என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
    • தாக்குதல் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்று தெரியவந்தது.

    அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்று நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது கார் ஒன்று வேகமாக கூட்டத்துக்குள் புகுந்ததில் 15 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    உடனே போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரை ஓட்டிய நபருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அந்த நபர் சுட்டு கொல்லப்பட்டார்.

    இந்த நிலையில் இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்பதும் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்தது.

    கார் தாக்குதலை நடத்தியவர் டெக்சாஸை சேர்ந்த 42 வயதான ஷாம்ஷத் டின் ஜப்பார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான அவர் ஒருமுறை ஆப்கானிஸ்தானில் பணியாற்றி உள்ளார்.

    அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய காரில் வெடிகுண்டு, துப்பாக்கி, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி ஆகியவை இருந்தது. அவர் பலரை கொலை செய்யும் நோக்கத்துடன் இத்தாக்குதலை நடத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து எப்.பி.ஐ அதிகாரிகள் கூறும்போது, ஷாம்ஷத் டின் ஜப்பார் ஒரு பயங்கரவாதி. அவரது வாகனத்தில் ஐ.எஸ் கொடி இருந்தது. பயங்கரவாத அமைப்புகளுடன் அவரது தொடர்புகள் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் ராணுவத்தில் ஐ.டி நிபுணராக பணியாற்றினார். அவர் ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

    தற்போது ஹூஸ்டனில் ஒரு ரியல் எஸ்டேட் முகவராக வேலை பார்த்து வந்தார். இந்த தாக்குதலில் ஜப்பாருக்கு மட்டும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை. மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.

    அவர் தனியாக செயல் பட்டதாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை பயங்கர வாத செயலாக கருதி விசாரித்து வருகிறோம் என்றார்.

    இதற்கிடையே ஜப்பார், ஜ,எஸ் அமைப்பில் சேர முடிவு செய்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்து உள்ளார். அந்த வீடியோக்களில் ஜப்பார் தனது விவாகரத்து குறித்து தெரிவித்துள்ளார்.

    அப்போது தனது குடும்பத்தை கொல்ல திட்டமிட்டதாகவும் பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டு ஜ.எஸ் அமைப்பில் இணைய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.

    • இச்சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
    • வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    லாஸ் வேகாஸில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு சொந்தமான ஹோட்டலுக்கு முன்பு டெஸ்லா சைபர்ட்ரக் தீ பிடித்து வெடித்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

    நேற்று நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் போலீசார் கூறுகையில், தீவிபத்துக்கு முன்பு டெஸ்லா சைபர்ட்ரக் ஒன்று ஹோட்டலுக்கு முன்பு வந்து நிற்கிறது. அதன் பின்பு, திடீரென பட்டாசு வெடிப்பதைப் போல வெடித்து தீப்பிடித்து எரிகிறது என்று கூறினர்.

    இதற்கு எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- டெஸ்லா சைபர்ட்ரக்கில் கொண்டு வரப்பட்ட வெடிகுண்டு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாகவும் இது வாகன தீவிபத்துக்கு தொடர்பில்லை என்று கூறி உள்ளார்.

    இதனிடையே, வெடிவிபத்துக்கான காரணத்தை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    • SUV காரை ஓட்டி வந்த நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • போர்பன் ஸ்ட்ரீட் மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகே SUV மக்கள் கூட்டத்தில் புகுந்தது.

    புத்தாண்டு தினத்தன்று அமெரிக்காவில் மக்கள் கூட்டத்தில் கார் புகுந்து கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

    நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதில் 30 பேர் வரை காயமடைந்தனர். விபத்து ஏற்படுத்திய SUV காரை ஓட்டி வந்த நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இன்று மதியம் சுமார் 3:15 மணியளவில் நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் ஸ்ட்ரீட் மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகே SUV மக்கள் கூட்டத்தில் புகுந்தது.

     

    சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களில் கூற்றுப்படி, போர்பன் தெருவில் ஒரு டிரக் அதிவேகமாக மக்கள் மீது மோதியது. இதைத் தொடர்ந்து, ஒரு ஓட்டுநர் வாகனத்தை விட்டு வெளியேறி சுடத் தொடங்கினார், மேலும் போலீசார் திருப்பிச் சுட்டனர் என்று CBS செய்தி வெளியிட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளி குறித்த தகவல் வெளியாகவில்லை.

    சம்பவம் நடந்த போர்பன் தெரு, நியூ ஆர்லியன்ஸின் பிரபல சுற்றுலாத் தலமாகும். போர்பன் தெருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்ததாக கூறப்படுகிறது. 

    • வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள்.

    அமெரிக்க விண்வெளி வீராங்கணையான இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ளார். கடந்த ஜூன் 5-ந்தேதி விண்வெளிக்கு சென்ற அவர், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கி உள்ளார். அவர் வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சர்வதேச விண்வெளி மையம் கூறும்போது, பூமிக்கு மேல் 400 கி.மீ உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்று தெரிவித்துள்ளது.

    • போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்தனர்
    • இருவருக்கும் பிரான்சில் சொந்தமான வைன் தொழிற்சாலை ஒன்று உள்ளது.

    ஹாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ஏஞ்சலினா ஜோலிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014-ல் பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. மேலும் போரில் அகதிகளான 3 குழந்தைகளை தத்தெடுத்தனர். எனவே மொத்தம் ஆறு குழந்தைகளை அவர்கள் வளர்த்து வந்தனர்.

    ஆனலும் ஏஞ்சலினா ஜோலியும், பிராட் பிட்டும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2016-ல் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த விவாகரத்து வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. எனவே இதுநாள்வரை 6 குழந்தைகளின் பொருளாதார செலவை இருவரும் பகிர்ந்து வருகின்றனர்.

    இருவருக்கும் பிரான்சில் சொந்தமான வைன் தொழிற்சாலை ஒன்று உள்ளது. 6 குழந்தைகளை யார் கவனிப்பது, தொழிற்சாலையைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக ஒரு முடிவு எட்டப்படாததால் விவகாரத்து வழக்கில் தீர்ப்பு 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஏஞ்சலினா மற்றும் பிராட் பிட் இருவரும் இந்த பங்கீடு தொடர்பாக ஒரு முடிவை எட்டியுள்ளனர்.

    ஏஞ்சலினாவின் வழக்கறிஞர், ஜேம்ஸ் சைமன், இருவரும் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்ததை தி அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் உறுதிப்படுத்தினார். எனவே விவாகரத்து வழங்கி நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2003 ஆம் வெளியான மிஸ்டர் & மிஸஸ் ஸ்மித் படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 10 வருடங்களாக காதலித்து 2014 இல் திருமணம் செய்த இவர்களுக்கு போரில் அகதிகளான குழந்தைகளை எடுத்து வளர்க்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விளையாட்டு போட்டிக்காக கோன்சாகா பல்கலைக்கழக கூடைப்பந்து அணி மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது
    • அட்லாண்டாவுக்குச் செல்லும் ஏர்பஸ் A321 டெல்டா விமானத்தோடு மோதும் நிலைக்கு சென்றது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானமும் தனியார் ஜெட் விமானமும் நூலிழையில் மோதாமல் தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை, விளையாட்டு போட்டிக்காக கோன்சாகா பல்கலைக்கழக கூடைப்பந்து அணி மாணவர்களை ஏற்றிக்கொண்டு தனியார் ஜெட் விமானம் புறப்பட்டுக்கொண்டிருந்தது.

    மாலை 4:30 மணியளவில், மாணவர்களை ஏற்றிக்கொண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் புறப்பட நகர்ந்து கொண்டிருந்தபோது, அதே நேரத்தில் புறப்பட்ட அட்லாண்டாவுக்குச் செல்லும் ஏர்பஸ் A321 டெல்டா விமானத்தோடு மோதும் நிலைக்கு சென்றது.

    ஆனால் தக்க சமயத்தில் எச்சரிக்கையுடன் தனியார் ஜெட் நிறுத்தப்பட்டதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இரண்டு விமானங்களும் நெருங்கிய பரபரப்பான தருணத்தின் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

     கடந்த ஞாயிற்றுக்கிழமை தென் கொரியாவில் முவான் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த கோரமான விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன்[7 கோடி] உயர்ந்துள்ளது.
    • ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும், 2 பேர் இறப்பார்கள்.

    உலக மக்கள் தொகை நாளை, 2025 புத்தாண்டு தினத்தில் [ஜனவரி 1] 8.09 பில்லியனாக [809 கோடியாக] இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    நேற்று [திங்களன்று] வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன் [7 கோடி] உயர்ந்துள்ளது . 2023 ஆம் ஆண்டில் 75 மில்லியன் மக்கள் உயர்ந்த நிலையில் இந்த வருடம் [2024] மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளது.

    மேலும் 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

    மேலும் அமெரிக்காவைப் பொறுத்தவரை புத்தாண்டு தினத்தில் அமெரிக்க மக்கள் தொகை 341 மில்லியனாக இருக்கும். ஜனவரி 2025 இல் இருந்து அமெரிக்காவில் ஒவ்வொரு 9 வினாடிக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 வினாடிக்கும் ஒரு இறப்பும் ஏற்படும்.

    வெளிநாடுகளில் இருந்து குடியேற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் ஒருவர் கூடுதலாக சேர்வர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பரபரப்பான புகாரினை தெரிவித்தார்.
    • வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிமன்றம் டிரம்புக்கு ரூ.42 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் (ஜனவரி) 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார். இவர் மீது ஏற்கனவே பாலியல் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது.

    அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு எதிரான 2 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.

    கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றில் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பரபரப்பான புகாரினை தெரிவித்தார்.

    டிரம்புக்கு எதிராக அவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவதூறு வழக்கினை தொடர்ந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டினை டிரம்ப் மறுத்து வந்தார்.

    இந்த வழக்கில் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிமன்றம் டிரம்புக்கு ரூ.42 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் நியூயார்க் பெடரல் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்தார். இதனை 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது. இதில் மன்ஹாட்டன் நீதிமன்றம் விதித்த ரூ.42 கோடி அபராதத்தை பெடரல் கோர்ட்டு உறுதி செய்தது.

    அடுத்த மாதம் அதிபராக பதவி ஏற்க இருக்கும் சூழ்நிலையில் டிரம்புக்கு எதிராக வந்துள்ள இந்த தீர்ப்பு அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

    • தனது பதவிக்காலத்துக்குப் பின் மற்ற அமெரிக்க அதிபர்களை விட நீண்ட காலம் வாழ்ந்தார்.
    • ஜிம்மி கார்ட்டர் கடந்த 2002-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர் ஜிம்மி கார்ட்டர். இவரது வயது 100.

    இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் இன்று ஜார்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் இறந்தார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் மற்ற அமெரிக்க ஜனாதிபதிகளை விட நீண்ட காலம் வாழ்ந்தார்.

    மேலும், கடந்த 2002-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை ஜிம்மி கார்ட்டர் வென்றார்.

    ஜிம்மி கார்ட்டர் 1977 முதல் 1981 வரை அமெரிக்க அதிபராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆடம் வான் என்ற நபர் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
    • போலீசின் வாகனத்தில் வந்து தன்னை இறக்கி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    அமெரிக்காவின் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்ந்து 17 முறை அழைத்து போலீசை தொந்தரவு செய்த 24 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆடம் வான் என்ற நபர் அவசர உதவி எண்ணான 911-க்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அருகில் இருக்கும் மளிகை கடைக்கு செல்வதற்கு பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல், போலீசின் வாகனத்தில் வந்து தன்னை இறக்கி விடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதனை கேட்டு கடுப்பான போலீசார் ஆடம் வான் இருப்பிடத்திற்கே சென்று அவரை எச்சரித்துள்ளனர். அவசர உதவிக்கு மட்டும் தான் 911 எண்ணை தொடர்பு கொள்ளவேண்டும் என்று போலீசார் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் இதனையடுத்து 911 எண்ணுக்கு ஆடம் வான் 17 ஆவது முறையாக மீண்டும் அழைத்துள்ளார். பின்னர் அவசர உதவி எண்ணை தவறாக பயன்படுத்தியதாக கூறி ஆடம் வானை போலீசார் கைது செய்தனர்.

    • வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசாவுக்கு கட்டுப்பாடு விதிக்கபடலாம் என்று தகவல் வெளியானது.
    • நான் எப்போதும் விசாக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன்.

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப் வருகிற ஜனவரி 20-ந்தேதி பதவியேற்க உள்ளார். அவர் தனது ஆட்சியில் குடியேற்றம் தொடர்பாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்1-பி விசாவுக்கு கட்டுப்பாடு விதிக்கபடலாம் என்று தகவல் வெளியானது.

    இந்த நிலையில் டிரம்ப் கூறும்போது, மிகவும் திறமையான தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைய உதவும் சிறப்பு விசா திட்டத்தை நான் ஆதரிக்கிறேன். நான் எப்பொழுதும்எச்1-பி விசாக்களை விரும்புகிறேன். நான் எப்போதும் விசாக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். அதனால்தான் நாங்கள் அவற்றை வைத்திருக்கிறோம் என்றார்.


    டிரம்பின் ஆதரவாளரும், அவரது ஆட்சி நிர்வாகத்தில் உயர் பதவி அளிக்கப்பட்டுள்ள எலான் மஸ்க் சமீபத்தில் கூறும்போது,

    வெளிநாட்டில் இருந்து உயர் பொறியியல் திறமைகளை கவர்வது அமெரிக்கா வெற்றி பெறுவதற்கு அவசியம் என்று கூறியிருந்தார்.

    • அமெரிக்காவின் புதிய அதிபராக அடுத்த மாதம் 20-ம் தேதி டிரம்ப் பதவியேற்க உள்ளார்.
    • டிக்டாக் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என்றார் டிரம்ப்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த ஏப்ரல் மாதம் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி, சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை இயற்றினார்.

    அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அதில் கூறப்பட்டிருந்தது. இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட் டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து, பைட் டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப் படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    இதற்கிடையே, அமெரிக்காவின் புதிய அதிபராக அடுத்த மாதம் 20-ம் தேதி பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்காவில் டிக்டாக் செயலி தொடர்ந்து இயங்குவது குறித்த தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    அரிசோனா மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது பிரசாரம் அதிக வாக்காளர்களை சென்று சேர்வதற்கு டிக்டாக் செயலி உதவியாக இருந்திருக்கலாம். மேலும் சில காலத்திற்கு அந்தச் செயலியை அமெரிக்காவில் தொடர்ந்து இயங்க அனுமதிக்கலாம் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், டொனால்டு டிரம்ப் சார்பில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அமெரிக்க அரசின் புதிய சாலிசிட்டர் ஜெனரல் ஜான் சாயர் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், டிக்டாக் செயலியை தடைசெய்யும் உத்தரவை சுப்ரீம் கோர்ட் நிறுத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த டிரம்ப், அதிபராக பதவியேற்ற பிறகு பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்திற்கு சுமூக தீர்வு காண முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.

    ×