீவுக்கு அருகாமையில் உருவானது. முன்னதாக அதே பகுதியில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 4.5 ரிக்டர் முதல் 5 ரிக்டர் அளவுக்குள் பல முறை நில அதிர்வுகள் ஏற்பட் டது. இதனால் ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால், வானிலை மாற்றம் உருவாகி, காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அதனால் மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பானி புயல் கரை கடந்தது.



இப்போது வடக்கு அந்தமான் பகுதியில் அதே போன்ற ஒரு புவியியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. வங்காள விரிகுடாவின் வடக்கு அந்தமான் பகுதியில் இன்னும் 2 வாரங்களில் 5.5 முதல் 6 ரிக்டர் அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும்.

ஏற்கனவே அந்தமான் தீவுப்பகுதியில் கண்டத்தட்டுகள் நகர்வு அதிகம் நிகழ்வதால் அந்த பகுதியில் நில நடுக்கம் அதிகம் ஏற்படுகிறது. இப்போது பானி புயல் உருவானது. இந்த பானி புயல் 4-ம் வகையை சேர்ந்தது. இது அதிக அழிவை ஏற்படுத்தும். இதைத்தொடர்ந்து ஏற்படவுள்ள பூகம்பங்கள், அதிக சக்தி வாய்ந்ததாகவும், அதிக அழிவை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம்.

கடலுக்கு அடியில் கண்டத்தட்டுகள் உரசுவதால் உருவாகும் வெப்பம், கோடிக்கணக்கான கியூபிக் மீட்டர் கடல் நீரை நீராவியாக்குகிறது. இதனால் திரண்டெழுந்து நகரும் மேகக்கூட்டங்கள் மிகப்பெரிய அளவிலான புயலாக மாறி சேதத்தை உருவாக்கி விடுகின்றன என்பது புவியியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட நிகழ்வு. எனவே கடல் பகுதியில் பூகம்பங்கள் நிகழும்போது மிகப்பெரிய முன்னெச்சரிக்கைக்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AndamanIsland #Earthquake

Tags:    

Similar News