என் மலர்
உலகம்
- வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க்.
- செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே வெனிசுலா அதிபர் தேர்தல் முடிவை உலக பணக்காரரான எலான் மஸ்க் விமர்சனம் செய்தார். அவர் கூறும்போது, சர்வாதிகாரி மதுரோ மீது அவமானம் என்ன ஒரு கேலிக்கூத்து என்றார்.
இதையடுத்து நிகோலஸ் மதுரோ கூறும்போது, `வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க். நீங்கள் சண்டையிட விரும்புகிறீர்களா? நான் தயார். நான் உன்னை கண்டு பயப்படவில்லை. சண்டைக்கு எந்த இடத்தையும் நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று சவால் விடுத்தார். இதை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, `சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஜெயித்தால் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் ஜெயித்தால் உங்களை செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன்' என்றார்.
- கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர்.
- கருப்பின மக்களுக்காக நான் பல நன்மைகள் செய்துள்ளேன்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் மீது டிரம்ப் இனவெறி கருத்தை தெரிவித்துள்ளார். சிகாகோவில் நடந்த கருப்பின பத்திரிக்கையாளர்கள் தேசிய சங்கத்தின் மாநாட்டில் டிரம்ப் பங்கேற்றார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர். அவர் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கருப்பினத்தவராக மாறும் வரை அவர் கருப்பினத்தவர் என்று எனக்குத் தெரியாது. கமலா ஹாரிஸ் தற்போது கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார். இதனால் அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என்பது எனக்கு தெரியவில்லை. நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் அவர் வெளிப்படையாக இல்லை. ஏனென்றால் அவர் எல்லா வழிகளிலும் இந்தியராக இருந்தார். பின்னர் திடீரென்று கருப்பினத்தவராகி விட்டார்.
இந்த நாட்டின் கருப்பின மக்களை நேசிக்கிறேன். கருப்பின மக்களுக்காக நான் பல நன்மைகள் செய்துள்ளேன். ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு கருப்பின மக்களுக்கான சிறந்த அதிபர் நான்தான் என்றார்.
கமலா ஹாரிஸ் மீதான டிரம்ப்-ன் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறும்போது, ஒருவரை அவர்கள் யார், அவர்கள் எப்படி அடையாளம் காட்டுகிறார்கள் என்பதைச் சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. டிரம்ப் கருத்து வெறுக்கத்தக்கது மற்றும் அவமதிப்பு ஆகும் என்றார்.
கமலா ஹாரிசின் தாய் இந்தியாவை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய-அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர்.
உலகளவில் பிரபல பிராண்டுகளின் ஆணுறை மற்றும் லூப்ரிகண்ட்களில் புற்றுநோய் ஏற்படுத்தும் நச்சுத் தன்மை கொண்ட இரசாயணங்களை பயன்படுத்தி வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சில ட்ரோஜன் ஆணுறை மற்றும் கே-ஒய் ஜெல்லி லூப் ஆகியவற்றில் உள்ள அதிகளவு நுண்ணுயிரி பொருட்கள் சருமம் வழியே உடலுக்குள் சென்று பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது.
மனிதர்களின் பிறப்புறுப்புகள் மிக மெல்லிய சருமம் மற்றும் ஏராளமான இரத்த நாளங்கள் உள்ளதால் இவை நச்சு தன்மை கொண்ட இரசாயணங்களை எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தையின்மை, விந்தணு பாதிப்பு மற்றும் கர்ப்பகால குறைபாடுகள் உள்ளிட்டவைகளை ஏற்படுத்தும் இரசாயணங்கள் இரத்த நாளங்கள் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் சென்று பாதிப்பை அதிகப்படுத்தும்.
மமாவேஷன் எனும் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இதுபோன்ற பொருட்களில் ஃபுளோரைன் இடம்பெற்று இருக்கிறதா என சோதனை செய்தனர்.
இதில் குறிப்பிட்ட ரக ஆணுறைகளில் கிட்டத்தட்ட இருமடங்கு அதிகமான ஃபுளோரைன் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 29 பொருட்களில் கிட்டத்தட்ட 6 பொருட்களில் (20 சதவீதம்) பாதுகாப்பற்ற அளவில் ஃபுளோரைன் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.
- கடந்த 2023-ம் ஆண்டின் இறுதியில் இந்த ரோவரை நிலவில் தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது.
- நாசா கோரிய நிதியை விட 8.5 சதவீதம் குறைவான நிதியே அமெரிக்க அரசால் வழங்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தின் மேற்கு முனையில் 'நோபில் கிரேட்டர்' என்ற பகுதியில் நீர் மற்றும் பனிக்கட்டிகள் இருக்கிறதா? நிலவில் பனி அடுக்குகள் எங்கு இருக்கின்றன? அதில் என்ன மூலக்கூறுகள் இருக்கின்றன? எவ்வளவு அடி ஆழத்தில் பனிக்கட்டிகள் இருக்கின்றன? என்பதை அறிந்து கொள்ள அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.
இதற்காக, 433.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3,625.18 கோடி) ஒதுக்கீடு செய்யப்பட்டு 'வைபர் ரோவர்' என்ற திட்டத்தின் மூலம் ரோவர் ஒன்று நிலவுக்கு அனுப்பப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு நாசா முறைப்படி அறிவித்தது.
நிலவில் நீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அது நிலவு குறித்த அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
கடந்த 2023-ம் ஆண்டின் இறுதியில் இந்த ரோவரை நிலவில் தரையிறக்க நாசா திட்டமிட்டிருந்தது. ஆனால், ரோவர் மற்றும் லேண்டரை (நிலவில் ரோவர் தரையிறங்க உதவும் கருவி) உருவாக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இந்தத் திட்டம் 2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் முழுமையடையும் என்றும், கூடுதலாக 176 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ 1,473.52 கோடி) தேவைப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் காலதாமதம் மற்றும் அதிக பட்ஜெட் ஆகியவற்றை காரணம் காட்டி இத்திட்டத்தைக் கைவிடுவதாக நாசாவின் அறிவியல் திட்ட இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா பாக்ஸ் கூறி உள்ளார்.
இதுகுறித்து இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் த.வி.வெங்கடேஸ்வரன் கூறும்போது, 'நாசா, தன் வரலாற்றில் இதுவரை சந்திக்காத அளவுக்கு ஒரு பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. நாசா கோரிய நிதியை விட 8.5 சதவீதம் குறைவான நிதியே அமெரிக்க அரசால் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அமெரிக்க அரசால் இந்த ஆண்டு நாசாவிற்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் 24.875 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சம் கோடி). ஆனால் இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை விட 2 சதவீதம் குறைவு. இதனால் பல்வேறு முன்னோக்கு திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆய்வுக்கான வேகமும் குறையும் என்பது கவலை அளிக்கும் செயலாகும்' என்றார்.
- இந்த தாக்குதலில் குழுந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
- ஹிஜ்புல்லா அமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். அந்த நாளில் இருந்து இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பு போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேல் கட்டுப்பாட்டுக்குள் உள்ள கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் சில தினங்களுக்கு முன் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் குழுந்தைகள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
ஹிஜ்புல்லா அமைப்பு நடத்திய இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் கடுமையாக தாக்கியது. ஹிஜ்புல்லா அமைப்பை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஹிஜ்புல்லா ராணுவ தளபதி பௌத் சகர் (Fuad Shukr) உயிரிழந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. முன்னதாக கால்பந்து மைதானத்தின் மீது ஹிஜ்புல்லா நடத்திய தாக்குதலுக்கு பௌத் சகர் தலைமை வகித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது.
இருதரப்பும் மோதிக் கொள்வதால் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இது தொடர்பான தகவல் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பதிவில் இடம்பெற்றுள்ளது.
அதில், "பதற்ற சூழல் நிலவி வருவதை அடுத்து லெபனானுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. லெபனானில் உள்ள இந்தியர்கள் ஜாக்கிரதைாகவும், தேவையின்றி பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறும், பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்," என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- ஸ்ரீ லங்கா விடுதலை கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
- ராஜபக்சே கட்சியை சேர்ந்த 90 எம்.பி.க்கள் ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இலங்கையில் செப்டம்பர் மாதம் 21-ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இன்னும் சிலர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே கட்சிக்கு முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் ஸ்ரீ லங்கா மக்கள் முன்னணி (SLLP) கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் கோஷ்டி மோதல் நிறைந்த ஸ்ரீ லங்கா விடுதலை கட்சியும் (SLFP) ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இன்று மாலை அதிபர் விக்ரமசிங்கேவை எஸ்.எல்.எஃப்.பி. மத்தியக்குழு உறுப்பினர்கள் சந்தித்து பேசினார். அப்போது தங்களுடைய அசைக்க முடியாத ஆதரவை தெரிவித்தனர். இந்த தகவலை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ராஜபக்சே குடும்பம் எஸ்.எல்.எல்.பி. கட்சியை நடத்தி வரும் நிலையில் சுமார் 90 எம்.பி.க்கள் ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்க ஆதரவு கொடுக்க முடிவு செய்தனர். அதேவேளையில் கட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு இல்லை எனவும், கட்சி சார்பில் சொந்த வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனவும் நேற்று எஸ்.எல்.எல்.பி. முடிவு செய்திருந்தது.
எஸ்.எல்.எஃப்.பி கட்சி இலங்கையின் மிகப்பெரிய 2-வது கட்சியாக திகழ்ந்தது. யார் கட்டுப்பாட்டில் கட்சி என்ற கோஷ்டி மோதல் காரணமாக சட்டப்போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.
ரணில் விக்ரமசிங்கே மந்தரி சபையில் எஸ்எல்பிபி கட்சி உள்ளது. எஸ்.எல்.எஃப்.பி கட்சியின் இரண்டு பேர் மந்திரிகளாக உள்ளனர். 2015-ல் இருந்து மைதிரிபாலா ஸ்ரீசுனா இந்த கட்சியின் தலைவராக இருந்தார். ஏப்ரல் மாதம் நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது. விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி நிமமல் ஸ்ரீபாலா டி சில்வா தற்போது கட்சியின் தலைவராக உள்ளார்.
ரணில் விக்ரமசிங்கே தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால் மற்ற கட்சிகளின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறார்.
- கைது செய்யப்பட்ட நபர் தனது நண்பர் கதிர் மார்கஸை மது அருந்த அழைத்துள்ளார்.
- 'கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா' என்று மார்கஸிடம் அவர் நண்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தோனேசியா நாட்டில் 'கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா' என்று புதிரின் விவாதத்தில் நண்பரை கத்தியால் குதி கொன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜூலை 24 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தன்று, கைது செய்யப்பட்ட நபர் தனது நண்பர் கதிர் மார்கஸை மது அருந்த அழைத்துள்ளார். இருவரும் மது அருந்திய பொழுது, 'கோழி முதலில் வந்ததா இல்லை முட்டை முதலில் வந்ததா' என்று மார்கஸிடம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவாதம் வாக்குவாதமாக மாறிய பிறகு, கதிர் மார்கஸ் விவாதம் செய்ய விரும்பாமல் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதனால் கோபமடைந்த அவரது நண்பர் ஆத்திரத்தில் மார்க்ஸை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
மார்கஸ் ஜூலை 26 அன்று அடக்கம் செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்தோனேசியா நாட்டில் வாட்சப் குழுவிலிருந்து நீக்கியதற்காக நண்பரை ஒருவர் கத்தியால் குத்திகொன்ற சம்பவம் கடந்தாண்டு நடந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி அற்ப காரணங்களுக்காக கொலை செய்வது இந்தேனோசியா நாட்டில் அதிகரித்துள்ளது.
- ஈரான் அதிபர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்.
- ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற தலைவரை சந்தித்த பின், வீட்டிற்கு சென்ற நிலையில் படுகொலை.
ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பாதுகாவலர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
நேற்று ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அத்துடன் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியையும் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில்தான் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்கு காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் நம்புகிறது.
இந்த நிலையில் ஈரானுக்கு எதிராக பழிக்குப்பழி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அயதுல்லா அலி கமேனி கூறுகையில் "ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வான்வழி தாக்குதல் மூலம் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப்பின், இஸ்ரேல் தனக்குத்தானே கடுமையான தண்டனைக்கு தயார்படுத்தியுள்ளது.
எங்களுடைய பணியான பழிக்குப்பழி குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம் என காமெனி தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹனியே எங்களுடைய நாட்டின் மதிப்பிற்குரிய விருந்தாளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காசா மீதான தாக்குதலுக்குப்பின் ஒருமுறை ஈரான் பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக லெபனான் மற்றும் ஈரானில் இருந்து ஈரான் கடுமையான வான்தாக்குதலை நடத்தியது. அப்போது அமெரிக்கா உதவியுடன் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் ஈரான் தாக்குதலை முறியடித்தது.
தற்போது இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி போர் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது.
- போரில் இந்திய இளைஞர்கள் 4 பேர் பலியானார்கள்.
- இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. இதற்கிடையே ரஷியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி இந்திய இளைஞர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்கு ரஷிய ராணுவத்தில் உதவியாளராக கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது தெரிய வந்தது.
ரஷிய ராணுவம் சார்பில் ராணுவ உதவியாளர்கள் என பணியமர்த்தப்பட்ட இந்தியர்கள் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.
இப்போரில் இந்திய இளைஞர்கள் 4 பேர் பலியானார்கள். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது.
இந்த நிலையில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய மேலும் ஒரு இந்திய வாலிபர் உயிரிழந்துள்ளார். அரியானாவை சேர்ந்த ரவிமவுன் (வயது 22) என்பவர் ரஷிய ராணுவத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். அவர் உக்ரைன் போரில் பலியாகி உள்ளதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மரணத்தை வெளியுறவு அமைச்சகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் ரவிமவுன் மரணம் குறித்து அவரது சகோதரர் அஜய் மவுனுக்கு இந்திய தூதரகம் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அதில் ரவிமவுன் மரணத்தை ரஷிய ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உடலை அடையாளம் காண, நெருங்கிய உறவினர்களிடமிருந்து டி.என்.ஏ. சோதனை தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி சமீபத்தில் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, ரஷிய ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதினிடம் வலியுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்ட ரஷியா, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள தனது வீட்டில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார்
- இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் சார்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வந்தார்.
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிப்போம் என்று இஸ்ரேல் சூளுரைத்தது. ஆனால் இப்போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவரான இஸ்மாயில் ஹனியே இன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்டு உள்ளார். ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள தனது வீட்டில் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார் என்றும் அவருடன் பாதுகாவலர் ஒருவரும் கொல்லப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது படுகொலையை ஈரான் மற்றும் ஹமாஸ் இயக்கம் உறுதிப்படுத்தியது. இதுதொடர்பாக ஹமாஸ் கூறும்போது, இஸ்மாயில் ஹனியே தெக்ரானில் உள்ள அவரது இல்லத்தில் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று தெரிவித்தது.
மேலும் ஈரானின் புரட்சிகர காவலர் படை வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் வீடு தெக்ரானில் தாக்கப்பட்டது. இதில் அவரும் அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரும் வீர மரணம் அடைந்தனர் என்று தெரிவித்தது.
இந்த கொலை சம்பவம் எவ்வாறு நடந்தது, இஸ்மாயிலை கொலை செய்தது யார்? என்பது குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.
ஹமாசின் அரசியல் பிரிவுக்கு தலைமை தாங்கிய இஸ்மாயில் ஹனியே நேற்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியையும் அவர் சந்தித்து பேசினார். அதன்பின் அவர் தனது வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில்தான் அவர் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
62 வயதான இஸ்மாயில் ஹனியே ஹமாஸ் சார்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்று வந்தார். அவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே இஸ்மாயில் ஹனியேயை இஸ்ரேல் படுகொலை செய்ததாக ஹமாஸ் கூறியுள்ள நிலையில், வெளிநாட்டு ஊடகங்களில் வரும் செய்திகளுக்கு தாங்கள் பதிலளிக்க முடியாது என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தையாக தான் உள்ளதாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
- அந்த காரணம் தான் தொடர்ந்து விந்தணு தானம் செய்யத் என்னக்கு தூண்டுதலாக இருந்தது' என்று பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.
பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவெல் துரோவ் Pavel Durov] அதன் தலைமை அதிகாரியாகவும் [சிஇஓ] உள்ளார். ரஷிய நாட்டைச் சேர்ந்த 39 வயதாகும் பாவெல் துரோவ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் 12 வெவ்வேறு நாடுகளில் உள்ள 100க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரியல் தந்தையாக தான் உள்ளதாக தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

15 வருடங்கள் முன்பு தனது நண்பர் ஒருவர் குழந்தையின்மையால் வருத்தத்தில் இருந்த நிலையில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்க தனது விந்தணுவை முதல் முறையாக தானம் செய்த பாவெல் துரோவ் அன்றுதொட்டு தொடர்ந்து தனது விந்தணுக்களை தானம் செய்யத் தொடங்கியுள்ளார்.
'முதல்முறையாக விந்தணுக்களை தயக்கத்துடனேயே தானம் செய்தேன். ஆனால் அப்போது மருத்துவர்கள் என்னிடம் தரம் வாய்ந்த விந்தணுக்களுக்கு தட்டுப்பாடு இருப்பதால், குழந்தையின்றி வாடும் தம்பதிகளுக்கு உதவும் வகையில் விந்தணு தானம் செய்வது சமூக கடமையாகும் என்று தெரிவித்தனர். அந்த காரணம் தான் தொடர்ந்து விந்தணு தானம் செய்யத் எனக்கு தூண்டுதலாக இருந்தது' என்று பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார்.

'இதுவரை 12 நாடுகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தம்பதிகள் குழந்தை பெற எனது விந்தணுக்களை தானம் செய்து உதவியுள்ளேன். இன்னும் வருங்காலங்களில் IVF கிளினிக்கில் உறையவைக்கபட்டு பாதுகாப்பட்டுள்ள எனது விந்தணுக்கள் இன்னும் பல குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக அமையும்' என்றும் பாவெல் பெருமையுடன் கூறுகிறார். மேலும் இதுபோன்று பலரும் தங்களது விந்தணுக்களை தானம் செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
- இந்த விழாவில் இந்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்
- ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
ஈரான் அதிபராக இருந்த இப்ராஹிம் ரசி கடந்த மே 17 ஆம் தேதி அஜர்பைஜான் எல்லையில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். எனவே அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஈரானில் கடந்த ஜூன் 28 நடந்தது.
இதில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜூலை 5 ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் சீர்திருத்தக் கட்சி வேட்பாளர் மசூத் பெசஸ்கியான் 54 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் ஈரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் பதவியேற்றுள்ளார்.

பாலஸ்தீன போர், ஹெஸ்புல்லா -இஸ்ரேல் போர் பதற்றம் ஆகிய பிரச்சனைகளுக்கு மத்தியில் மசூத் பெசஸ்கியானின் இந்த பதவியேற்பு விழா முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த விழாவில் இந்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, துருக்கி, சவுதி அரேபியா, எகிப்து, ஈராக் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த பதவியேற்பு விழாவில் காசாவில் இஸ்ரேலின் போர்க் குற்றங்கள் குறித்து பாராளுமன்ற சபாநாயகர் பேசுகையில், அவையில் இருந்த 'பலர், இஸ்ரேல் அழியட்டும், அமெரிக்கா அழியட்டும்' [Death to Israel, Death to America] என்று முழக்கம் எழுப்பினர். இந்த முழக்கங்களுக்கு மத்தியில் மசூத், அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
பதவியேற்பின்போது 'புனித குரான் மற்றும் ஈரான் பிரஜைகளின் முன்னிலையில், இஸ்லாமிய குடியரசுக்கும், நாட்டின் அரசியலமைப்புக்கும் பதுகள்வளனாக இருப்பேன் என்று கடவுள் மீது ஆணையாக உறுதியேற்கிறேன்' என்று மசூத் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஹிஸ்புல்லாவின் சமீபத்திய தாக்குதலுக்கு பழிவாங்கும் விவாதமாக லெபனான் தலைநகர் பெய்ருட் மீது இஸ்ரேல் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அறிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு முன்பிருந்தே, லெபனானை இஸ்ரேல் தகுமானால் தீவிரமான போரில் ஈரான் இறங்கும் என்று மசூத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






