என் மலர்
உலகம்
- பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடங்கினர்.
- தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த சனிக்கிழமை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெள்ளிக்கிழமை இரவு நடந்த விழாவில் விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக அன்றைய தினம் காலையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டது. பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் திட்டமிட்டு முடக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பும் சீர்குலைந்தது. பின்னர் பாதிப்புகள் மெல்ல மெல்ல சரிசெய்யப்பட்டு போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று பிரான்ஸ் நாடு நெடுகிலும் பல்வேறு இடங்களில் தொலைத்தொடர்பு [டெலிகாம்] கேபிள்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பைபர் ஆப்டிக்ஸ் தொலைத்தொடர்பு கேபிள்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொலைத்தொடர்புத்துறைச் செயலர் மெரினா பெர்ராரி பேசுகையில், ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளுக்கு இடைப்பட்ட இரவில் இந்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் தொலைதொடர்பு சேவைகள் பைபர் லைன் மற்றும் மொபைல் தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதான நகரமாக மார்சில் [Marseille] உட்பட பல்வேறு நகரங்களில் இந்த சேதங்கள் பதிவாகியுள்ளன என்றுதெரிவித்துள்ளார். இதனால் நடந்துவரும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி நாடுகளிடையே எழுந்துள்ளது.
- கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.
- இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஓலிம்பிக்ஸ் 2024 துவக்க விழாவில் விசேஷ அணிவகுப்பு, வாணவேடிக்கை, கலைநிகழ்ச்சிகள் என கொண்டாட்டங்கள் நகரை அதிர வைத்தன. சய்ன் நதியில் அமைக்கப்பட்ட மேடையில் லேடி காகா, செலின் டியோன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதன் வரிசையில் பிரபல ஓவியர் லியொனார்டோ டாவின்சியின் லாஸ்ட் சப்பர் எனப்படும் இயேசுவின் இறுதி இரவு உணவு ஓவியத்தை பிரதி செய்யும் வகையில் அமைந்த டிராக் கிவீன் நிகழ்ச்சி கிறித்தவர்கள் மனதை புண்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது.
இதற்கு பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் கண்டன குரல் எழுப்பினர். அந்த வரிசையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "உண்மையில் நான் வெளிப்படையான ஒருவன், ஆனால் அவர்கள் செய்தது மிக மோசமான விஷயம். கடந்த இரவு லாஸ்ட் சப்பர் நிகழ்வை அவர்கள் வெளிப்படுத்தியதை போன்று நாங்கள் செய்ய மாட்டோம்," என்று தெரிவித்தார்.
சர்ச்சைக்கு உள்ளான அந்த நிகழ்ச்சியில் வெள்ளிக் கிரீடத்தை அணிந்து அரை நிர்வாணமாக உடல் முழுவதும் நீல நிற சாயம் பூசி மலர்களால் அலங்கரித்துக் கொண்டு லாஸ்ட் சப்பரில் பரிமாறப்படும் உணவை குறிக்கும் வகையில் மேஜையில் படுத்திருந்தார்.
- சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
- நேற்று மாலை 6.20 மணியளவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்
வன்முறைகளின் உற்பத்திக் களமாக அமெரிக்கா மாறி வருவதை நாளுக்கு நாள் அதிகமாக அரங்கேறி வரும் சம்பவங்கள் நிரூபிப்பதாக உள்ளது. பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் வாரத்திற்கு ஒன்று நடப்பதால் அந்நாட்டின் மக்களுக்கு வன்முறை என்பது நார்மலைஸ் ஆனதாக மாறி வருகிறது.
அந்த வகையில், நியூயார்க் நகரில் உள்ள மேப்பில்வுட் பூங்காவில் நேற்று மாலை 6.20 மணியளவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பூங்காவில் இருந்தவர்களில் 6 பேர் குண்டடி பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து மர்ம நபர்கள் தப்பியோடிய நிலையில் போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அமெரிக்காவில் ஏறத்தாழ அனைவரும் சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி வைத்துள்ளனர். அதற்கான தோட்டாக்களை அவர்கள் மளிகைக் கடைகளில் உள்ள மெஷினில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பதுபோல் எடுத்துக்கொள்ளும் வசதியும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க அதிபர் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
- அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையை கமலா ஹாரிஸ் தொடங்கினார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.
ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டிரம்ப் உடனான விவாதத்தின் போது பேச தடுமாறியது மற்றும் உடல் நிலை காரணமாக அவர் அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று சொந்த கட்சியினரே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கட்சியின் அதிபர் வேட்பாளரை மாற்றவேண்டும் என ஜனநாயக கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கினர்.
இதையடுத்து அதிபர் தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் தெரிவித்தார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசை முன்மொழிவதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையை கமலா ஹாரிஸ் தொடங்கினார். அவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக பலர் ஆதரிக்கத் தொடங்கியதும், அமெரிக்காவின் தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது.

பிரசாரத்தை தொடங்கிய ஒருவார காலத்தில் கமலா ஹாரிஸ் தேர்தல் நிதியாக 200 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1674 கோடி) தொகையை திரட்டியுள்ளார்.
இந்த நிதியை வழங்கியுள்ளவர்களில் 66 சதவீதம் பேர் முதல் முறையாக நன்கொடை அளிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அதிபர் தேர்தல் குறித்து புதிய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2 சதவீதம் அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கருத்துக் கணிப்பின்படி கமலா ஹாரிஸ் 44 சதவீத ஆதரவும் டிரம்ப் 42 சதவீத ஆதரவும் பெற்றுள்ளனர். நாளுக்கு நாள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்த கருத்துக்கணிப்பு டொனால்ட் டிரம்புக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போட்டி நிறைந்த மாகாணங்களில் மிக சொற்ப அளவிலான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் பரபரப்பாகி உள்ளது.
- கால்பந்து மைதானத் தாக்குதளுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் நேதனயாகு
- இஸ்ரேலுக்குள் நுழைவோம் என்று எச்சரிக்கை விடுத்த துருக்கி அதிபர்
கோலன் சிகரம் [Golan Heights]
லெபனான் மற்றும் ஜோர்டான் நாட்டு எல்லையில் 1200 சதுர கிலோமீட்டர்களுக்குப் பரந்து விரிந்து கிடக்கும் பிரதேசம் கோலன் சிகரம் [Golan Heights] . இதன் பகுதிகளைக் கடந்த 1981 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அங்கு வாழ்ந்து வந்த சிரியன் மற்றும் பாலஸ்தீனிய மக்களை வெளியேற்றிவிட்டு, தங்களது மக்களை இஸ்ரேல் அரசு அங்கு குடியேற்றம் செய்தது. அங்கு வாழும் மக்கள் சிரிய நாட்டில் வசித்தாலும் இஸ்ரேலிய குடியுரிமை கொண்டவர்கள் ஆவர்.
கால்பந்து மைதான தாக்குதல்
லெபனான் இஸ்ரேல் எல்லையில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா தற்போது சிரியாவில் உள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலோன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது வான் வழியாக ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்குதலில் மைதானத்தில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொந்தளிக்கும் இஸ்ரேல்
இந்த தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா பெரிய விலையை கொடுத்தாக வேண்டும் என்று கொந்தளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, தனது அமெரிக்க பயணத்தை அவரச அவசரமாக முடித்துக்கொண்டு இஸ்ரேல் திரும்பியுள்ளார். இதற்கிடையில் இந்த தாக்குதலுக்கு எதிரிவினையாற்றி தக்க பதிலடி கொடுப்பது குறித்து எந்த முடிவையும் எடுக்க பிரதமர் நேதன்யாகுவுக்கு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் முழு அதிகாரத்தை தந்துள்ளது. எந்த நேரத்தில் எந்த வகையில் பதிலடி கொடுக்கலாம் என்று நெதன்யாகுவே முடிவு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மற்றொரு போரை நேதனயாகு தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
பின்வாங்கும் ஹிஸ்புல்லா
இஸ்ரேல் பழிவாங்கும் தாக்குதலுக்கு தயாராகி வரும் நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு லெபனான் எல்லையிலிருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல்- லெபனான் எல்லையின் தெற்குப் பகுதிகள் மற்றும் அமைப்பு வலுவாக இருக்கும் பெக்கா பள்ளத்தாக்கில் இருந்தும் [Bekaa valley] ஹிஸ்புல்லா பின்வாங்கியுள்ளது என்று எல்லைப்புற செய்திகள் தெரிவிக்கின்றன.
இரான் - துருக்கியே அறைகூவல்
லெபனானுக்குள் இஸ்ரேல் நுழைந்தால் ஒரு முழுமையான போரில் இஸ்ரலை இரான் எதிர்த்து நிற்கும் என்று அந்நாட்டு சார்பில் உறுதிபட தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மற்றொருமத்திய கிழக்கு நாடான துருக்கியே நாட்டின் அதிபர் தாயிப் எர்தோகான் நேற்று அந்நாட்டின் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் செய்து வரும் வெறுக்கத்தக்க நடவைக்கைகளை பார்த்து நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம்.
அவசியம் ஏற்பட்டால் இதற்கு முன்னதாக லிபியா மற்றும் அஜர்பைஜானின் நாகோர்னோ- காராபாக் [Nagorno-Karabakh] பகுதிகளில் நுழைந்ததுபோல் துருக்கியே இஸ்ரேலுக்குள்ளும் நுழையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதையும் கவனிக்க வேண்டியுள்ளது.
பாலஸ்தீன இஸ்ரேல் போர்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடிவரும் ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1200 க்கும் அதிகாமானோர் கொல்லப்பட்டனர். பலர் பிணைக் கைதிகளாக பிடித்துச்செல்ப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுப்பதாகக் கூறி பாலஸ்தீனத்தின் காசா, ரஃபா உள்ளிட்ட நகரங்களின் மீது இஸ்ரேல் கடந்த 9 மாதங்களாக நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 39,324 பேர் உயிரிழந்துள்ளனர். 90,830 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
போர் பதற்றம்
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லாவும், ஏமனில் இருந்து ஹவுதிகளும் அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாலஸ்தீனத்துடனான இந்த போர் மொத்த மத்திய கிழக்குக்கு எதிரான போராக மாறும் வாய்ப்புகள் தென்படத் தொடங்கியுள்ளது உலக அரசியலில் நடுக்கத்தை ஏற்படுத்தியள்ளது.
தூங்கும் அமைதிப் பேச்சுவார்த்தை
போரை நிறுத்த ஐநா மற்றும் அமெரிக்க நாடுகளின் முயற்சிகள் எதுவும் தற்போதுவரை பலனளிக்கவில்லை. ஒரு புறம் போரை நிறுத்தவும், மறுபுறம் இஸ்ரேலுக்கு நிதி வழங்கி வருகிறது. தற்போது நடந்துள்ள ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், இஸ்ரலின் பாதுகாப்பை இரும்புக்கரம் கொண்டு உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
- ஆப்கனிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் இந்த போஷேரா கிராமம் அமைந்துள்ளது.
- துப்பாக்கிகள், ராக்கெட் லான்சர்கள் என நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி இரண்டு தரப்பும் சண்டையிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களுக்கிடையே வெடித்த மோதலில் 36 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வாழும் மேல் குர்அம் [Upper Kurram] மாவட்டத்தில் உள்ள போஷேரா [Boshera] கிராமத்தில் கடந்த 5 நாட்களாக மோதல்கள் நடந்துவருகின்றன. ஆப்கனிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப்பகுதியான ஹைபர் பதுன்காவா மாகாணத்தில் இந்த போஷேரா கிராமம் அமைந்துள்ளது.
போஷேரா, மலிகேல் [Malikhel], தண்டர் [Dandar] உள்ளிட்ட கிராமங்களில் வசித்துவரும் இஸ்லாமின் ஷியா பிரிவை பின்பற்றும் பழங்குடியினருக்கும் சன்னி பிரிவைப் பின்பற்றும் பழங்குடியினருக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்துவந்துள்ளன. சமீபத்தில் அரசு நடத்திய பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் திரும்பிய நிலையில் போஷேரா கிராமத்தில் கடந்த 4 நாட்கள் முன் நிலத்தகராறு காரணமாக மீண்டும் இரு குழுக்களிடையிலும் வன்முறை வெடித்துள்ளது.

துப்பாக்கிகள், ராக்கெட் லான்சர்கள் என நவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி இரண்டு தரப்பும் சண்டையிட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு மட்டும் நான்கு பெரிய தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்த தாக்குதல்களில் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 162 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கலவரக்காரர்கள் தங்கியிருந்த பதுங்கு குழிகளை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். இந்த வன்முறையானது மேல் குர்அம் மாவட்டத்தில் மற்ற பகுதிகளுக்கும் பரவி உள்ளதால் நிலைமையை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முடியிலுமாக முடங்கியுள்ள நிலையில் கலவரத்தை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர்.

- வங்காளதேசத்தில் கடந்த 15-ம் தேதி தொடங்கிய போராட்டம் வன்முறையாக வெடித்தது.
- இந்தப் போராட்டத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
டாக்கா:
வங்காளதேசத்தில் கடந்த 15-ம் தேதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கு எதிராக ஆளுங்கட்சியின் மாணவர்கள் அணி பிரிவு போராட்டம் நடத்தியது. எதிர்க்கட்சியான வங்காளதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமியின் வலதுசாரி பிரிவு மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன. இதனால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதன்பின் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறை நாடு முழுவதும் பரவியது.
மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். டி.வி. நிலையங்களுக்கு தீ வைப்பு, வாகனங்களுக்கு தீ வைப்பு என பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினர். இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் மூடப்பட்டன.
வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் குவிக்கப்பட்டது.
இதற்கிடையே, வன்முறைக்கு காரணமாக வேலைவாய்ப்பில் சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதையடுத்து, அங்கு மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்டர்நெட் முடக்கப்பட்டே இருந்தது.
இந்நிலையில், வங்காளதேசத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக முடக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் அளிக்கப்பட்டுள்ளது என தகவல் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- சீனாவில் கிழக்குப்பகுதியில் கேமி புயலால் கனமழை பெய்து வருகிறது.
- அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலியாகினர்.
பீஜிங்:
சீனாவின் கிழக்குப் பகுதி முழுவதிலும் கேமி புயலால் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹெங்யாங் நகரில் ஒரு வீட்டில் ஏற்பட்ட மண் சரிவால் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் மலைப்பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
கேமி புயல் சீனாவை அடைவதற்கு முன்பு பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் 34 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை ஒன்றை கண்டுபிடித்துள்ளது.
- செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறை அங்கு பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததை காட்டுகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது. அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில் அதில் அனுப்பப்பட்ட 'பெர்சிவியரன்ஸ்' (தமிழில் விடாமுயற்சி) என்ற ரோவர் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலையில் அந்த ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை ஒன்றை கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள ஒரு பழங்கால நதி பள்ளத்தாக்கான 'நெரெட்வா வாலிஸ்'-ன் வடக்கு விளிம்பு பகுதியை ஆய்வு செய்யும் போது அம்பு முனை வடிவ பாறையை பெர்சிவியரன்ஸ் கண்டெடுத்ததாக நாசா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
அந்த பாறையை எக்ஸ்-ரே மற்றும் லேசர்களை பயன்படுத்தி ஆய்வு செய்ததில் அந்த பாறையில் வெள்ளை கால்சியம் சல்பேட் நரம்புகள், சிவப்பு நிற நடுத்தர பகுதி மற்றும் சிறிய வெள்ளை பிளவுகள் இருப்பது தெரியவந்ததாக நாசா கூறியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பாறை அங்கு பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததை காட்டுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறினர்.
- இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலோன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
- ஹிஸ்புல்லாவை அழித்தொழிக்க லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கும் என்ற பதற்றம் நிலவி வருகிறது.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். லெபனான் இஸ்ரேல் எல்லையில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா தற்போது சிரியாவில் உள்ள இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியான கோலோன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தின் மீது வான் வழியாக ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் மைதானத்தில் இருந்த குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலில் அமெரிக்க தூதரகம் அருகே நடத்திய தாக்குதலால் கொந்தளித்த பிரதமர் நேதனயாகு ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் இருந்த துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தி, அது எதிரிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் இந்த கால்பந்து மைதான தாக்குதல் குறித்து பேசியுள்ள அவர், ஹிஸ்புல்லா அமைப்பு இதற்கு பெரிய விலையை செலுத்தியாக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஹிஸ்புல்லாவை அழித்தொழிக்க லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுக்கும் என்ற பதற்றம் நிலவி வருகிறது.
லெபனானில் இஸ்ரேல் நுழைந்தால் தாங்களும் தீவிரமான போரில் இறங்குவோம் என்று ஈரான் அரசும் எச்சரித்திருந்தது. இந்த நிலையில் தற்போது நடந்துள்ள தாக்குதல் மேலும் ஒரு போர் உருவாகும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அமெரிகாவில் உள்ள நேதனயாகு உடனடியாக நாடு திரும்ப உள்ளதகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகினர்.
காசா:
இஸ்ரேல் மற்றும் காசா இடையிலான போர் கடந்த 9 மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து நடந்துவருகிறது. இஸ்ரேல் நடத்திய ராணுவ தாக்குதலில் இதுவரை 38 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய காசாவின் டெய்ர் எர்-பலா பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 30 பேர் பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய படைகள் ரஃபா நகரின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறும்போது இந்த தாக்குதல் அரங்கேறியது.
அமெரிக்காவுடன் கத்தார், எகிப்து உள்ளிட்ட நாடுகளின் முன்முயற்சியில் மேற்கொள்ளப்பட்டஇஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்தை தோல்வி முகத்தில் உள்ளன. இஸ்ரேல் பிரதமர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இந்த தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறார்.
- இரண்டே நாளில் இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேருக்கு மேல் ரசித்துள்ளனர்.
'ஐ ஷோ ஸ்பீடு' என்ற பெயரில் பிரபலமான யூ-டியூபர் ஸ்ட்ரீமர் . 19 வயது இளைஞரான இவர் பல்வேறு சாகசங்களை வீடியோவாக பதிவு செய்து யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார். இவரை பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.
இவர் சமீபத்தில் வேகமாக ஓடி வரும் காரை, தாவிக்குதித்து தாண்டியபடி வீடியோ பதிவு செய்தார். இவருக்காக, இவரது தந்தை தங்களுக்கு சொந்தமான சொகுசு காரை வேகமாக ஓட்டி வருகிறார். ஓடி வரும் காருக்கு முன்னே தைரியமாக நிற்கும் ஸ்ட்ரீமர் சரியான நேரத்தில் காரை தாவிக்குதித்து, உயரம் தாண்டும் வீரர் போல அந்தப் பக்கம் சாய்ந்துவிடாமல் கம்பீரமாக நிற்கிறார்.
பின்னர் சாகசத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்கிறார். தந்தையுடன் ஹைபை செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். அந்த வீடியோவை பின்னர் வலைத்தளத்தில் பதிவேற்றினார். "இந்த சாகசத்தை செய்த உலகின் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். லைக் பண்ணுங்க, சேர் பண்ணுங்க" என்று பேசுகிறார். இரண்டே நாளில் இந்த வீடியோவை சுமார் 4 கோடி பேருக்கு மேல் ரசித்துள்ளனர்.






