என் மலர்
இந்தியா
- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
- வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
வாரணாசி என அழைக்கப்படும் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக கலாசார, நாகரிக, கல்வி உறவு இருந்து வருகிறது. இதை பிரதிபலிக்கும் வகையில், பிரதமர் மோடி உத்தரவின்பேரில், காசி தமிழ் சங்கமம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
அதன் காரணமாக வாரணாசியில் தமிழ் கற்கும் ஆர்வம், இந்தி மாணவர்களிடம் எழுந்திருப்பதாக கடந்த மாதம் 28-ந் தேதி நடந்த 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார். வாரணாசியில் உள்ள அரசு குயின் கல்லூரி மாணவர் பாயல் படேல், குறுகிய காலத்தில் தமிழ் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து, பிரதமரின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அரசு குயின் கல்லூரி, தினந்தோறும் மாலைநேர தமிழ் வகுப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கல்லூரியின் முதல்வர் சுமித் குமார் கூறியதாவது:-
தமிழ்நாட்டை சேர்ந்த சந்தியா குமார் சாய் இதற்கு முன்பு மாணவர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுத்தார். அவரிடம் பேசினோம். அவரும் ஆன்லைன் வகுப்பு எடுக்க சம்மதித்துள்ளார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவரும் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
வாரணாசி மாவட்ட கல்வி ஆய்வாளரும் தமிழ் வகுப்புகள் நடத்த உத்தரவிட்டுள்ளார். எனவே, மாலை நேர தமிழ் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை அறிந்து, அடுத்த கல்வி ஆண்டில் இருந்து பள்ளியில் முறையான தமிழ் பாட வகுப்பு அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக பள்ளி முதல்வர் பிரியங்கா திவாரி தெரிவித்தார்.
இதுதவிர, கலாசாரத்தை பரிமாறிக் கொள்ளும்வகையில், இந்தி கற்றுக்கொடுப்பதற்காக வாரணாசியில் இருந்து 50 ஆசிரியர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
- ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் இன்று அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார்.
- ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இதுவாகும்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜெர்மனிஅதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஜனவரி 12 மற்றும் 13-ம் தேதிகளில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இது ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும்.
12-ம் தேதி அகமதாபாத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், கல்வி, திறன் மற்றும் இயக்கம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும், பாதுகாப்பு, அறிவியல், புதுமை மற்றும் ஆராய்ச்சி, பசுமை, நிலையான மேம்பாடு, மக்களிடையேயான உறவுகள் போன்ற முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதிப்பார்கள் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அதிகாலை வந்தடைந்தார்.
ஜெர்மனி அதிபரின் இந்தியாவிற்கான முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை தொடங்கியது.
- ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன.
புதுடெல்லி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 10.17 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. -சி62 விண்ணில் ஏவப்படுகிறது. இது புத்தாண்டில் இஸ்ரோ ஏவும் முதல் ராக்கெட்டாகும்.
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதன்மை செயற்கைக்கோளான இதனுடன் ஸ்பானிஷ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர்' என்ற ஒரு சிறிய சோதனைக் கருவியும் பொருத்தப்பட்டது.
இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 வணிக செயற்கைக்கோள்களும் இதனுடன் விண்ணுக்கு ஏவப்படுகிறது.
இந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் நேற்று காலை 10.12 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் ஒருங்கிணைப்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. ஏவுதலுக்கு முந்தைய சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- கோவிலை அழித்துவிட்டதால் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார்கள்.
- 1,000 ஆண்டுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி இன்றும் உயரமாகப் பறக்கிறது என்றார்.
அகமதாபாத்:
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்திற்கு 3 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ளார். பிரதமர் மோடி நேற்று பிரசித்தி பெற்ற சோமநாத் கோவிலுக்குச் சென்றார்.
இந்தக் கோவில் முதல் முறையாக தாக்கப்பட்டு 1000 ஆண்டுக்குப் பிறகும் நிலைத்து நிற்பதை கொண்டாடும் வகையில் சோமநாத் சுயமரியாதை திருவிழா நடத்தப்பட்டது. இதன் நிறைவு விழாவின் சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
கோவில் தாக்கப்பட்டபோது அதை எதிர்த்து உயிர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூரும் வகையில் சவுரியா யாத்திரையிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் 108 குதிரைகள் ஊர்வலத்தை மேளம் அடித்து மோடி தொடங்கி வைத்தார். அதன்பின், பிரதமர் மோடி பேசியதாவது:
சோமநாதரின் வரலாறுதான் இந்தியாவின் வரலாறு. இந்த கோயிலைப் போலவே, அந்நியப் படையெடுப்பாளர்கள் இந்தியாவை பலமுறை அழிக்க முயன்றனர்.
கோவிலை அழித்துவிட்டதால் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்தார்கள். ஆனால் 1,000 ஆண்டுக்குப் பிறகும் சோமநாதரின் கொடி இன்றும் உயரமாகப் பறக்கிறது.
வெறுப்பு, அட்டூழியம் மற்றும் பயங்கரவாதத்தின் உண்மையான வரலாறு நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது.
வெறும் பொருளுக்காக நடந்த தாக்குதல் என்றால் ஒருமுறை நடத்தியிருந்தால் போதும். ஆனால் சோமநாத் கோவில் மீது வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் தாக்குதல் கோவிலைக் கொள்ளையடிக்கும் முயற்சி என நமக்கு கற்பிக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு, சர்தார் வல்லபாய் படேல் சோமநாதர் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப முயன்றபோது அவருக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன.
சோமநாதர் கோயிலை மீண்டும் கட்டியெழுப்புவதைத் தடுக்க முயன்ற அந்த சக்திகள் இன்றும் நம்மிடம் உள்ளன. அத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க நாம் விழிப்புடனும், ஒற்றுமையுடனும், வலிமையுடனும் இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
- டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஜனவரி 5-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
- மாசு கலந்த காற்று மற்றும் கடும் குளிர் ஆகியவையே உடல்நிலை மோசமடைய காரணம்
ஆஸ்துமா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வீடு திரும்பினார். டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் ஜனவரி 5-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இன்று மாலை 5 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர், தொடர்ந்து வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்று ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாசு கலந்த காற்று மற்றும் கடும் குளிர் ஆகியவற்றின் காரணமாகவே அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், இவையே அவருக்கு சுவாசக் கோளாறுகளைத் தூண்டியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சிகிச்சை முறையின் ஒரு பகுதியாக அவருக்கு ஆன்டிபயாடிக்குகள் மற்றும் பிற துணை மருந்துகள் வழங்கப்பட்டன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு நாட்களிலேயே அவரது உடல்நிலை சீரடைந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் ஆஸ்துமா அதிகரிப்பு மற்றும் நெஞ்சு தொற்று தொடர்பான சுவாசக் கோளாறுகள் இருந்ததால், அவரது உடல்நிலை முன்னேறிய பிறகும் மருத்துவக் குழுவினர் அவரைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.
- பெண்களுக்கான மாத உதவித்தொகை 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
- செயற்கை நுண்ணறிவு மூலம் ஊழலைத் தடுக்கவும், நிர்வாகச் சேவைகளை மொபைல் போன்களுக்கே கொண்டு வரவும் "தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம்" செயல்படுத்தப்படும்
மும்பை மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மற்றும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆகியவற்றின் கூட்டணியான மஹாயுதி, இன்று தங்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, ராம்தாஸ் அதாவலே, வினோத் தவ்டே, அமீத் சதம், ஆஷிஷ் ஷெலர் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
- பிஎம்சி மூலம் பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டி இல்லா கடன்கள் வழங்கப்படும்.
- பெண்களுக்கான மாத உதவித்தொகை 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
- முதியோருக்கான மாத ஓய்வூதியம் 1,500 ரூபாயிலிருந்து 2,100 ரூபாயாக உயர்த்தப்படும்.
- மும்பையின் 'பெஸ்ட்' (BEST) பேருந்துகளில் பெண்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.
- மும்பையில் உள்ள அனைத்து சாலைகளையும் கான்கிரீட் மயமாக்குவதன் மூலம் பள்ளங்கள் இல்லாத சாலைகள் உறுதி செய்யப்படும்.
- ஜப்பானிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஆண்டுகளுக்குள் மும்பையை வெள்ள அபாயம் இல்லாத நகரமாக மாற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
- செயற்கை நுண்ணறிவு மூலம் ஊழலைத் தடுக்கவும், நிர்வாகச் சேவைகளை மொபைல் போன்களுக்கே கொண்டு வரவும் "தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகம்" செயல்படுத்தப்படும்
- மும்பையில் உள்ள வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோகிங்கியாக்களை அடையாளம் கண்டு வெளியேற்ற AI கருவி பயன்படுத்தப்படும் மற்றும் அவர்களுக்காகத் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும்.
- குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 30-35 லட்சம் வீடுகள் கட்டப்படும் மற்றும் 20,000 முடக்கப்பட்ட கட்டிடங்களுக்கு ஆக்கிரமிப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
- பிஎம்சி தூய்மைப் பணியாளர்களுக்குச் சொந்த வீடுகள் கட்டித் தரப்படும்.
- பள்ளிக் பாடத்திட்டத்தில் மும்பையின் வரலாறு சேர்க்கப்படும் மற்றும் மராத்தி இளைஞர்களுக்காக 'மும்பை பெலோஷிப்' திட்டம் தொடங்கப்படும்
- திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் ஈடுபடும் 10 லட்சம் மாணவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
- மக்கள் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்க பிப்ரவரி 1-ந் தேதி முதல் 3 மண்டல அளவிலான பேரணிகள் நடைபெற உள்ளன.
- 30-ந் தேதி அனைத்து மாவட்ட தலைமையகங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள், இளைஞர் மற்றும் பெண்கள் அமைப்பு போராட்டங்களில் ஈடுபடும்.
மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) 'சத்தியாகிரகப்' போராட்டத்தை நாளைமுதல் (ஜன.12) நடத்தவுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு பல்வேறு மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் நாளை (12-ந் தேதி) திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற உள்ளது. சமுதாயத்தில் வகுப்புவாத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி மற்றும் பா.ஜ.க. செய்யும் முயற்சிகளுக்கு எதிராக, மகாத்மா காந்தியின் நினைவு நாளான வருகிற 30-ந் தேதி அனைத்து மாவட்ட தலைமையகங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர்கள், இளைஞர் மற்றும் பெண்கள் அமைப்பு போராட்டங்களில் ஈடுபடும்.
மேலும், மாநில அரசு மேற்கொண்டு வரும் மக்கள் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்க பிப்ரவரி 1-ந் தேதி முதல் 3 மண்டல அளவிலான பேரணிகள் நடைபெற உள்ளன. வடக்கு மண்டல அணிவகுப்பு காசர்கோடு முதல் பாலக்காடு வரையிலும், மத்திய மண்டல அணிவகுப்பு பத்தனம்திட்டா முதல் எர்ணாகுளம் வரையிலும் நடைபெறும். தெற்கு மண்டல அணிவகுப்பு திருச்சூர் முதல் திருவனந்தபுரம் வரை நடைபெறும்." என்று அவர் கூறினார்.
மேலும் சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு தொடர்பாக பேசிய அவர், இந்த வழக்கில் தொடர்புடைய எவரையும் பாதுகாக்க மாட்டோம் என்றும், கோயிலில் இருந்து திருடப்பட்ட தங்கம் மீட்கப்படும் என்றும் சிபிஐ(எம்) ஏற்கனவே தெளிவுபடுத்தியிருந்தது என தெரிவித்தார்.
- 72 மணிநேரத்திற்குள் அனைத்து ஆபாசப் படங்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்தது.
- எக்ஸ் தளத்தில் இருந்து 600 கணக்குகளும், சுமார் 3,500 சட்டவிரோத உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன.
எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்போட் ஆன Grok மூலம் சமூக விரோதிகளால் பெண்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, ஜனவரி 2-ம் தேதி மத்திய அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
72 மணிநேரத்திற்குள் அனைத்து ஆபாசப் படங்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்தது. சரியான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் எக்ஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டதோடு, இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி அளித்துள்ளது.
மேலும், அரசின் உத்தரவைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் இருந்து 600 கணக்குகளும், சுமார் 3,500 சட்டவிரோத உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளன.
- காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது 3 பாலியல் பலாத்காரம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
- தனிப்படை போலீசார் ஓட்டலில் எம்.எல்.ஏ.-வை மடக்கு பிடித்தனர்.
கேரள மாநிலம் பாலக்காடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மம்கூத்ததில். மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியும் வகித்த இவர் மீது பாலியல் புகார்கள் கூறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கியது. இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக போலீசார் தேடிவந்த நிலையில் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. தலைமறைவானார். இந்த சூழலில் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், நிதி ரீதியாக சுரண்டுவதாகவும் ஒரு பெண் மின்னஞ்சல் மூலம் கேரள முதல்-மந்திரிக்கு புகார் அனுப்பினார். இது ராகுல் மம்கூத்ததில் மீதான 3-வது புகார் ஆகும்.
இதுகுறித்து விசாரிக்க மாநில போலீஸ் டி.ஜி.பி.க்கு அரசு அறிவுறுத்தியது. அதன்பேரில் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. மீதான பாலியல் புகார் குறித்து விசாரிக்க அதிகாரி பூங்குழலி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
இந்த நிலையில் பாலக்காட்டில் ஒரு ஓட்டலில் இருந்த ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ.வை தனிப்படையினர் நேற்று நள்ளிரவு மடக்கி பிடித்தனர். விசாரணைக்கு பிறகு அவரை இன்று அதிகாலை கைது செய்தனர். அவரது செல்போன்களையும் தனிப்படையினர் கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணைக்காக அவரை பத்தனம்திட்டாவில் உள்ள ஆயுதப்படை முகாமிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. மீது பாலியல் புகார் தெரிவித்த பெண், திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து ஓட்டலுக்கு வரவழைத்து ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னிடம் இருந்து விலை உயர்ந்த கைக் கடிகாரங்கள், காலணிகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் வாங்குவதற்காக பெரும் தொகையை தன்னிடம் இருந்து பெற்றதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்திய தாகவும் புகாரில் அவர் தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஆதாரங்களை சேகரித்த போலீசார், பெண்ணின் கருவில் டி.என்.ஏ. பரிசோதனையும் செய்தனர். இதன் தொடர்ச்சியாக தான் ராகுல் மம்கூத்ததில் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.
- அங்கு காரில் வந்த மேலும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- சிறுமி அடையாளம் காட்டிய மூன்று நண்பர்களை முதலில் பிடித்த போலீசார், அவர்கள் மூலம், தலைமறைவாக இருந்த மற்ற ஐந்து பேரையும் கைது செய்தனர்.
குஜராத் மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் வன்ஸ்தா நகரில் கடந்த புதன்கிழமை இரவு 10 மணியளவில், அந்தச் சிறுமி தனது வீட்டின் வெளியே வந்தபோது, மூன்று இளைஞர்கள் அவரை இரு சக்கர ஏற்றி கடத்திச் சென்றனர்.
கடத்தப்பட்ட சிறுமியை அருகில் உள்ள ஒரு தடுப்பணைக்கு கொண்டு சென்ற அவர்கள், அங்கு காரில் வந்த மேலும் ஐந்து நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை மிரட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி வீடு திரும்பி தனது தாயிடம் நடந்ததைக் கூறியுள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வன்ஸ்தா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினரின் விசாரணையில், சிறுமியை முதலில் இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற மூன்று பேரும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.
சிறுமி அடையாளம் காட்டிய மூன்று நண்பர்களை முதலில் பிடித்த போலீசார், அவர்கள் மூலம், தலைமறைவாக இருந்த மற்ற ஐந்து பேரையும் கைது செய்தனர். தற்போது 8 பேரும் போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- கடந்த 2023-ம் ஆண்டு, ரச்சனாவின் கண் முன்னாலேயே அவரின் கணவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- ரச்சனா யாதவ் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது, பைக்கில் வந்த இருவர் ரச்சனாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர்.
டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ரச்சனா யாதவ். இவர் ஷாலிமார் பாக் நலச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு, ரச்சனாவின் கணவர் விஜயேந்திர யாதவ், ரச்சனா கண் முன்னாலேயே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த வழக்கில் ரச்சனா தான் முக்கிய சாட்சி ஆவார்.
இந்த வழக்கில் 5 பேர் மீது குற்றவாளிகளாக கண்டறியப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை ஷாலிமார் பாக் பகுதியில், ரச்சனா யாதவ் தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடைக்குச் சென்றபோது, பைக்கில் வந்த இருவர் ரச்சனாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். ரச்சனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
கணவர் கொலை வழக்கில் ரச்சனா சாட்சி சொல்வதைத் தடுப்பதற்காகவே, அந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளே இவரையும் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் பைக்கில் வந்த இருவர் சுட்டுவிட்டுத் தப்புவது பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
- தனது மனைவி தனது அனுமதியின்றி 14 வாரக் கருவைக் கலைத்துவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
- சம்மனை எதிர்த்து அந்தப் பெண் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரிந்து வாழும் கணவர் ஒருவர், தனது மனைவி தனது அனுமதியின்றி 14 வாரக் கருவைக் கலைத்துவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கருக்கலைப்பு சட்டத்தின் பிரிவு 312-ன் கீழ் அந்தப் பெண் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
இது தொடர்பாக அந்தப் பெண்ணிற்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்தச் சம்மனை எதிர்த்து அந்தப் பெண் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, ஒரு பெண் தனது கர்ப்பத்தைத் தொடர விரும்பாதபோது, அவரை அதற்காகக் கட்டாயப்படுத்துவது அவரது உடல் மீதான உரிமையை பறிப்பதாகும்.
இது பெண்ணை மன ரீதியான பாதிக்கும். மற்றவர்களின் உதவியின்றி குழந்தையைத் தனியாக வளர்க்கும் பொறுப்பு பெண்ணின் மீதே விழுகிறது. சட்டபூர்வமாக செய்யும் கருக்கலைப்பு குற்றமாகாது.
எனவே, கருக்கலைப்பு குறித்து முடிவெடுக்கும் முழு உரிமை அந்தப் பெண்ணிற்கே உண்டு" என தெரிவித்து அவர் மீதான குற்றவியல் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.






