என் மலர்tooltip icon

    உலகம்

    உக்ரைன்-ரஷியா போர் முடிவுக்கு வராததற்கு காரணம் இதுதான் -  உண்மையை போட்டுடைத்த டிரம்ப்
    X

    உக்ரைன்-ரஷியா போர் முடிவுக்கு வராததற்கு காரணம் இதுதான் - உண்மையை போட்டுடைத்த டிரம்ப்

    • ரஷியா ஆக்கிரமித்துள்ள 20 சதவீத உக்ரைன் நிலப்பகுதிகளான டொனெட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்க உடன்பாடு எட்டப்படவில்லை
    • கடும் குளிர் நிலவுவதைக் கருத்தில் கொண்டு கீவ் மற்றும் இதர நகரங்கள் மீது ஒரு வாரத்திற்குத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன்.

    நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் இணைய முயற்சித்ததை எதிர்த்து ரஷியா அந்நாட்டின் மீது கடந்த 2022 பிப்ரவரியில் போர் தொடுத்தது. இந்த போரானது 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

    போரை முடிவுக்கு கொண்டு வர கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் பொறுப்புடன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

    இதன் விளைவாக கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் முறையாக அமெரிக்கா - ரஷியா - உக்ரைன் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை அபுதாபியில் நடைபெற்றது.

    பிப்ரவரி 1-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ரஷ்யா ஆக்கிரமித்துள்ள 20 சதவீத உக்ரைன் நிலப்பகுதிகளான டொனெட்ஸ்க் பிராந்தியம் உள்ளிட்டவற்றை திரும்ப அளிக்க இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று தெரிகிறது.

    இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷ்ய அதிபர் புதினும் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். இது பேச்சுவார்த்தையை மிகவும் கடினமாக்குகிறது" என்று கூறினார்.

    இருப்பினும், விரைவில் ஒரு சுமுகமான தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கை தெரிவித்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிபர் புடினுடன் தான் பேசியதாகக் குறிப்பிட்ட டிரம்ப், கடும் குளிர் நிலவுவதைக் கருத்தில் கொண்டு கீவ் மற்றும் இதர நகரங்கள் மீது ஒரு வாரத்திற்குத் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டதாகவும், அதற்குப் புதின் சம்மதித்ததாகவும் தெரிவித்தார்.

    இதற்கிடையில், பேச்சுவார்த்தைக்காக மாஸ்கோ வருமாறு ஜெலன்ஸ்கிக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×