ஆன்மிகம்

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2019-01-02 03:33 GMT   |   Update On 2019-01-02 03:33 GMT
வேளாங்கண்ணி பேராலயத்தில் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகையை அடுத்த வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்று அழைக்கப்படும் இந்த பேராலயத்துக்கு தினமும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து மாதாவை வழிபட்டு செல்கிறார்கள். கிறிஸ்தவ ஆலயங்களில் பசிலிக்கா என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது.

வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் புத்தாண்டு வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நேற்று புத்தாண்டு பிறப்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் நள்ளிரவு பேராலயத்தின் விடியற்காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை கூட்டம் நடந்தது.



நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் பிரார்த்தனை கூட்டம் தொடங்கியது. இதில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். நள்ளிரவு 12 மணி அளவில் தேவதாஸ் அம்புரோஸ் திருப்பலி மேடையில் வைக்கப்பட்டிருந்த திருவிளக்கை ஏற்றி புத்தாண்டு பிறப்பை அறிவித்தார்.

தொடர்ந்து தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டது. இதில் பேராலய அதிபர் பிரபாகர், துணை அதிபர் சூசைமாணிக்கம் பொறுப்பாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புத்தாண்டு திருப்பலியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். புத்தாண்டு சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையையொட்டி வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வேளாங்கண்ணிக்கு வந்த பக்தர்கள் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

இதனால் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் கடற்கரை பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News