என் மலர்
உலகம்
- ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படுகிறது.
- கடந்த ஆண்டு அக்டோபரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் இறந்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 10.15 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கும் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர்
- சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது
இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில் வசித்து வருபவர் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் 45 வயதான பரிதா வசித்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்று பரிதாவின் உடைகளைக் கிராமத்தின் அருகே அவரது கணவர் கண்டுபிடித்த நிலையில் தேடுதலைத் தீவிரப்படுத்திய கிராமத்தினர் 5 மீட்டர் நீளமுடைய 16 அடி பைத்தான் வகை மலைப்பாம்பை அப்பகுதியில் பார்த்துள்ளனர்.
சந்தேகமடைந்த அவர்கள் மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து பார்த்தபொழுது உள்ளே பரிதாவின் ஆடைகளுடன் உடல் முழுதாக ஜீரணிக்கப்படாமல் இருந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானது என்றாலும் சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.
கடந்த வருடம் தினாகியா மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 8அடி பைத்தானால் விழுங்கப்பட்டார். 2018 இல் சுலானீஸ் மாகாணத்தில் 54 வயது பெண் ஒருவர் 7 ஆடி பைத்தானின் வயிற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
- 389 பயணிகள்,13 பணியாளர்களுடன் ஏர் கனடா விமானம் புறப்பட்டது.
- தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
டொராண்டோ:
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீ சுக்கு 389 பயணிகள்,13 பணியாளர்களுடன் ஏர் கனடா விமானம் புறப்பட்டது.
விமானம் பறக்கத் தொடங்கிய சில வினாடிகளில் அதில் உள்ள என்ஜின் வெடித்துச் சிதறியது. என்ஜின் பகுதியில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள், விமானிக்கு தகவல் தெரிவித்து உடனே விமானத்தை தரை இறக்குமாறு அறிவுறுத்தினர். விமானிகள் உடனடியாக விமானத்தை பத்திரமாக திருப்பி விமான நிலையத்தில் தரையிறக்கினர்.
அங்கு தயாராக இருந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் என்ஜின் பகுதியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். விமானிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை உடனே தரை இறக்கியதால் பயணிகள் தப்பினர்.
இந்த சம்பவத்தில் யாரும் காயம் ஏற்படவில்லை. விமானத்தில் தீ பிடித்ததாக தகவல் தெரிந்தததும் பயணிகள் பதற்றம் அடைந்தனர். பின்னர் அசம்பாவிதம் ஏற்படாமல் விமானம் தரை இறக்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனர்.
விமானம் புறப்பட்டதும் அடிப்பகுதியில் தீப்பிடித்து எரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
- 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்
- பிணைக் கைதிகளை இஸ்ரேல் சிறப்புப்படையினர் மீட்டனர்.
காசா:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மேலும் 250-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர் களை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்றனர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் காசாவில் 36 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட போர் நிறுத்தத் தின்போது 100-க்கும் மேற்பட்ட பிணைக் கைதி களை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர்.
இன்னும் அவர்களிடம் 120 பிணைக்கைதிகள் உள்ளனர். அவர்களை மீட்க இஸ்ரேல் ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட பிணைக்கைதி களில் ஒரு பெண் உள்பட 4 பேரை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக நேற்று மீட்டது. காசா முனையில் உள்ள நுசைரத் முகாமில் கடத்தி வைக்கப்பட்டிருந்த பிணைக் கைதிகளை இஸ்ரேல் சிறப்புப்படையினர் மீட்டனர்.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது இஸ்ரேலிய சிறப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். மீட்கப்பட்ட பிணைக்கைதிகள் நோவா அர்காமனி, மெயிர்ஜன், ஆண்ட்ரே, ஷால்மி சிவ் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் அனைவரும் இசை விழாவில் இருந்து கடத்தி செல்லப்பட்டவர்கள். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். 4 பேரும் நல்ல உடல் நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிணைக் கைதிகள் மீட்பு நடவடிக்கையின்போது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 210 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 210 பேர் பலியானார்கள். 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஹமாசின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்து உள்ளது.
- ஜூன் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
டென்மார்க் பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் கோபென்ஹாகென் சென்றிருந்த போது, மர்ம நபரால் தாக்குதலுக்கு ஆளானார். இந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும், பிரதமரை தாக்கிய மர்ம நபர் கைது செய்யப்பட்டார். கைதாகியுள்ள 39 வயது நபருக்கு ஜூன் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
தாக்கப்பட்ட பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன் உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், பிரதமரின் கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மேட் ஃப்ரெடெரிக்சன், "அன்று நடந்த சம்பவத்தால் அதிர்ச்சியும், கவலையும் அடைந்ததேன். எனினும், தற்போது நலமாகவே இருக்கிறேன். எனக்காக குரல் கொடுத்தவர்கள், ஊக்கமளித்தவர்களுக்கு நன்றி," என தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சமயத்தில் தனது குடும்பத்தாருடன் இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு டென்மார்க்-இன் இளம் வயது பிரதமர் என்ற பெருமையுடன் மேட் ஃப்ரெடெரிக்சன் பதவியேற்றார். அப்போது அவருக்கு வயது 41.
- நாசா விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் ஜூன் 6 அன்று விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
- ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்யவுள்ளனர்.
போயிங் நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் நாசா விண்வெளி வீரர் புட்ச் வில்மோர், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சுமந்து கொண்டு விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி ஜூன் 5 அன்று புறப்பட்டுச் சென்றது.
25 மணி நேர பயணத்திற்குப் பிறகு ஜூன் 6 அன்று அவர்கள் விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர்.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தன்னுடன் சுடச்சுட மீன் குழம்பை சுனிதா வில்லியம்ஸ் எடுத்துச் சென்றுள்ளார். மீன் குழம்பு எடுத்து சென்றது தனது வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வை தருகிறது என அவர் கூறியுள்ளார்.
மீன் குழம்புடன், ஒரு விநாயகர் சிலையையும் தன்னுடன் அவர் எடுத்துச் சென்றுள்ளார். இவர் கடந்தமுறை பகவத் கீதையின் பிரதியையும் சமோசாவை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு ஆண்டுகளாக அந்தப் பெண் கடுமையான பகல்நேர தூக்கம் மற்றும் மந்தமான பேச்சு ஆகியவற்றால் அவதிப்பட்டார்.
- சமீப ஆண்டுகளில், மத நம்பிக்கையின் காரணமாக அவர் குடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.
கனடாவை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கு ப்ரூவரி சிண்ட்ரோம் நோய் இருப்பதை டொராண்டோ பல்கலைக்கழகம் மற்றும் மவுண்ட் சினாய் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குடல் பூஞ்சை நொதித்தல் மூலம் மதுவை உருவாக்கும் ஒரு அரிய வகை நோய் ஆகும். இது அவரது குடலில் ஆல்கஹாலை உற்பத்தி செய்கிறது. குடிபோதையில் இல்லை.
இரண்டு ஆண்டுகளாக அந்தப் பெண் கடுமையான பகல்நேர தூக்கம் மற்றும் மந்தமான பேச்சு ஆகியவற்றால் அவதிப்பட்டார், மேலும் மது அருந்தாமல் இருந்தபோதிலும், இரத்தத்தில் ஆல்கஹால் அளவு மற்றும் அவரது சுவாசத்தில் ஆல்கஹால் அதிகரித்தது.
அந்த பெண் குடிக்கவில்லை என்று கூறினாலும் டாக்டர்கள் அதை நம்ப மறுத்தனர்.
இதை தொடர்ந்து அவருக்கு கடந்த 5 ஆண்டுகளில், அவருக்கு மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) இருந்தன, இதற்கு புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்களான சிப்ரோஃப்ளோக்சசின் மற்றும் நைட்ரோஃபுரான்டோயின், அத்துடன் இரைப்பை குடல் ரிஃப்ளக்ஸ் நோய், டெக்ஸ்லான்சோபிரசோல் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது.
முன்பெல்லாம் விடுமுறை நாட்களில் ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பாள்; இருப்பினும், சமீப ஆண்டுகளில், மத நம்பிக்கையின் காரணமாக அவர் குடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.
அவர் இதுவரை ஏழு முறை அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்றிருக்கிறார். இது மருத்துவர்களிடையே நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாததை காரணம் என கூறுகின்றனர்.
தற்போது அந்த பெண் பூஞ்சை காளான் மருந்துகள் மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உணவுகள் மூலம் சிகிச்சை பெற்று வருகிறார்.
"நீரிழிவு நோய், கல்லீரல் நோய், குடல் டிஸ்மோட்டிலிட்டி கோளாறுகள் மற்றும் அழற்சி குடல் நோய் போன்ற நோய்கள் ஆட்டோ ப்ரூவரி சிண்ட்ரோமுடன் தொடர்புடையவை" என்று ஆய்வு காட்டுகிறது.
- இந்தியாவின் பிரதமராக மோடி நாளை 3-வது முறையாக பதவியேற்க உள்ளார்.
- இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாலே:
இந்தியாவில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து 3-வது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார்.
தலைநகர் டெல்லியில் நாளை நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பங்கேறும்படி பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மாலத்தீவுக்கான இந்திய தூதர் முனு மவாகர் இதற்கான அழைப்பிதழை அதிபர் முய்சுவிடம் வழங்கினார். இந்த அழைப்பை முய்சு ஏற்றுக்கொண்டார் என மாலத்தீவு அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
இந்நிலையில், மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். இது இந்தியா-மாலத்தீவு இடையிலான இருதரப்பு உறவுகள் நேர்மறையான திசையில் சென்றுகொண்டிருப்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்கும் என அதிபர் முகமது முய்சு தெரிவித்துள்ளார்.
- அப்பல்லோ-8 விண்கல பயணத்தின் போது எர்த்ரைஸ் புகைப்படத்தை எடுத்தவர்.
- வாஷிங்டன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீவுகளுக்கு இடையே ஜோன்ஸ் தீவில் உள்ள கடலில் விமானம் விழுந்தது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ் (வயது 90).
இவர் அப்பல்லோ-8 விண்கலத்தில் சென்று நிலவை சுற்றி வந்த மூன்று நபர்களில் ஒருவராவார். அப்பல்லோ-8 விண்கல பயணத்தின் போது எர்த்ரைஸ் புகைப்படத்தை எடுத்தவர்.
விண்வெளியில் இருந்து பூமியின் முதல் வண்ணப் புகைப்படம் இதுவாகும்.
இந்த நிலையில் வில்லியம் ஆண்டர்ஸ் விமான விபத்தில் பலியானார். அவர் தனக்கு சொந்தமான ஒரு சிறிய ரக விமானத்தை தனியாக இயக்கி கொண்டு வாஷிங்டனில் இருந்து புறப்பட்டார்.
அப்போது வாஷிங்டன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் தீவுகளுக்கு இடையே ஜோன்ஸ் தீவில் உள்ள கடலில் விமானம் விழுந்தது.
இந்த விபத்தில் வில்லியம் ஆண்டர்ஸ் உயிரிழந்தார். அவரது உடலை மீட்கும் பணி நடந்து வருகிறது.
- இந்திய மக்களுக்கு அவர்களுடைய தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை உள்ளது
- அவர்களுடைய தேர்தல் செயல்முறையில் எங்களிடம் எந்த கருத்துகளும் கிடையாது.
இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. கூட்டணி தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை அவர் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
அவருக்கு வெளிநாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாலத்தீவு அதிபர், வங்காளதேச பிரதமர், இலங்கை பிரதமர் உள்ளிட்டோர் பதவி ஏற்ப விழாவில் கலந்த கொள்ள இருக்கிறார்கள்.
ஆனால், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்தியாவுடன் எதிரும் புதிருமாக இருந்தாலும் கூட பரஸ்பர வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாகளர் கூறுகையில் "பாகிஸ்தான் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவு மற்றும் கூட்டுறவை விரும்புகிறது. அண்டை நாடுகளுடன் இருக்கும் பிரச்சனையை பேச்சவார்த்தை மூலும் தீர்க்க விரும்புகிறது" என்றார்.
மேலும், இந்திய பொதுத்தேர்தலில் மோடி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததா? எனக் கேட்ட கேள்விக்கு செய்தி தொடர்பாளர் பலூச் "இந்திய மக்களுக்கு அவர்களுடைய தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான உரிமை உள்ளது. அவர்களுடைய தேர்தல் செயல்முறையில் எங்களிடம் எந்த கருத்துகளும் கிடையாது. இன்னும் அதிகாரப்பூர்வமாக ஆட்சி அமைக்கப்படாத நிலையில், இந்திய பிரதமருக்கு வாழ்த்து கூறுவது பற்றி பேசுவது முன்னதாக எடுக்கப்பட்ட செயலாகும்." என்றார்.
இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்து ஜெய்சங்கர் இந்த வருட தொடக்கத்தில் "பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை கதவை இந்தியா ஒருபோதும் மூடவில்லை. பயங்கரவாத பேச்சுவார்த்தையின் மையப்புள்ளியாக இருக்க வேண்டும்" என்றார்.
- பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது.
- உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் உங்களது வெற்றிக்கு வாழ்த்துகள் நரேந்திர மோடி.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாராளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பிரதமராக மோடி 3-வது முறையாக நாளை பதவியேற்கிறார்.
பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்றதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பல உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடிக்கு, உலக பணக்காரரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் உங்களது வெற்றிக்கு வாழ்த்துகள் நரேந்திர மோடி.
இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமாக பணிகளைச் செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றன என்று கூறியுள்ளார்.
- காமெடியன் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியபடி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்
- தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார்
ஸ்பெயினில் உள்ள அளிகாண்டே நகரில் நேற்று இரவு நடந்த ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின்போது மேடையில் ஏறி காமெடியனின் முகத்தில் நபர் ஒருவர் குத்து விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஜேமி கரவாகா என்ற ஸ்டான்ட் அப் காமெடியன் மேடையில் பலதரப்பட்ட விஷயங்களைப் பேசியபடி பார்வையாளர்களை சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் ஆல்பர்டோ புகிலட்டோ என்ற இசைக்கலைஞரும் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு இடையில், காமெடி செய்வதாக நினைத்துக்கொண்டு ஆல்பர்டோவின் 3 மாத குழந்தை குறித்து கோபமூட்டும் வகையில், பாலியல் ரீதியாக குறிப்பிட்டு காமெடியன் ஜேமி பேசத் தொடங்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆல்பர்டோ நேராக விறுவிறு என மேடைக்கு சென்று காமெடியன் ஜேமியின் முகத்தில் ஒரு குத்து வைத்து அவரை நிலைகுலையச் செய்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனைத்தொடர்ந்து ஜேமி தனது சமூக வலைதள பக்கத்தில், தான் சிரிப்பூட்டவே விரும்பியதாகவும், அது உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்றும் அல்பெர்டோவிடம் வேண்டியுள்ளார். இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆல்பெர்ட்டோ ஜேமியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.






