என் மலர்
நீங்கள் தேடியது "உச்ச நீதிமன்றம்"
- நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் குற்றம் சாட்டியது.
- மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது
பிரபல சமூக ஊடகங்களான வாட்ஸ்அப். பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மாற்றப்பட்ட வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கைகள் மூலம் வாட்ஸ்அப் பயனாளர்களின் தகவல்களை, பேஸ்புக்கிடம் கொடுத்து சமூக வலைதள சந்தையின் நியாயமற்ற வணிக நடைமுறைகளில் மெட்டா ஈடுபட்டதாக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) குற்றம் சாட்டியது.
இதனால் மற்ற சமூக வலைத்தளங்களுக்கு வணிக ரீதியிலான இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகக் கூறி மெட்டா நிறுவனத்துக்கு 213.14 கோடி ரூபாய் அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த நியாயமற்ற நடைமுறையை உடனடியாக மெட்டா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட அவகாசத்திற்குள் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து மெட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி சூர்யகாந்த், "நுகர்வோர் தனிப்பட்ட தரவைப் பகிர்ந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள் நுகர்வோரின் தனியுரிமையுடன் நீங்கள் எப்படி விளையாட முடியும்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்திய நாட்டின் சட்டத்திற்கு இணங்க வேண்டும். எங்கள் நாட்டின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாட முடியாது எங்கள் தரவின் ஒரு இலக்கத்தை கூட நீங்கள் பகிர்ந்து கொள்ள நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் மேலும் நாட்டின் சட்டங்கள் பின்பற்றப்படாவிட்டால் உங்கள் நிறுவனங்கள் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் பிப்ரவரி 9ஆம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
- 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு வழக்கைத் தாக்கல் செய்தது.
- மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்திய அரசு நடத்திய சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வி
தமிழ்நாடு, கர்நாடகா இடையே நீண்ட காலமாக நிலவும் பெண்ணையாறு நதி நீர் விவகாரத்தில் தீர்வு காண, ஒரு மாதத்திற்குள் நடுவர் மன்றத்தை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு அதிகாரப்பூர்வ அரசிதழில் முறையான அறிவிப்பை வெளியிட்டு ஒரு மாதத்திற்குள் தீர்ப்பாயத்தை அமைக்க உத்தரவிட்டது.
மேலும், தமிழ்நாட்டின் புகாரை மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிணக்குகள் சட்டம், 1956-ன் பிரிவு 5-ன் கீழ் தீர்ப்பாயத்திற்குப் பரிந்துரைக்கவும் உத்தரவிட்டது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணைகள் மற்றும் தடுப்பணைகளைக் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அந்த மனுவில், குறிப்பாக மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் மற்றும் மத்திய அரசு நடத்திய சமரச முயற்சிகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சட்டப்பூர்வமாகத் தீர்ப்பாயம் அமைப்பதே தீர்வாகும் என நீதிமன்றம் முடிவு செய்தது.
கர்நாடக அரசு மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டுவது மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீரைத் திசைதிருப்பும் பணிகளை மேற்கொள்வது, கீழ்நிலை மாநிலமான தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையைப் பாதிப்பதாகக் கூறி 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.
- கடந்தாண்டு அந்த சிறுவனுக்கு 18 வயது ஆனநிலையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற காவல்துறையின் கோரிக்கையை சிறுவர் நீதி வாரியம் நிராகரித்தது.
- விபத்து நடந்த சிலமணி நேரங்களிலேயே சிறுவனுக்கு ஜாமின்
கடந்த 2024ஆம் ஆண்டு இந்தியாவையே உலுக்கிய புனே போர்ஷே கார் விபத்து வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவின் புனேயின் கல்யாணி நகர் பகுதியில், மது போதையில் 17 வயது சிறுவன் ஓட்டிய அதிவேக போர்ஷே கார் மோதியதில், பைக்கில் சென்ற அனீஷ் அவாதியா மற்றும் அஸ்வினி கோஷ்டா ஆகிய இரண்டு இளம் ஐடி ஊழியர்கள் உயிரிழந்தனர்.
விபத்து நடந்த சிலமணி நேரங்களிலேயே விபத்திற்கு முக்கிய காரணமான 17 வயது சிறுவனுக்கு நீதி வாரியம் ஜாமினும் வழங்கியது. இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 15 நாட்கள் காவல்துறையில் பணிபுரியவும், சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரை எழுதவும், குடிப்பழக்கத்திற்கு சிகிச்சை பெறவும், ஆலோசனை அமர்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.
தொடர்ந்து சிறுவனின் இரத்தத்தில் மது இருப்பதை மறைக்க, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உதவியுடன் அவனது தாயின் இரத்த மாதிரியை மாற்றி வைத்தது விசாரணையில் அம்பலமானது. இதற்காக ரூ.3 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது. இதில் அச்சிறுவனின் தாயும், தந்தையும் கைது செய்யப்பட்டனர்.
கடந்தாண்டு அந்த சிறுவனுக்கு 18 வயது ஆனநிலையில் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்ற காவல்துறையின் கோரிக்கையை சிறுவர் நீதி வாரியம் நிராகரித்தது. தற்போது வரை இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதித்யா அவினாஷ் சூட், ஆஷிஷ் சதீஷ் மிட்டல் மற்றும் அமர் சந்தோஷ் கெய்க்வாட் என்ற மூன்று பேருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜாமின் வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் 18 மாதங்கள் சிறையில் இருந்ததை குறிப்பிட்ட நீதிபதிகள், "தண்டனைக்கு முன்பே சிறைவாசம் இருக்கக் கூடாது" என்று குறிப்பிட்டு இந்த ஜாமினை வழங்கியுள்ளனர்.
இந்த மூன்றுபேரும் காருக்குள் இருந்த முக்கிய குற்றவாளிகளின் இரத்த மாதிரிகளை அவர்களது இரத்த மாதிரிகளுடன் மாற்றிக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
- மகா காலனின் முன்னிலையில் அனைவரும் சமம்; எவரும் விஐபி கிடையாது
- அனைவருக்கும் நுழைவதற்கு முழுமையான தடை அல்லது அனைவருக்கும் சமமான அணுகல்
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி ஸ்ரீ மகா காலேஸ்வரர் கோயிலில் நடைமுறையில் உள்ள விஐபி தரிசனத்திற்கு எதிரான மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்து, சமீபத்தில் மனுவை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம். மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது பல்வேறு கருத்துகளை முன்வைத்துள்ளது தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு.
"மகா காலனின் முன்னிலையில் அனைவரும் சமம்; எவரும் விஐபி கிடையாது" என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, கோயிலுக்குள் யார் எப்போது நுழைய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் வாயிற்காவலராக நீதிமன்றம் செயல்பட முடியாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் கோயில் சன்னதிக்குள் நுழைவது மற்றும் வழிபாட்டு முறைகளை ஒழுங்குபடுத்துவது என்பது கோயில் நிர்வாகம் மற்றும் மாநில அதிகாரிகளின் நிர்வாக ரீதியான முடிவே தவிர, அது நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது அல்ல என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். தொடர்ந்து மதம் சார்ந்த சடங்குகளில் நீதிமன்றம் தலையிடுவது தேவையற்ற சிக்கல்களை உருவாக்கும் என நீதிமன்றம் எச்சரித்தது.
அப்போது பேசிய தலைமை நீதிபதி,
கோயில் நிர்வாகத்தில் நீதித்துறை தலையீட்டிற்கு வரம்புகள் உள்ளன. இதுபோன்ற பிரச்சினைகளை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். விஐபி நுழைவு அனுமதிக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. நாங்கள் நீதித்துறை சார்ந்த பிரச்சினையில் இருக்கிறோம்.
சட்டப்பிரிவு 14 (சமத்துவ உரிமை) கருவறைக்குள் பொருந்தும் என்று நாம் கருதினால், மக்கள் சட்டப்பிரிவு 19 (பேச்சுரிமை) போன்ற பிற உரிமைகளையும் கோருவார்கள். முதலில், வேறொருவர் உள்ளே செல்வதால் எனக்கும் உள்ளே செல்ல உரிமை உண்டு என்பீர்கள்; பிறகு, எனக்குப் பேச்சுரிமை இருப்பதால் இங்கேயே அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்க எனக்கு உரிமை உண்டு என்பீர்கள். அதன் பிறகு அனைத்து அடிப்படை உரிமைகளும் கருவறைக்குள் கோரப்படும்," என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
உஜ்ஜைனி மகாகாலேஸ்வரர் கோயிலின் கருவறைக்குள் விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து தர்பன் அவஸ்தி என்பவர் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், "VIP" என்பது எந்தச் சட்டத்திலோ அல்லது விதியிலோ வரையறுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக கோயில் நிர்வாகக் குழு மற்றும் ஆட்சியர் செயல்படுத்தும் நிர்வாக விருப்புரிமை சார்ந்த விஷயம் என்று கருத்து தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்து, மனுதாரர் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள்;
"கருவறைக்குள் நுழைவதைப் பொறுத்தவரை, ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்பட வேண்டும். "VIP அந்தஸ்து என்ற பெயரில் குடிமக்களுக்கு இடையே பாகுபாடு காட்ட முடியாது.
ஒரு நபர் 'கர்ப்பகிரகத்திற்குள்'நுழைகிறார் என்றால், அது பெரும்பாலும் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையால் மட்டுமே நடக்கிறது. ஒரு சாதாரண பக்தருக்கும் தெய்வத்திற்கு தண்ணீர் வழங்கும் அதே உரிமை இருக்கவேண்டும். அனைவருக்கும் நுழைவதற்கு முழுமையான தடை அல்லது அனைவருக்கும் சமமான அணுகல் இருக்க வேண்டும்" என மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தெரிவித்தார்.
- தணிக்கை வாரியம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கப் போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை
- தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பு நிறுவனம் ஆலோசனை
'ஜன நாயகன்' பட தணிக்கை சான்று விவகார வழக்கில் ஜன.27 அன்று, சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, இப்படத்திற்கு உடனடியாக 'U/A' சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் தணிக்கை வாரியம் தனது தரப்பு விளக்கத்தை அளிக்கப் போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை என்று கூறி, இந்த வழக்கினை மீண்டும் தனி நீதிபதியின் விசாரணைக்கே அனுப்பி வைத்தது.
இந்நிலையில் தணிக்கை வாரியம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. படக்குழு மேல்முறையீடு செய்தால், தங்களின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தனி நீதிபதி மீண்டும் விசாரணை நடத்தி இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை படத்தின் வெளியீடு குறித்து தெளிவான தகவல் வெளியாகாது.
இதனிடையே சட்டப் போராட்டத்தைத் தொடர்வதற்குப் பதிலாக, தணிக்கை வாரியத்தின் மறுஆய்வுக் குழுவை அணுகத் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
- வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 4-ந் தேதி இந்த பணி தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதம் 19 -ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதனால் 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756-ஆக குறைந்தது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பெயரை சேர்க்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் புதிதாக வாக்காளர் பட்டியல் பெயர்களை சேர்க்கவும் கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி முதல் இந்த மாதம் 18-ந்தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு படிவங்கள் பெறப்படவில்லை. அதனால் ஜனவரி 30-ந்தேதி வரை பெயர் சேர்க்க அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- பாகுபாடு என்பது SC, ST பிரிவினருடன் OBCவகுப்பினரையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- கடுமையான நடவடிக்கைகள் எடுக்க UGC-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 13, 2026 அன்று உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகள் 2026 விதிகள் அறிவிக்கப்பட்டது. இந்த யுஜிசி விதிகள், உயர்கல்வி வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அதாவது இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு சரியாக பின்பற்றப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு நீண்டநாட்களாக எழுந்துவருகிறது. இதனை ஒழுங்குப்படுத்த தற்போது இந்த விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனமும் 'சம வாய்ப்பு மையம்' (Equal Opportunity Centre) ஒன்றை அமைக்க வேண்டும் என்பது இந்த விதிகளின் ஒரு முக்கிய அம்சமாகும். அதேபோல கல்வி நிறுவனத் தலைவரின் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட சமத்துவக் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழுவில் குறைந்தபட்சம் 50% உறுப்பினர்கள் SC, ST, OBC, மாற்றுத்திறனாளிகள் அல்லது பெண்கள் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
புதிய விதிமுறைகளின் கீழ், பாகுபாடு என்பது SC, ST பிரிவினருடன் இப்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் (OBCs) உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. புகார்களைப் பதிவு செய்ய 24 மணிநேர உதவி எண் மற்றும் ஆன்லைன் போர்டல் உருவாக்கப்பட வேண்டும். சமத்துவக் குழு புகார் கிடைத்த 24 மணிநேரத்திற்குள் கூட வேண்டும் மற்றும் 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பாகுபாடு தொடர்பான புகார்களைக் கையாள்வதில் அந்தந்தக் கல்வி நிறுவனங்களின் தலைவர்களே இனி நேரடியாகப் பொறுப்பாவார்கள். விதிமுறைகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்களுக்கு நிதி உதவி நிறுத்தம், பட்டங்கள் வழங்கும் அதிகாரம் ரத்து அல்லது அங்கீகாரம் ரத்து போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்க UGC-க்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாதி பாகுபாடுகளை களையும் வண்ணம் UGC அறிமுகப்படுத்திய தற்காலிகமாக விதிமுறைகளை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த UGC விதிமுறைகளை உயர்சாதியினர் எதிர்த்து வரும் நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு உத்தரவு வரும் வரை 2012 ஆம் ஆண்டு விதிகள் நடைமுறையில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்த இடைக்காலத் தடையானது மாணவர்களுக்கோ அல்லது கல்வி நிறுவனங்களுக்கோ நிர்வாக அல்லது நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.
- பி.சி.சி.ஐ என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கம்.
- பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் சில சமயங்களில் வால் நாயை ஆட்டுவிக்கிறது என்பதுதான் இங்கிருக்கும் பிரச்சனை.
"பி.சி.சி.ஐ-ஆல் நடத்தப்படும் கிரிக்கெட் அணியை 'டீம் இந்தியா'என்றோ அல்லது 'இந்திய தேசிய கிரிக்கெட் அணி' என்றோ அழைப்பதற்கு பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதிக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று விமர்சித்த உச்சநீதிமன்றம், தேவையற்ற வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றங்களின் சுமையைக் கூட்டுவதாகவும் மனுதாரரை கண்டித்தது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் ரீபக் கன்சல் தாக்கல் செய்த பொதுநல மனுவை நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் டெல்லி உயர் நீதிமன்றமே முன்மாதிரியான அபராதம் விதித்திருக்க வேண்டும் என்றும், "உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்காதது நியாயமற்றது. முன்மாதிரியான அபராதம் விதிக்கப்படவில்லை என்றால், இது போன்ற தேவையற்ற மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வருவதை எப்படி நிறுத்துவது?" என்று அந்த அமர்வு கேள்வி எழுப்பியது. மேலும், மனுதாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க நீதிமன்றம் முற்பட்டது. ஆனால் மனுதாரரின் வழக்கறிஞர் விடுத்த தொடர் கோரிக்கைகளை ஏற்று அந்த அபராதத்தைத் தள்ளுபடி செய்தது.
விசாரணையின்போது மனுமீது கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்,
"இது நீதிமன்றத்தின் நேரத்தையும், உங்கள் நேரத்தையும் அப்பட்டமாக வீணடிக்கும் செயலாகும். இது என்ன மாதிரியான வாதம்? அந்த அணி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்களா? எல்லா இடங்களுக்கும் சென்று விளையாடும் அந்த அணி, நாட்டைப் பற்றி தவறாகச் சித்தரிக்கிறதா? பி.சி.சி.ஐ-யை விட்டுவிடுங்கள், தூர்தர்ஷனோ அல்லது வேறு ஏதேனும் அதிகார அமைப்போ அதை 'டீம் இந்தியா' என்று காட்டினால், அது இந்திய அணி இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது.
இதனிடையே பி.சி.சி.ஐ-க்கு ஆதரவாக மத்திய அரசு இருப்பதாக தெரிவித்த நீதிபதி பாக்சி, "மத்திய அரசு இங்கே வந்திருந்தால் ஒரு பிரச்சனை இருந்திருக்கும், ஆனால் பி.சி.சி.ஐ-க்கு மிகச்சிறந்த ஆதரவு உள்ளது. இப்போது பரவலான கட்டுப்பாடு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் சில சமயங்களில் வால் நாயை ஆட்டுவிக்கிறது என்பதுதான் இங்கிருக்கும் பிரச்சனை.
பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?
பி.சி.சி.ஐ என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கம். அது ஒரு தேசிய விளையாட்டு கூட்டமைப்பாகவோ அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h)-ன் கீழ் ஒரு "பொது அதிகார அமைப்பாகவோ" அங்கீகரிக்கப்படவில்லை. மேலும் இந்திய அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாத நிலையில், பி.சி.சி.ஐ அணியை 'டீம் இந்தியா' அல்லது 'இந்திய தேசிய அணி' என்று குறிப்பிடுவது பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது.
இந்த நடைமுறையானது தவறான சித்தரிப்புக்கு சமமானதாகும். மேலும் இது தேசியப் பெயர், தேசியக் கொடி மற்றும் சின்னங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தும் 'சின்னங்கள் மற்றும் பெயர்கள் (தவறான பயன்பாடு தடுப்பு) சட்டம், 1950' மற்றும் 'இந்தியக் கொடி விதிமுறை, 2002' ஆகியவற்றை மீறும் வாய்ப்புள்ளது. என தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
"இந்த அணி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்களா? எல்லா இடங்களுக்கும் சென்று இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அணியை, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா? அது 'டீம் இந்தியா' இல்லையா? அது 'டீம் இந்தியா' இல்லை என்றால், ஏன் இல்லை என்பதை எங்களுக்குத் தயவுசெய்து விளக்குங்கள்," என்று நீதிபதி துஷார் ராவ் கெடேலா கேள்வி எழுப்பினார்.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவும் இந்த வழக்கை அர்த்தமற்றது எனக் குறிப்பிட்டதோடு, "இது நீதிமன்றத்தின் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் அப்பட்டமாக வீணடிக்கும் செயலாகும். ஏதேனும் ஒரு விளையாட்டில் அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசிய அணியைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக் போன்றவற்றுக்குச் செல்லும் இந்தியக் குழுவினர் அவர்கள் அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? அவர்கள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையா? ஹாக்கி, கால்பந்து, டென்னிஸ் என எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் சரி அது அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
- தொழுகைக்காக வரும் முஸ்லிம் நபர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்
- போஜ்சாலா வளாகத்தில் செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தி வருகின்றனர்
மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய போஜ்சாலா-கமல் மௌலா மசூதியில் நாளை, வசந்த பஞ்சமியை முன்னிட்டு சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை இந்துக்கள் பிரார்த்தனை செய்ய இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்கள் அன்று மதியம் 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொழுகை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தொழுகைக்காக வரும் முஸ்லிம் நபர்களின் பட்டியலை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. நாளை போஜ்சாலா வளாகத்தில் தொழுகை மற்றும் பூஜைகள் நடத்த இரு சமூகத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மல்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
இரு தரப்பினரும் பரஸ்பர மரியாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கைப் பேணுவதற்காக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2003, ஏப்ரல் 7-ம் தேதி இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை செய்த ஏற்பாட்டின்படி, போஜ்சாலா வளாகத்தில் செவ்வாய்க்கிழமைகளில் இந்துக்கள் பூஜையும், வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் தொழுகையும் நடத்தி வருகின்றனர்.
இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் பாதுகாப்பில் உள்ள 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போஜ்சாலா நினைவிடத்தை, இந்துக்கள் 'வாக்தேவி' (சரஸ்வதி தேவி) கோயில் என்று கருதுகின்றனர். அதேவேளையில், முஸ்லிம் சமூகத்தினர் இதனை 'கமல் மௌலா மசூதி' என்று அழைக்கின்றனர்.
- நிர்வாக வசதிக்காகவும் மற்றும் ஒரே வேலையை இரண்டு அமைப்புகள் செய்வதைத் தவிர்க்கவுமே பொறுப்பு பிரித்து வழங்கப்பட்டது.
- மாநிலக் காவல்துறைக்கோ அல்லது மாநிலத்தின் சிறப்பு ஏஜென்சிக்கோ ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை அல்லது அவர்களை விலக்கி வைக்கவில்லை
மத்திய அரசு ஊழியர் மீது மாநிலக் காவல்துறை வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக, சிபிஐ-இடம் முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், மாநில புலனாய்வு அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, சிபிஐ-யின் அனுமதி இல்லை என்ற காரணத்திற்காகச் செல்லாது என்று அறிவிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் (PC Act) 17-வது பிரிவின்படி, அந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்களை ஒரு மாநில ஏஜென்சி, மத்திய ஏஜென்சி அல்லது எந்தவொரு காவல்துறை ஏஜென்சியும் விசாரிக்க முடியும்; ஆனால், விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ஒரு குறிப்பிட்ட தரவரிசையில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.
மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான லஞ்சம், ஊழல் மற்றும் தவறான நடத்தை தொடர்பான வழக்குகளைப் பதிவு செய்வதற்கோ அல்லது விசாரிப்பதற்கோ மாநிலக் காவல்துறைக்கோ அல்லது மாநிலத்தின் சிறப்பு ஏஜென்சிக்கோ ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை அல்லது அவர்களை விலக்கி வைக்கவில்லை" என்று தெரிவித்தனர்.
நிர்வாக வசதிக்காகவும் மற்றும் ஒரே வேலையை இரண்டு அமைப்புகள் செய்வதைத் தவிர்க்கவுமே, மத்திய அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு சிபிஐ-இடமும், மாநில அரசு மற்றும் அதன் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு எதிரான லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு மாநில ஊழல் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் பிடியாணையில்லா குற்றங்கள் என்பதால், மாநில காவல்துறையும் அவற்றை விசாரிக்க முடியும் என்று நீதிமன்றம் மேலும் கூறியது. மத்திய அரசு ஊழியர் ஒருவருக்கு எதிரான ஊழல் வழக்கை ரத்து செய்ய மறுத்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தபோது உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
குற்றம் சாட்டப்பட்டவர் மத்திய அரசு ஊழியராக இருந்தபோதிலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அதிகாரம் உள்ளது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 'சிபிஐ மட்டுமே இந்த வழக்கை அல்லது விசாரணையைத் தொடங்கியிருக்க முடியும் என்று கூறுவது தவறானது' என உயர் நீதிமன்றம் எடுத்த நிலைப்பாடு சரியானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
- தனி நீதிபதி பி.டி.ஆஷா, ஜன நாயகன் படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
- இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது
ஜன நாயகன் திரைப்படத்திற்கு விரைந்து தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என படக்குழு உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா, படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அந்த அவசர மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தனிநீதிபதி உத்தரவிற்கு தடை விதித்தது.
இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி உச்ச நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் உங்கள் வாதங்களை உயர் நீதிமன்றத்தில் முன்வைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதன்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் அமர்வு காலை 11.30 மணிக்கு விசாரிக்கவுள்ளது.
- கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது.
- இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது
மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 'தர்க்கரீதியான முரண்பாடுகள்' பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களின் பெயர்களை வெளியிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஜன.19) உத்தரவிட்டது.
ஆட்சேபனைக்குரிய 1.25 கோடி வாக்காளர்களின் பெயர்களைக் கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள் மற்றும் வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சேபனைகளைத் தெரிவிக்கவும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் போது சாதாரண குடிமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, வெளிப்படைத்தன்மையுடன் இந்தச் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும் எனத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பெயர் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும் இடங்களில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மேற்கு வங்க காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தந்தை பெயரில் மாற்றம், வயது முரண்பாடு (எடுத்துக்காட்டாக, பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையிலான வயது வித்தியாசம் 15-க்கும் குறைவாகவோ அல்லது 50-க்கும் அதிகமாகவோ இருத்தல்) போன்ற காரணங்களால் இந்தப் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.
முன்னதாக, கடந்த மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 58 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த 1.25 கோடி பேரின் தரவுகள் குறித்து உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14, 2026 அன்று வெளியிடப்பட உள்ளது






