செய்திகள்

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்று முதல் குறையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2019-06-02 00:18 GMT   |   Update On 2019-06-02 00:18 GMT
தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. அதன் தொடர்ச்சியாக கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் கோரத்தாண்டவம் அதிகமாக இருந்தது. அவ்வப்போது சில இடங்களில் கோடை மழை பெய்தாலும், பெரிய அளவில் வெப்பத்தை தணிக்கவில்லை.

அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் (மே) 4-ந் தேதி தொடங்கி 28-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. அந்த காலங்களில் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வெப்பத்தின் தாக்கம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

குமரி கடல் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் கிழக்கு காற்று, தென் மேற்கு திசை நோக்கி 3 கிலோ மீட்டர் உயரத்துக்கு எழும்பும்போதும், கேரளாவில் தொடர்ந்து 3 நாட்களுக்கு 50 சதவீதம் மழை பெய்யும் போதும் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக கணக்கில் கொள்ளப்படும். அதற்கான சூழ்நிலை உருவாக இன்னும் 2 நாட்கள் ஆகும். அதன் பிறகுதான் தென்மேற்கு பருவமழை பற்றி சொல்ல முடியும்.

அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளிலும், சென்னையிலும் மழைக்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஈரோடு பகுதிகளில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.

வங்க கடலின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக, காற்று தமிழகத்தின் உள்பகுதியை நோக்கி வரும். இதனால் தமிழகத்தில் நாளை (இன்று) முதல் வெப்பத்தின் தாக்கம் குறைய தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், கெட்டியில் 4 செ.மீ., உசிலம்பட்டியில் 3 செ.மீ., அறந்தாங்கி, கொடைக்கானல், மதுரை விமான நிலையத்தில் தலா 2 செ.மீ., பேரையூர், சிவகிரியில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News