என் மலர்
பாகிஸ்தான்
- காவல் நிலையம் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் தாக்குதல்.
- போலீசார் பதிலடி தாக்குதல் நடத்தியதால் பயங்கர சண்டை நடைபெற்றது.
வடமேற்கு பாகிஸ்தானின் பெஷாவர் புறநகர்ப் பகுதியில் உள்ள காவல்நிலையம் மீது அடையாளம் தெரியாக பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் கான்ஸ்டபிள் உயிரிழந்த நிலையில், அதிகாரி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
பெஷாவரில் இருந்து தென்மேற்கே 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஹசன் கெல் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தினர். உடனடியாக போலீசார் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு, பதிலடி கொடுத்தனர். இதனால் கடுமையாக துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதில் அபு பக்கர் என்ற கான்ஸ்டபிள் பலியானார். ஹரூன் என்ற அதிகாரி காயம் அடைந்தார். தாக்குதல் நடத்தப்பட்ட இடம் உஷார் படுத்தப்பட்டு, பயங்கரவாதிகளை வீழ்த்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
- பாகிஸ்தான் தண்ணீரை ஒரு சொட்டு கூட உங்களால் பறிக்க முடியாது என்றார்.
இஸ்லாமாபாத்:
சிந்து நதி நீர் ஒப்பந்த ரத்து விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் முன்னாள் மந்திரி பிலாவல் பூட்டோ ஆகியோர் மிரட்டல் விடுத்து இருந்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, இஸ்லாமாபாத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்ற ஷபாஸ் ஷெரீப் பேசியதாவது:
எங்கள் தண்ணீரைத் தடுத்து நிறுத்துவதாக அச்சுறுத்தினால், பாகிஸ்தானின் தண்ணீரை ஒரு சொட்டு கூட உங்களால் பறிக்க முடியாது என்பதை எதிரியிடம் நான் சொல்ல விரும்புகிறேன்.
இதுபோன்ற செயலை இந்தியா செய்ய முயற்சித்தால் உங்கள் காதுகளைப் பிடித்துக் கொண்டு இருக்க வேண்டிய அளவுக்கு மீண்டும் ஒரு பாடம் கற்பிக்கப்படும் என தெரிவித்தார்.
- காவல் நிலையம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
- சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று, வாஷுக் மாவட்டத்தில், உள்ளூர் காவல் நிலையம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை முகாம்கள் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர்.
மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்புப் படையினர் கடந்து சென்றபோது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதல் இது. இந்தத் தாக்குதலில் ஒன்பது வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்" என்று தெரிவித்தார்.
பலுசிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில், கராச்சியில் இருந்து குவெட்டாவுக்குச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் மூன்று பயணிகள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
கில்லா அப்துல்லா மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தையிலும் குண்டு வீசப்பட்டது. இதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர்.
- அவர்களின் அலுவலகங்களிலும், வசிக்கும் வீடுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- , எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக பிரதிநிதிகளுக்கு தண்ணீர் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளை பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமாபாத்தில் பணியாற்றும் இந்திய தூதர்கள் மீதான கட்டுப்பாடுகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களின் அலுவலகங்களிலும், அவர்கள் வசிக்கும் வீடுகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தகவலின்படி, ஜூன் மாதம் முதல் இந்திய தூதர்களின் வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், பாகிஸ்தான் தூதர்களுக்கு செய்தித்தாள்களை வழங்குவதையும் இந்தியா நிறுத்தியுள்ளது.
இதற்கிடையில், எதிர்காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கூறியதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.
- பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டுள்ள பாகிஸ்தான் இரண்டு மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.
அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பயன்படுத்த முடியாதபடி அதன் வான்வெளியை மூடியது.
இந்திய விமானங்கள் இயக்கப்படாததால் ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை பாகிஸ்தான் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.
பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இழப்புகள் இருந்த போதிலும் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2019 இல் 508,000 டாலரிலிருந்து 2025 இல் 760,000 டாலராக அதிகரித்துள்ளது.
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்பட்டது.
- இந்த மோதலின்போது பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மே 9 ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற விமானப்படை அதிகாரிகளுக்கான கருத்தரங்கில் பேசிய இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் மற்றும் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு விமானம், AWACS (Airborne Warning and Control System) என அழைக்கப்படும் வான்வழி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானம் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்திய ராணுவம் வசம் உள்ள ரஷிய தயாரிப்பான எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பினால் இந்த வெற்றி சாத்தியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
மே 7 தாக்குதலின் போது பயங்கரவாத இலக்குகள் சேதமடைவதன் முன்னாள் இருந்த நிலை மற்றும் அதன் பின்னால் சேதமடைந்த நிலை ஆகியவற்றின் செயற்கைக்கோள் படங்களையும் அவர் திரையிட்டு விளக்கினார். ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று மத்திய அரசு கூறுகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் பாகிஸ்தானின் சிங்கிள் விமானம் தாக்கப்படவில்லை அல்லது அழிக்கப்படவில்லை என்ற பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பதில் அளித்துள்ளார்.
மேலும், 3 மாதங்களாக இது தொடர்பாக இந்தியா ஏதும் கூறவில்லை. அதேவேளையில் பாகிஸ்தான் உடனடியாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு விரிவான தொழில்நுட்ப விளக்கங்களை அளித்தது எனத் தெரிவித்தார்.
ஆபரேசன் சிந்தூரின்போது இந்தியாவின் 3 ரஃபேல் உட்பட 6 இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்ட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஜூன் மாதம் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபோது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்தளித்தார்.
- பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை அளிப்பதாக உறுதியளித்தார்.
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை காரணம் காட்டி, அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதித்துள்ளது.
ஒரு புறம் இந்தியாவுடன் வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு நட்புக் கரம் நீட்டி வருகிறது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்படும் நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத் தலைவர் மீண்டும் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் செல்ல தயாராகி வருகிறார்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி, ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக இந்த வாரம் அமெரிக்காவிற்கு செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றபோது, அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அவருக்கு விருந்தளித்தார்.
அந்த பயணத்தின் போது, பாகிஸ்தானுக்கு வர்த்தக முன்னுரிமை அளிப்பதாகவும், அதன் எண்ணெய் இருப்புக்களை பிரித்தெடுப்பது குறித்து ஆராய்வதாகவும் டிரம்ப் உறுதியளித்தார். இந்நிலையில் இந்த முறை அமெரிக்க பயணத்தின்போது அசிம் முனீர் அரசின் உயர்மட்ட தலைவர்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.
- பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
- குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கைதுகள் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சித் தலைவருமான இம்ரான் கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 2023 முதல் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் PTI கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டங்களின் போது போலீசார் 500க்கும் மேற்பட்ட PTI தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கைது செய்ததாக கட்சி வட்டாரங்கள் குற்றம் சாட்டின.
குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கைதுகள் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இம்ரான் கான் இரண்டு ஆண்டுகள் சிறைவாசத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டதாக PTI தலைவர்கள் தெரிவித்தனர்.
அரசாங்கம் அவரது அடிப்படை உரிமைகளை பறித்துள்ளதாகவும், அவரது சட்டக் குழு அல்லது குடும்ப உறுப்பினர்கள் அவரைச் சந்திக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.
- போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
- 77 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு இம்ரான் கான் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன்போது, பஞ்சாப் மாகாணத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதில் புலனாய்வுத் துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களும், ராணுவத் தளவாடங்களும் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்நிலையில் ஃபைசலாபாத்திலுள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட நிலையில் 185 பேரில், 108 பேருக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தது. 77 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஃபைசலாபாத் நகர காவல் நிலையம் மீதான தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட 58 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அயூப், பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஷிபிலி ஃபராஸ், சார்தாஜ் குல், ஷாஹிப்சடா ஹமித் ரஸா உள்ளிட்ட இம்ரான் கான் கட்சியின் மூத்த 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.
- பஸ்சின் முன் பக்க டயர் ஒன்று திடீரென வெடித்தது.
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் இருந்து பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நோக்கி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
பாலகசார் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த பஸ்சின் முன் பக்க டயர் ஒன்று வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பழங்குடியினத் தலைவர் இந்த கொலையை செய்ய உத்தரவிட்டார்.
- பாகிஸ்தானில் 2024 இல் குறைந்தது 405 ஆணவக்கொலைகள் பதிவாகியுள்ளன.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இளம் ஜோடி ஆணவக்கொலை செய்யப்பட்ட வீடியோ அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
பனோ பீபி - அஹ்சான் உல்லா என்ற இளம் ஜோடி, குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டர்.
இந்நிலையில் கணவன்-மனைவியை கடத்திச் சென்று குவெட்டா நகரின் புறநகரில் வைத்து நபர் ஒருவர் துப்பாக்கியால் பலமுறை சுட்டுள்ளார். இதில் இருவரும் உயிரிழந்தனர். மே 2025ல் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள்ளூர் பழங்குடியினத் தலைவர் சர்தார் சதக்ஸாய் மற்றும் பெண்ணின் சகோதரன் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பெண்ணின் சகோதரன் முறையீட்டின் பேரில் , பழங்குடியினத் தலைவர் இந்த கொலையை செய்ய உத்தரவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தகவல்படி, பாகிஸ்தானில் 2024 இல் குறைந்தது 405 ஆணவக்கொலைகள் பதிவாகியுள்ளன.
- அவர் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.
- மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் வரை பலியானார்கள்.
பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார். இவர் இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையவர். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகளில் முக்கியமானவர்.
மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில் அவர் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது.
சமீபத்தில் பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பிலாவல் பூட்டோ கூறும் போது, மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை. அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் இடத்தை இந்திய உளவுத்துறை கண்டு பிடித்துள்ளது. அவர் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் காணப்பட்டதாக உளவுத் துறை தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இந்த பகுதி மசூத் அசார் முதலில் வசித்த பாகிஸ்தானின் பஞ்சபர் மாகாணம் பஹவல்பூரில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மசூத் அசார் தங்கியிருக்கும் இடத்தில் 2 மசூதிகளுடன், மதரசாக்கள், அரசினர் விடுதி, விருந்தினர் மாளிகைகளும் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இடம் ஜம்மு-காஷ்மீரில் இருந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மசூத் அசார் சத்பரா சாலை பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் உள்ள 9 முகாம்களை இந்தியா குண்டு வீசி சிதைத்தது. இதில் பஹவல்பூரில் உள்ள மசூத் அசாரின் தலைமை முகாம் அடங்கும். இதில் மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் வரை பலியானார்கள். மசூத் அசார் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய எல்லை அருகே மசூத் அசார் பதுங்கி இருப்பதால் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.






