செய்திகள்

அயனாவரம் பகுதியில் ஒருகுடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை

Published On 2019-04-24 10:42 GMT   |   Update On 2019-04-24 10:42 GMT
அயனாவரம் பகுதியில் தனியார் வாட்டர் சப்ளை நிறுவனங்கள் ஒருகுடம் தண்ணீர் 10 ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.
சென்னை:

பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. இதையடுத்து சென்னையில் குடிநீர் சப்ளை பாதியாக குறைக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் பல இடங்களில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து போர்வெல்களில் தண்ணீர் வரத்து நின்று விட்டது. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

இதனை பயன்படுத்தி சில தனியார் வாட்டர் சப்ளை நிறுவனங்கள் கூடுதல் விலைக்கு தண்ணீரை விற்று வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள் வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் வாட்டர் சப்ளை நிறுவனங்கள் தங்களது லாரி மற்றும் டிராக்டர்களில் தண்ணீரை கொண்டு சென்று தட்டுபாடான பகுதிகளில் நிறுத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

இன்று காலை அயனாவரம், போர்ச்சீஸ் சாலையில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து சப்ளை செய்தனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு குடங்களுடன் திரண்டனர். ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விலையை பற்றி கவலைப்படாத பொதுமக்கள் தண்ணீர் கிடைத்தால் போதும் என்று நீண்ட வரிசையில் காத்து நின்று தண்ணீரை வாங்கிச் சென்றனர்.

இதே போல் டிராக்டரில் தண்ணீர் விற்பனைக்கு வந்து இருப்பதை அறிந்த பக்கத்து தெருவில் வசிப்பவர்களும் ஆட்டோவில் குடங்களை ஏற்றி வந்து போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.
Tags:    

Similar News