என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK"

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
    • வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர்.

    போடி:

    தமிழகம் முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தினுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து எதிர்பார்ப்பு இன்று நிறைவுக்கு வந்தது.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை போடியில் கொண்டாடிய ஓ.பன்னீர்செல்வம் பத்திரிகையாளர் சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரம் தனது அரசியல் களம்குறித்து மனம் திறந்து பேட்டியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து அவர் தி.மு.க.வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில நாட்கள் இதுகுறித்து எதுவும் தகவல் தெரிவிக்காத நிலையில் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.

    கடந்த சில நாட்களாகவே ஓ.பி.எஸ். நடவடிக்கையில் அதிருப்தியடைந்த அ.தி.மு.க.வினர் தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை கொண்டாடி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடி பஸ் நிலையம் தேவர் சிலை அருகில் அவர் கட்சியை விட்டு விலகியதை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இதுவரை அ.தி.மு.க.வை பிடித்திருந்த தீய சக்தி ஒழிந்தது. துரோகி பன்னீர்செல்வம் ஒழிக, போய்க்கோ போய்க்கோ என்று கோசமிட்டபடி பட்டாசு வெடித்து அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில் சாதாரண தொண்டனாக இருந்த ஓ.பி.எஸ்.சை 3 முறை முதலமைச்சராக அமரவைத்து அழகு பார்த்தது அ.தி.மு.க. ஆனால் அவர் அதற்கு விசுவாசமாக இல்லாமல் தி.மு.க.விற்கு சென்று விட்டார். அவர் எந்த இடத்திலும் விசுவாசமாக இருக்க மாட்டார். எனவே அ.தி.மு.க.வை பிடித்த தீயசக்தி ஒழிந்து விட்டது. இதனால் வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி என உற்சாகமாக கூறினர். 

    • ஓ.பி.எஸ். உள்ளிட்ட நபர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • கடந்த தேர்தலில் நூலிழையில் தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம்.

    மதுரை:

    தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமர் மோடி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை கூட்டம் வருகின்ற 1-ந்தேதி மண்டேலா நகரில் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதலை காட்டும் வகையில் அம்மா பேரவை சார்பில் சீருடை அணிந்த 2,500 தூதுவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கான பயிற்சி முகாம் மண்டேலா நகரில் உள்ள திடலில் நடைபெற்றது. இந்த பயிற்சியை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இதில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசன், எஸ்.எஸ். சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

    இந்த பரப்பரை ஸ்டாலின் தலைமையிலான மன்னராட்சியை முடிவு கட்டும் வகையில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும். ஓ.பி.எஸ். உள்ளிட்ட நபர்கள் மீது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் வேறு முகாம்களுக்கு செல்வது குறித்து எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. பிரதமர் மோடி எடப்பாடியாரை முன்னிறுத்தி பரப்புரை செய்ய வரும் நேரத்தில், இதை திசை திருப்பவும், மடைமாற்றம் செய்யவும், இதுபோன்ற செயல்களை சிலர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

    இவர்கள் மாற்று முகாமுக்கு செல்வதால் அ.தி.மு.க.விற்கு எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. கடந்த தேர்தலில் நூலிழையில் தான் நாங்கள் ஆட்சியை இழந்தோம். எடப்பாடியார் அறிவித்து உள்ள தேர்தல் வாக்குறுதிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஒரு செங்கலை காட்டி அரசியல் செய்தார்கள். இனி 100 செங்கலை காட்டினாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடியார் செங்கோலை அவரது கையால் பிடிப்பார். நடிகர் விஜய் பரீட்சை எழுதினால் தான் அவர் பாசா அல்லது பெயிலா என தெரியவரும் என்றார். 

    • ஓ.பன்னீர்செல்வம் குறித்து கவலைப்பட தேவையில்லை.
    • அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பல்வேறு இடங்களுக்கு முகாம் மாறி செல்கின்றனர்.

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பனும் இணைந்தனர்.

    இதுதொடர்பாக சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறுகையில்,

    * அ.தி.மு.க. என்று சொன்னால் அது எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். ஓ.பன்னீர்செல்வம் குறித்து கவலைப்பட தேவையில்லை.

    * அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் பல்வேறு இடங்களுக்கு முகாம் மாறி செல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என்னையும் அவர் அழைத்தார். ஆனால் நான் வரவில்லை, நீங்கள் செல்லுங்கள் என்று கூறி விட்டேன்.
    • அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பேன்.

    திருச்சி:

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக களப்பணியாற்றி வந்த அ.தி.மு.க. மீட்புக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நட ராஜன் தி.மு.க.வில் இணைய மறுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக வெல்லமண்டி நடராஜன் 'மாலை மலர்' நிருபரிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டவன் நான். அ.தி.மு.க.வில் நீண்ட காலம் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பிளவுபட்டபோது ஓ.பன்னீர்செல்வத்தின் தலைமையை ஏற்று பணியாற்றினேன். முன்னதாக 2016 சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் முதலில் இரண்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு மாற்றப்பட்டனர். மூன்றாவதாக என்னை ஜெயலலிதா அறிவித்து வெற்றி பெறச் செய்தார்.

    அப்போதைய அமைச்சர வையில் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் எனக்கு வாய்ப்பளித்தார். ஐந்தாண்டுகள் அமைச்சர் பதவியில் சிறப்பாக பணியாற்றி ஆட்சிக்கும், கட்சிக்கும் நல்ல பெயர் பெற்று தந்தேன். அப்போது முதல் தற்போது வரை அ.தி.மு.க.வின் விசுவாசியாகவே நான் இருந்து வருகிறேன்.

    இந்தநிலையில்தான், ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இன்று தன்னை இணைத்துக் கொண்டு உள்ளார். என்னையும் அவர் அழைத்தார். ஆனால் நான் வரவில்லை, நீங்கள் செல்லுங்கள் என்று கூறி விட்டேன். ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட எனக்கு தி.மு.க.வுக்கு செல்ல மனம் இடம் தரவில்லை. அதில் என்னால் பயணம் செய்ய முடியாது. இதை கட்சி விரோத நடவடிக்கையாகவே கருதுகிறேன். அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் என்றார்.

    முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், ஓ பன்னீர்செல்வத்துக்கு அடுத்தபடியாக வைத்திலிங்கத்தின் தீவிர ஆதரவாளராக கருதப்பட்டார். வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணைந்த போது அவரும் தி.மு.க.வில் இணைவதாக தகவல் வெளியானது. ஆனால் அப்போதும் தி.மு.க.வில் தான் இணையவில்லை, வீட்டில்தான் இருக்கிறேன் என தெரிவித்து ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவே தன்னுடைய முடிவு என கூறினார்.

    இப்போது ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் ஐக்கியமான நிலையிலும் அங்கு செல்ல மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் குன்னம் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன், ஜெயலலிதாவின் படத்தை தூக்கி எறிந்து விட்டு தி.மு.க.வில் இணைய போகிறீர்களா என தாய், மனைவி, குழந்தைகள் கேட்டபோது, மனம் நொந்து போய்விட்டேன். தி.மு.க.வில் இணையவில்லை, அரசியலை விட்டு விலகுகிறேன் என அறிவித்தார்.

    ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார். வெல்லமண்டி நடராஜன் விஜய் கட்சிக்கு செல்வாரா? அல்லது தாய் கழகமான அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொள்வாரா? என்பது சில நாட்களில் தெரியவரும்.

    • ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. கரை போட்ட துண்டை அணிவித்தார்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்தார். எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.

    மேலும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2023-ம் ஆண்டு நடந்த கட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனார். இதை அ.தி.மு.க. பொதுக்குழுவும் அங்கீகரித்தது.

    இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது.

    அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அதை அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்று மாற்றினார்.

    மேலும் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்ற கோஷத்துடன் செயல்பட்டு வந்தார். ஆனால், அவரால் அ.தி.மு.க.வை மீட்க முடியவில்லை. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்ததால் ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சி பலிக்கவில்லை.

    இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர முயற்சி மேற்கொண்டார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரிடம் இருந்து விலகி மாற்று கட்சிகளில் இணைந்தனர். அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான தர்மர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அய்யப்பன் எம்.எல்.ஏ. மட்டும் இருந்தார்.

    ஆதரவாளர்கள் அனைவரும் பிரிந்து சென்றதால் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டார். இதையடுத்து அவர் என்ன முடிவு எடுப்பார் என்று கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். இதையடுத்து அவர் தி.மு.க. வில் சேரப்போவதாக தகவல் பரவத்தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் நேற்று அண்ணா அறிவாலயத்துக்கு வரவில்லை.

    மேலும் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். நள்ளிரவு 1 மணி வரை இந்த ஆலோசனை நீடித்தது. அப்போது தி.மு.க.வில் இணையலாம் என்று அவர்கள் முடிவு எடுத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வமும், பி.கே.சேகர்பாபுவும் அங்கிருந்து ஒரே காரில் ஏறி சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

    ஓ.பன்னீர்செல்வம் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றதும் அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அவரை வரவேற்று அண்ணா அறிவாலயத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, ஆரத்தழுவி வரவேற்றார்.

     

    ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. கரை போட்ட துண்டை அணிவித்தார். பின்னர் தி.மு.க. உறுப்பினர் படிவத்தில் ஓ.பன்னீர் செல்வம் கையெழுத்திட்டார்.

    இதேபோல் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர்.

    ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஜெயலலிதா சிறைக்கு சென்ற கால கட்டத்தில் 2 முறையும், ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு ஒரு முறையும் முதலமைச்சராக இருந்தார்.

    எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருந்தார். 2022-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் தனியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

    ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்திருப்பதன் மூலம் தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு சார்பில் எக்ஸ் வலைதளத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-

    "ரோஸி டீக்கடை" நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். அம்மா வளர்த்த இயக்கத்திற்கு ஏ-பார்ம், பி-பார்ம் கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா தி.மு.க.தொண்டர்கள். ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்.

    எம்.ஜி.ஆர். மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள். பாவம் சும்மா விடுமா?

    அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அ.தி.மு.க. வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர் ரத்தத்தின் ரத்தமான தொண்டர்கள். பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்கள் நடத்திய நாடகமெல்லாம் அம்பலப்பட்டு நின்றதும், வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே.

    இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.
    • தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

    குன்னூர்:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பனும் இணைந்தனர்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தது தவறான முடிவு என அவரது ஆதரவு நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்த பாரதியார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு 3 முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

    அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கவும், அ.தி.மு.க. ஒன்றிணையவும் எத்தனையோ முறை கோரிக்கை விடுத்து பார்த்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை கண்டு கொள்ளவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு பொதுச்செயலாளர் எடப்பாடியே காரணமாக அமைந்துவிட்டார்.

    பலமுறை கோரிக்கை விடுத்தும் அ.தி.மு.க.வில் சேர்க்காததால், ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.கவில் இணைந்து விட்டார். அவர் சூழ்நிலை காரணமாக தி.மு.க.வில் இணைந்து இருந்தாலும் அவர் எடுத்த இந்த முடிவு என்பது தவறான முடிவு.

    ஏனென்றால் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.

    தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்று விட்டதால், நாங்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளோம்.

    அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டது. இணைப்புக்கான தேதியை அவர்கள் அறிவிப்பார்கள். இருப்பினும் இன்றோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களாகிய நாங்கள் இணைய உள்ளோம்.

    தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மக்கள் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெரிய வரவேற்பு அளிக்கிறார்கள். அவர் சட்டசபை தேர்தலில் கட்டாயம் முதலமைச்சராக பதவியேற்றார். வருகிற தேர்தலில் விஜயை முதலமைச்சராக அரியணையில் ஏற்றுவதற்காக நாங்கள் தீவிர களப்பணியாற்ற உள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது.
    • அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் கரைவேட்டியை கூட கட்ட முடியாமல் போய்விட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடந்தது. இதற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரதிமுருகன் தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. அரசு அனைத்து வரிகளையும் உயர்த்தியது. அதேபோல் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டன. இதன்மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது. அதை மறைக்க தி.மு.க. அரசு ரூ.1,000 வழங்குகிறது. அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மக்களின் சுமையை குறைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதனால் தமிழக மக்களிடம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகிறது. அதை சகித்து கொள்ள முடியாமல் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி குறித்து தி.மு.க. அவதூறு பரப்புகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி மூழ்கும் கப்பல் என்று கூறுகின்றனர். அ.தி.மு.க. நீர்மூழ்கி கப்பலாக இருந்து தமிழக மக்களை பாதுகாப்பாற்றும். தி.மு.க. ஆட்சியால் தமிழகத்தின் கடன்சுமை ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.4 லட்சத்து 66 ஆயிரம் கடன் உள்ளது.

    கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர் யார்? என்று சி.பி.ஐ. அறிக்கை வெளியாக இருக்கிறது. ஆனால் விஜய் செய்த தவறால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறுகின்றனர். ஆனால் கரூர் சம்பவத்தில் தன் ரசிகர்கள் இறந்ததற்கு பொறுப்பேற்காமல் நான் தான் காரணமா? என விஜய் கேட்கிறார்.

    அரசியல் கட்சிகள் நடத்தும் ரோட்ஷோக்களை முறைப்படுத்தும் அரசின் நெறிமுறைகளால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. நான் கூறிய பிறகு தான் வேலூரில் நடைபெற்ற த.வெ.க. கூட்டத்தில் கூடாரம் அமைத்து விஜய் பேசியுள்ளார்.

    அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்தவர்கள் கரைவேட்டியை கூட கட்ட முடியாமல் போய்விட்டனர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமையும் என்று பேசினார். 

    • சாதாரணமாக உழைக்கிற தொண்டர்களை உயர்த்தி காட்டிப் பார்ப்பது அது அ.தி.மு.க. மட்டும் தான்.
    • தி.மு.க. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வந்த ராசி கிடையாது.

    கோவில்பட்டி:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் நம் கூட ஒருவர் இருந்தார், அவர்கள் தற்போது திசை மாறிப் போய்விட்டார்கள். திசை மாறி போனார்கள். இன்று அவர்கள் திக்குத் தெரியாமல் இந்தத் தேர்தல் முடிந்த பிறகு போய் விடுவார்கள். திசை மாறியவர்கள் திக்குத் தெரியாமல் போகும் நிலையை இந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் பார்க்கப் போகிறோம்.

    சாதாரணமாக உழைக்கிற தொண்டர்களை உயர்த்தி காட்டிப் பார்ப்பது அது அ.தி.மு.க. மட்டும் தான். தி.மு.க.வில் அண்ணாவில் இருந்து கருணாநிதி வரை கட்சியில் உழைத்தவர்கள் ஒரு கட்டத்திற்கு மேல் தாண்ட முடியவில்லை. கருணாநிதி, அவரது மகன் மு.க.ஸ்டாலின், தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் என ஒரே வீட்டுக்குள்ளே முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் உள்ளனர்.

    இந்தத் தேர்தலில் நீங்கள் "டப்பு டப்புன்னு" இரட்டை இலையை பார்த்து வாக்களித்தால் ,தேர்தல் முடிந்த பிறகு "பட்டு பட்டுன்னு" உங்க வீட்டில ரூ.10 ஆயிரம் வந்து விழும். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்றே தெரியவில்லை. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம் தான் என்று பெரிய அறிவாளியாக இவர்தான் கண்டுபிடிச்சிருக்காரு. 0+0 = 0, ஆமா நாங்க 2 பூஜ்ஜியம் வாங்குவோம். அந்த 2 பூஜ்ஜியத்திற்கு முன்னாடி 2 சேர்த்து 200 வாங்குவோம்.

    தி.மு.க. ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் மறுமுறை ஆட்சிக்கு வந்த ராசி கிடையாது. ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் மக்களின் வெறுப்பை சம்பாதித்து விடுவார்கள். தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலையை 150 நாளாக உயர்த்துவதாக கூறி தற்போது 50 நாள் கூட ஒழுங்காக வேலை வழங்கவில்லை.

    இன்று 100 நாள் வேலையை 125 நாளாக அறிவித்தவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. அதையும் தாண்டி எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 125 நாளை கூடுதலாக 25 நாள் சேர்த்து 150 நாளாக உயர்த்த உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.
    • ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

    புதுடெல்லி:

    ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தனது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி வழக்கு தொடர்ந்தார்.

    அந்த மனுவில், 'பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு முறையும் ஐகோர்ட்டை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும்' என்று ராஜேந்திர பாலாஜி கோரி இருந்தார்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேந்திர பாலாஜியின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக் கொண்டது.

    மேலும் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதே போன்று அவர் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் ஏற்கனவே ஐகோர்ட்டில் அனுமதி பெற வேண்டி இருந்தது. ஆனால் இனிமேல் அவர் மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதி பெற்று வெளிநாடு செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.
    • பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    சென்னை அமைந்தகரையில் நடைபெற்ற பா.ஜ.க. பணிமனை திறப்பு விழாவில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.

    * பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற பின்னரே அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    * பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம் கலந்து பேசி அதன்பின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

    * தமிழ்நாட்டில் வெகு விரைவில் தேசிய ஜனநாயகக்கூட்டணி ஆட்சி மலரும்.

    * எம்.ஜி.ஆர். வழியில் மக்களுக்கான கட்சியாக பா.ஜ.க. செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

    * பா.ஜ.க. கட்சியில் இருந்து அமைச்சர்கள் வருவார்கள்.

    மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நாளை தமிழகம் வர உள்ளதாகவும், நாளை அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடக்கும் என்று வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

    சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற India Today கருத்தரங்கில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "NDA கூட்டணியில், ஆட்சியில் பங்கு என்ற பிரச்சனையே இல்லை. கூட்டணியில் இருப்போரும் அவ்வாறு கேட்கவில்லை" என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    • உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை
    • அ.தி.மு.க. மகளிரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 

    கடந்த 14 ஆண்டுகளாக ஐ.ஜே.கேவில் இருந்த இவர், தனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், சில கசப்பான அனுபவங்கள் காரணமாகவும் விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    இந்நிலையில் அவருக்கு அ.தி.மு.க. மகளிரணி இணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி எனும் புதிய அரசியல் கட்சியை கடந்தாண்டு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.
    • அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நல்லக்கண்ணு மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், தலைசிறந்த தொழிற்சங்கவாதியுமான நல்லக்கண்ணு அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

    இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்றவரும், அனைவரிடத்திலும் அன்போடும், பாசத்தோடும் பழகக்கூடியவருமான இரா. நல்லக்கண்ணு அவர்கள், தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைளை நிறைவேற்றித் தருவதற்காக பல்வேறு போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வெற்றி கண்டவர்.

    'தனக்கென வாழாமல், பிறர்க்கென வாழ்ந்த' சிறந்த பண்பாளர் திரு. நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×