என் மலர்tooltip icon

    உலகம்

    • அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.
    • அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்.

    அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக அறிவித்துள்ளார். முனனதாக கனடா, சீனா பொருட்களுக்கு வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார்.

    இவரது அறிவிப்பை தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ 155 பில்லியன் கனேடிய டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    30 பில்லியன் கனேடிய டாலர்களில் உள்ளவை வருகிற செவ்வாய் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதே தினத்தன்று, டிரம்பின் வரிகள் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. மீதமுள்ள 125 பில்லியன் கனேடிய டாலர்கள் மீதான வரிகள் 21 நாட்களில் அமலுக்கு வரும் என்று ட்ரூடோ கூறினார்.

    ட்ரூடோவின் அறிவிப்பு, கனடா மற்றும் மெக்சிகன் இறக்குமதிகளுக்கு 25% வரிகளும், சீனாவிலிருந்து வரும் பொருட்களுக்கு 10% வரிகளும் விதிக்க டிரம்ப் உத்தரவிட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வந்துள்ளது. இது உலகளாவிய வளர்ச்சியின் வேகத்தை குறைக்கும். மேலும் பணவீக்கத்தை மீண்டும் தூண்டக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    வரவிருக்கும் வாரங்கள் கனேடிய மக்களுக்கு கடினமாக இருக்கும் என்றும், ட்ரூடோவின் வரிகள் அமெரிக்கர்களையும் பாதிக்கும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்தார்.

    அமெரிக்க பீர், ஒயின் மற்றும் போர்பன், அத்துடன் டிரம்பின் சொந்த மாநிலமான புளோரிடாவில் இருந்து வரும் ஆரஞ்சு சாறு உள்ளிட்ட பழங்கள் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்று வரி விதிக்கப்படும் என்று ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். ஆடை, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதும் கனடா வரி விதிக்கும் என்று தெரிகிறது.

    கனடாவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் இருப்பதை விட கனேடிய பொருட்களை வாங்கி வீட்டிலேயே ஓய்வெடுக்க ட்ரூடோ அறிவுறுத்தியுள்ளார்.

    • அமெரிக்க மக்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்வது என் கடமை.

    கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க குடிமக்களை பாதுகாக்கவும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் இறக்குமதி வரியை அதிகரிக்கும் நடவடிக்கையை அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ளார்.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார்.

    "இன்று, நான் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியையும் (கனேடிய எரிசக்திக்கு 10%), சீனாவுக்கு 10% கூடுதல் வரியையும் அமல்படுத்தியுள்ளேன். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் நமது மக்களைக் கொல்லும் கொடிய போதை பொருட்களின் முக்கிய அச்சுறுத்தல் காரணமாக இது சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) மூலம் செய்யப்பட்டது."

    "நாம் அமெரிக்கர்களைப் பாதுகாக்க வேண்டும், மேலும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அதிபராக எனது கடமையாகும். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் போதைப்பொருட்கள் நமது எல்லைகளில் கொட்டுவதைத் தடுப்பதாக எனது தேர்தல் பிரச்சாரத்தில் நான் உறுதியளித்து இருந்தேன். மேலும் அமெரிக்கர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்," என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    • வடகொரியா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பியது.
    • குர்ஸ்க் எல்லையில் இருந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    மாஸ்கோ:

    உக்ரைன் மீதான ரஷியா போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அந்த நாடுகள் ஆயுதம் சப்ளை மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன.

    அதேபோல் நட்பு நாடான வடகொரியா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பியது. ரஷியா அந்த வீரர்களை உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள குர்ஸ்க் பிராந்திய எல்லை அருகே நிறுத்தியது.

    ஆனால் உக்ரைனின் தாக்குதல் மற்றும் மோசமான வானிலையை அவர்களால் தாக்குப்பிடித்து நிற்க முடியவில்லை. இதனால் சுமார் 4 ஆயிரம் வடகொரிய வீரர்கள் காயம் அடைந்தனர். எனவே குர்ஸ்க் எல்லையில் இருந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    உக்ரைனின் சரமாரி தாக்குதலில் பலர் இறந்ததால் வடகொரியா வீரர்களை பின்வாங்கும் கட்டாயம் ரஷியாவுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என உக்ரைன் ராணுவ செய்தித்தொடர்பாளர் அலெக்சாண்டர் கிண்ட்ராடென்கோ தெரிவித்துள்ளார்.

    • பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே உலக வங்கி, அன்னிய செலாவணி நிதியம் போன்றவற்றிடம் இருந்து கடன்களை வாங்கி நிலைமையை சமாளிக்கிறது. அதேபோல் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையும் உயர்த்தப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி உள்ளது.

    இந்தநிலையில் தற்போது அந்த நாட்டு மதிப்பில் லிட்டருக்கு பெட்ரோல் ரூ.1 மற்றும் டீசல் ரூ.7 உயர்த்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

    இதன்மூலம் பெட்ரோல் ரூ.257, டீசல் ரூ.267 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    • திறந்தவெளி மார்க்கெட் மீது தாக்குதல் நடத்தினர்.
    • இந்த தாக்குதலில் 54 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.

    போர்ட் சூடான்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

    இந்த உள்நாட்டுக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில், சூடானின் ஆம்டர்மேன் பகுதியில் உள்ள திறந்தவெளி மார்க்கெட் மீது துணை ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 54 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உக்ரைனின் பெரிய நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
    • இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட 6 பேர் பலியாகினர்.

    கீவ்:

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியது.

    அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் உக்ரைன் போரை எதிர்கொண்டு வருகிறது.

    உக்ரைனின் பெரிய நகரங்களில் ரஷியா டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், ரஷிய ராணுவம் உக்ரைனின் பொல்டாவா நகரத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

    இந்தத் தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதை தொடர்ந்து இடிந்து விழுந்த கட்டிதத்திலிருந்து சுமார் 22 பேர் மீட்கப்பட்டனர்.

    அதேபோல், உக்ரைன் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் இடிபாடுகளில் விழுந்ததில் 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் இன்று மட்டும் 6 பேர் கொல்லப்பட்டனர்.

    உக்ரைன் ராணுவமும் பதிலுக்கு ரஷியா மீது டிரோன் தாக்குதல் நடத்தியது. ரஷிய வான் பாதுகாப்புப் படையினர் 9 டிரோன்களை இடைமறித்து தாக்கி அழித்தனர்.

    • காசா இப்போது ஒரு பாதிக்கப்பட்ட இடமாகவே உள்ளது, கிட்டத்தட்ட எல்லாமே இடிக்கப்பட்டுள்ளன.
    • அவர்களுக்கு வேறு இடத்தில் (ஜோர்டான், எகிப்து) வீடுகளை அமைத்துத் தர வேண்டும்.

    பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர்- இஸ்ரேல் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு 6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. போரில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "காசா இப்போது ஒரு பாதிக்கப்பட்ட இடமாகவே உள்ளது, கிட்டத்தட்ட எல்லாமே இடிக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கே இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் அங்கிருந்து வெளியேறும் 15 லட்சம் மக்களின் எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும்.

    காசாவை நாம் முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். அதுதான் ஒரே வழி. அங்கே எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும். எனவே நான் சில அரபு நாடுகளுடன் இணைந்து, அவர்களுக்கு வேறு இடத்தில் (ஜோர்டான், எகிப்து) வீடுகளை அமைத்துத் தர வேண்டும். அங்கு அவர்கள் நிம்மதியாக வாழலாம்.

    பாலஸ்தீனிய அகதிகளை ஜோர்டான் இப்போதே ஏற்று வருகிறது. கூடுதலாக இன்னும் அவர்கள் காசா அகதிகளை ஏற்க வேண்டும். இதுதொடர்பாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்" எனத் தெரிவித்திருந்தார்.

    இதனால் சூழ்நிலையை சாதமாக பயன்படுத்தி டிரம்ப் மறைமுகமாக காசாவை காலி செய்து இஸ்ரேலிடம் கொடுக்க உள்ளாரா என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் ஆலோசனையை சக்தி வாய்ந்த அரபு நாடுகள் நிராகரித்துள்ளன.

    • பாகிஸ்தானில் பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் நடந்தது.
    • இந்த மோதலில் பயங்கரவாதிகள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.

    லாகூர்:

    பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு, பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்கள் பொதுமக்கள், போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரைக் குறிவைத்து அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தின் கலாட் மாவட்டத்தின் மங்கோசார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

    இருதரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் பாதுகாப்புப் படையினர் 18 பேர், பயங்கரவாதிகள் 12 பேர் என மொத்தம் 30 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • 6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    • 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல். இஸ்ரேல் சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை விடுதலை செய்கிறது.

    இஸ்ரேல் நாட்டிற்குள் கடந்த 2023-ம் ஆண்டு நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

    இதனால் கோபம் அடைந்த இஸ்ரேல் ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது தாக்குதல் நடத்தியது. இதனால் காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.

    பின்னர் அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்காரணமாக 2023 நவம்பர் மாதம் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    அப்போது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதற்குப்பதிலாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீன இளைஞர்கள், பெண்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அதில் இருந்து ஒன்றரை வருடங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இதில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மனிதாபிமான உதவி கிடைக்காமல் பாலஸ்தீன மக்கள் திண்டாடினர்.

    இந்த நிலையில்தான் டொனால்டு டிரம்ப் ஜனவரி 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்பதற்கு முன்னதாக போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த மாதம் 19-ந்தேதி அமலுக்கு வந்தது. இஸ்ரேல் காசா மீதான தாக்குதலை நிறுத்தியது. உணவு உள்ளிட்ட பொருட்கள் காசா முனைக்கு எடுத்துச் செல்ல அனுமதித்தது.

    6 வார கால போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் பிணைக்கைதிகளை விடுவிப்பது, இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனர்களை விடுவிப்பது குறித்து ஒப்பந்தமும் ஏற்பட்டது. ஹமாஸ் அமைப்பினர் 33 பிணைக்கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொண்டனர். அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறையில் இருந்து 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுக்க ஒப்புக்கொண்டது.

    அதன்படி ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். முதலில் 3 பிணைக்கைதிகளை விடுவித்தனர். அதன்பின் 4 பிணைக்கைதிகளை விடுவித்தனர். 3-வது கட்டமாக 8 பிணைக்கைதிகளை விடுவித்தனர்.

    இந்த நிலையில் இன்று மூன்று பிணைக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் (Red Cross) ஒப்படைந்தனர். அதில் யார்டன் பிபாஸ் (35), இஸ்ரேலில் வாழும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓஃபர் கால்டெரான் (54) இஸ்ரேல் வந்தடைந்தனர்.

    இந்த நிலையில் 3-வது நபராக சீத் சீகல் (65) என்பவரை செஞ்சிலுவையிடம் ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைத்துள்ளனர். இவர் விரைவில் இஸ்ரேல் அழைத்து வரப்படுவார்.

    காயம் அடைந்த பாலஸ்தீனர்கள் ரஃபா எல்லை வழியாக காசாவில் இருந்து எகிப்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எகிப்திற்கு செல்லும் ஒரே பாதையான இதை, இஸ்ரேல் கடந்த மே மாதம் மூடியது குறிப்பிடத்தக்கது.

    • தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன.
    • விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு சென்றார்.

    ராணுவத்தின் வசம் உள்ள வடக்குப் பகுதி தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக உறுதியளித்துள்ளார்.

    1980 களில் இருந்து ஆயுதப் போராட்டத்தின் போது, ராணுவத் தேவைகளுக்காக அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களின் நிலங்களை அபகரித்தது.

    குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் நகரில் பலாலி இராணுவத் தளத்தைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்குவதற்காக தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன.

    2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2015 முதல் அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்கள் சிலவற்றை அரசு உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்தது. இருப்பினும் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் அரசு வசமே உள்ளது.

    இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபராக  தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக வடக்கு பகுதியின் முக்கிய நகரமான யாழ்ப்பாணத்திற்கு திசநாயக நேற்று [வெள்ளிக்கிழமை] வருகை தந்தார். அங்கு யாழ்ப்பாண மாவட்ட பிரதிநிதிகளுடன் அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தார்.

    அப்போது, வடக்குப் பகுதி தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விரைவில் திரும்ப ஒப்படைக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதற்கான செயல்முறை விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு சென்று அங்கு நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அதிபர் அனுர குமார திசநாயக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

    • 10 அமெரிக்கர்களை வெனிசுலா சிறைப்பிடித்தது.
    • ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    அமெரிக்கா-வெனிசுலா நாடுகள் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதற்கிடையே 10 அமெரிக்கர்களை வெனிசுலா சிறைப்பிடித்தது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தது.

    இதில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை தென் அமெரிக்க நாட்டிற்கான அமெரிக்க அதிபர் டிரம்பின் சிறப்புப் தூதர் ரிச்சர்ட் கிரெனெல் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில் 6 அமெரிக்க பிணைக்கைதிகளை வெனிசுலா அரசு விடுதலை செய்துள்ளது. இதை டிரம்ப் உறுதி செய்துள்ளார். அதேவேளையில் இந்த ஒப்பந்தத்தின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

    • விமானத்தில் 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
    • உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.

    அமெரிக்காவில் பிலடெல்பியாவில் நேற்றிரவு சிறிய ரக விமானம் கீழே விழுந்து பல வீடுகள் மீது மோதியதில் தீப்பிடித்து எரிந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.

    பரபரப்பான சாலையில் ஏற்பட்ட விமான விபத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    கடந்த புதன்கிழமை தலைநகர் வாஷிங்டனில் நடுவானில் ராணுவ ஹெலிகாப்டர் - விமானம் மோதி 67 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த ஓரிரு தினங்களில் மீண்டும் விமான விபத்து நிகழ்ந்துள்ளது.



    ×