என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • அமெரிக்காவின் புதிய அதிபராக அடுத்த மாதம் 20-ம் தேதி டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
    • டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என்றார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை இயற்றினார்.

    அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட் டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து, பைட் டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப் படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராக அடுத்த மாதம் 20-ம் தேதி பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து இயங்குவது குறித்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    அரிசோனா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு டிக்டாக் செயலி உதவியாக இருந்திருக்கலாம். மேலும் சில காலத்திற்கு அந்தச் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், டொனால்டு டிரம்ப் சார்பில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அமெரிக்க அரசின் புதிய சாலிசிட்டர் ஜெனரல் ஜான் சாயர் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், டிக்டாக் செயலியை தடைசெய்யும் உத்தரவை சுப்ரீம் கோர்ட் நிறுத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த டிரம்ப், அதிபராக பதவியேற்ற பிறகு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்திற்கு சுமூக தீர்வு காண முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு அதிகாரி ஷூவைப் பயன்படுத்தி ப்ரூக்ஸின் வயிற்றில் அடித்தார்
    • உடையில் பொருத்தப்பட்ட பாடி கேம் கேமராவில் பதிவான வீடியோ வெளியானது.

    அமெரிக்காவின் நியூ யார்க் சிறையில் கைதி ஒருவரை போலீஸ் அதிகாரிகள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்கப்பட்ட அடுத்த நாளே அந்த கைதி உயிரிழந்தார்.

    மற்ற சில அதிகாரிகளில் உடையில் பொருத்தப்பட்ட பாடி கேம் கேமராவில் பதிவான அந்த வீடியோவில் கறுப்பின நபரான அவரை போலீஸ் அதிகாரிகள் கண்மூடித்தனமாகத் தாக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

    தாக்குதலுக்கு உள்ளான கைதி 43 வயதான ராபர்ட் ப்ரூக்ஸ் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி நியூயார்க்கில் உள்ள மார்சி கரெக்ஷனல் ஃபெசிலிட்டியில் வைத்து அதிகாரிகளால் தாக்கப்பட்டார்.

    கைவிலங்கிடப்பட்ட அவர் மருத்துவ பரிசோதனை மேசையில் அமரவைக்கப்பட்டார். அவரது வாயில் போலீசார் துணி போன்ற எதையோ திணித்தனர். அதன்பின் அதிகாரிகள் புரூக்ஸின் முகம் மற்றும் இடுப்பில் அடித்தனர். ஒரு கட்டத்தில், ஒரு அதிகாரி ஷூவைப் பயன்படுத்தி ப்ரூக்ஸின் வயிற்றில் அடித்தார், மற்றொருவர் அவரை கழுத்தைப் பிடித்து  மேசையில் தள்ளினார்.

    சிறிது நேரம் கழித்து, அவர்கள் அவரது சட்டை மற்றும் பேண்ட்டைக் கழற்றினர். இதன்பின் புரூக்ஸ் அசைவற்றுக் கிடந்தார். இதற்கு மறு நாள் டிசம்பர் 10 ஆம் தேதி மருத்துவமனையில் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் ப்ரூக்ஸ் வழக்கை விசாரித்து வரும் நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ், இந்த கேமரா காட்சிகளை நேற்று [வெள்ளிக்கிழமை] வெளியிட்டார்.

    இதனைத்தொடர்ந்து நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 13 அதிகாரிகள் மற்றும் சிறை உதவியாளர் ஒருவரை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

    உயிரிழந்த ராபர்ட் ப்ரூக்ஸ், 2017 ஆம் ஆண்டில் மன்ரோ கவுண்டியில் முன்னாள் காதலியை கத்தியால் குத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தவர் ஆவார். 

    • தங்களுக்கு விருப்பமான மேலும் ஒரு இந்து பண்டிகைக்கும் மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள இந்த சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • இந்த சட்டத்துக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    வாஷிங்டன்:

    இந்தியர்கள் பெருமளவில் வசிக்கும் அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்தநிலையில் அங்குள்ள ஒகியோ மாகாணத்தில் தீபாவளி பண்டிகைக்கு அரசு விடுமுறை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டு உள்ளது. இதுதவிர தங்களுக்கு விருப்பமான மேலும் ஒரு இந்து பண்டிகைக்கும் மாணவர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ள இந்த சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்த சட்டத்துக்கு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    • மோட்டலில் வைத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஆர்டர் செய்யப்பட்ட பீட்சாக்களை டெலிவரி செய்ய சென்றுள்ளார்.
    • மார்பு, கைகள், கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதியில் கத்தியால் அல்வேலா கத்தியால் குத்தினார்.

    டெலிவரி செய்த பீட்சாவுக்கு வெறும் 2 டாலர் டிப்ஸ் கொடுத்ததால் கர்பிணி பெண்ணை, பெண் டெலிவரி ஊழியர் 14 முறை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பெண் ப்ரியானா அல்வெலோ. பீட்சா டெலிவரி ஊழியரான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மோட்டலில் வைத்து பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு ஆர்டர் செய்யப்பட்ட பீட்சாக்களை டெலிவரி செய்ய சென்றுள்ளார்.

    அல்வெலோ பீட்சாவை கர்ப்பிணிப் பெண்ணிடம் டெலிவரி செய்தார், அதன் மொத்த மதிப்பு $33 (சுமார் ரூ. 2,800), ஆனால் $50 (சுமார் ரூ. 4,300) தாளை கொடுத்து அதற்கு சில்லறை வழங்கும்படி ஆர்டர் செய்த கர்ப்பிணிப் பெண் தெரிவித்துள்ளார்.

     

     

    ஆனால் சேஞ் இல்லாததால் பின்னர் அந்த பெண்ணே சில்லறையாக தேடி அல்வெலோவுக்கு கொடுத்துள்ளார். கடைசியில் அல்வெலோவுக்கு டிப்ஸாக வெறும் 2 டாலர் (சுமார் 171 ரூபாய்) மட்டுமே கிடைத்துள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த அல்வெலோ 90 நிமிடங்களுக்குப் பிறகு தனது நண்பனுடன் வந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணை 14 முறை கத்தியால் குத்தி உள்ளார். மார்பு, கைகள், கால்கள் மற்றும் வயிற்றுப்பகுதியில் அல்வேலா கத்தியால் குத்தினார்.

     

    அல்வெலோவுடன் வந்த நண்பன் கையில் துப்பாக்கியோடு மோட்டலில் பெண்ணின் காதலன் மட்டும் 5 வயது ,மகளை மிரட்டி உள்ளார்.

    இறுதியில் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பெண் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தப்பியோடிய அல்வெலோவையும் அவரது நண்பரையும் போலீஸ் கைது செய்துள்ளது.

     

    • தகுதி வாய்ந்த சொந்த நாட்டில் பிறந்த அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்தில் வேலை பெற முடியாத சூழல் உருவாகிறது.
    • தொழில்நுட்பத் துறையில் இன்னும் ஆயிரக்கணக்கில் வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளதே என்று தெரிவித்தார்.

    பையன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான் என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் தொழில்நுடபத்துறையில் வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை செய்து வருகின்றனர். கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை முதல் பலர் இதில் அடங்குவர்.

    இந்நிலையில் வெளிநாட்டு தொழிநுட்ப ஊழியர்கள் அமெரிக்க ஊழியர்களின் வேலை வாய்ப்பை பரிக்கிறார்களா என்றும் அமெரிக்காவின் வேலை சந்தையில் வெளிவந்தவர்களின் தாக்கம் குறித்தும் Replit நிறுவனத்தின் CEO அம்ஜத் மசாத் கேள்வி ஒன்றை எழுப்பினார்.

    தொழில்நுட்பத் துறையில் தகுதிவாய்ந்த அமெரிக்கர்களை வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

     வெளிநாட்டினர் அனைத்தையும் எடுத்துக்கொண்டதால், தகுதி வாய்ந்த சொந்த நாட்டில் பிறந்த அமெரிக்கர்கள் தொழில்நுட்பத்தில் வேலை பெற முடியாத சூழல் உருவாகி வருகிறதா என்று மசாத் தனது பதிவில் சந்தேகம் தெரிவித்தார். இது உண்மை என்றால் ஆச்சர்யம் தான், ஏனெனில் தொழில்நுட்பத் துறையில் இன்னும் ஆயிரக்கணக்கில் வேலைகள் நிரப்பப்படாமல் உள்ளதே என்று தெரிவித்தார்.

    இதற்கு பதிலளித்துள்ள உலக பணக்காரருக்கும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், சிறந்த பொறியியல் திறமைகளுக்கு இங்கு நிரந்தர பற்றாக்குறை உள்ளது. இது சிலிக்கான் பள்ளத்தாக்கில் காணப்படும் அடிப்படை காரணியாகும் என்று பதில் அளித்துள்ளார்.

    சிலிகான் பள்ளத்தாக்கு அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கும் பிரதான இடமாகும். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய மஸ்க்கின் கருத்து முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமெரிக்க அதிபராகும் டொனால்டு டிரம்ப் ஆட்சியில் மஸ்க் முக்கிய பங்காற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பேபி டிரைவர் திரைப்படத்தில் யங் பேபியாக நடித்தவர் ஹட்சன் மீக்.
    • அவரது மரணம் குறித்து வெஸ்டாவியா ஹில்ஸ் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வாஷிங்டன்:

    பேபி டிரைவர் திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்தது. அதில் யங் பேபியாக நடித்தவர் ஹட்சன் மீக். அதன்பின், அவரது நடிப்பு வாழ்க்கை முன்னேறியது.

    இந்நிலையில், ஹட்சன் மீக் அலபாமாவின் வெஸ்டாவியா ஹில்ஸ் பகுதியில் வண்டியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறிய ஹட்சன் மீக் வண்டியில் இருந்து விழுந்தார்.

    சாலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்த மீக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ஹட்சன் மீக் மரணம் குறித்து வெஸ்டாவியா ஹில்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலை விபத்தில் 16 வயது நடிகர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடாவை முன்மொழிகிறேன்
    • வெயின் கிரேட்ஸ்கிவெயின் கிரேட்ஸ்கியை பிரதமராக முன்மொழிகிறேன்.யை பிரதமராக முன்மொழிகிறேன்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்றதும் அமெரிக்காவின் பெருமையை மீட்பதுதான் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு ஒரே வழி வரி விதிப்பதுதான்.

    அண்டை நாடான கனடான அமெரிக்காவை சுரண்டுவதாக தனது கண்டனத்தை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்றதும், முதலில் கையெழுத்திடும் கோப்புகளில் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதுதான் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த வரிவிதிப்பு கனடாவை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என ஜஸ்டின் ட்ரூடோ கருதுகிறார்.

    கடந்த மாதம் ஜஸ்டின் ட்ரூரோ டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது டொனால்டு டிரம்ப் பரிந்துரைத்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு குறித்து ஆலோசனை நடததினர். இது கனடாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும என தெரிவித்தார். அப்போது டொனால்டு டிரம்ப் "அமெரிக்காவிடம் இருந்து 100 பில்லியன் டாலர் அளவில் கொள்ளை அடிக்காவிடில் உங்ளுடைய நாடு உயிர்வாழ முடியாது. அப்படித்தானே? என கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவித்துள்ள டொனால்டு டிரம்ப், மற்றொரு பதிவில் கவர்னர் என ஜஸ்டின் ட்ரூடோவை குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார். அத்துடன் உங்களுடைய வரி 60 சதவீதத்திற்கு மேல் குறைக்கப்படும். கனடா வர்த்தகம் உடனடியாக இரண்டு மடங்காகும். உலகில் உள்ள மற்ற எந்த நாடும் பெறாத ராணுவ பாதுகாப்பை பெறும்.

    அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடாவை முன்மொழிகிறேன். இதனால் வரி குறையும். வெயின் கிரேட்ஸ்கியை பிரதமராக முன்மொழிகிறேன் என ஜஸ்டின் ட்ரூடோவை கிண்டல் செய்துள்ளார்.

    ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து கனடா நாட்டின் பிரதமராக இருந்து வருகிறார். மக்கள் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அடுத்த வருடம் அக்டோபர் மாதம் கனடாவில் பொதுத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

    டொனால்டு டிரம்ப் தனது Truth சமூக வலைத்தளத்தில் "நான் வெய்னிடம் கனடாவின் பிரதமர் பதவிக்கு நீங்கள் ஏன் போட்டியிடக்கூடாது, விரைவில் கனடாவின் ஆளுநர் என்று அறியப்படுவீர்கள்- நீங்கள் எளிதாக வெற்றி பெறுவீர்கள், நீங்கள் பிரச்சாரம் செய்யக்கூட வேண்டியதில்லை என்றேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

    வெயின் தலைசிறந்த ஐஸ் ஹாக்கி வீரர் ஆவார்.

    • ரஷியாவிற்கு அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • உக்ரைன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள்.

    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அளிக்கிறது.

    இதற்கிடையே கிறிஸ்து மஸ் நாளான நேற்று உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதலை நடத்தியது. உக்ரைனின் எரிசக்தி கட்ட மைப்புகளை குறிவைத்து 78 ஏவுகணைகள், 106 டிரோன்கள் மூலம் ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர்.


    இதில் 59 ஏவுகணைகளையும் 54 டிரோன்களையும் உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன. 52 டிரோன்கள் மின்னணு ஆயுதங்கள் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இத்தாக்கு தலுக்கு ரஷியாவிற்கு அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலை கண்டிக்கிறேன். குளிர்காலத்தில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், மின்சாரத்தை துண்டிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நான் தெளிவாக சொல்கிறேன். உக்ரைன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள்.

    ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் வெற்றி பெறும் வரை அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் உக்ரைனுடன் தொடர்ந்து நிற்க வேண்டும். உக்ரைனுக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்குமாறு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். ரஷியாவின் படைகளுக்கு எதிராக, உக்ரைன் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

    • கிறிஸ்துமஸ் தொடர்பாக நீங்கள் கூறிய வார்த்தைகள் எனது மனதை நெகிழ்வித்ததாக மேரி மில்பென் கூறியுள்ளார்.
    • கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவத்தைப் போற்றுகின்றன என்றார்.

    வாஷிங்டன்:

    உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இந்திய கத்தோலிக்க தேவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

    இந்நிலையில், ஆப்பிரிக்க-அமெரிக்க பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் தனது வாழ்த்துகளை பிரதமர் மோடிக்கு தெரிவித்தார்.

    இதுதொடர்பாக பாடகி மேரி மில்பென் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அன்பின் மிகப்பெரிய பரிசாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எனது ரட்சகராகிய கிறிஸ்துவை கவுரவம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி. கிறிஸ்துமஸ் தொடர்பாக நீங்கள் கூறிய வார்த்தைகள் எனது மனதை நெகிழ்வித்தன. இந்தியாவில் உள்ள என் சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.

    இதைத் தொடர்ந்து, பாடகி மேரி மில்பென்னுக்கு எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிலளிக்கையில், கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றுகின்றன. இந்த உணர்வை வலுப்படுத்த நாம் அனைவரும் உழைக்க வேண்டியது அவசியம் என பதிவிட்டார்.

    • 8 நாள் பயணமாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பட்டார்கள்.
    • அலங்கார மரம், சாண்டா தொப்பி உள்ளிட்டவற்றை கொடுத்து அனுப்பியது எப்படி என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர்.

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) சிக்கியிருக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சாண்டா தொப்பிகளுடன் விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடினர். நாசா வெளியிட்ட வீடியோவில் சுனிதா வில்லியம்ஸ் சிவப்பு சட்டை அணிந்திருப்பதையும், மற்ற மூவர் சாண்டா தொப்பியை அணிந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

    இந்நிலையில் இந்த வீடியோ இணைய வாசிகளிடையே பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. 8 நாள் பயணமாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள், தொழிநுட்ப பழுது காரணமாக பல மாதங்களாக அங்கேயே சிக்கியுள்ளனர்.

    அடுத்த வருடம் பிப்ரவரி மாதம்தான் மீண்டும் அழைத்துவரப்படுவார்கள் என்று நாசா கூறி வருகிறது. எனவே 8 நாள் பயணத்துக்கு திட்டமிட்ட நாசா அவர்கள் விண்வெளியில் சிக்குவார்கள் என்று தெரிந்தே டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ்-க்கு தேவையான அலங்கார மரம், சாண்டா தொப்பி உள்ளிட்டவற்றை கொடுத்து அனுப்பியது எப்படி என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர்.

    இதற்கு பதிலளித்துள்ள நாசா நவம்பரில் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று டன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன என்றும், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பிற அலங்காரங்கள் மற்றும் பரிசுகள் வீரர்களுக்கு அனுப்பப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த தொகுப்பில் வான்கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, காய்கறிகள், பிஸ்கட் குக்கீகள் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் உணவுகளும் இருந்தன. இது தவிர, சில பணி சார்ந்த மற்றும் தொழிநுட்ப்ப பொருட்களும் அவர்களுக்கு இதில் அனுப்பி வைக்கப்பட்டன என்று விளக்கம் அளித்துள்ளது.

    முன்னதாக நிலவில் முதலில் ஆம்ஸ்ட்ராங் கால் வைத்தது ரஷியா மற்றும் உலக நாடுகளை ஏமாற்ற ஒரு அறைக்குள் வைத்து அமெரிக்க அரங்கேற்றிய நாடகம் என்ற ஒரு கண்ணோட்டமும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

     

    • குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி புதிய அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

    இந்த நிலையில் தற் போதைய அதிபர் ஜோபைடன் அமெரிக்க கோர்ட்டுகளில் பல்வேறு குற்ற வழக்குகள் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 40 கைதிகளில் 37 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    குற்றவாளிகள் செய்த கொலைகளை வன்மையாக கண்டிக்கிறேன். அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வேதனையை பகிர்ந்து கொள்கிறேன். ஜோபைடன் நமது நாட்டில் மிக மோசமான கொலையாளிகள் 37 பேரின் மரண தண்டனையை குறைத்து உள்ளார்.

    ஒவ்வொருவரின் செயல்களை கேட்டால் அவர் ஏன் இதை செய்தார் என நீங்கள் கேள்வி எழுப்புவீர்கள். எந்த அர்த்தமும் இல்லை. உறவினர்கள், நண்பர்கள் கூட இதனை நம்பமாட்டார்கள். நான் பதவிக்கு வந்தவுடன் மீண்டும் மரண தண்டனையை கொடுக்க வலியுறுத்துவேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று திடீரென தரையிறக்கப்பட்டன.
    • தொழில்நுட்ப கோளாறு சரியானதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சேவையை தொடங்கின.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனமாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் நிலையில், மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விமானங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே, அமெரிக்கா முழுவதும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானங்கள் இன்று திடீரென தரையிறக்கப்பட்டன.

    விமான நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானங்கள் நாடு முழுவதும் தரையிறக்கப்பட்டன. இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதையடுத்து சுமார் 2மணி நேரத்துக்கு பின் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்கள் மீண்டும் சேவையை தொடங்கின.

    ×