என் மலர்tooltip icon

    உலகம்

    • நீதிபதி கார் டிரைவரை அக்கும்பல் ஒன்றும் செய்யவில்லை.
    • கடத்தப்பட்ட நீதிபதியை பாதுகாப்பாக மீட்க மாகாண முதல்வர் கந்தாபூர் உத்தரவுகளை பிறப்பித்தார்.

    பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் மாவட்ட நீதிபதியாக இருப்பவர் ஷகிருல்லா மர்வாட். இவர் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆயுதங்களுடன் வந்த கும்பல் காரை வழிமறித்து நீதிபதியை கடத்தி சென்றது. ஆப்கானிஸ்தானின் எல்லையில் உள்ள டேரா இஸ்மாயில் கான் மாவட்டம் பக்வால் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்தது. நீதிபதி கார் டிரைவரை அக்கும்பல் ஒன்றும் செய்யவில்லை. நீதிபதி கடத்தப்பட்டதற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், கடத்தப்பட்ட நீதிபதியை பாதுகாப்பாக மீட்க மாகாண முதல்வர் கந்தாபூர் உத்தரவுகளை பிறப்பித்தார். மார்வாட்டின் மீட்புக்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    • அம்பர்லா தன்னுடன் பயிலும் இந்திய மாணவி ஒருவரை காதலித்து வந்தார்.
    • கடந்த 2022-ம் ஆண்டு அந்த ஓட்டலுக்கு சென்ற அம்பர்லா திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தினார்.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வருபவர் ஸ்ரீ ராம் அம்பர்லா (வயது 25). இந்திய வம்சாவளியான இவர் லண்டனில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வருகிறார். அம்பர்லா தன்னுடன் பயிலும் இந்திய மாணவி ஒருவரை காதலித்து வந்தார். பின்னர் தகராறு ஏற்பட்டதால் அவர்கள் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து அந்த மாணவி பகுதி நேரமாக அங்குள்ள ஒரு இந்திய உணவகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு அந்த ஓட்டலுக்கு சென்ற அம்பர்லா திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தினார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கு அங்குள்ள பெய்லி நகர கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் அம்பர்லா மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே அவருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    • ரபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது.
    • இஸ்ரேலின் நிபந்தனையை ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காசா:

    பாலஸ்தீனத்தின் காசாமுனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் 6 மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    ஹமாஸ் அமைப்பினர் குறிவைத்து நடத்தி வரும் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

    காசாவின் வடக்கு, மத்திய பகுதிகளில் தரைவழித் தாக்குதல் நடத்தியதுபோல் தற்போது தெற்கில் உள்ள ரபா நகரில் தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.

    காசா மீதான தாக்குதலால் வடக்கு, மத்திய பகுதிகளில் இருந்து மக்கள் பெரும்பாலானோர் ரபா எல்லையில் தஞ்சமடைந்துஉள்ளனர். அங்கு தரைவழி தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து உள்ளன.

    ஆனால் ரபா மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில், பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாசுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று இஸ்ரேல் தெரிவித்து போர் நிறுத்த முன்மொழிவை அளித்துஉள்ளது.

    இந்த நிலையில் போர் நிறுத்தம் குறித்து ஹமாஸ் தரப்பு கூறும்போது, இஸ்ரேலின் சமீபத்திய போர்நிறுத்த முன்மொழிவை பெற்றோம். அதற்கு பதிலைச் சமர்ப்பிப்பதற்கு முன் அதை ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் நிபந்தனையை ஹமாஸ் அமைப்பு ஏற்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தின் போது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெடி விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
    • வெடி விபத்து குறித்த தகவலை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் பகிர்ந்துள்ளார்.

    கம்போடியா நாட்டின் மேற்கு பகுதி, கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது.

    அங்கு, வெடி பெருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    இதில், அங்கு கரும் புகை மண்டலமாக உருவானது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    மேற்கூறிய தகவல்களை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

    • நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள நகரங்களிலும் உணரப்பட்டுள்ளன.
    • நிலநடுக்கம் ராட்சத அலைகளைத் தூண்டாது என்பதால் சுனாமி எச்சரிக்கை இல்லை.

    இந்தோனேசியாவின் ஜகார்த்தா அருகே சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 6.5-ஆக பதிவாகியுள்ளது.

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் நேற்று இரவு 11.30 மணியளவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதுள்ளதாகவும், இருப்பினும் சுனாமி எச்சரிக்கை இல்லை எனவும் அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கம் மையம் கருட் ரீஜென்சிக்கு தென்மேற்கே 151 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகிலுள்ள ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தலைநகர் மற்றும் அருகிலுள்ள பான்டென் மாகாணம் மற்றும் மத்திய ஜாவா, யோககர்த்தா மற்றும் கிழக்கு ஜாவா மாகாணங்களிலும் உணரப்பட்டன.

    இந்த நிலநடுக்கம் ராட்சத அலைகளைத் தூண்டாது என்பதால் சுனாமி எச்சரிக்கை எதுவும் அமைப்பால் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது
    • அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்

    அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த உலக அழகி போட்டியில் 60 வயதான அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வென்றவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அதிக வயதில் அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    உலக அழகிப்போட்டியில் இதற்கு முன்பு வரை 18-28 வயதுடைய பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்ற விதிமுறை இருந்தது. ஆனால், அந்த வயது வரம்பைக் கடந்தாண்டு தான் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு நீக்கியது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த பெண்ணும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும் என்ற நிலை உருவானது.

    அதன்பின் டொமினிகன் குடியரசில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் 2024இல் 47 வயதான ஹெய்டி குரூஸ் என்பவர் வெற்றி பெற்றிருந்தார். அதன் பிறகு 60 வயதில் அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ் வெற்றி பெற்று அதிக வயதில் உலக அழகி பட்டம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அலெஜாண்ட்ரா மரிச ரோட்ரிகுயஸ், "உலக அழகிப்போட்டியில் 18 முதல் 28 வயதுடையவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதி தளர்த்தப்பட்ட நிலையில் இது சாத்தியமாகியுள்ளது. அழகுக்கு வயது வரம்பு இல்லை. அடுத்த மாதம் அங்கு நடக்கும் மிஸ் யுனிவர்ஸ் அர்ஜெண்டினா போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதே தனது இலக்கு என்று அவர் தெரிவித்தார்.

    அவரது நேர்த்தியும், நளினமும், புன்னகையும் தான் அவர் வெல்லக் காரணம் என்று போட்டியின் நடுவர்கள் கூறியுள்ளனர்.

    அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியை சேர்ந்தவர் இந்த இவர் பல ஆண்டுகளாக வழக்கறிஞராக வேலை செய்துவருகிறார். அவர் அங்கு சில காலம் பத்திரிகையாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
    • இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நமது அண்டை நாடான மாலத்தீவில் புதிய அதிபராக முகமது முய்சு பதவி ஏற்றதில் இருந்து இந்தியாவுடனான மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சீனாவுக்கு ஆதரவானவர் என்று கருதப்படும் முகமது முய்சு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

    இந்தியாவின் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீன உளவு கப்பலை மாலத்தீவு கடற்பகுதியில் நிறுத்த அனுமதி வழங்கியது. சுமார் 6 நாட்கள் முகாமிட்டு இருந்த அந்த கப்பல் பின்னர் திரும்பி சென்றது.

    இந்த நிலையில் 4,500 டன் எடையுள்ள சியாங்- யாங்-ஹாங்-3 என்ற சீன உளவு கப்பல் மீண்டும் மாலத்தீவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவின் மாலேவுக்கு மேற்கு சுமார் 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திலாபுஷி என்ற துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

    லட்சத்தீவில் உள்ள மினிசாங் தீவில் இருந்து 70 கடல் மைல் தொலைவில் இந்த துறைமுகம் அமைந்து உள்ளது. இங்கிருந்தபடி மிக எளிதாக இந்தியாவை வேவு பார்க்க முடியும்.

    இது சாதாரண ஆய்வு கப்பல் என சீனா கூறினாலும் அதிநவீன தொழில் நுட்ப வசதியுடன் கூடிய உளவு கப்பல் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கப்பலில் கடல் பரப்பை கண்காணிக்கும் திறன் கொண்ட அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த கப்பல் மாலத்தீவு கடற் பகுதியில் எந்தவித ஆராய்ச்சி பணியிலும் ஈடுபடாது என அந்நாட்டு வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.

    ஆனால் எதற்காக இந்த உளவு கப்பல் மாலத்தீவு வந்துள்ளது, எத்தனை நாட்கள் இக்கப்பல் மாலத்தீவில் நிறுத்தி வைக்கப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாலத்தீவின் இந்த நடவடிக்கை அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால் இந்திய கடற்படை உஷார் படுத்தப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இது பற்றி பெற்றோர் தாய்லாந்தில் உள்ள தூதரகத்தில் தகவல் கொடுத்தனர்.
    • அடையாளம் தெரியாத பிணம் போல அவரது உடல் பஹ்ரைன் சல்மானியா ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது.

    பஹ்ரைன்:

    தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர் கைகன் கென்ன கம் ( வயது 31). மாடல் அழகியான இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

    பஹ்ரைனில் அவருக்கு ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வருவதாக கைகன் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இவர் சமூக வலை தளங்களில் சுறு சுறுப்பாக இருந்து வந்தார்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் சமூகவலை தளங்களில் பதிவடுவதை நிறுத்தினார். இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால் இது பற்றி பெற்றோர் தாய்லாந்தில் உள்ள தூதரகத்தில் தகவல் கொடுத்தனர். இந்த நிலையில் மாடல் அழகி கைகன் கென்னகம் பஹ்ரைனில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பிணவறையில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

    அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் அடையாளம் தெரியாத பிணம் போல அவரது உடல் பஹ்ரைன் சல்மானியா ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டது. அவரது உடலில் எந்த காயமும் இல்லை எனவும் போலீசார் தெரிவித்தனர். அவரது கையில் டாட்டூ வரைந்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அது தங்களது மகள் தான் என கைகனின் பெற்றோர் ஒத்துக்கொண்டனர்.

    மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட் டியுள்ளனர். இது தொடர்பாக தூதரகத்திலும் புகார் மனு கொடுத்து உள்ளனர். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய்லாந்து அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப காலமாக வெளிநாடுகளில் மாடல் அழகிகள் மற்றும் நடிகைகள் இளம் வயதில் மரணத்தை தழுவுவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

    • மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.
    • மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது என்றார்.

    சிலி நாட்டில் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நாணயங்களை கொண்டு ஒருவர் டி.வி. வாங்கியுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

    டிக்டாக் பிரபலம் லூயிஸ் அல்வெரெஸ் என்பவர் மெட்டல் டிடெக்டர் மூலம் கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் இருந்து நாணயங்களை கண்டெடுத்துள்ளார்.

    ஒரு வாரத்திற்குள் கண்டெடுக்கப்பட்டுள்ள நாணயங்களை கொண்டு இந்திய மதிப்பில் ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை வாங்கியுள்ளார். இது தொடர்பாக லூயில் அல்வெரெஸ் கூறும் போதும், ஒவ்வொரு வாரமும் 210 அமெரிக்க டாலர் முதல் 263 டாலர் வரை கிடைக்கும். என்னுடைய மகளுக்காக டி.வி. வாங்க வேண்டியிருந்தது. சேகரித்த நாணயங்களை இரவு முழுவதும் சுத்தம் செய்தேன். வெகுநேரமாகியதால் வங்கிக்கு செல்ல முடியவில்லை. அதனால் மறுநாள் நாணயங்களை சிறிய பையில் வைத்து எடுத்துச் சென்றேன் என்றார். 

    • கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளது.
    • விபத்தில் உயிர் பிழைத்த ஒரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

    அமெரிக்காவில் கார் ஒன்று மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் குஜராத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

    குஜராத்தின் அனந்த் மாவட்டத்தை சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினாவில் உள்ள கிரீன்வில்லி மாகாணத்தில் உள்ள காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், " வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து 20 அடி உயரத்தில் பறந்து பாலத்தின் எதிர்புறத்தில் உள்ள மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    கார் வேக வரம்பை விட வேகமாக பயணம் செய்துள்ளது. மரத்தில் மோதிய வேகத்தில் கார் சுக்குநூறாக நொருங்கியது.

    3 இந்தியப் பெண்கள் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிர் பிழைத்த ஒரு நபர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • வூங் டின் ஹியூ மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
    • உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    ஹனோய்:

    அண்டை நாடான வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகராக வூங் டின் ஹியூ (வயது 67) இருந்து வருகிறார்.

    இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கிடையே அவரது உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் தற்போது வூங் டின் ஹியூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அங்குள்ள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிளசன்டன் பகுதியில் ஸ்டோனிரிட்ஜ் டிரைவ் புட்ஹில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது அவர்களது கார் விபத்தில் சிக்கியது.
    • பிளசன்டன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தருண் ஜார்ஜ். இவர் ஐக்கிய அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் பணியாற்றி வருகிறார். அவர் அங்கேயே தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று தருண்ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் சென்றார். கலிபோர்னியாவில் பிளசன்டன் பகுதியில் ஸ்டோனிரிட்ஜ் டிரைவ் புட்ஹில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது அவர்களது கார் விபத்தில் சிக்கியது.

    இதில் அவர்களது கார் முற்றிலுமாக நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி தருண் ஜார்ஜ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கார் முற்றிலுமாக நொறுங்கியிருப்பதால் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதனடிப்படையில் பிளசன்டன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×