என் மலர்
உலகம்
- 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.
- எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
கம்பாலா:
ஆப்பிரிக்க நாட்டின் எபோலா ஆற்றங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 1976-ம் ஆண்டு எபோலா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. 2014 முதல் 2016-ம் ஆண்டில் எபோலா தொற்றால் சுமார் 11 ஆயிரம் பேர் இறந்தனர். பின்னர் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தற்போது கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோருக்கு எபோலா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. எனவே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே தலைநகர் கம்பாலாவில் ஒரு நர்சு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதன்மூலம் இந்த ஆண்டு எபோலா தொற்றுக்கு பலியான முதல் நபர் இவர் ஆவார். இதனையடுத்து அங்கு சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
- ரஷியாவின் இந்த செயலுக்கு ஜப்பான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
- இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
டோக்கியோ:
ஜப்பானின் ஓகோட்ஸ்க் கடற்பகுதியில் டுபோலேவ்-95 என்ற ரஷிய போர் விமானங்கள் பறந்து சென்றது கண்டறியப்பட்டது. 8 மணி நேரத்துக்கும் மேலாக அந்த குண்டுவீச்சு விமானங்கள் வானில் வட்டமிட்டன.
ரஷியாவின் இந்த செயலுக்கு ஜப்பான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதமும் ரஷிய விமானங்கள் இதேபோல் ஜப்பான் எல்லைக்குள் ஊடுருவி அச்சுறுத்தலை ஏற்படுத்தின. இதனால் இரு நாடுகளின் உறவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- சதாரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது ரெயில் திடீரென தடம் புரண்டது.
- வழித்தடத்தில் பல மணி நேரம் ரெயில் சேவைகள் துண்டிக்கப்பட்டன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் லாகூரில் இருந்து சிந்து மாகாணம் கராச்சி நோக்கி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள சதாரா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது அந்த ரெயில் திடீரென தடம் புரண்டது.
இதில் ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகின. தகவலின்பேரில் அங்கு விரைந்த மீட்பு படையினர் ரெயில் பெட்டிகளை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக அந்த வழித்தடத்தில் பல மணி நேரம் ரெயில் சேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் பயணிகள் குறித்த நேரத்துக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
- சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- உளவு பார்த்ததாக கூறி 5 சீனர்களை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மணிலா:
தென்சீனக்கடல் விவகாரத்தில் பிலிப்பைன்ஸ்-சீனா இடையே சமீப காலமாக பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே சீனாவைச் சேர்ந்த சிலர் தங்களை தைவான் நாட்டவர்களாக கூறிக்கொண்டு பிலிப்பைன்சுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். ஆனால் அங்குள்ள ஸ்ப்ட்ராட்லி தீவு அருகே சூரிய சக்தியில் இயங்கும் கேமராக்களை நிறுவி அவர்கள் கண்காணித்தனர்.
பின்னர் சந்தேகத்தின்பேரில் போலீசார் அவர்களது ஆவணங்களை சோதனை செய்தபோது அவர்கள் அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து உளவு பார்த்ததாக கூறி 5 சீனர்களை பிலிப்பைன்ஸ் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- கடந்த செப்டம்பர் மாதம் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு சீரமைப்பு பணி அக்டோபர் மாதம் தொடங்கியது.
- கராச்சி ஸ்டேடியம் பிப்ரவரி 11-ந்தேதி அதிபர் ஆசிப் அலி சர்தாரியால் திறந்து வைக்கப்படும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மொஹ்சின் நக்வி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறும் ஸ்டேடியத்தில் ஒன்றான கடாஃபி ஸ்டேடியம் பிப்ரவரி 7-ந்தேதி திறக்கப்படும். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவில் கலந்து கொள்ள அனைத்து கிரிக்கெட் போர்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஐசிசி அதிகாரிகள், சேர்மன் ஜெய் ஷா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
7-ந்தேதி பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கடாஃபி மைதானத்தை திறந்து வைக்கிறார். தற்போது இறுதி கட்ட வேலைப்பாடு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 7-ந்தேதிக்குள் முடிவடையும்.
கடந்த செப்டம்பர் மாதம் ஸ்டேடியத்தை இடித்துவிட்டு சீரமைப்பு பணி அக்டோபர் மாதம் தொடங்கியது. ஜனவரி மாதத்திற்குள் தயாராகிவிடும் என உறுதி அளித்தோம். வேலைகள் அனைத்தும் எப்படி முடிந்துள்ளது என்பதை உங்களால் பார்க்கமுடியும்.
கராச்சி ஸ்டேடியம் பிப்ரவரி 11-ந்தேதி அதிபர் ஆசிப் அலி சர்தாரியால் திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு நக்வி தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க சில தினங்களுக்கு முன் டீப்சீக் ஏ.ஐ. மாடலை வெளியிட்டது.
- அமெரிக்காவுக்கு டீப்சீக் கடும் சவாலாக இருக்கும் என கணிப்பு.
அமெரிக்காவின் சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா ஏ.ஐ.-க்கு சவால் விடும் வகையில் சீனா கடந்த சில தினங்களுக்கு முன் டீப்சீக் ஏ.ஐ. மாடலை வெளியிட்டது. டீப்சீக் மாடல் இலவசமாக கிடைக்கும் என்பதால் பெரும்பாலானோர் தங்களது செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் பதிவிறக்கும் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என தலைமை நிர்வாக அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
டீப்சீக் தற்போது மதிப்பாய்வின் கீழ் உள்ளது. அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கவில்லை. சாட்பாட்டை பயன்படுத்தி தீங்கு விளைவிக்கும் மென்பொருளை வழங்கவும், சாதனங்களை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அச்சுறுத்தும் நபர்களை மேற்கோள் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இத்தாலி நாடு முழுவதும் டீப்சிக் ஏ.ஐ. மாடலுக்கு தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- டாலரின் வல்லாதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என ரஷியா வலியறுத்தி வருகிறது.
- அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பும் பறிபோகும்
அமெரிக்க அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப், அமெரிக்க டாலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளை மீண்டும் எச்சரித்துள்ளார். இதற்கு மாறாக செயல்படும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. மேலும், ஏற்கனவே இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது. சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை மாற்ற நினைக்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.
அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டாலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் என்று டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை அடங்கும். இந்நாடுகளுக்கு பொதுவான நாணயம் இல்லை.
இதற்கிடையே உக்ரைனில் நடந்துவரும் போரின் காரணமாக ரஷியா பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டது. இதனைத்தொடர்ந்து டாலரின் வல்லாதிக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என ரஷியா வலியறுத்தி வருகிறது.
பிரிக்ஸ் கூட்டமைப்பு தொடங்கப்பட்டபோது, இந்த நாடுகளுக்கென பிரத்தியேக நாணயம் உருவாக்கப்படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதை சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதுதொடர்பாக தனக்கு சொந்தமான ட்ரூத் சமூக வலைதளத்தில் நேற்று பதிவிட்டுள்ள டிரம்ப்,
பிரிக்ஸ் நாடுகள் டாலரிலிருந்து விலகிச் செல்ல முயல்கின்றன. இதை நாம் ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்த காலம் முடிந்துவிட்டது.
இந்த விரோத நாடுகளிடமிருந்து ஒரு புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ, வலிமைமிக்க அமெரிக்க டாலரை மாற்ற வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கவோ மாட்டோம் என உத்தரவாதம் வந்தாக வேண்டும். இல்லையெனில் அவர்கள் 100% வரிகளை எதிர்கொள்ள நேரிடும்.

மேலும் அற்புதமான அமெரிக்க பொருளாதாரத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பும் பறிபோகும். அவர்களின் உத்தரவாதத்தை நாங்கள் கோரப் போகிறோம்.
அவர்கள் மற்றொரு முட்டாள் நாட்டைக் கண்டுபிடிக்கலாம். ஆனால் சர்வதேச வர்த்தகத்திலோ அல்லது வேறு எங்கும் பிரிக்ஸ் அமெரிக்க டாலரை மாற்றும் வாய்ப்பு இல்லை. அவ்வாறு முயற்சிக்கும் எந்த நாடும் வரிகளை எதிர்நோக்க சொல்ல வேண்டும். அமெரிக்காவின் நட்பை இழக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
- மியான்மர் நாட்டில் மேலும் 6 மாத காலத்துக்கு அவசர நிலை நீட்டிக்கப்பட்டது.
- தொடர்ந்து 5 ஆண்டாக அவசர நிலை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
பாங்காக்:
மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது 2023, ஆகஸ்டு மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ராணுவம் உறுதியளித்தது. தொடர்ந்து அவசர நிலையை நீட்டித்து வருவதால் பொதுத்தேர்தலையும் ஒத்தி வைத்தது.
இந்நிலையில், மியான்மர் நாட்டில் மேலும் 6 மாத காலத்துக்கு அவசர நிலை நீட்டிக்கப்படுகிறது என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து 5 ஆண்டாக அவசர நிலை நீட்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என நாசா தெரிவித்துள்ளது.
- விண்வெளி வீரர்களை அழைத்துவர ஸ்பேஸ் எக்ஸிடம் அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார்.
வாஷிங்டன்:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் ஆய்வுக்காக விண்வெளி ஆய்வுமையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 10 நாளில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. தொழில்நுட்ப கோளாறால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த 6 மாதத்துக்கும் மேலாக விண்வெளி ஆய்வு மையத்தில் வீரர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்கள் அங்கு நலமுடன் இருக்கிறார்கள் என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. அவர்கள் விரைவில் பூமி திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரை அழைத்துவர அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்பேஸ் எக்ஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் ஸ்பேஸ் வாக் செய்த பெண் என்ற சாதனைக்கு சுனிதா வில்லியம்ஸ் சொந்தக்காரர் ஆகியுள்ளார். மிகுந்த பாதுகாப்புடன் 9வது முறையாக நடந்த ஸ்பேஸ்வாக் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தன.
ஸ்பேஸ் வாக்கில் சுனிதா வில்லியம்ஸ் இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்களைக் கழித்துள்ளார். சாதனை படைத்த சுனிதாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- கண்ணாடிக்கு வெளியே இருந்து பார்க்கும் பார்வையாளர்கள் கடற்கன்னியை பார்த்து கையசைத்தனர்.
- கடற்கன்னியை மீன் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள ஒரு வன பூங்காவில் பொது மக்களை மகிழ்விப்பதற்காக கடற்கன்னி பொருட்காட்சியும் இடம்பெற்றிருந்தது. பூங்காவுக்கு திரண்டு வரும் பொது மக்கள் கடற்கன்னியை பார்த்து மகிழ்ந்து சென்றனர். இதற்காக பூங்காவில் ரஷிய கலைஞரான மாஷா என்ற 22 வயது இளம்பெண் பிகினி டாப் மற்றும் தேவதை போல வால் அணிந்து மீன் தொட்டிக்குள் அழகாக சறுக்கி கொண்டிருந்தார்.
கண்ணாடிக்கு வெளியே இருந்து பார்க்கும் பார்வையாளர்கள் கடற்கன்னியை பார்த்து கையசைத்தனர். மேலும் தொட்டிக்குள் இருந்த ராட்சத மீன்கள் கடற்கன்னியை சுற்றியே நீந்தி சென்றன. இந்நிலையில் மீன் தொட்டிக்குள் சுற்றிய ராட்சத மீன் ஒன்று கடற்கன்னியின் அருகே வந்த போது அவரை திடீரென்று தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாஷா மீன் தொட்டிக்குள் இருந்து மேலே ஏறினார்.
ராட்சத மீன் கடித்ததில் அவருக்கு தலை, கழுத்து மற்றும் கண் ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டன. இந்நிலையில் பூங்காவில் கடற்கன்னியை ரசித்து கொண்டிருந்த பொது மக்கள் அவரை ராட்சத மீன் தாக்கியதால் அதிர்ச்சி அடைந்தனர். பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து மாஷாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடற்கன்னியை மீன் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஜாக்குலின் மங்கஸ் என்ற பெண் அவ்வப்போது லாட்டரி டிக்கெட் வாங்கி வந்தார்.
- பயனர்கள் பலரும் அதிர்ஷ்டம் குறித்த தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி கிடைக்கும் என்பது தெரியாது. ஆனால் திடீரென கிடைக்கும் அதிர்ஷ்டம் அவர்களின் வாழ்க்கையை மாற்றிவிடும். அதுபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
அங்குள்ள விர்ஜினீயா பகுதியை சேர்ந்த ஜாக்குலின் மங்கஸ் என்ற பெண் அவ்வப்போது லாட்டரி டிக்கெட் வாங்கி வந்தார். அவ்வாறு அவர் புத்தாண்டையொட்டி வாங்கிய டிக்கெட் ஒன்றை வீட்டில் உள்ள தனது பைபிளில் மறைத்து வைத்திருந்தார். அதன்பிறகு வழக்கம் போல் வேலைகளுக்கு சென்று வந்த நிலையில், சமீபத்தில் லாட்டரி பரிசுகள் அறிவிக்கப்பட்டது.
அப்போது தான் அவருக்கு தான் வாங்கிய லாட்டரி டிக்கெட் பற்றி ஞாபகம் வந்துள்ளது. உடனடியாக அவர் பைபிளில் மறைத்து வைத்திருந்த லாட்டரியை எடுத்து பார்த்த போது, அவர் வாங்கியிருந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 1 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) ஜாக்பாட் பரிசு பெற்றிருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த தகவல்கள் இணையத்தில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் அதிர்ஷ்டம் குறித்த தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
- சொந்தமாக வீடு, தனி விமானம் என அனைத்தும் இருந்ததாக கூறியுள்ளார்.
- வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இவர் அவ்வப்போது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ பகிர்ந்து வருகிறார்.
கடந்த 2023-ம் ஆண்டு எக்ஸ் தளத்தில் ஒரு பயனரின் கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்தார். அப்போது, "என் குடும்பம் நடுத்தர வருமானம் கொண்டது. எனது குழந்தை பருவம் மகிழ்ச்சியானதாக இல்லை. ஏழ்மை நிலையில் வளர்ந்தேன்."
"எனது தந்தை சிறிய எலெக்ட்ரிக்கல், மெக்கானிக் பொறியியல் நிறுவனத்தை 20 முதல் 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வந்தார். அதன்பின் வருமானம் குறைந்து 25 ஆண்டுகளாக திவாலான நிலையில் இருந்தது. இதனால் நிதி தேவைக்காக எனது அண்ணன் மற்றும்எதன்னை நம்பி தான் தந்தை இருந்தார்" என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தனியார் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்கின் தந்தை எரால் மஸ்க், தனது மகன் எலான் மஸ்க் ரோல்ஸ் ராய்ஸ் காரில்தான் பள்ளிக்கு சென்று வந்ததாகவும், தனது 26 வயதில், 48 வயதுடையவரிடம் என்ன இருக்குமோ அனைத்து வசதிகளும் தன்னிடம் இருந்ததகாவும், சொந்தமாக வீடு, தனி விமானம் என அனைத்தும் இருந்ததாக கூறியுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு எரால் மஸ்கின் வீடியோவை கேட்டு யார் சொல்வது உண்மை என்று புரியாமல் பயனர்கள் குழப்பத்தில் உள்ளனர்.






