என் மலர்
அமெரிக்கா
- என் கணவரிடம் எனக்கு உதவுமாறு கேட்டேன்.
- பள்ளியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அமெரிக்காவில் வீட்டை சுத்தம் செய்யாததற்காக கணவரின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக இந்திய வம்சாவளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
வட கரோலினாவின் பாக்ஸ்ஹேவன் டிரைவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியை சந்திரபிரபா சிங் (44) தனது கணவர் அரவிந்த் சிங் உடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 12 அன்று, வீட்டை சுத்தம் செய்யாதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் சந்திரபிரபா தனது கணவர் அரவிந்த் சிங்கைக் கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதனால் கழுத்தில் ஆழமான காயம் ஏற்பட்டு அரவிந்த் சிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்த போலீசார் சந்திரபிரபாவை கைது செய்தனர். போலீசாரிடம் சந்திரபிரபா கூறுகையில், "காலை உணவு தயாரிக்கும் போது என் கணவரிடம் எனக்கு உதவுமாறு கேட்டேன்.
அவர் வீட்டை சுத்தம் செய்யாததால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் கையில் கத்தியுடன் திரும்பியபோது, தற்செயலாக என் கணவரின் கழுத்தில் காயம் ஏற்பட்டது" என்று கூறினார்.
இருப்பினும், அரவிந்த் சிங் தனது மனைவி வேண்டுமென்றே தன்னை குத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போது சந்திரபிரபா ஜாமீனில் வெளிவந்துள்ளார். பள்ளியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
- இந்தியர்கள் கவலைப்படுவது இயல்பானதுதான் என்று நாங்கள் அறிவோம்.
- அவர்கள் நாங்கள் கூட உறவிலில்லாத சில நாடுகளுடன் நல்ல உறவு வைத்துள்ளனர்.
பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே வரலாற்று ரீதியாக இருந்த பதட்டங்கள் காரணமாக, இந்தியர்கள் கவலைப்படுவது இயல்பானதுதான் என்று நாங்கள் அறிவோம்.
ஆனால், நாங்கள் பல நாடுகளுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பாகிஸ்தானுடன் எங்கள் மூலோபாய உறவை விரிவுபடுத்த ஒரு வாய்ப்பு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இந்தியர்கள் இராஜதந்திர விஷயங்களில் மிகவும் முதிர்ச்சியுடன் செயல்படுகிறார்கள். அவர்கள் நாங்கள் கூட உறவிலில்லாத சில நாடுகளுடன் நல்ல உறவு வைத்துள்ளனர். எனவே, நாங்கள் பாகிஸ்தானுடன் என்ன செய்தாலும், நட்பு நாடான இந்தியாவுடனான உறவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது" என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியா தங்கள் கச்சா எண்ணெய் தேவைகளுக்கு ரஷியாவை மட்டுமே அதிகம் சார்த்திருக்காமல் மற்ற நாடுகளின் சப்ளையர்களிடமிருந்தும் வாங்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
இந்தியா மீது அமெரிக்காவின் வரிவிதிப்பு குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி பேசிய அவர், எங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை சரிசெய்ய நாங்கள் பணியாற்றி வருகிறோம். ஆனால், எப்போதுமே இந்தியா எங்கள் கூட்டாளி என்பதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறினார்.
முன்னதாக ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா முற்றிலும் நிறுத்திவிட்டதாக டிரம்ப் நேற்று மீண்டும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன்" என்றார்.
ரஷியா- உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சில நாட்களுக்கு முன்பு டிரம்ப்-புதின் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
இதற்கிடையே ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறவிருந்த டிரம்ப்- புதின் இடையேயான சந்திப்பு திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் புதினை சந்தித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்று டிரம்ப் தெரிவித்தார்.
உக்ரைன் போர் விவகாரத்தில் ஏற்கனவே ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்து உள்ளது. இந்த நிலையில் போரை நிறுத்த ரஷியா மறுத்து வருவதால் அந்நாட்டின் 2 மிகப்பெரிய எண்ணை நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்து உள்ளது.
ரோஸ்நெப்ட் , லுகோயில் ஆகிய 2 நிறுவனங்கள் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றின் துணை நிறுவனங்கள் மீதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இவை மிகப்பெரிய தடைகள். ரஷியாவின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. "போர் முடிவுக்கு வரும் என்று நாங்கள் நம்புகிறோம். போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன்" என்றார்.
மேலும் அமெரிக்க கருவூல துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறும்போது,"இந்த அர்த்தமற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷிய அதிபர் புதின் மறுத்துவிட்டதால், ரஷியாவின் போர் எந்தி ரத்திற்கு நிதியளிக்கும் அந்நாட்டின் 2 பெரிய எண்ணை நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்தது போல் புதின் நேர்மையான மற்றும் வெளிப்படையான முறையில் பேச்சு வார்த்தைக்கு வரவில்லை என்றார்.
- கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது.
- 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவின் கிளாவியா எரிமலை கடும் சீற்றத்துடன் எரிமலை குழம்புகளை வளியேற்றி வருகிறது.
கடந்த ஆண்டில் இருந்து அடிக்கடி கிளாவியா எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருகிறது. கிட்டத்தட்ட 2,400 அடி உயரத்துக்கு எரிமலை குழம்புகளை பீச்சி அடித்துள்ளது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
- 5 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 27 பேர் கொல்லப்பட்டனர்.
- இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத் தப்படுவதை தடுக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
இதில் கரீபியன் கடல் பகுதியில் போதைப்பொருள் கடத்திய வெனிசுலா நாட்டு படகுகள் மீது அமெரிக்கா ராணுவம் தாக்குதல் நடத்தியது. 5 படகுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 27 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அமெரிக்காவை நோக்கி போதைப்பொருள் கடத்தி வந்த நீர்மூழ்கி கப்பல் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது, அமெரிக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த மிகப் பெரிய போதைப்பொருள் கடத்தும் நீர்மூழ்கிக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்தக் கப்பலில் பெரும்பாலும் பென்டானைல் மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொ ருட்கள் நிறைந்திருந்ததாக அமெரிக்க உளவுத்துறை உறுதிப்படுத்தியது.
மேலும் அதில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் இருந்தனர். இந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். மற்ற 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்குத் தொடரப்பட்டு அவர்களின் சொந்த நாடுகளான ஈக்வடார் ,கொலம்பியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் கரைக்கு வந்திருந்தால் அதில் உள்ள போதைப் பொருள் மூலம் சுமார் 25 ஆயிரம் அமெரிக்கர்கள் இறந்திருப்பார்கள்.
இந்தத் தாக்குதலில் எந்த அமெரிக்கப் படைகளுக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. எனது கண்காணிப் பின் கீழ் நிலம் அல்லது கடல் வழியாக சட்டவிரோத போதைப்பொருள் கடத்தும் பயங்கரவாதிகளை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது" என்று தெரிவித்துள்ளார்.
- அவர்களை உள்ளே சென்று கொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை என்று எச்சரித்தார்.
- அருகில் உள்ள பிற நாடுகள் எங்கள் ஆதரவின் கீழ் அந்த வேலையை எளிதாகச் செய்யும்
காசாவில் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் அமைப்பு மீறி காசா மக்களின் மீதே தாக்குதல் நடத்தக்கூடும் என்று நம்பத்தகுந்த உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், பாலஸ்தீன பொதுமக்கள் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தலாம் என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னின்று ஏற்படுத்திய அமைதி ஒப்பந்தத்தை நேரடியாக மீறுவதாகும் என்றும் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தாக்குதல் மேற்கொண்டால், காசா மக்களைப் பாதுகாக்கவும், போர் நிறுத்தத்தை பேணவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சமூக வலைத்தளத்தில், "ஹமாஸ் காசாவில் மக்களைக் கொல்வதைத் தொடர்ந்தால், அது ஒப்பந்தத்திற்கு எதிரானது, அவர்களை உள்ளே சென்று கொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை" என்று எச்சரித்தார்.
எனினும், காசாவிற்கு அமெரிக்கப் படைகளை அனுப்பப் போவதில்லை என்றும், அருகில் உள்ள பிற நாடுகள் எங்கள் ஆதரவின் கீழ் அந்த வேலையை எளிதாகச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். காசவில் இஸ்ரேல் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் உடன் ஹமாஸ் மோதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- நியூயார்க் நகரில் டைம்ஸ் சதுக்கத்தில் 100,000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கூடினர்.
- வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர், கலிபோர்னியாவின் சான் டியாகோ, சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் பெரிய அளவிலான ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.
"No kings" என்ற முழக்கத்துடன் அமெரிக்கா அதிபர் டொனல்டு டிரம்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.
டிரம்ப் அரசின் குடியேற்றவாசிகளுக் எதிராக அடக்குமுறைகள், அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்படும் அதிகப்படியான பணிநீக்கங்கள், பொருளாதார கொள்கைகள் உள்ளிட்டவை அந்நாட்டில் அதிருப்தி அலையை ஏற்படுத்தி வருகிறது.
சர்வாதிகார போக்குடன் செயல்படுவதாக டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை வழிநடத்தி வரும் பல இடதுசாரி சார்பு அமைப்புகளின் கூட்டணியே நோ கிங்ஸ் ஆகும்.
இதே கூட்டணி முன்பு ஜூன் மாதம் நோ கிங்ஸ் போராட்டத்தை நடத்தியது. இந்த இயக்கத்தில் 200க்கும் மேற்பட்ட அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று மீண்டும் மிகப்பெரிய அளவில் மீண்டும் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
"மன்னர்கள் வேண்டாம்" என்ற முழக்கத்துடன் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டங்களில் நேற்று நாடு முழுவதும் 2,700 நகரங்களில் 7 மில்லியனுக்கும் (70 லட்சத்திற்கும்) அதிகமான மக்கள் பங்கேற்றனர் என்று நோ கிங்ஸ் இயக்கம் தெரிவித்தது.
நியூயார்க் நகரில், 100,000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் டைம்ஸ் சதுக்கத்தில் கூடி, "மன்னர்கள் இல்லை", "ஜனநாயகம், சாம்ராஜ்யம் அல்ல", "மக்களுக்கே அதிகாரம்" என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல், வாஷிங்டன் டிசி, லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர், கலிபோர்னியாவின் சான் டியாகோ, சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் பெரிய அளவிலான ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. மேலும் இங்கிலாந்து தலைநகர் லண்டனிலும் இந்த போராட்டங்கள் நடைபெற்றன.
- சண்டை நிறுத்தத்தை தொடர கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- போர்களை முடிவுக்குக் கொண்டுவருவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
ஆபகானிஸ்தானின் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் கடந்த வாரம் முதல் எல்லையில் மோதல் நிகழ்ந்து வருகிறது. கடந்த புதன்கிழமை மாலை, 48 மணி நேர சண்டை நிறுத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் மோதல் வலுத்துள்ளது.
இதற்கிடையே நேற்று (வெள்ளிக்கிழமை), எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். சண்டை நிறுத்தத்தை தொடர கத்தார் தலைநகர் தோஹாவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் போரை எளிதில் தீர்க்க முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், "பாகிஸ்தான் தாக்கப்பட்டதை அறிந்தேன். இதுபோன்ற பல போர்களை தான் தீர்த்து வைத்துள்ளேன்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஒரு எளிமையான விஷயம். நான் அதைச் செய்வேன். இப்போது நான் அமெரிக்காவை வழிநடுத்துகிறேன்.
ஆனால் போர்களை முடிவுக்குக் கொண்டுவருவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இந்தியா - பாகிஸ்தான், ருவாண்டா-காங்கோ என நான் எட்டு போர்களைத் தீர்த்துவிட்டேன்.
ஒவ்வொரு முறையும் நான் தீர்த்து வைத்தபோது, அடுத்த போர் ஒன்றை நீங்கள் தீர்த்து வைத்தால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று அவர்கள் சொன்னார்கள். எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை.
எனக்கு அது பற்றி எல்லாம் கவலை இல்லை. உயிர்களைக் காப்பாற்றுவதில் மட்டுமே எனக்கு அக்கறை இருக்கிறது. நான் தீர்க்கபோகும் போர்களில் இது (பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் போர்) ஒன்பதாவது இடத்தில் இருக்கும்" என்று அவர் கூறினார்.
- முன்னதாக ரஷிய அதிபர் புதின் உடனும் டிரம்ப் போனில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
- 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய டோமாஹாக் தங்களுக்கு நிச்சயமாகத் தேவை என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று நேரில் சென்று சந்தித்தார். 4 வருடங்களாக தொடரும் உக்ரைன்-ரஷியா போருக்கு தீர்வு காணவும் அடுத்க்கப்பட்ட நடவைடிக்கை குறித்தும் பேசுவரத்தை நடத்தினர். இந்த சந்திப்புக்கு முன்னதாக ரஷிய அதிபர் புதின் உடனும் டிரம்ப் போனில் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
உக்ரைன் அதிபர் சந்திப்புக்கு பின் உக்ரைன் போர் நிலைமை குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டார்.
அதில், உக்ரைன் போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்றும், இரு நாடுகளும் வெற்றியை அறிவிக்க வேண்டும், ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டிய நேரம் இது என்று நான் ஜெலென்ஸ்கியிடம் சொன்னேன். அதையே புதினுக்கும் நான் பரிந்துரைத்தேன். இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொள்ள வேண்டும்.
இனி துப்பாக்கிச் சூடு வேண்டாம், இனி மரணங்கள் வேண்டாம், தேவையற்ற பெரிய செலவுகள் வேண்டாம். அப்போது நான் அதிபராக இருந்திருந்தால், இந்தப் போர் தொடங்கியிருக்காது" என்று தெரிவித்தார்.
மேலும் டிரம்ப் உடனான சந்திப்பில் 2,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய டோமாஹாக் ஏவுகணைகள் தங்களுக்கு நிச்சயமாகத் தேவை என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தி உள்ளார். ஆனால் அதை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என்று தான் நம்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்னும் 2 வாரங்களுக்குள் அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா சுமார் 38 சதவீத எண்ணெய்யை வாங்கினார்கள். இனி அதைச் செய்ய மாட்டார்கள்.
- டிரம்ப் தெரிவித்த கருத்தை இந்தியா மறுத்த நிலையில் அதை மீண்டும் தெரிவித்து உள்ளார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இது உக்ரைன் மீதான ரஷியாவின் போருக்கு மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். இதையடுத்து இந்தியா மீது 50 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.
இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டு இருந்த நிலையில் தற்போது சுமூகமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தன்னிடம் தெரிவித்ததாக டிரம்ப் நேற்று முன்தினம் கூறினார். ஆனால் இதை இந்தியா மறுத்தது.
இந்தநிலையில் ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று டிரம்ப் மீண்டும் தெரிவித்து உள்ளார்.
வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பின் போது டிரம்ப் கூறியதாவது:-
இந்தியா இனி ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்கப் போவதில்லை. இந்த செயல்முறையை உடனடியாகச் செய்ய முடியாது. ஆனால் அது விரைவில் முடிவடையும். ஏற்கனவே இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிறுத்திவிட்டனர்.
அவர்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா சுமார் 38 சதவீத எண்ணையை வாங்கினார்கள். இனி அதைச் செய்ய மாட்டார்கள்.
ஹங்கேரியில் ஒரே ஒரு குழாய்தான் உள்ளது. அங்கும் பற்றாக்குறையில் உள்ளது. அதனால் ரஷியாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது" என்றார்.
ஏற்கனவே இந்தியா-பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் கூறியதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. ஆனால் அந்த கருத்தை தொடர்ந்து அவர் கூறி வருகிறார். இந்த நிலையில் ரஷிய எண்ணை விவகாரத்தில் டிரம்ப் தெரிவித்த கருத்தை இந்தியா மறுத்த நிலையில் அதை மீண்டும் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்த தலையிடுவேன் என்று டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,"ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியதை நான் புரிந்து கொண்டாலும் அதை தீர்ப்பது எனக்கு எளிதானது. அதிபரான நான் அமெரிக்காவை நடத்த வேண்டும். ஆனால் போர்களைத் தீர்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது" என்றார்.
- ரஷிய அதிபர் புதினை ஹங்கேரியில் சந்தித்துப் பேச உள்ளேன் என்றார் அதிபர் டிரம்ப்.
- வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் வரவேற்றார்.
வாஷிங்டன்:
உக்ரைன் - ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்டில் அலாஸ்காவில் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப் சமூக ஊடக பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷிய அதிபர் புதினுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினேன். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச திட்டமிட்டுள்ளேன். சந்திப்புக்கான தேதி இன்னும் இறுதி செய்யப் படவில்லை. இரு வாரங்களுக்குள் இந்த சந்திப்பு நடக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்குச் சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் வாசலில் வந்து வரவேற்றார் அதிபர் டிரம்ப்.
இந்தச் சந்திப்பின்போது அதிபர் புதினுடன் நடந்த உரையாடல் விபரங்கள் மற்றும் உக்ரைனுக்கு ஏவுகணை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
- இன்று அதிபர் டிரம்ப்-ஐ ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க உள்ளார்.
- தானும் புதினும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.
ஐரோப்பாவின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சிப்பது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவில்லாமல் உக்ரைன் - ரஷியா போர் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இந்த போர் உக்ரைனில் மிகப்பெரிய அளவிலான மக்களின் இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது.
ரஷியாவுக்கு எதிரான பொருளாதர தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. ரஷியாவுக்கு சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பாக பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தன.
குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ ரஷிய அதிபர் புதின் கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்கா சென்று நேரில் சந்தித்து பேசியும் எந்த பயனும் இல்லை. புதின் போரை தேவையில்லாமல் நீட்டித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இன்று அதிபர் டிரம்ப்-ஐ ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க உள்ள நிலையில் முன்னதாக புதின், டிரம்புடன் போனில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், தானும் புதினும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதற்கிடையே இன்றைய சந்திப்பில் டிரம்ப் இடம் தங்களுக்கு நீண்டதூரம் பாய்ந்து தாக்கும் Tomahawk ஆயுதங்களை வழங்குமாறு ஜெலன்ஸ்கி வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷிய அதிபர் புதினும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷிய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நேருக்கு நேர் சந்தித்து போரை முடிவுக்கு கொண்டுவருவத்து குறித்து விவாதிப்பார்களா என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் கரோலின் லெவிட், "அது சாத்தியமானது தான் என்று அதிபர் டிரம்ப் நினைக்கிறார். அவ்வாறு நடப்பதை அவர் நிச்சயம் விரும்புவார்" என்று தெரிவித்தார்.






