என் மலர்
உலகம்

ஈரானில் இருந்து இந்தியா, அதன் அனைத்து குடிமக்களையும் வெளியேற்றுகிறது
- ஈரான்- இஸ்ரேல் இடையிலான சண்டை மோசமான நிலையை எட்டியுள்ளது.
- ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களையும் அழைத்து வர மத்திய அரசு திட்டம்.
ஈரான்- இஸ்ரேல் இடையிலான மோதல் 8 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இரு நாடுகளும் அதி நவீன ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக இஸ்ரேல் ஈரானில் உள்ள அணு உலை மற்றும் அணுஉலை ஆராய்ச்சி நிலையங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளை தாக்கி அழித்து வருகிறது.
இதனால் பேராபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஈரானில் உள்ள இந்திய குடிமக்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட இந்திய குடிமக்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களையும் இந்தியா வெளியேற்றுகிறது என ஈரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. டெலிகிராம் சேனல் அல்லது +989010144557, +989128109115 +989128109109 எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தூதரகம் தெரிவித்துள்ளது.
நேபாளம் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்களையும் வெளியேற்றுகிறோம். இரண்டு நாட்டின் அரசு கேட்டுக்கொண்டதன் பேரில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது. நேபாளம் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் +989010144557; +989128109115; +989128109109 எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு திரும்ப விரும்பினால், இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு இலங்கை, அந்நாட்டு குடிமக்களுக்கு அறிவிறுத்தியுள்ளது.
இலங்கை சேர்ந்வர்கள் ஈரானில் 100-க்கும் குறைவான பேர் உள்ள நிலையில், இஸ்ரேலில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஈரானில் சிக்கியுள்ள 16 நேபாளத்தினரை மீட்டு வர இந்தியாவுக்கு, நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.






