என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், சாலைகள், வடிகால்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்துள்ளேன்.
- பிரசாரத்தில் பாரிவேந்தரை வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.
குளித்தலை:
திருச்சி மாவட்டம் துறையூர் தொகுதி உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனாபுரத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது,
நான் கடந்த முறை இந்த தொகுதியில் ஜெயித்து எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளேன். மேலும் எனது பல்கலைக்கழகம் மூலம் லால்குடி, மண்ணச்சநல்லூர், துறையூர், பெரம்பலூர், முசிறி, குளித்தலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1200 மாணவ- மாணவிகளுக்கு உயர்க்கல்வி எனது சொந்த செலவில் வழங்கி உள்ளேன். மேலும் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பள்ளி கட்டிடங்கள், சமுதாயக்கூடங்கள், சாலைகள், வடிகால்கள், பேருந்து நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகள் செய்துள்ளேன்.
இந்நிலையில், இம்முறை நான் உங்களின் பேராதரவோடு தேர்தலில் நிற்கிறேன். நான் வெற்றி பெற்றவுடன் 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பில் உயர் மருத்துவம் சிகிச்சை பெறவும், தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் மீண்டும் வரும் ஆண்டுகளில் 1200 மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி பெற வழிவகை செய்வேன்.
மேலும் அனைத்து ஏரி, குளங்கள் தூர்வாரவும், இன்னும் பேருந்து கூடுதல் வசதிகள் செய்து தருவேன். விவசாயிகளின் பிரச்சனைகளை கவனத்தில் எடுத்து அவர்களின் பிரச்சனையை தீர்க்கும் வகையில் பாடுபடுவேன் என பேசினார்.
தொடர்ந்து பாதர்பேட்டை, வைரிசெட்டிபாளையம், பா.மேட்டூர், பச்சபெருமாள்பட்டி, அழகாபுரி, எரகுடி உள்ளிட்ட கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். உடன் இந்திய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் ஜெயசீலன், முதன்மை செயலாளர் சத்தியநாதன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், அன்புதுரை, துறையூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சபா ராஜேந்திரன், பாஸ்கர், பார்த்திபன், செந்தில், ராஜ்குமார், தமிழரசி மற்றும் கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பிரசாரத்தில் பாரிவேந்தரை வாக்காளர்கள் ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.
- திமுக ஆட்சியைப் போல் தகுதியான பெண், தகுதியற்ற பெண் என பிரிக்கப்படாது.
- போதைப்பொருள் நடமாட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பசும்பொன்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் கமுதி தாலுகா பேரையூரில் பருத்திக்காட்டில் வேலை செய்த விவசாயிகளிடம் இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். பின்னர் பாக்குவெட்டி, பசும்பொன், கோட்டைமேடு, கமுதி பேரூராட்சி வளைய பூக்குளம், மண்டலமாணிக்கம், கிளாமரம், ராமசாமிப்பட்டி, நீராவி, கீழராமநதி, கே.எம்.கோட்டை, எம்.எம்.கோட்டை ஆகிய கிராமங்களில் அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாள் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு 3 ஆயிரம் வழங்கப்படும் என பொதுச்செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார். திமுக ஆட்சியைப் போல் தகுதியான பெண், தகுதியற்ற பெண் என பிரிக்கப்படாது. அனைத்து மகளிருக்கும் 3 ஆயிரம் வழங்கப்படும். எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நான் சாதாரண விவசாயி, எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். கடந்த தேர்தலில் பொய்களை அவிழ்த்துவிட்டு வெற்றி பெற்றவரை பார்த்திருக்கிறீர்களா? அடையாளம் தெரியுமா என பொதுமக்களிடமே கேட்டார். பார்த்ததில்லை எனவும், எங்கள் ஊர்பக்கமே வந்ததில்லை என்றும் கூறினார்கள். எனவே உங்கள் கோரிக்கைகள் நிறைவேற இரட்டை இலைக்கு வாக்கு அளித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
வேட்பாளருடன் ராமநாதபுரம் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் மணிகண்டன், கழக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் வக்கில் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் காளிமுத்து, ராஜேந்திரன், முதுகுளத்தூர் பகுதி ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செந்தில்குமார், தேரிருவேலி கருப்பசாமி, கிடாத்திருக்கை சண்முகபாண்டி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தேமுதிக, புதிய தமிழகம் மருது சேனா உள்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
- முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள்.
- தேசத்தினுடைய கடன் எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு கடன் உயர்ந்துள்ளது?
திருவட்டார்:
குமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை காய்ந்து போன சருகு போன்றது. அதில் ஓன்றுமே இல்லை. அதை காற்றில் பறக்க விடலாம். இந்தியா கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள தேர்தல் அறிக்கை மக்களை கவரும் வகையில் உள்ளது.
100 நாள் வேலை வாய்ப்பை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் என்று கூறியிருப்பது, கிராமப்புற பொருளாதாரத்தை புரட்டி போடும் அளவிற்கு உள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் உள்ள பல்வேறு வேறுபாடுகள் களையப்படும். ஜி.எஸ்.டி. வரியால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம்முடைய உழைப்பு நமக்கு தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசின் கஜானாவில் சேர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு அதிகமான சிறு தொழில்கள் அழிந்ததற்கும் ஜி.எஸ்.டி. காரணமாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. மறுசீராய்வு செய்யப்படும் என்று காங்கிரஸ் தெரிவித்து உள்ளது.
கல்வியை எடுத்துக்கொண்டால் இன்றைக்கு சைனிக் ஸ்கூல், இந்தியாவினுடைய முக்கியமான பள்ளி. ராணுவத்திற்கு குழந்தைகளை தயாராக்க கூடிய அந்த பள்ளிகளை ஆர்.எஸ்.எஸ். கைப்பற்றி உள்ளது. அதை சார்ந்த அமைப்புகளுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு அநீதியை செய்தார்கள்.
இதை எல்லாம் ஒவ்வொரு குடிமகனும் சிந்தித்து பார்க்க வேண்டும். குமரி மாவட்டத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்யப்படுவதாக, பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அவரை பார்த்து சிரிக்கவா, அழவா என்று தெரியவில்லை.
அவர் தான் மதத்தை பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் எங்கள் பிரசாரத்தில் மதத்தைப் பற்றி பேசியுள்ளோமா? 100 சதவீதம் நாங்கள் பேசவில்லை.
மதம் என்பது ஒரு மனிதனுடைய நம்பிக்கையை சார்ந்தது. அந்த நம்பிக்கை மாறுபட்டதற்கு உட்பட்டது. இன்று ஒரு நம்பிக்கையில் இருப்பான், நாளை ஒரு நம்பிக்கையில் இருப்பான். ஆனால் அந்த மதம் ஒன்றை மூலதனமாக வைத்து அரசியல் செய்யும் அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தான். இதை யாரும் மறுக்க முடியாது.
முக்கிய பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்புவதற்காக மதத்தை பற்றி பேசுகிறார்கள். விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், சாமானிய மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் ஆகியவை மக்களிடம் சென்று விடக்கூடாது என்பதற்காக மத உணர்வை தூண்டும் வகையில் பா.ஜ.க. நாடு முழுவதும் இதனை செய்து கொண்டிருக்கிறது. அதைத்தான் பொன் ராதாகிருஷ்ணன் முடிந்த அளவு செய்து கொண்டிருக்கிறார்.
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு அதிகமாக செய்ததாக கூறினார்கள். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கொண்டு வருவதாக கூறினார்கள். ஆனால் கொண்டு வரவில்லை. அறிவித்ததோடு நிற்கிறது. அவர்கள் தவறை அடையாளப்படுத்தும் வகையில் தான் செங்கலை தூக்கி பிரசாரம் செய்து வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அ.தி.மு.க. குறித்து நான் பேச விரும்பவில்லை. அவர்கள் வந்து போய் உள்ளனர். அ.தி.மு.க. இயக்கத்திற்கு யார் பிரதமர் வேட்பாளர் என்று யோசிக்க வேண்டும். 2 கூட்டணியிலும் இல்லாதவர்கள் எப்படி பேசுவார்கள்?.
பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது பெட்ரோல், டீசல் விலை எப்படி இருந்தது? ஆனால் மோடியின் ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை எப்படி உயர்ந்துள்ளது?
தேசத்தினுடைய கடன் எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு கடன் உயர்ந்துள்ளது? பல மடங்கு பட்டினி சாவு அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்கள் தங்களின் பிரச்சனைகளை பேசுகிறார்கள்.
- வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
விருதுநகர் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-
கேள்வி: முதன்முறையாக வேட்பாளராக இருக்கும் அனுபவம் எவ்வாறு இருக்கிறது?
பதில்: எல்லா இடங்களிலும் மக்கள் தங்களின் அன்பை உணர்த்துகிறார்கள். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை பேசுகிறார்கள். வெற்றி பெறுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது.
கேள்வி: நீங்கள் பாரதிய ஜனதாவில் சேர்ந்தது ஏன்?
பதில்: ஏன் சேரக்கூடாதா? பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உங்களுக்கு தெரியவில்லையா?
கேள்வி: தொகுதியில் உங்களுக்கு முக்கிய போட்டியாளர் யார்?
பதில்: விஜய பிரபாகரோ அல்லது மாணிக்கம் தாகுரோ. போட்டியாளர்களை பற்றி சிந்திக்கவில்லை. நாங்கள் எங்களின் போசனைகளை ஊக்குவிக்கவும், அதை மக்களிடையே பரப்பவும் முயற்சிக்கிறோம்.
கேள்வி: எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தொடரந்து செயல்படுவீர்களா?
பதில்: அதையெல்லாம் முடிவு செய்ய இன்னும் நேரம் இருக்கிறது. இப்போது தேர்தல்வெற்றியே ஒரே இலக்கு என்றார்.
- தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 92 வயது முதியவர் முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறார்.
- “வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன்” என்றார்.
சாஹிப்கஞ்ச்:
நாட்டின் 18-வது பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்படுகின்றன.
இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 92 வயது முதியவர் முதல் முறையாக வாக்களிக்க இருக்கிறார்.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 450 கி.மீ. தொலைவில் உள்ள சாஹிப்கஞ்ச் மாவட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாநில தலைமை தேர்தல் ஆணையர் ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பல்வேறு கிராமங்களுக்கு சென்று அங்கு வசிக்கும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் தேர்தல் நடைமுறையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், சவால்கள் குறித்து ரவிக்குமார் கேட்டறிந்தார்.
அப்போது ராஜ்மகால் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பத்கோரி கிராமத்தில் வசிக்கும் முதியவரான அன்சாரியிடம் நீங்கள் வாக்காளரா? எனத் தேர்தல் ஆணையர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த அன்சாரி, 'வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லாததால் நான் இதுவரை வாக்களித்தது இல்லை' என்றார்.
இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த தேர்தல் ஆணையர் ரவிகுமார், அன்சாரியின் பெயரை வாக்காளர் பட்டியலில் உடனடியாக சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தேர்தல் ஆணையருக்கு நன்றி தெரிவித்த அன்சாரி, "வருகிற பாராளுமன்ற தேர்தலில் நான் முதல் முறையாக வாக்களிக்க உள்ளேன்" என்றார்.
- மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
- இரவு பிரசாரத்தை முடிக்கும் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் கடலூர் வழியாக புதுச்சேரி சென்றடைகிறார்.
கடலூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று பிரசாரம் செய்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.
அதன்படி நேற்று கடலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் அருகே வி.சாலையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து பிரசார பொதுக்கூட்டத்தை முடித்து விட்டு, அங்கிருந்து கார் மூலம் கடலூர் வந்தடைந்தார். அவருக்கு மாவட்டசெயலாளரும், அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு அவர் இரவு கடலூரில் தங்கி ஓய்வு எடுத்தார்.

சிதம்பரத்தில் இன்று மு.க.ஸ்டாலின் பேசும் பொதுக்கூட்ட மேடை.
இன்று மாலை 6 மணிக்கு மேல் சிதம்பரம் அருகே லால்புரத்தில், சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன், மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா ஆகியோரை ஆதரித்து நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். இரவு பிரசாரத்தை முடிக்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் கடலூர் வழியாக புதுச்சேரி சென்றடைகிறார்.
அங்கு அவர் அக்கார்டு ஓட்டலில் இரவு தங்கி ஓய்வெடுக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், சிதம்பரம் வருகையையொட்டி விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷா மிட்டல் மேற்பார்வையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வினியோகித்தனர்.
- பஸ் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமானோர் கண்டு ரசித்ததோடு விழிப்புணர்வு அடைந்தனர்.
தஞ்சாவூா்:
தமிழ்நாட்டில் வருகிற 19-ம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தலில் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் கோலமிடுதல், கிரிக்கெட் போட்டி, பலூன் பறக்க விடுதல் உள்பட பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ஒருங்கிணைந்த கழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஏராளமான அங்கன்வாடி பெண் ஊழியர்கள் 100 சதவீதம் அனைவரும் வாக்களிப்போம் வாரீர் என்ற வாசகத்தை கோலமாக வரைந்து அதில் 1000 தீபங்கள் ஏற்றினர்.
அப்போது வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வினியோகித்தனர். மேலும் ஒலி பெருக்கியில் விழிப்புணர்வு பாடலும் போடப்பட்டன.
இந்த நூதன விழிப்புணர்வை பஸ் நிலையத்தில் கூடியிருந்த ஏராளமானோர் கண்டு ரசித்ததோடு விழிப்புணர்வு அடைந்தனர்.
- தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
- சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம் 45 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய ஆவணம் இருந்துள்ளது.
ஓசூர்:
பாராளுமன்றத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறிப்பாக ஓசூர் அருகே மாநில எல்லையோர பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று இரவு ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த கூரியர் சர்வீஸ் வாகனத்தை அவர்கள் மடக்கி சோதனை செய்தபோது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி, தங்க நகைகள் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தை ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து சோதனை செய்தனர். மேலும் கூரியர் சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம் வாகனத்தில் கொண்டு சென்ற பொருட்களுக்கான ஆவணங்களை சோதனை செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தங்க நகைகளை இந்த கூரியர் சர்வீஸ் நிறுவனத்தினர் பெற்று கொண்டு ஓசூரில் உள்ள பிரபல ஜுவல்லரிக்கு எடுத்து சென்றது தெரிய வந்தது.
அதிகாரிகள் சோதனை செய்ததில், கூரியர் சர்வீஸ் வாகனத்தில் மொத்தம் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்தது. ஆனால் கூரியர் சர்வீஸ் வாகனத்தில் வந்தவர்களிடம் 45 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு மட்டுமே உரிய ஆவணம் இருந்துள்ளது. மீதமுள்ள 24 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து 69 பெட்டிகளில் இருந்த தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் எனவும் தங்க நகைகளின் மொத்த எடை 30 கிலோ எனவும் கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை சீல் வைத்து, வாகனத்தின் மூலம் ஓசூர் அரசு கருவூல அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டனர்.
- திருமாவளவன் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான அங்கனூர் அருகே பிரசார வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என்றனர்.
இதனை கேட்ட திருமாவளவன் தாராளமாக உங்கள் கடமையை செய்யுங்கள் என்று கூறி அதிகாரிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார்.
இதனை தொடர்ந்து பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டனர். வாகனத்தின் முன்புறம், உள்புறம் ஆகியவற்றை சோதனையிட்டனர். வாகனத்தில் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பின்னர் திருமாவளவன் மீண்டும் வாகனத்தில் ஏறிச் சென்று அங்கனூருககு புறப்பட்டு சென்றார். திருமாவளவன் எம்.பி.யின் வாகனத்தை பறக்கும் படையினர் சோதனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களையே தனது குடும்பமாக மதித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
- மாநில அரசிடம் இருந்த வரி வருவாய் உள்ளிட்ட பல சொந்த வருவாய்களை மத்திய பா.ஜனதா அரசு பறித்துக்கொண்டுவிட்டது.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், தி.மு.க. 21, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 2, ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 1 என போட்டியிடுகின்றன.
மேலும், இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதிமய்யத்துக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் (மார்ச்) 23-ந் தேதி முதல் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை 11 இடங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகிறார். இந்த பரபரப்புக்கு இடையே 'தினத்தந்தி' சார்பில் அவரிடம் கேட்கப்பட்ட விறுவிறுப்பான கேள்விகளுக்கு சுறுசுறுப்பாக பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி:- பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக நீங்கள் எல்லா தொகுதிகளுக்கும் சென்று வருகிறீர்கள். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவது மட்டுமல்லாமல், நடைப்பயிற்சியின்போதும் பொதுமக்களை சந்தித்து வருகிறீர்கள். மக்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்பு எந்த வகையில் உள்ளது?
பதில்:- 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தி.மு.க. 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிலேயே தொடங்கிவிட்டது. 'நாற்பதும் நமதே! நாடும் நமதே!' என்ற இலக்கு அந்த நிகழ்வில்தான் முன்னெடுக்கப்பட்டது. அதற்கேற்ப பாக முகவர்கள், வாக்குச்சாவடி குழுக்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டங்களும் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. எப்போதும் மக்களுடன் இருக்கும் இயக்கமான தி.மு.க., கடந்த 3 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, மாணவர்களுக்கு செய்த திட்டங்களால் பயன்பெற்றவர்களை நேரில் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வருகிறது.
களப்பணியில் தி.மு.க. தொண்டர்கள் தங்கள் அடிப்படையான பணியை முழுமையாக மேற்கொண்ட நிலையில்தான், தேர்தல் களப் பிரசார பணிகளில் தி.மு.க. தலைவரான நானும், கட்சியின் மூத்த நிர்வாகிகளும் ஈடுபடுகிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் பயன் தந்து வரும் திராவிட மாடல் ஆட்சி என்பதால் தி.மு.க.வுக்கு மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது.
10 ஆண்டுகால பா.ஜனதா அரசு தமிழ்நாட்டை வஞ்சித்திருப்பதையும், அதற்கு அ.தி.மு.க. முழுமையாக துணை போயிருப்பதையும் தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார்கள். காலையில் அடுப்பை பற்ற வைக்கும்போது கியாஸ் விலை அவர்கள் மனதில் அனலாக கொதிக்கிறது. தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும், பா.ஜனதா அரசின் துரோகங்களும் தமிழ்நாட்டில் 'இந்தியா' கூட்டணிக்கு முழுமையான வெற்றியைத் தரும்.
கேள்வி:- கச்சத்தீவு பிரச்சனை தற்போது பா.ஜனதா மூலம் விசுவரூபம் எடுத்துள்ளதே. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டதாக கூறி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்கள். கச்சத்தீவு தொடர்பான இந்த புதிய தகவல்கள் தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடு முகத்திரையை கிழித்துவிட்டது என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன?.
பதில்:- கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் பிரதமர் மோடி தலைமையிலான இதே பா.ஜனதா ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டது. அப்போது, ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்தார். இப்போது அவர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக உள்ள நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவை நேரு, இந்திராகாந்தி போன்ற முன்னாள் பிரதமர்கள் தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாகவும், அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அதனை எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது பா.ஜனதாதான் என்பதும், திட்டமிட்டே தேர்தல் நேரத்தில் வதந்திகளை பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த விவகாரம் விசுவரூபமும் எடுக்கவில்லை. வேறு எந்த ரூபமும் எடுக்கவில்லை.
10 ஆண்டுகால சாதனைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடம் சொல்வதற்கு ஒற்றைச் செங்கல்லை தாண்டி வேறு எதுவும் இல்லாத பா.ஜனதாவில் பிரதமர், நிதி மந்திரி, வெளியுறவுத்துறை மந்திரி தொடங்கி கத்துக்குட்டிகள் வரை கச்சத்தீவு பற்றிய வதந்திகளை பரப்பிக் கதறுகிறார்கள். இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது பாராளுமன்ற விவாதங்களிலும், சட்டமன்றத் தீர்மானத்திலும், மத்திய மந்திரிகளுடன் கருணாநிதி நடத்திய ஆலோசனைகள் பற்றிய குறிப்புகளிலும் தெளிவாக உள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவிலும் பிரதமர் முன்னிலையில் கச்சத்தீவை மீட்டுத்தர வேண்டும் என முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை வைத்தேன். 10 ஆண்டு கால பா.ஜனதா ஆட்சியில் இம்மியளவில்கூட செயல்படவில்லை. இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கடந்த 2-ந் தேதி நடைபெற்ற அந்நாட்டு அரசின் மந்திரி சபை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அந்நாட்டு மந்திரி பந்துல குணவர்த்தனே, "கச்சத்தீவு விவகாரம் குறித்து மந்திரிசபையில் விவாதிக்கப்படவில்லை. ஏனெனில் அந்த பிரச்சனை ஒருபோதும் எழுப்பப்படவில்லை" என்று தெரிவித்திருந்ததை 'தினத்தந்தி' முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது.
இதில் இருந்தே கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. 'கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு' என்பார்கள். அந்த கெட்டிக்காரத்தனம் கூட இல்லாமல் புளுகிய சில மணி நேரங்களிலேயே அம்பலப்பட்டுப் போய்விடுகிறது பா.ஜனதா.
கேள்வி:- நீங்கள் குடும்ப அரசியல் செய்வதாக தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி குற்றம் சாட்டுகிறாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:- நான் கருணாநிதியின் மகன் என்பதும் - உதயநிதி என்னுடைய மகன் என்பதும் ஊரறிந்த உண்மை. ஒரு கலைஞர் குடும்பம் மட்டுமல்ல, ஒவ்வொரு தொண்டரின் குடும்பமும் தி.மு.க.வைத்தான் முதல் குடும்பமாக நினைக்கிறது. தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களையே தனது குடும்பமாக மதித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குமரி அனந்தனின் மகள் தமிழிசை, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா உள்ளிட்ட பலருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ள மோடி, தமிழ்நாடு வந்ததும் ஞாபகமறதி ஏற்பட்டு, குடும்ப அரசியல் என்று குற்றம்சாட்டுகிறார். கதையை (ஸ்க்ரிப்ட்) மாற்றட்டும்.
கேள்வி:- புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தும்போது, கடன் வாங்குகிறோம். தற்போதைய நிலையில் ரூ.7.26 லட்சம் கோடி கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. சொந்த வருவாயும் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 814 கோடி என்ற அளவில்தான் இருக்கிறது. உயர்ந்து கொண்டிருக்கும் கடன் அளவைக் குறைக்க சொந்த வருவாயைப் பெருக்கும் வகையில் திட்டம் எதுவும் வகுக்கப்பட்டுள்ளதா?.
பதில்:- மாநில அரசிடம் இருந்த வரி வருவாய் உள்ளிட்ட பல சொந்த வருவாய்களை மத்திய பா.ஜனதா அரசு பறித்துக்கொண்டுவிட்டது. தமிழ்நாட்டுக்கு திருப்பி அளிக்கக்கூடிய வரிப்பங்கீடும் மிகக் குறைவாக உள்ளது. அதனால்தான் புதிய திட்டங்களுக்காக கடன் வாங்க வேண்டியுள்ளது. அதுவும், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள்தான் இருக்கிறது.
கேள்வி:- 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. அறிவித்தது. ஆனால், இந்த தேர்தலில் யாரையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. 'இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- 'இந்தியா' என்ற பெயர்தான் எங்கள் வேட்பாளர். ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு இந்தியாவுக்கு புதிய திறமையான மக்கள் மேல் அக்கறைக் கொண்ட நல்ல பிரதமர் கிடைப்பார்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- விழுப்புரம், கடலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
- பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார், கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணுபிரசாத் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
நாடு ஆபத்தில் சிக்கியுள்ளது; இடஒதுக்கீட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகம், சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவை பா.ஜ.க.விடம் இருந்து மீட்க இந்தியா கூட்டணி வென்றாக வேண்டிய தேர்தல் இது.
அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டை போராடி பெறவேண்டிய நிலைக்கு பா.ஜ.க. அரசு தள்ளியிருக்கிறது.
போராடி பெற்ற இடஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான கட்சி பா.ஜ.க.தான்.
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இட ஒதுக்கீடு முறை இருக்காது.
சமூக நீதிக்கு சவக்குழி தோண்டி விடுவர் பிரதமர் மோடி.
தி.மு.க.விற்கு சமூக நீதி என்பது உயிர்மூச்சான கொள்கை. சமூகநீதி, சமத்துவத்தை நோக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
பா.ஜ.க.வுக்கு பா.ம.க. பல்லக்கு தூக்குகிறது.
பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்த பா.ம.க. தற்போது அவர்களுடனேயே கூட்டணி வைத்துள்ளது.
நாம் செயல்படுத்திய காலை உணவு திட்டம் கனடா வரை சென்றுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால், கிராம பொருளாதாரம் உயர்கிறது.
எடப்பாடி பழனிசாமி வாயை திறந்தாலே பொய் தான் வருகிறது. வெள்ளம் வந்தபோது தமிழகம் வராத பிரதமர் மோடி, தற்போது தேர்தலுக்காக வருகிறார் என தெரிவித்தார்.
- காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியானது.
- ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். நீட் தேர்வு நடத்தலாமா, வேண்டாமா என மாநில அரசுகள் முடிவு செய்யலாம். மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் உள்பட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், காங்கிரசின் நீட் வாக்குறுதி நாடகம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், கரும்பு விவசாயி சின்னத்தை சுயேச்சைக்கு கொடுத்துள்ளனர். நாம் தமிழர் கட்சியை போட்டியாக பார்க்கவில்லை என பா.ஜ.க. கூறுகிறது. போட்டியில் இல்லாதவனிடம் எதற்காக சின்னத்தைப் பறித்தீர்கள்? மாநிலங்கள் விருப்பத்திற்கேற்ப நீட் தேர்வு நடைபெறும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறுவது நாடகம். நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதற்கு பொறுப்பேற்பது யார்? பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவோம் என பேசுவதே முட்டாள்தனம் என்றார்.






