search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Women Safety"

  • தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது.
  • குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும்.

  உலகத்தில் எல்லா சமூகத்திலும், சாதி, மதம் என்கிற வித்தியாசமின்றி ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்படுகிற ஒரு இனம் உண்டு என்றால் அது பெண்ணினமேஆகும். தாமஸ்ராய்ட்டர்ஸ் ஆய்வின் முடிவின்படி உலகளவில் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்பது வருத்தத்துக்குரியசெய்தி. கருவிலேயே பெண் சிசுவாக இருந்தால் கருச்சிதைவிலிருந்து, பிறந்தவுடன் பெண்குழந்தையாக இருந்தால் கள்ளிப்பால் என்று வன்முறை தொடங்கி விடுகிறது. சாஸ்திர சம்பிரதாயங்கள் என்கிற பெயரில் பால்ய விவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவை, பொட்டுக்கட்டுதல் என்று காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டனர்.

  பெரும்பாலும் இத்தகையவன்முறைகள், 90 சதவீதம் நெருங்கிய உறவினர்களாலோ, நண்பர்களாலோ, அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களாலோ, பணியிடத்திலோ, பள்ளிக்கூடங்களிலோ உள்ளவர்களால் நடத்தப்படுகிறது. இதில் வேதனையான விஷயம், பெரும்பாலான குற்றங்கள் வெளியே தெரிவதில்லை. அப்படியே வந்தாலும் செய்தித்தாள்களில் எங்கோ ஒருமூலையில் ஒதுங்கி விடுகிறது.

  இவைகள் எல்லாம் தடுக்கப்பட என்னதான் வழி?

  குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும். இந்திய அரசாங்கம் 12 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை பாலியில் வல்லுறவு கொள்பவர்களுக்கு மரணதண்டனை அளிக்கப்படும் என்று சட்டம் இயற்றியுள்ளது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றானாலும், குற்றங்கள் விசாரணை செய்து நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதற்கும் பலஆண்டுகள் ஆகி விடுகிறது.

  தண்டனைகள் மட்டும் குற்றங்களை முழுவதும் குறைத்துவிட முடியாது. பெற்றோர்கள் தங்களது ஆண்குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களிடத்தே, பெண்களும் இவ்வுலகத்தில் வாழ்வதற்கு சமஉரிமை உடையவர்கள்; ஆண்களுக்கு அடிமையாக, ஏவல் செய்பவர்களாக உருவாக்கப்பட்டவர்கள் அல்ல என்கிற உண்மையை உரத்துச் சொல்ல வேண்டும். சாண்பிள்ளையானாலும் ஆண்பிள்ளை. தைரியம், பலம், அறிவு, இவைகளை எல்லாம் ஆணுக்கு மட்டுமே உரியகுணங்களாக சித்தரிக்கப்படுகிறது, அத்தகைய சூழலில் வளரும் பெண் குழந்தைகள் தங்களுக்கு புத்திசாலித்தனமும் சாமர்த்தியமும் குறைவு, மற்றும் பலவீனமானவர் என்று கருதத் தொடங்கி விடுகின்றனர்.

  உதாரணமாக, ஏதாவது பொருளினைத் கைத்தவறி நழுவவிட்டால், ஆண்குழந்தை அதைபற்றிக் கவலைக்கொள்ளாது. வீட்டிலும் திட்டிவிட்டு விட்டு விடுவார்கள். அதே நேரத்தில் பெண் குழந்தைக்கு திட்டு மட்டுமல்ல, உனக்கு ஏன் இந்த கடினமான வேலை என்று கூறப்படும் போது பெண் குழந்தை தன்னால் கடினமானவற்றை செய்ய முடியாது என்று நம்பத் தொடங்குகிறது. இப்படியாக வளரும் அப்பருவத்திலேயே அதன் மனதில் நீ பலவீனமானவள் என்கிற ஆழமான விதை ஊன்றப்படுகிறது.

  நன்கு பயிற்சிப் பெற்ற தடகள வீராங்கனையுடனோ, குத்துச்சண்டை பயின்ற பெண்ணிடமோ அவ்வாறு பயிற்சிப் பெறாத ஆண்கள் மோதி வெற்றிப் பெறமுடியாது. ஆகவே ஆணோ, பெண்ணோ, நான் யாருக்கும் சளைத்தவரல்ல, என்கிற எண்ணமும், பயிற்சியும் பெற்றால் எதையும் செய்ய முடியும் என்பது தான் உண்மை. ஊடகங்கள் மற்றும் தொலைக் காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறையை தூண்டுபவையாகவும் உள்ளன.

  திரைப்படங்கள் போன்று தணிக்கைக்குழு இல்லையென்றாலும் சுயக்கட்டுப்பாடுகளோடு நம் வீட்டு பெண்களும் குழந்தைகளும் பார்ப்பதாக இருந்தால் எத்தகைய பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோமோ அந்த வகையில் நடந்து கொள்ள வேண்டும். அதேப்போன்று ஊடகங்கள் பெண்களுக்கு எதிரான கருத்துகளையும் கேலி செய்யும் செய்திகளையும் வெளியிடக்கூடாது.

  பெண்களையும் சகமனிதர்களாக பார்க்காமல் அவர்கள் தங்ககள் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய கருவியாக பார்க்கும் மனோபாவமே அடிப்படை முறையான பாலினகல்வி கொடுக்காமையும், இத்தகைய தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கின்றன. மீடூ (நானும்கூட) இயக்கங்கள் தற்போது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வடிக்கால்களாக அமைந்துள்ளன.

  மேலைநாடுகளில் மட்டுமின்றி நமது நாட்டில் கூட, பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகவலைத்தளங்களில் தங்களுக்கு கொடுமை இழைத்தோரை குறித்த உண்மையை வெளியிடுவதன் மூலமாக, தவறு செய்தவர்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இது போன்று தவறு செய்தவர்களை வெளிப்படுத்தும் போது எதிர்காலத்தில் தவறு செய்ய முயற்சி செய்பவர்களை தடுக்க ஏதுவாகும்.

  • பெண் போலீசுக்காக கல்லூரிகளில் தனியாக என்று ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் இடையே பெரிதும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆதிகாலம் தொட்டே தொடர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் அடுப்பங்கரை மட்டுமே பெண்களின் வாழ்க்கை என்று இருந்த நிலை மாறி இன்று விஞ்ஞானிகள், விமான பைலட்டுகள், போர் வீரர்கள், தொழில் முனைவோர்கள் என பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகின்றனர்.

  ஆனால் அனைத்து துறைகளிலும் பெண்கள் ஜொலித்து வரும் இந்த காலகட்டத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சீண்டல்கள், பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லைகள் உள்ளிட்டவை தொடரத்தான் செய்கின்றன.

  ஏராளமான கல்வி நிலையங்கள் நிறைந்த கோவை மாநகரில் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் படிக்கும் இந்த மாணவிகள் சிலர் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியிலான சீண்டல்கள், மன அழுத்தங்களை மற்றும் குடும்ப கஷ்டங்களை யாரிடம் கூறுவது என்று தவித்தனர். தங்களது சக தோழிகளிடம் இதுகுறித்து கூறினாலும் அதற்கான தீர்வு அவர்களுக்கு முழுவதும் கிடைக்காத நிலை இருந்தது.

  இந்த நிலையில் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு உதவி செய்யும் வகையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் 'போலீஸ் அக்கா' திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தின்படி மாநகரில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையங்களிலும் போலீஸ் அக்கா திட்டத்திற்காக ஒரு பெண் போலீசார் நியமிக்கப்பட்டனர். இதன்படி நியமிக்கப்பட்ட 37 பெண் போலீசாரும் தங்களது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லூரிகளுக்கு சென்று மாணவிகள் இடையே நட்புறவை வளர்த்து கொண்டு, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.

  இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

  கோவை மாநகரில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் கோவை மட்டுமின்றி வெளியூர்கள், வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதி படுத்தவும், பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை எளிதாக போலீசாரிடம் தெரிவிக்கவும், அதில் இருந்து மாணவிகளை பாதுகாக்கவும் போலீஸ் அக்கா திட்டத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.

  இந்த திட்டத்தில் பணியாற்றும் பெண் போலீசுக்காக கல்லூரிகளில் தனியாக என்று ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உள்ள பெண் போலீசார் மாதத்தில் ஒரு நாள் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை கல்லூரிகளுக்கு சென்று மாணவிகளை சந்தித்து கலந்துரையாடுவார்கள். அப்போது மாணவிகளிடம் ஒரு சகோதரியை போல் பேசி, அவர்களால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் தெரிவிக்க முடியாமல் இருக்கும் விஷயங்கள், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் கல்லூரிகளில் யாராவது பிரச்சினை செய்தால் அதனை மனம் விட்டு பெண் போலீசாரிடம் தெரிவிக்கலாம். மேலும் போலீஸ் அக்கா திட்டத்தின் கீழ் புகார் அளிக்க வேண்டிய எண்கள் கல்லூரி வளாகம், கேண்டின், வரவேற்பறை உள்ளிட்ட இடங்களில் ஒட்டப்பட்டன.

  இதையடுத்து மாணவிகளுக்கு பெரிதும் உதவும் போலீஸ் அக்கா திட்டத்திற்கு கல்லூரி மாணவிகள் இடையே பெரிதும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆரம்பத்தில் தயக்கத்துடன் பெண் போலீசாரை எதிர்கொண்ட மாணவிகள், பின்னர் அவர்களுடன் சகஜமாக பேச தொடங்கினர். இதனால் இந்த திட்டத்திற்கு எதிர்பார்த்ததை விட நல்ல பலன் கிடைத்தது. மாணவிகள் பெரும்பாலும் பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பெரும்பாலான மாணவிகள் தங்களது பெற்றோர் இடையே நிலவும் குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த மாணவிகள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களையும் அழைத்து கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.

  சில மாணவிகள் ஏழ்மை காரணமாக தங்களது படிப்பை தொடர முடியவில்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் பல மாணவிகள் கல்லூரி படிப்பு தொடர தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் பயன் அடைந்த மாணவிகள் போலீஸ் அக்கா திட்டத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

  இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை 172 புகார்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் ஒரு மாணவி மட்டும் தனது படத்தை மாணவர் ஒருவர் கிராபிக்ஸ் செய்து மிரட்டுவதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 17 மனுக்கள் மீது சி.எஸ்.ஆர். ரசீது வழங்கப்பட்டது. மீதம் உள்ள மனுக்கள் குடும்ப பிரச்சினை, நிதி உதவி குறித்தது. அதற்கு உரிய தீர்வு காணப்பட்டது.

  இதனிடையே செமஸ்டர் தேர்வு முடிவு பெற்று பெரும்பாலான கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அப்போது விடுமுறையில் இருந்த பல்வேறு மாணவிகள் போலீஸ் அக்கா உதவி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது மன அழுத்தம் குறித்து தெரிவித்தனர். இந்த புகாரின் பேரிலும் நாங்கள் நடவடிக்கை எடுத்து உள்ளோம். மேலும் மாணவிகள் தங்களது தந்தை குடித்து விட்டு வருவதால் மன ரீதியாக பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளின் தந்தைக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • எலக்ட்ரானிக் பொருள்களை பொருத்தவரை சரியான பராமரிப்பு முறை அவசியம்.
  • பிரிட்ஜை தகுந்த பராமரிப்பு கொடுக்கும்பொழுது அதன் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும்.

  இன்றைய காலகட்டத்தில் ப்ரிட்ஜ் இல்லாத வீடுகளைப் பார்ப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இருக்க வேண்டிய பொருட்களின் வரிசையில் பிரிட்ஜ் இடம் பெற்றிருப்பதை பார்க்க முடிகின்றது. ஒருமுறை வாங்கினால் குறைந்தபட்சம் பத்து வருடங்களுக்கும் மேல் நம்முடன் பயணிக்கக்கூடிய பிரிட்ஜை தகுந்த பராமரிப்பு கொடுக்கும்பொழுது அதன் ஆயுட்காலம் இன்னும் அதிகரிக்கும். சரி பெண்களே பிரிட்ஜை எப்படிப் பாதுகாத்து பராமரிப்பது? உங்களுக்காகவே இதோ சில யோசனைகள்.

  ப்ரிட்ஜின் பின்புறம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இல்லாமல் சற்று தள்ளிவைக்க வேண்டும். அந்த கம்பி வலைகளில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகும். அந்தக் கம்பி வலை களில் படியும் ஒட்டடையை சிறிய ப்ரஷ்ஷின் மூலம் அகற்றலாம்.

  வெளியூர் செல்லும் பொழுது ப்ரிட்ஜ்ஜை ஆஃப் செய்துவிட்டு செல்வது நல்லது. ப்ரிட்ஜை ஆஃப் செய்த பிறகு அதை நன்கு துடைத்து காய வைத்து பின்பு அவற்றை மூடி வைத்து விட்டு செல்லலாம்.. ஈரம் காயாமல் மூடி வைக்கும் பொழுது ப்ரிட்ஜ்ஜிற்குள் பூஞ்சைக் காளான் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

  ப்ரீஸரில் நாள்பட வைத்திருக்கும் எந்த ஒரு பொருளையும் அவ்வளவு எளிதில் வெளியில் எடுத்து விட முடியாது. எனவே ஃப்ரீஸரில் சிறிது கல் உப்பைத் தூவி அவற்றின்மீது பாத்திரங்களை வைத்தோமானால் அவற்றை வெளியில் எடுப்பது எளிது..ஃப்ரீஸரில் இருக்கும் பொருட்களை வெளியில் எடுக்க முடியவில்லை என்றால் கத்தி, கரண்டி போன்ற கூரான ஆயுதங்களைக் கொண்டு குத்தக் கூடாது..மேற்கூறிய யோசனையைப் பின்பற்றினால் ஃப்ரீஸரிலிருந்து பொருட்களை வெளியில் எடுப்பதும் எளிது அதேபோல் ஃப்ரீஸரும் சேதமாவது தவிர்க்கப்படும்.

  ப்ரிட்ஜை மிகவும் குறுகிய இடத்தில் வைக்காமல் காற்றோட்டமுள்ள இடத்தில் வைப்பது சிறந்தது.

  ஒரு டம்ளர் தண்ணீர், அரை டம்ளர் வினிகர், சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, ஒரு டேபிள்ஸ்பூன் சோடா உப்பு இவை அனைத்தையும் நன்றாக கலக்கி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் ஸ்பிரே செய்து ஐந்து நிமிடங்கள் ஊறிய பின்னர் ஒரு மென்மையான துணியைக் கொண்டு துடைத்து எடுத்தோம் என்றால் ஃப்ரிட்ஜில் படிந்திருக்கும் நாள்பட்ட அழுக்கும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.ப்ரிட்ஜ் சுகந்த மணத்துடன் இருக்கும்..

  மாதத்திற்கு ஒரு முறையாவது ஃப்ரிட்ஜிற்குள் இருக்கும் டிரே, பாக்ஸ் போன்றவற்றை வெளியில் எடுத்து நன்றாக கழுவி காயவைத்து உபயோகப்படுத்த வேண்டும்.

  ப்ரிட்ஜின் கதவுப் பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் ரப்பர் பீடிங்கை மென்மையான பிரஷ் கொண்டு மேலே கூறிய ஸ்பிரேயை உபயோகப்படுத்தி சுத்தப்படுத்தலாம்.

  ப்ரிட்ஜ்ஜிற்கு தரமான ஸ்டெபிலைசர்களை வாங்கிப் பொருத்துவதன் மூலம் மின்சாரம் அளவுக்கு அதிகமாக வரும் நேரங்களில் ஃப்ரிட்ஜ் பழுதடையாமல் தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது..

  ப்ரிட்ஜை ஒரு தடவை ஆஃப்செய்து விட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது. இதனால், ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ப்ரிட்ஜ் இயங்குவதற்கு அதனுள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணமாக இருக்கின்றது. மேலும், ஃப்ரிட்ஜை ஆஃப் செய்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். எனவே, குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் 'ஆன்' செய்யவேண்டும். அப்போதுதான் ப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கும்.

  இன்றளவும் சிறிய வகை பிரிட்ஜ்களில் ஃப்ரீஸரில் டீஃப்ராஸ்ட் பட்டன் கொடுக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கமுடியும்.. 15 நாட்களுக்கு ஒரு முறையாவது இந்த பட்டனை பிரஸ் செய்து ஃப்ரீஸரில் உறைந்திருக்கும் அதிகப்படியான ஐஸைக் கரைய வைக்க வேண்டும்.இவ்வாறு டீஃப்ராஸ்ட் செய்வதன்மூலம் . ப்ரிட்ஜ் குறுகிய காலத்தில் பழுதடையாமல் அதிக வருடங்கள் நீடித்து உழைக்கும்.

  6 மாதத்திற்கு ஒருமுறை பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து காயில், கம்ப்ரசரை சுத்தம் செய்யவேண்டும். இதனால் அதிக சூடு ஏற்பட்டு ப்ரிட்ஜ் கடினமாக வேலை செய்வது குறையும்.

  ப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிடும். இதனால் பாக்டீரீயாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும்.எனவே ப்ரிட்ஜ் கேஸ்கட் சரியாக பொருந்தி இருக்கிறதா என்பதை அடிக்கடி கவனியுங்கள்.. தளர்வாக இருந்தால் பிரிட்ஜ் மெக்கானிக்கை அழைத்து அதை சரி செய்து கொள்ளுங்கள்..

  ப்ரிட்ஜ் வாங்கிப் பொருத்தும்போது அதற்கான 'எர்த்' சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரீஷியனை கொண்டு பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

  பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.இப்பொழுது வரும் ஃப்ரிட்ஜ்களில் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்கு என்று ஜெல் உள்ளே வைத்து செய்யப்பட்ட பில்டர் போன்ற அமைப்பானது கொடுக்கப்பட்டிருக்கின்றது..

  அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை தேர்ந்தெடுத்து வாங்கும் பொழுது, அவை மின்சாரத்தை அதிக அளவு மிச்சப் படுத்துவதற்கு உதவுகின்றது.

  பொதுவாக ப்ரிட்ஜ்ஜுக்குள் எல்லா பொருள்களையும் திணிக்காமல் அத்தியாவசியமான பொருள்களை மட்டும் வைத்து உபயோகித்தால் நமது உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்..ப்ரிட்ஜ்ஜுக்குள் அதிக நாட்கள் வைத்து உபயோகப்படுத்தப்படும் எந்த ஒரு உணவுப் பொருளும் நமது உடல் ஆரோக்கியத்தை கெடுப்பவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  எலக்ட்ரானிக் பொருள்களை பொருத்தவரை சரியான பராமரிப்பு முறை அவசியம். இல்லையெனில் வாரண்டிக்கு முன்பாகவே அந்தப் பொருட்கள் பழுதாகி நமக்கு அதிகப்படியான செலவை உண்டாக்கிவிடும்.இல்லையென்றால் அவை அதிக மின் கட்டணத்தை உண்டாக்கும்.எனவே முறையான பாதுகாப்பும் பராமரிப்பும் எலக்ட்ரானிக் பொருட்களை அதிக ஆண்டுகள் நீடித்து உழைக்கச் செய்யும் என்பதை நினைவில் கொண்டு அவற்றை உரிய முறையில் பாதுகாத்து பராமரிக்க வேண்டும்.

  • வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.
  • ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள்.

  வேலைக்குப் போகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அவர்கள் திருமணத்திற்கு முன்பு குடும்பப் பொறுப்புகளை சுமக்கவேண்டியதில்லை. அலுவலகப் பணிகளை பார்த்தால் போதுமானது. ஆனால் திருமணமாகிவிட்டால், குடும்ப நிர்வாகத்தையும் அவர்கள் சேர்த்து சுமக்க வேண்டியதிருக்கிறது. இந்த இரண்டு பணிகளையும் சேர்த்து கவனிக்கும் பெண்கள் உள்ளபடியே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா? அல்லது வருத்தத்தோடு இரண்டு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறார்களா? என்பதை எல்லாம் அலசும் வித்தியாசமான சர்வே இது!

  * குடும்ப நிர்வாகம், அலுவலகப் பணி இரண்டையும் கவனிப்பது உங்களை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு..?

  - 51.8 சதவீத பெண்கள் 'மகிழ்ச்சியடைந்து கொள்வதைவிட வேறு வழியில்லை' என்று சற்று சலிப்பு கலந்த நிலையில் பதில் கூறியிருக்கிறார்கள்.

  - மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற பதில், 37.5 சதவீத பெண்களிடமிருந்து கிடைத்திருக்கிறது.

  - கொஞ்சம்கூட மகிழ்ச்சியில்லை என்று 10.7 சதவீதம் பேர் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

  * நீங்கள் குடும்ப நிர்வாகத்தையும் கவனித்துக்கொண்டு, வெளியே சென்று வேலையும் செய்ய என்ன காரணம் என்ற கேள்விக்கு..?

  - ஊதியத்திற்காக என்று 55 சதவீதம் பேரும், வேலை தரும் ஆத்ம திருப்திக்காக என்று 40 சதவீதம் பேரும் கூறியுள்ளார்கள்.

  - மீதமுள்ள பெண்கள் 'சமூகத்திலும், உறவினர்கள் மத்தியிலும் கிடைக்கும் கவுரவத்திற்காகவும்- வீட்டிலே இருந்தால் போரடித்துப்போவதை தவிர்க்கவும்' வேலைக்குப் போவதாக சொல்கிறார்கள்.

  தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இந்த சர்வேயில் கருத்து தெரிவித்திருக்கும் பெண்களில் பெரும்பாலானவர்கள் 26 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் கணிசமான அளவினர், குடும்பம் மற்றும் வேலையால் அதிக மனஅழுத்தம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். இரவில் தூங்கச் செல்லும்போது மறுநாள் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்பது, காலை உணவு என்ன தயாரிப்பது, கியாசை அணைத்தோமா, வீட்டை பூட்டினோமா.. என்றெல்லாம் நூறு கேள்விகள் மூளையை மொய்த்துக்கொண்டிருக்கும் போதே தூங்கிப்போவதாகவும், திடுக்கிட்டு விழிக்கும்போது விடிந்துவிடுவதாகவும் அலுப்போடு சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளையும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி தொடங்கி, ஒரே மாதிரி முடிப்பது எரிச்சலை தருவதாகவும் சொல்கிறார்கள்.

  * வீட்டு நிர்வாகத்தைவிட அலுவலகப் பணிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீர்களா என்ற கேள்விக்கு..?

  - 60.7 சதவீத பெண்கள், இரண்டையும் சமமாக பாவிப்பதாக சொல்கிறார்கள்.

  - அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும்போது வீட்டை மறந்துவிடுவதாக 25 சதவீதம் பேர் பதிலளித்திருக் கிறார்கள்.

  - 13 சதவீத பெண்கள், 'வீட்டில் இருந்து தேவையான அன்பு கிடைக்காதபோது, அலுவலக வேலையில் மூழ்கிவிடுவதாக' சொல்கிறார்கள்.

  - மீதமுள்ளவர்கள் 'கணவரோடு சண்டையிட்டால் கவனம் முழுவதும் வேலையில் திரும்பி விடும்' என்ற கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

  * அலுவலகத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப தாமதமானால், வீட்டில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கிடைக்கும் என்ற கேள்விக்கு..?

  - அமைதியாக வரவேற்று, அடுத்து செய்யவேண்டிய வீட்டு வேலைகள் அனைத்திலும் உதவுவார்கள் என்று 54.6 சதவீதம் பேர் சொல்லியிருக்கிறார்கள்.

  - அரைகுறை மனதோடு வீட்டு வேலைகளில் உதவுவார்கள் என்று 30 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்திருக் கிறார்கள்.

  - பத்து சதவீதம் பேர், வீட்டில் எடக்கு மடக்காக கேள்வி கேட்பார்கள் என்று தங்கள் வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்கள்.

  - மீதமுள்ளவர்கள், 'அன்று முழுவதும் வீட்டில் உள்ளவர்கள் இறுக்கமாக காணப்படுவார்கள்' என்று கூறியிருக் கிறார்கள்.

  * உங்கள் வேலைச் சுமையை உணர்ந்து, கணவர் உங்களுக்கு உதவுவாரா என்ற கேள்விக்கு..?

  - வேலைச் சுமையை உணர்ந்துகொள்வார். ஆனால் எப்போதாவதுதான் உதவுவார் என்பது 39.3 சதவீத பெண் களின் கருத்து.

  - தாமாகவே முன்வந்து உதவுவார் என்று கூறி, 32.1 சதவீத பெண்கள் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள்.

  - 20 சதவீதத்தினர், 'உதவி செய்வது என்பது அவரது அப்போதைய மனநிலையை பொறுத்தது' என்று கூறியிருக்கிறார்கள்.

  - மீதமுள்ளவர்கள் என்ன கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள். 'திரும்பிக்கூட பார்ப்பதில்லை' என்று சொல்லியிருக்கிறார்கள்.

  பொதுவாக வேலைக்கு செல்லும் மனைவிக்கு வீட்டு வேலைகளில் தன்னால் முடிந்த அளவுக்கு உதவவேண்டும் என்றுதான் கணவர் விரும்புகிறார். 'இன்று வீட்டு வேலைகளை நீ செய். குழந்தைகளை நான் கவனித்துக்கொள் கிறேன்' என்று மனைவியிடம் சொல்லவும் செய்வார்கள். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்காது. கடைசியில் எல்லா வேலைகளும் சேர்ந்து வழக்கம்போல் மனைவி தலையில்தான் விழும். அதனால் இந்த விஷயத்தில் கணவர் கொடுக்கும் வாக்குறுதி காற்றில் பறந்துவிடுவதால், மனைவிமார்கள் பெரும்பாலும் அவர்களை நம்புவதில்லை.

  அதே நேரத்தில் 'வேலை முடிந்து வீடு திரும்புவதில் தாமதம் ஏற்படுதல்' என்ற சிந்தாந்தம் மறைந்துகொண்டிருக்கிறது. ஏன்என்றால் முன்பெல்லாம் பெண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரைதான் என்ற நிலை இருந்தது. அதனால் அவர்கள் வேலைமுடிந்து, அடுத்த ஒன்றிரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பும் வாய்ப்பு இருந்தது. இன்றைய நிலை அதுவல்ல. ஆண்களைப்போல் பெண்களும் இரவு ஷிப்ட்டில் பணியாற்றுகிறார்கள். நள்ளிரவிலோ, அதிகாலையிலோ வீடு திரும்புகிறார்கள். அதனால் இரவு, நள்ளிரவு, தாமதம் என்பன போன்றவை எல்லாம், வேலைக்குப் போகும் பெண்களிடமிருந்து வழக்கொழிந்து கொண்டிருக்கின்றன.

  * பஸ், ரெயிலில் பயணம் செய்து வேலைக்கு செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பெரும்பாலான பிரச்சினைகள் என்னென்ன என்ற கேள்விக்கு..?

  - 61 சதவீதம் பேர், சரியான நேரத்தில் அலுவலகத்திற்கு செல்ல முடிவதில்லை என்றும், அதுபோல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீடு திரும்ப முடியவில்லை என்றும் கூறியிருக் கிறார்கள்.

  - 27 சதவீதம் பேர், பயணத்திலே அதிக நேரத்தை செலவிடுவதால் ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதாக சொல்கிறார்கள்.

  - 12 சதவீத பெண்கள் பாலியல்ரீதியான தொந்தரவுகள் பயணத்தில் உருவாகுவதாகவும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

  • நிதி நிலைமைக்கேற்ப பட்ஜெட்டை மாற்றி அமைக்க வேண்டும்.
  • பெண்கள் தொழிலில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க எளிய வழிகள்..

  பெண்களுக்கு குடும்பத்திலும் தொழிலிலும் எதிர்பாராத விதமாக நிதி நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இதனை சமாளிப்பதற்காக சில முன்னேற்பாடுகளை செய்து வைத்திருப்பது நன்மை தரும். பெண்கள் தொழிலில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க எளிய வழிகள்..

  நிதி திட்டமிடல்

  எந்த செயலில் இறங்குவதாக இருந்தாலும் அதற்கான நிதி திட்டமிடல் என்பது முக்கியமானது. எப்போதும் பட்ஜெட்டை விட சிறிது கூடுதலாகவே நிதியை இணைத்து திட்டமிட வேண்டும். தொலை நோக்கு சிந்தனையுடன் திட்டமிடும் போது எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் மற்றவர் உதவியின்றி தீர்வு காண முடியும். இதுவே தொழிலை வெற்றிகரமாக நடத்துவதற்கான அடிப்படை தகுதியாகும்.

  அவசரகால நிதி

  தொழிலை பொறுத்தவரை அவசர கால நிதியை தனியாக வைத்திருக்க வேண்டும். மருத்துவச்செலவு, உபகரணங்கள் சேதமடைதல் எதிர்பாராத விபத்து, தொழில் இழப்பு என எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் வகையில் இந்த நிதி உதவும். இந்த நிதியை எதிர்பாராமல் ஏற்படும் செலவுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவசர கால நிதிக்கென வங்கியில் தனி கணக்கு தொடங்கி சேமித்து வைக்கலாம். அதன் மூலம் வட்டித்தொகையும் கூடுதலாக கிடைப்பதால் நிதி நெருக்கடி ஏற்படும் போது எளிதாக சமாளிக்க முடியும்.

  கடனை திருப்பி செலுத்துதல்

  யாராக இருந்தாலும் புதிதாக தொடங்கும் தொழிலுக்கு அடிப்படையாக கடன் பெறுவது இயல்பானது. இந்த கடனை குறிப்பிட்ட கால இடைவெளியில் திருப்பி செலுத்துதல் அவசியமானது. கடனைக்கண்டு கொள்ளாமல் விடும்போது மொத்தமாக செலுத்தும் நெருக்கடி ஏற்படலாம். இதனால் நிதி சுமையை சமாளிக்க முடியாமல் தவிப்புகுள்ளாகலாம். எனவே முடிந்தவரை கடனை அவ்வப்போது திருப்பி செலுத்த வேண்டும். கடனை சரியாக செலுத்துவதன் மூலம் கடனுக்கான தரவரிசை அங்கீகாரத்தைபெற முடியும்.

  முதலீடுகள் அவசியம்..

  எதிர்பாராமல் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சிறந்த வழி முதலீடு செய்வதாகும். தொழில் தொடங்கும் போதே முதலீடு செய்வதில் ஈடுபட வேண்டும். நிதி நெருக்கடி என்பது கண் இமைக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது. கடன் பெறுவது மட்டுமின்றி சேமிப்பு, முதலீடு ஆகியவற்றாலும் அதனை சமாளிக்க முடியும்.

  பிரச்சனையின் தீவிரத்தை உணருதல்

  நெருக்கடியை சமாளிப்பதற்கு முன்பு பிரச்சனையின் தீவிரத்தை உணர வேண்டும். அதை தீர்ப்பதற்கான வழிகளை தகுந்த ஆலோசகரிடம் கேட்டு சரியான வழிமுறைகளை முதலில் பின்பற்ற வேண்டும். இரண்டாவதாக நிதி நிலைமைக்கேற்ப பட்ஜெட்டை மாற்றி அமைக்க வேண்டும். அடுத்து திட்டத்தை செயல்படுத்துவதற்கு ஏற்றவாறு தொழிலாளர்களை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தொழிலை பிரச்சனையிலிருந்து மீட்டெடுப்பதுடன் நிதி நெருக்கடியை சமாளிக்கவும் முடியும்.

  சந்தைப்படுத்தும் உத்தி

  நிதி நெருக்கடியிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தாமல் அடுத்த நிலைக்கு செல்ல தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தற்போது நடைமுறையில் இருக்கும் செயல்பாட்டில் மாற்றம் கொண்டு வருவதுடன் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உத்தியையும் மாற்றி அமைக்க வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளரை தக்க வைத்துக்கொள்ள முடியும்.

  • இப்போதே மாண்டிசோரி ஆசிரியர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது.
  • கல்லூரி மாணவிகள், குடும்ப தலைவிகள்... என யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.

  கடந்த மூன்று வாரங்களாக ஆசிரியர் பணி குறித்தும், பல்வேறு விதமான ஆசிரியர் பயிற்சி முறைகள் பற்றியும், ஆசிரியர் பணிக்கு தகுதி பெறும் படிப்புகளை பற்றியும் தெரிந்து கொண்டோம். இந்த வாரம், வருங்காலத்தில் ஆதிக்கம் செலுத்த இருக்கும் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பற்றியும், அது ஏன் ஆதிக்கம் செலுத்த இருக்கிறது என்பது குறித்தும் சென்னையை சேர்ந்த கல்வியாளர் அன்ன ஸ்டெபி விளக்குகிறார்.

  ''நாம் பயின்ற பள்ளிகளுக்கும், இப்போது இயங்கும் பள்ளிகளுக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். கல்வி கற்பிக்கும் விதமும், குழந்தைகளை வழிநடத்தும் விதமும் ரொம்பவே மாறிவிட்டது. குழந்தைகளை திட்டக்கூடாது, துன்புறுத்தக்கூடாது... என்பது போன்ற பல்வேறு அரசு வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கிறது. இவை வருங்காலத்தில் அதிகரிக்கும் பட்சத்தில், மாண்டிசோரி கல்வி முறையே எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்கும். மேலும் பெற்றோர்களின் கவனமும் மாண்டிசோரி பள்ளிகள் மீது பதிந்திருக்கிறது'' என்றவர், அதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார்.

  ''இந்த காலத்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகள், போட்டி நிறைந்த சமூகத்தை சமாளிக்கும் வகையில் வளர, படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கல்வி மட்டுமின்றி, பல்வேறு திறமைகளுடன் வளர்க்க ஆசைப்படுகிறார்கள். பெற்றோர் இருவருமே பணிக்கு செல்வதால், பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த பிறகு பிள்ளைகள் அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே செய்து கொள்ளும்படியாக வளர வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

  சமூக பொறுப்புகளையும், சமூக ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்க ஆசைப்படுகிறார்கள். இவை அனைத்தும்தான் மாண்டிசோரி கல்வி முறையின் தூண்கள் என்பதால்... பெரும்பாலான பெற்றோர் தங்களது குழந்தைகளை மாண்டிசோரி பள்ளிகளில் சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்'' என்றவர், இன்னும் சில வருடங்களில், தமிழகத்தின் எல்லா நகரங்களிலும், பல்வேறு மாண்டிசோரி பள்ளிகள் ஆரம்பமாகிவிடும் என்கிறார்.

  ''இப்போதே மாண்டிசோரி ஆசிரியர்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. எதிர்காலத்தில் இது அதிகமாகிவிடும். மேலும் மற்ற ஆசிரியர் பணிகளை விட மாண்டிசோரி ஆசிரியர் பணி மிகவும் எளிமையானது, வித்தியாசமானது என்பது நிறைய மாணவ-மாணவிகள் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு முக்கிய காரணமாகிறது. ஆம்..! மாண்டிசோரி ஆசிரியர் பணியில், 'லெசன் பிளான்' இல்லை. ஏனெனில் படிப்பதற்கான வழிமுறைகளை மாணவர்கள்தான் உருவாக்க வேண்டும்.

  ஆசிரியர்கள், அவர்களது கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்து வழிநடத்தினால் மட்டும் போதும். ஒரே வகுப்பறையில் அடைத்து வைத்து கல்வி கற்றுக்கொடுக்கும் அவசியமும் இல்லை. பல்வேறு வழிமுறைகளை (டீச்சங் எயிட்) பயன்படுத்தி கல்வி கற்பிக்கலாம். இது மற்ற ஆசிரியர் பணிகளை போல கட்டாய பணியாக இல்லாமல், விரும்பி செய்யக்கூடிய பணியாகவே இருக்கும் என்பதாலும், இதற்கான வரவேற்பு அதிகரித்திருக்கிறது'' என்றவர், இந்த பயிற்சி பெற வயது வித்தியாசங்கள் எதுவுமில்லை என்பதும் மிக முக்கிய காரணம் என்கிறார்.

  ''கல்லூரி மாணவிகள், குடும்ப தலைவிகள்... என (10-ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் வரை) யார் வேண்டுமானாலும் படிக்கலாம். வீட்டில் இருந்து ஆன்லைன் முறையில் கூட படிக்கலாம். ஆன்லைன் அல்லது தொலைதூர கல்வியாக படிப்பதனால் அதற்கு மதிப்பு குறைந்துவிடும் என்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் மாண்டிசோரி ஆசிரியர் பயிற்சியில் கிடையாது. முக்கியமான வகுப்புகளுக்கு மட்டும், நேரடி வகுப்பில் கலந்து கொண்டு மற்றபடியான வகுப்புகளை ஆன்லைன் முறையிலேயே மேற்கொள்ளலாம். இதுபோன்ற பல்வேறு காரணங்கள்தான், மாண்டிசோரி கல்வியையும், ஆசிரியர் பயிற்சியையும் எதிர்காலத்திற்கானதாக மாற்றி இருக்கிறது.

  ஒருகாலத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிரபலமாக இருந்தன. ஆனால் சி.பி.எஸ்.இ. கல்விமுறை வந்ததும், மெட்ரிகுலேஷனை விட சி.பி.எஸ்.இ. பிரபலமாகின. இந்த பட்டியல் இன்று இண்டர்நேஷனல் கல்விமுறை வரை சென்றுவிட்டது. அதன்படி, எதிர்காலத்தில் மாண்டிசோரி நிச்சயம் தவிர்க்க முடியாத கல்வி முறையாகவும், ஆசிரிய பயிற்சியாகவும் மாற இருக்கிறது'' என்று புதுநம்பிக்கை கொடுக்கும் அன்ன ஸ்டெபி, இறுதி கருத்தை பதிவு செய்தார்.

  ''ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மாஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பேசோ, கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லாரி பேஜ்... இவர்கள் எல்லாம் மாண்டிசோரி கல்வி முறையில் படித்தவர்கள். இந்த கல்விமுறை நீண்ட காலமாக இருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் யாரும் எதிர்பார்க்காததை விட, ரொம்ப பிரபலமாக இருக்க போகிறது'' என்ற கருத்துடன் விடைபெற்றார்.

  • குடிசைத் தொழிலாக வீட்டிலேயே தொடங்கலாம்.
  • பெண்கள் வீட்டிலிருந்தே சுயதொழில் செய்து வருமானம் ஈட்டலாம்.

  வேலைக்கு செல்லும் பலரின் கனவு சொந்தமாக தொழில் தொடங்கி நாமும் முதலாளியாக வேண்டும் என்பதாக இருக்கும். அப்படி இருந்தாலும் பலர் அதற்கு நிறைய முதலீடுகள் வேண்டும் அல்லது தங்களுக்கு ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட அளவு பணம் தேவை என தொழில் தொடங்கும் கனவை ஓரம் வைத்துவிட்டு வேலைக்கு சென்று மாதம் சம்பளம் வாங்குவதையே குறிக்கோளாக வைத்து இருப்பார்கள்.

  ஆனால் நவீன காலத்திலும் கூட குறைந்த முதலீட்டில் செய்யக்கூடிய தொழில்களும் சில உள்ளன. பெண்கள் குடும்ப சூழ்நிலைகளால் பணியிடங்களுக்கு சென்று வேலை செய்ய முடிவதில்லை. அப்படிப்பட்ட பெண்கள் வீட்டிலிருந்தே சுயதொழில் செய்து வருமானம் ஈட்டலாம். ரூ. 10 ஆயிரம் இருந்தாலே சிறுதொழில்களை தொடங்கலாம். ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தொடங்கக்கூடிய சிறுதொழில்கள் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோமா..!

  * பிளாக் எழுதுதல்

  உங்களிடம் இணையதளம் மற்றும் கணினி இருந்து கட்டுரை எழுதும் திறன் இருந்தால், குறைந்தது 500 ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலை வீட்டிலேயே தொடங்க முடியும். தனித்துவமாக உங்களது பிளாக் இருக்கும்போது சில மாதங்களில் நீங்கள் நல்ல வருமானத்தை பெற முடியும். இதேபோல, கிராபிக் டிசைன், டி.டி.பி. ஆபரேட்டர், ஆன்லைன் சேவை மையம் ஆகியவற்றை ரூ.10 ஆயிரம் முதலீட்டிலேயே தொடங்க முடியும்.

  * டிராவல் ஏஜென்சி

  இந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழிலென்றால் டிராவல் ஏஜென்சி. ரெயில், பேருந்து, விமானப் பயணச்சீட்டை பதிவு செய்தல் போன்ற சேவையை ரூ.10 ஆயிரம் முதலீட்டில் அளிக்க முடியும். இதற்கான கிளைச் சேவைகளை பல்வேறு பெரு நிறுவனங்களிடம் பெற முடியும். இல்லையெனில் தனியாகவும் தொடங்கலாம்.

  * ஈவன்ட் மேனேஜ்மென்ட்

  ரூ.10 ஆயிரம் முதலீட்டில் சிறிய அலுவலகமும், வேலைக்கு 10 ஆட்களும் (நண்பர்கள்) இருந்தால் போதும் இந்த நிறுவனத்தை தொடங்கிவிட முடியும். பந்தல்கால் நடுவதில் தொடங்கி பந்தி வரைக்கும் அனைத்தும் செய்துதர முடியும். எல்லா நிகழ்வுகளுக்கும் மக்கள் விரும்பும் வகையில் ஏற்பாடு செய்து தருவதால் இந்த தொழிலுக்கு தற்போது சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. பெரு நிறுவனங்கள் பலவும் இத் தொழிலை தொடங்கியுள்ள நிலையில் சிறிய அளவில் சேவையாக தொடங்கும் வாய்ப்புள்ளது. மாதத்துக்கு குறைந்தபட்சம் 5 நிகழ்ச்சிகளை நடத்தி தந்தாலே அனைத்து செலவுகளும்போக (ஊழியர்கள் ஊதியமும் சேர்த்து) ரூ.30 ஆயிரம் லாபம் உறுதி.

  * செயற்கை பூக்கள் கடை

  இயற்கையான பூக்களால் தயாரிக்கப்படும் பொக்கேக்களின் ஆயுள், சில நாட்களில் முடிந்து விடுகிறது. நிரந்தரமாக வீட்டை அலங்கரிக்கும் வகையில் தயாரிக்கப்படும் செயற்கை பூ பொக் கேகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. செயற்கையாக சிங்கிள் ரோஸ் பொக்கேகளை தயாரித்து விற்பது லாபகரமானது. தரை, சேரில் அமர்ந்தோ அல்லது டேபிளில் வைத்தோ தயாரிக்கலாம் என்பதால் வீட்டின் சிறிய அறை போதுமானது. பெரிய அளவில் முதலீடு தேவையில்லை. ரூ.10 ஆயிரம் போதுமானது. கலை உணர்வும், திறமையும் தான் முதலீடு. மாதம் ரூ.20 ஆயிரம் வரை லாபம் ஈட்ட முடியும்.

  * சோப் தயாரிப்பு

  குடிசைத் தொழிலாக வீட்டிலேயே தொடங்கலாம். ஒரு நாளைக்கு 800 கிலோ சோப் வீதம் மாதம் 25 நாளில் 20 டன் தயாரிக்கலாம். ஒரு டன் சோப் தயாரிக்க குறைந்தது ரூ.28,850 செலவாகும். ஒரு டன் சோப்பை ரூ.30 ஆயிரத்துக்கு டீலர்களுக்கு விற்கலாம். டன்னுக்கு ரூ.1150 வீதம் 20 டன்னுக்கு மாத லாபம் ரூ.23 ஆயிரம். நேரடியாக கடைகளுக்கு சப்ளை செய்தால் லாபம் இரு மடங்காகும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.

  * பிரெட் தயாரிப்பு

  மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரெட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க முடியும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு பப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம். கிடைக்கும் வருவாய்க்கு ஏற்ப தொழிலை விரிவுபடுத்த முடியும்.

  தையலகம்

  எம்பிராய்டரி மற்றும் சிறிய அளவிலான தையல் கூடத்தை ரூ.10 ஆயிரம் முதலீட்டில் தொடங்க முடியும். வேலைக்கு 5 நபர்களை கூட அமர்த்திக் கொள்ளலாம். குடிசைத் தொழிலாகப் பதிவு செய்யவும் முடியும். ஆடை வடிவமைப்பு நிறுவனங்களின் ஆர்டர்களை பெற்று லாபம் ஈட்டலாம். குறைந்தபட்சம் மாதம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை ஆர்டர்களுக்கேற்ப வருமானம் ஈட்டலாம்.

  • பட்டுப் புழு வளர்ப்பு தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம்.
  • பெண்கள் நிலையான வருமானத்தைப் பெற முடியும்.

  பெண்கள் முழு நேரம் அல்லது பகுதி நேரத் தொழிலாக செய்து, வருமானம் ஈட்டக்கூடிய சுய தொழில்களில் ஒன்று 'பட்டுப்புழு வளர்ப்பு'. இதில் ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும், நிலையான வருமானத்தைப் பெற முடியும். பெண்கள் பட்டுப்புழு வளர்ப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளும், சில தனியார் நிறுவனங்களும் சிறப்பு பயிற்சி அளிக்கின்றன.

  அவற்றை பயன்படுத்திக் கொண்டால், பட்டுப் புழு வளர்ப்பு தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம். பட்டுப்புழு கூடாரம், தேவையான கருவிகள் என அனைத்துக்கும் ரூ.80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை ஒரு முறை முதலீடு செய்வது போதுமானது. பட்டுப்புழு வளர்ப்புக்கு சுத்தமான சுற்றுச்சூழலும், சீரான சீதோஷ்ண நிலையும் அவசியம்.

  எஸ் 35 பட்டுப்புழு அல்லது வி1 வகை பட்டுப்புழுக்களை எளிதாக வளர்க்கலாம். இதற்கு பெரிய அளவில் இடம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்களுக்குக் கிடைக்கும் இடத்தின் அளவைப் பொறுத்து, பட்டுப்புழு வளர்ப்பு முறையைத் தேர்வு செய்யலாம்.

  பட்டுப்புழுவுக்கு உணவாகும் மல்பெரி செடி வளர்ப்புக்கு ஏற்றவாறு சொட்டுநீர்ப் பாசனம் அமைப் பதற்கு இணை வரிசை நடவு முறையை (90 செ.மீ X 90 செ.மீ மற்றும் 60 செ.மீ X 60 செ.மீ) பின்பற்றலாம். இது இடை உழவு செய்வதற்கும், எளிதாக அறுவடை செய்வதற்கும் ஏற்றதாக இருப்பதுடன், ஈரப்பதம் குறைவதையும் தடுக்கும்.

  ஒரு வருடத்தில் தொழு உரத்தை 2 முறையும், தழை, மணி மற்றும் சாம்பல் சத்தை 5 முறையும் உரமாக இட வேண்டும். 80 முதல் 120 மில்லி மீட்டர் அளவில் வாரம் ஒரு முறை நீர் பாசனம் செய்யலாம். தினமும் மூன்று முறை புழுக்களுக்கு உணவு அளிக்க வேண்டும். 80 நாட்கள் இடைவெளியில், வருடத்துக்கு 5 முதல் 10 முறை வரை அறுவடை செய்யலாம். அரசு, மூன்று நிலையான பட்டுப்புழு வளர்ப்பு அமைப்புக்கு ரூ.63 ஆயிரம் முதல் 87 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்குகிறது. மேலும், அரசின் திட்டம் மூலமாகவும் வர்த்தகத்தை மேற்கொள்ளலாம்.

  பட்டுப்புழுவை பாதிக்கும் நோய்கள்

  வருடம் முழுவதும் புழுக்களை வளர்ப்பதாலும், காலத்துக்கு ஏற்றபடி மாறும் சீதோஷ்ண நிலையின் காரணமாகவும், பட்டுப்புழு எளிதாக நோய்க்கிருமிகளால் தாக்கப்படும். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் பெப்ரைன் நோய்கள் பட்டுப்புழுவை அதிகம் தாக்கும். வைரசால் ஏற்படும் 'கிராஸரி நோய்' பட்டுப்புழுவை வெகுவாகப் பாதிக்கும்.

  இது புழுவின் தோலில் மினுமினுப்பையும், எண்ணெய்த் தன்மையையும் உண்டாக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட புழுக்கள், ஒரே இடத்தில் இருக்காமல் அங்கும் இங்கும் நகர்ந்துக்கொண்டே இருக்கும். கால்கள் பிடிமானத்தை இழந்து புழுக்கள் தலைகீழாகத் தொங்கத் தொடங்கும். புழுக்களின் தோல் மெலிந்து, வெள்ளை நிற திரவம் வெளியாகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட புழுக்கள் 7 நாட்களில் உயிரிழக்கும். இதனால் லாபம் வெகுவாகக் குறையும்.

  • மற்றவர்கள் நம்மை அவமதிப்பதாக ஒருபோதும் கருதாதீர்கள்.
  • எல்லாரிடமும் ஆலோசனை பெறுவதை நிறுத்துங்கள்.

  பெண்கள் 30 வயதுக்கு பிறகு வாழ்க்கையில் சில விஷயங்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை தேவையற்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதை தடுக்கும். வாழ்க்கையை வசந்தமாக்க உதவும்.

  உடல் ஆரோக்கியத்தை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். செல்வத்தை விட ஆரோக்கியமே மேலானது. ஏனெனில் ஆரோக்கியம் இல்லாவிட்டால் எதையும் அனுபவிக்க முடியாது. செல்வத்தை தேடவும் முடியாது.

  உங்கள் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் எல்லாவற்றையும் எவருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பெற்றோர் மற்றும் உங்கள் வாழ்க்கை துணை ஆகியோரிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளலாம். அவர்களிடம் மனம் விட்டு பேசும் அளவுக்கு மற்றவர்களிடம் பேசுவதை கூடுமானவரை தவிருங்கள்.

  உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் பெறும் வெற்றி உங்களை பாதிக்கக்கூடாது. அவர்களை போல் நம்மால் வாழ முடியவில்லையே என்று ஏக்கம் கொள்ளாதீர்கள். உங்கள் விருப்பப்படி செயல்படுங்கள்.

  வருமானத்திற்கான ஆதாரமாக ஒன்றை மட்டுமே சார்ந்திருக்காதீர்கள். உங்களிடம் இருக்கும் தனித்திறமைகளை மெருகேற்றி அதனை வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்பு களாக மாற்றுங்கள்.

  உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். நிறை, குறைகளை ஏற்றுக்கொள்ள பழகுங்கள். தவறுகளை திருத்துவதற்கு தயங்காதீர்கள்.

  நிராகரிப்புக்கு அஞ்சாதீர்கள். மற்றவர்கள் நம்மை அவமதிப்பதாக ஒருபோதும் கருதாதீர்கள். அது நிச்சயமாக உங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்பளிக்கும். உங்களுக்கான வாய்ப்புகளை யாராலும் தட்டிப்பறித்துவிட முடியாது. உங்கள் திறமையை நிரூபிப்பதற்கு கிடைத்திருக்கும் வாய்ப்பாக கருதி செயல்படுங்கள். அது நல்ல முடிவையே கொடுக்கும்.

  உங்கள் கருத்து நியாயமாக இருக்கும்பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லாத நபர்களுடன் விவாதம் செய்து உங்கள் நேரத்தை ஒருபோதும் வீணாக்காதீர்கள்.

  எல்லாரிடமும் ஆலோசனை பெறுவதை நிறுத்துங்கள். முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்.

  மற்றவர்கள் உங்கள் மீது வைக்கும் விமர்சனங்களை பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். எத்தகைய விமர்சனமாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.

  'இப்போது நமக்கு நேரம் சரி இல்லை. நல்ல வாய்ப்புகள் நம்மை தேடி வரட்டும்' என்று சரியான நேரத்தை எதிர்பார்த்து காத்திருப்பதை நிறுத்துங்கள். 'நல்ல வாய்ப்பு' என்று எதுவும் இல்லை. நாம் தான் கிடைக்கும் வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

  நல்ல தோழிகளை தேர்ந்தெடுத்து பழகுங்கள். அவர்களுக்கு உதவி தேவைப்படும் சமயத்தில் உங்களால் இயன்ற உதவிகளை செய்யுங்கள். அதுதான் நட்பை பலப்படுத்தும்.