என் மலர்tooltip icon

    உலகம்

    • உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தில் 40 சதவீதம் செங்கடலில் தான் நடைபெறுகிறது.
    • செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கக் கூடாது

    இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்கினால், அமெரிக்க கப்பல்களை செங்கடலில் மூழ்கடிப்போம் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    "ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்தால், ஹவுதி ஆயுதப் படைகள் செங்கடலில் உள்ள அமெரிக்க சரக்குக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை குறிவைக்கும்" என்று ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் சஹ்யா சாரி கூறினார்.

    முன்னதாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய பின்னர், ஹவுதிகள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான கப்பல்களைத் தாக்கினர். இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளின் கப்பல்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஹவுதிகள் மீது அமெரிக்கா பெரிய அளவில் தாக்குதலை நடத்தியது.

    மே மாதம் அமெரிக்காவும் ஹவுதிகளும் ஓமானின் மத்தியஸ்தத்துடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டினர். இந்த ஒப்பந்தம் செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கக் கூடாது என்று கூறுகிறது.

    உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தில் 40 சதவீதம் செங்கடலில் தான் நடைபெறுகிறது. செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய், உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதையாகும்.

    செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டால் அது உலக சந்தைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னதாக, ஹவுதி தாக்குதலைத் தொடர்ந்து, கப்பல்கள் பாதையிலிருந்து திசைதிருப்பப்பட்டு ஆப்பிரிக்காவின் குட் ஹோப் முனையிலிருந்து சில காலம் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்
    • ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது.

    அமெரிக்கா ஈரானில் உள்ள பல அணுசக்தி தளங்கள் மீது குண்டுவீசியுள்ளதாக அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்றைய சமூக வலைதளப் பதிவில் அறிவித்துள்ளார்.

    அமெரிக்கா ஈரானின் மீது நேரடி இராணுவத் தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறையாகும். ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து மோதல் வெடித்தது.

    ஈரானின் அணு ஆயுதங்கள் தங்களுக்கு ஆபத்து என்பதால் முன்கூட்டியே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்நிலையில் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான இராணுவ மோதல் அமெரிக்காவின் தலையீடு மூலம் மேலும் அதிகரித்துள்ளது.

    "ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் எஸ்ஃபஹான் (Esfahan) ஆகிய ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான எங்களின் வெற்றிகரமான தாக்குதலை முடித்துள்ளோம்" என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

    "அனைத்து விமானங்களும் தற்போது ஈரான் வான்வெளியை விட்டு வெளியேறிவிட்டன. முதன்மைத் தளமான ஃபோர்டோ மீது முழு அளவில் குண்டுகள் வீசப்பட்டன.

    அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக நாடு திரும்புகின்றன. எங்களின் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துக்கள். இதைச் செய்ய வேறு எந்த இராணுவமும் உலகில் இல்லை. இப்போது அமைதிக்கான நேரம்! இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    தாக்குதலில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்று டிரம்ப் குறிப்பிடவில்லை. இருப்பினும் ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் மட்டுமே தாக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது.
    • இந்த எரிமலை சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஹவாய் தீவில் கிலாவியா எரிமலை அமைந்துள்ளது. மிகவும் செயல்படும் எரிமலையான இது சமீப காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுகிறது.

    இந்நிலையில், கிலாவியா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. அப்போது எரிமலையில் இருந்து சுமார் 1,000 அடி உயரத்துக்கு தீக்குழம்புகள் வெளியேறின. அதில் இருந்து வெளியேறிய சாம்பல் அருகில் உள்ள ஹலேமா தேசிய பூங்கா வழியாக பாய்ந்தது.

    எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த தேசிய பூங்கா மூடப்பட்டது. மேலும் எரிமலையைச் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஈரான், இஸ்ரேலிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்தார்.
    • போர் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    நியூயார்க்:

    அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது இரு நாடுகளும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், இஸ்ரேல்–ஈரான் இடையிலான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:

    இரு நாடுகளுக்கு இடையிலான போர் என்பது யாராலும் கட்டுப்படுத்த முடியாத தீயைப் பற்றவைக்கும். அதை நாம் பரவ விடக்கூடாது.

    அமைதியை ஏற்படுத்த ஒரு வாய்ப்பு கொடுங்கள். போர் பதட்டத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.

    போரை நிறுத்துவது அந்தந்த நாடுகளின் தலைவிதியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த எதிர்காலத்தின் தலைவிதியை மாற்ற உதவும்.

    போர் மேலும் மேலும் அதிகமாக நாம் அனுமதிக்கக் கூடாது. இந்த மோதல் கணிக்க முடியாததாக உள்ளது.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்குள் ஒற்றுமை மற்றும் ஐ.நா.சாசனத்தைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

    • ஹாட் ஏர் பலூனில் 21 பேர் பறந்து கொண்டிருந்தனர்.
    • திடீரென தீப்பிடித்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

    பிரேசில் நாட்டின் தென் மாநிலமான சான்டா கட்டேரினாவில் செயின்ட் ஜானை போன்ற கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த விழாவின் ஒரு பகுதியாக ராட்சத பலூன் (hot-air balloon) மூலம் மக்கள் ஆகாயத்தில் பறப்பார்கள். பிரையா கிராண்டு என்பது இந்த ராட்சத பலூன் பறப்பதற்கு ஏற்ற இடம் திகழ்ந்து வருகிறது.

    இன்று சான்டா கட்டேரினா மாநிலத்தில் ராட்சத பலூனில் 29 பேர் பறந்து கொண்டிருந்தனர். வானில் பறந்து கொண்டிருக்கும்போது, பலூன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பலூன் முழுவதுமாக எரிந்து, மக்கள் நின்று கொண்டிருக்கும் தொட்டி கீழே விழுந்தது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரம் சனிக்கிழமை இதுபோன்ற ராட்சத பலூன் விழுந்ததில் 27 வயது பெண் ஒரவர் உயிரிழந்தார். 11 பேர் காயம் அடைந்தனர்.

    • ஈரான்- இஸ்ரேல் இடையிலான சண்டை மோசமான நிலையை எட்டியுள்ளது.
    • ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களையும் அழைத்து வர மத்திய அரசு திட்டம்.

    ஈரான்- இஸ்ரேல் இடையிலான மோதல் 8 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் அதி நவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக இஸ்ரேல் ஈரானில் உள்ள அணு உலை மற்றும் அணுஉலை ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை தாக்கி அழித்து வருகிறது.

    இதனால் பேராபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரானில் உள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களையும் இந்தியா வெளியேற்றுகிறது என ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. டெலிகிராம் சேனல் அல்லது +989010144557, +989128109115 +989128109109 எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தூதரகம் தெரிவித்துள்ளது.

    நேபாளம் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களையும் வெளியேற்றுகிறோம். இரண்டு நாட்டின் அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. நேபாளம் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் +989010144557; +989128109115; +989128109109 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

    நாட்டிற்கு திரும்ப விரும்பினால், இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை, அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவிறுத்தியுள்ளது.

    இலங்கை சேர்ந்வர்கள் ஈரானில் 100-க்கும் குறைவான பேர் உள்ள நிலையில், இஸ்ரேலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஈரானில் சிக்கியுள்ள 16 நேபாளத்தினரை மீட்டு வர இந்தியாவுக்கு, நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    • அணுஆயுதம் திட்டம் குறித்த மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருக்கிறது.
    • இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆர்வம் காட்டவில்லை.

    இஸ்ரேல்- ஈரான் இடையில் 8 நாட்களுக்கு மேலாக மோதல் நடைபெற்று வருகிறது. ஈரான் ஹைப்பர்சோனிக், கொத்து குண்டுகள் மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. அதேவேளையில் ஈரானில் உள்ள அணுஉலை மற்றும் அணு ஆராய்ச்சி நிலையம் மீது இஸ்ரேல் பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

    இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் அமெரிக்கா மோதலில் தலையீடு செய்தால், சரி செய்ய முடியாத அளவிற்கு விளைவுகளை சந்திக்கும் என ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் இஸ்ரேலுக்கு எதிரான சண்டையில், அமெரிக்கா தலையீடு செய்தால் அது எல்லோருக்கும் ஆபத்தானதாக இருக்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அப்பாஸ் அராக்சி கூறுகையில் "இஸ்ரேல் உடனான சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால் அது எல்லோருக்கும் ஆபத்தானதாக இருக்கும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க ராணுவம் தலையீடு குறித்து மதிப்பீடு செய்து வருவது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

    அணுஆயுதம் திட்டம் குறித்த மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் தயாராக இருக்கிறது. இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆர்வம் காட்டவில்லை" என்றார்.

    • காமேனியின் முற்றிலும் மாறுபட்ட பிம்பத்தை இந்த பதிவுகள் முன்வைக்கின்றன.
    • இந்தியா இத்தனை முக்கியமான முன்னேற்றங்களுக்கு உள்ளானது என்று எனக்குத் தெரியாது.

    கடந்த ஜூன் 13 தேதி அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது. ஈரான் அணு ஆயுதங்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்பதால் முன்கூட்டியே தாக்கியதாக இஸ்ரேல் சொன்னது.

    ஆனால் தங்கள் அணு ஆயுதங்கள் வளர்ச்சி மற்றும் அமைதியின் நிமித்தமே என்று கூறிய ஈரான் கூறியது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் ஒன்றையொன்று ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்கி வருகின்றன.

    இதற்க்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியில் பழைய சமூக பழைய சமூக ஊடகப் பதிவுகள் வைரலாகி வருகின்றன.

    இந்தப் பதிவுகளில் காமேனி, பெண் உரிமை, கவிதைகள் மீதான விருப்பம், பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு, இந்தியப் பிரதமரின் புத்தகத்தைப் படித்தது, மற்றும் சிறுவயதில் தான் எப்படி குறும்புக்காரராக இருந்தார் என்று பலவற்றை குறித்துப் பேசியுள்ளார்.

    வைரலானவற்றில் சில பதிவுகள் 10 வருடங்களுக்கும் பழையவை. தற்போது போரை முன்னெடுத்து செல்லும் காமேனியின் முற்றிலும் மாறுபட்ட பிம்பத்தை இந்த பதிவுகள் முன்வைக்கின்றன.

    86 வயதான இந்த தலைவரை தீவிர இஸ்லாமிய குடியரசின் மூத்த மதகுரு மட்டுமே என்று தாங்கள் தவறாக மதிப்பிட்டுவிட்டதாகக் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

    பெண்கள் தொடர்பான பல பதிவுகளில், காமேனி பெண்களுக்காக குரல் கொடுத்ததுடன், காதல் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். "ஒரு மனிதன் பெண்ணின் தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள பொறுப்புள்ளவன், அவளது உணர்ச்சிபூர்வமான நிலையை புறக்கணிக்கக் கூடாது" என்று அவர் எழுதியுள்ளார். 

    இதற்கு எக்ஸ் பயனர் ஒருவர், "காதலனாகப் பிறந்தவர், உச்ச தலைவராக மாற கட்டாயப்படுத்தப்பட்டவர்" என்று தற்போது கமெண்ட் செய்துள்ளார்.

    " பெண் ஒரு மென்மையான மலர், வீட்டு வேலைக்காரி அல்ல. ஒரு பெண்ணை வீட்டில் ஒரு பூவைப் போல நடத்த வேண்டும். ஒரு பூவைப் பராமரிக்க வேண்டும்" என்று கமேனி கூறினார். ஆனால் இஸ்லாமிய குடியரசான ஈரானில் பெண் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவதே கள யதார்த்தமாக உள்ளத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளது.

    2013 ஆம் ஆண்டு ஒரு பதிவில், காமேனி தனது பள்ளிக் காலங்களை நினைவு கூர்ந்துள்ளார். "முதல் நாளில் இருந்தே நான் பள்ளியில் ஒரு சிறப்பு மேலங்கியுடன் சென்றேன். மற்ற குழந்தைகளுக்கும் முன்பாக அதை அணிவது சங்கடமாக இருந்தது, ஆனால் குறும்புத்தனமாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருப்பதன் மூலம் அதை ஈடுகட்ட முயற்சித்தேன்" என்று எழுதியுள்ளார்.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புத்தகத்தைப் படித்து நாட்டின் வரலாற்றைப் புரிந்து கொண்டதாகவும் காமேனி கருத்து தெரிவித்துள்ளார். "நேருவின் 'உலக வரலாற்றின் காட்சிகள்' புத்தகத்தைப் படிக்கும் முன், காலனித்துவத்திற்கு முன் இந்தியா இத்தனை முக்கியமான முன்னேற்றங்களுக்கு உள்ளானது என்று எனக்குத் தெரியாது" என்று காமேனி பதிவிட்டுள்ளார்.

    இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலும் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று காமேனி சபதம் செய்துள்ள நேரத்தில் இந்தப் பதிவுகள் மீண்டும் கவனம் பெற்று வருகின்றன.

    அமெரிக்கா மோதலில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்ப்படுத்துவோம் என்று என்று காமேனி சமீபத்தில் எச்சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • உளவுத்துறையின் கண்டுபிடிப்புகள் எனது கூற்றுகளுக்கு முரணாக உள்ளன. ஆனால் எனக்கு கவலையில்லை
    • கப்பார்ட் முன்வைத்த மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது உளவுத்துறை சரியாக வேலை செய்யவில்லை என்றும், அதன் இயக்குனர் வழங்கிய தகவல்கள் தவறானவை என்றும் தெரிவித்துள்ளார்.

    ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்ற அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி காப்பார்டின் நிலைப்பாட்டை அவர் நிராகரித்தார்.

    ஊடகங்களுக்கு பேட்டி அளித்தபோது, தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் அளித்த தகவல் தவறானது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

    முன்னதாக, ஈரான் தனது கைவிடப்பட்ட அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்வில்லை என்று அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்தத் தகவல் தவறானது என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

    "தகவல் தவறாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் இறுதி கட்டத்தில் இருப்பதாக நான் சொன்னேன். ஆனால் உளவுத்துறையின் கண்டுபிடிப்புகள் எனது கூற்றுகளுக்கு முரணாக உள்ளன. ஆனால் எனக்கு கவலையில்லை" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    ஆனால் கப்பார்ட் முன்வைத்த மதிப்பீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

    • அவர்களுடன் அவருக்கு உயிரியல் ரீதியாக ஆறு குழந்தைகள் உள்ளனர்.
    • பாவெல் துரோவின் நிகர மதிப்பு 13.9 பில்லியன் டாலர் முதல் 17.1 டாலர் பில்லியன் வரை உள்ளது.

    பிரபல சமூக வலைதளமான டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். என்றும் இளமையாக இருக்க அவர் எடுத்துக்கொள்ளும் அசாதாரணமான முயற்சிகளுக்கு பாவெல் பிரபலமானவர். ரஷிய நாட்டவரான இவர் துபாயில் டெலிகிராம் தலைமையகத்தை அமைத்து பணியாற்றி வருகிறார்.

    இதற்கிடையே தனது விந்தணு தானத்தின் மூலம் உலகம் முழுவதும் 12 நாடுகளில் 100 பேர் பிறந்ததாக பரபரப்பான அறிவிப்பை சில காலம் முன் அவர் வெளியிட்டிருந்தார்.

    இந்நிலையில் தனது சொத்துக்கள் தனது அனைத்து குழந்தைகளுக்கும் சமமாகப் பிரிப்பதாக பாவெல் அறிவித்துள்ளார். இதற்காக சமீபத்தில் ஒரு உயில் எழுதியுள்ளதாகவும் பாவெல் கூறினார். பாவெல் வெளிப்படுத்திய விவரங்களின்படி, அவர் திருமணமாகவில்லை என்றாலும், அவர் மூன்று பெண்களுடன் வசித்து வருகிறார். அவர்களுடன் அவருக்கு உயிரியல் ரீதியாக ஆறு குழந்தைகள் உள்ளனர்.

    இந்த ஆறு பேரைத் தவிர, விந்தணு தானம் மூலம் பிறந்த 100 குழந்தைகளுக்கும் அவர் தந்தையானார். அனைவரும் தனக்கு சமம் என்றும், யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

    அதனால்தான் அவர்கள் அனைவருக்கும் தனது சொத்தில் சம பங்கு இருக்கும் என்று பாவெல் கூறினார். தனது வாழ்க்கை சவால்களால் நிறைந்தது என்று கூறும் 40 வயதான பாவெல் தனது உயிலை எழுதியுள்ளார்.

    இருப்பினும், பாவெலின் முழு சொத்தும் ஒரே இரவில் அவரது குழந்தைகளுக்குச் செல்லாது என்றும் வாழ்க்கையில் அவர்கள் பட்டறிவு பெறவேண்டும் என்பதால் உயில் எழுதிய நாளிலிருந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் சொத்து குழந்தைகளுக்குச் செல்லும் என்றும் தெரிவித்தார். அதாவது அவரது சொத்துக்கள் 2055, ஜூன் 19 அன்று அவரது 106 குழந்தைகளுக்கு பிரிந்து வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் மற்றும் ஃபோர்ப்ஸ் தரவுகளின்படி, பாவெல் துரோவின் நிகர சொத்து மதிப்பு 13.9 பில்லியன் டாலர் முதல் 17.1 டாலர் பில்லியன் வரை உள்ளது. தற்போதைய மதிப்பீடுகளின்படி, இது ஒரு குழந்தைக்கு சுமார் 131 மில்லியன் டாலர் முதல் 161 மில்லியன் டாலர் வரை பரம்பரைச் சொத்தாக மாறும். 

    • இயக்குனர் ரஃபேல் குரோசி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.
    • இது பல நூறு கிலோமீட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தார்.

    ஈரானின் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவதைத் தவிர்க்குமாறு சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.

    ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கவில்லை என்பதை IAEA உறுதி செய்ய முடியும் என்றும் அணுசக்தி நிலையங்களைத் தாக்குவது ஒரு பெரிய பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் IAEA இன் இயக்குனர் ரஃபேல் குரோசி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் தெரிவித்தார்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தில் அவர் விளக்கமளிக்கையில், ஃபோர்டோ மற்றும் எஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்களால் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், புஷேர் அணுமின் நிலையம் தாக்கப்பட்டால் மிக அதிக கதிர்வீச்சு வெளியேறும் என்றும் எச்சரித்தார். இது பல நூறு கிலோமீட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்தார்.

    ஈரானின் அணுசக்தி தளங்கள் மீதான தாக்குதல்கள், அணுசக்தி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாக பாதித்துள்ளன. இதுவரை பொதுமக்களை பாதிக்கும் கதிர்வீச்சு கசிவு ஏற்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் அது நிகழலாம் என்று அவர் கூறியுள்ளார். 

    • 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
    • அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.

    ரஃபேல் போர் விமானம் குறித்து பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்ட சமூக வலைதள பதிவு வைரலாகி வருகிறது.

    "ரஃபேல் இஸ் காலிங்" என்று அதன் படத்துடன் மேக்ரான் தனது எக்ஸ் பக்கத்தில் "நமது ஐரோப்பாவைப் பாதுகாப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும், இராணுவ தளவாடங்களுக்கு அமெரிக்க உற்பத்தியை சார்ந்திருப்பதைக் குறைக்க வேண்டும் என்று மேக்ரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    ஆனால், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே இந்த அமெரிக்க போர் விமானங்களை வாங்கி பயன்படுத்துகின்றன. 2020 ஆம் ஆண்டில் போலந்து 4.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள 32 F-35 விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2021 ஆம் ஆண்டில் பின்லாந்து 64 விமானங்களுக்கான ஆர்டரை வழங்கியது.

    இதற்கிடையே சமீபத்தில் இஸ்ரேலுடனான மோதலில் ஈரான், F35 போர் விமானங்களை வீழ்த்தியதாக தகவல் வெளியானது. இதனால் அமெரிக்க நிர்வாகமே F 35 தயாரிப்பு நிறுவனத்திற்கு கொடுத்த ஆர்டரை பாதியாக குறைத்ததாக கூறப்பட்டது.

    இந்த நிலையில்தான் பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரஃபேல் விமானங்களை மேக்ரான் ஐரோப்பிய நாடுகளிடம் விளம்பரப்படுத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது. அண்மையில் நடந்த மோதலின்போது இந்தியாவின் 4 ரஃபேல் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    ×