என் மலர்
உலகம்
- தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவை ஆன்லைனிலும் பரப்பப்பட்டன.
- காவல்துறை இதை ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதி விசாரித்து வருகிறது.
அயர்லாந்தில் இந்தியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் அயர்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) அயர்லாந்தின் டப்ளின் நகரில் தல்லாக்ட் பகுதியில் வைத்து அவர் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அவரது ஆடைகளை கிழித்து அந்த கும்பல் ரத்த காயங்கள் ஏற்படும்படி தாக்கியுள்ளது.
குழந்தைகளுடன் தகாத முறையில் நடந்துகொண்டதாக அவர் மீது தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவை ஆன்லைனிலும் பரப்பப்பட்டன.இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்கு ஆளானவர் பலத்த காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட மீட்கப்பட்டு, தல்லாக்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காவல்துறை இதை ஒரு வெறுப்புக் குற்றமாகக் கருதி விசாரித்து வருகிறது.
பாதிக்கப்பட்டவரை சந்தித்த உள்ளூர் கவுன்சிலர், அவர் அதிர்ச்சியில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்தத் தாக்குதலை மோசமானது மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என உள்ளூர் அரசியல் தலைவர்களும் கண்டித்துள்ளனர்.
- நீட்டித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
- லிண்ட்சே கிரகாம் புதிய மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது போர் நடத்தி வருவதால் ரஷியா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடை அமலில் உள்ளது.
இருப்பினும் இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்த வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு ரஷியா போரை நீட்டித்து வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், டிரம்ப் உடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எம்.பி. லிண்ட்சே கிரகாம் புதிய மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.
அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் 100 சதவீதம் வரி விதிக்க உள்ளார்.
இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு நான் கூறுவது என்னவென்றால், நீங்கள் தொடர்ந்து ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போர் நீடிக்க அனுமதித்தால் உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழித்து விடுவோம்' என்று தெரிவித்தார்.
- கீதா கோபிநாத் கடந்த 2019-ல் சர்வதேச நாணய நிதியத்தில் தலைமை பொருளாதார நிபுணராக சேர்ந்தார்.
- ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராக மீண்டும் பணியில் சேர உள்ளேன் என்றார்.
வாஷிங்டன்:
சர்வதேச நாணய நிதியத்தில் துணை நிர்வாக இயக்குநராக பணியாற்றியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத். இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் சர்வதேச நாணய நிதியத்தில் தலைமைப் பொருளாதார நிபுணராக சேர்ந்தார்.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பதவியில் இருந்து விலகுவதாக கீதா கோபிநாத் அறிவித்துள்ளார். மேலும், அவர் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராக மீண்டும் பணியில் சேர உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கீதா கோபிநாத் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சர்வதேச நாணய நிதியத்தில் சுமார் 7 அற்புதமான ஆண்டுகளுக்கு பிறகு நான் எனது கல்வி வேர்களுக்கு திரும்ப முடிவு செய்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.
கீதா கோபிநாத் இவ்வுலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அசாத்திய கல்வியறிவும், அறிவார்ந்த தலைமை பண்பும் கொண்டவர் என ஐ.எம்.எப். நிர்வாக இயக்குநர் கிறிஸ்ட்டின் லகார்டே பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் இணைந்தது.
- தற்போது மீண்டும் வெளியேறியுள்ளது.
யுனெஸ்கோ அமைப்பிலிருந்து வெளியேறுவதாக அமெரிக்காவின் அரசுத்துறை செய்தித்தொடர்பாளர்
டாமி ப்ரூஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரத்தின் மேம்பாட்டுக்காக செயல்படும் யுனெஸ்கோவிலிருந்து வெளியேறியதற்கான காரணம் குறித்து முழுமையான விளக்கத்தை அமெரிக்க வெளியிடாத நிலையிலும், இஸ்ரேலுக்கு எதிராக நிலையை எடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் யுனெஸ்கோவில் மீண்டும் இணைந்த நிலையில், தற்போது வெளியேறியுள்ளது.
முதல் முறையாக 1984ஆம் ஆண்டு ரொனால்டு ரீகன் அமெரிக்க அதிபராக இருந்தபோது யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்க விலகியது.
- சார்ஜ் போடும் நேரத்தில் உணவருந்தும் வசதி.
- உலகம் முழுவதும் விரிவுப்படுத்த எலான் மஸ்க் திட்டம்.
மின்சார கார் தயாரிப்பதில் உலகின் நம்பர் ஒன் நிறுவனமாக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவில் டெஸ்லா கார் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஆங்காங்கே சார்ஜ் போடுவதற்கான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
வாகனத்திற்கு சார்ஜ் போடும் வரை, வாகன ஓட்டி மற்றும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் காத்திருக்க வேண்டி நிலை ஏற்படும். இந்த நேரத்தை அவர்கள் உணவருந்துவதற்காக பயன்படுத்தினால், பயணம் நேரம் மிச்சமாகும்.
இதை கருத்தில் கொண்டு TESLA DINER-ஐ லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் டெஸ்லா நிறுவனம தொடங்கியுள்ளது. சார்ஜ் நிலையத்தில் வாகனத்திற்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்றால், அதற்கு முன்னதாகவே அந்த நிலையத்திற்கு வருவது தொடர்பாகவும், உணவு தேவை என்றால் அது தொடர்பாகவும் ஆர்டர் செய்தால், சார்ஜ் போடும் நேரத்தில் வாகனத்திற்கு உணவு வந்து சேரும். இல்லையென்றால் உணவகத்தில் சென்று சாப்பிடும் வகையில் ஏற்பாமு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் TESLA DINER தொடங்கப்பட்டுள்ளது. இது வெற்றி பெற்றால் உலகளவில் விரிவுப்படுத்த மஸ்க் முடிவு செய்துள்ளார்.
- பயிற்சிக்கு புறப்பட்ட போர் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
- பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி வளாகத்தில் நேற்று வங்கதேச விமானப்படை பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளத்தில் 19 பேர் உயிரிழந்தனர்.
வங்காளதேசத்தில் உள்ள குர்மிடோலா என்ற இடத்தில் உள்ள விமான படை தளத்தில் இருந்து பயிற்சிக்கு புறப்பட்ட போர் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள பள்ளி கட்டிடம் மீது விழுந்து நொறுங்கியது.
இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 20 பேர் உயிரிழந்தனர். 170-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் சிகிக்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்தது. விபத்திற்கான காரணத்தை கண்டறிய வங்காளதேச விமானப்படை, உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக இன்று துக்க தினமாக அரசு அறிவித்துள்ளது.
- இரு அவைகளிலும் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனி பெரும்பான்மையை இழந்தது.
- லிபரல் டெமாக்ரடிக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல்முறையாகும்.
ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்தது. இதனால் இரு அவைகளிலும் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தனி பெரும்பான்மையை இழந்தது.
ஜப்பானில் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.
நாடாளுமன்ற மேல்சபையில் பெரும்பான்மை பெற 125 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஏற்கனவே 75 இடங்கள் இருந்தன. எனவே இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற மேலும் 50 இடங்களில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி 47 இடங்களில் மட்டும் தான் வெற்றி பெறமுடிந்தது. இதனால் ஆளுங்கட்சி இரு அவைகளிலும் தனிப்பெரும்பான்மையை இழந்தது.
முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கீழ்சபை தேர்தலிலும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வியடைந்தது.
1955-ம் ஆண்டு கட்சி தொடங்கியதில் இருந்து ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல்முறையாகும். இருப்பினும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என்று ஷிகெரு இஷிபா தெரிவித்துள்ளார்.
- சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
- 2016 தேர்தலில் ரஷியாவின் உதவியுடன் டிரம்ப் வென்றதாக குற்றம்சாட்டினார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை FBI கைது செய்து அழைத்துச் செல்லும் செயற்கை நுண்ணறிவு வீடியோவை டிரம்ப் பகிர்ந்துள்ளார். சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ, ஒபாமா டிரம்புடன் பேசிக் கொண்டிருந்தபோது அதிகாரிகள் அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதை காட்டுகிறது. பின்னர் ஆரஞ்சு நிற உடை அணிந்து ஒபாமா சிறைச்சாலையில் இருப்பதையும் இந்தக் காட்சிகள் காட்டுகின்றன.
முன்னதாக 2016 தேர்தலில் ரஷியாவின் உதவியுடன் டிரம்ப் வென்றதாக பொய்யான குற்றச்சாட்டுகளுக்காக ஒபாமா விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க தேசிய புலனாய்வு முகமை இயக்குனர் துளசி கப்பார்ட் தெரிவித்திருந்தார்.
- 16 பேர் உயிரிழந்த நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் காயம்.
- காயம் அடைந்தவர்களில் 6 மாணவர்கள் கவலைக்கிடமாக உள்ளனர்.
வங்கதேசத்தில் போர் விமானம் பள்ளிக்கூடம் மீது விழுந்து மோதிய விபத்தில், பள்ளியில் இருந்த 16 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.
வங்கதேசம் தலைநகர் டாக்காவில் உள்ள உத்தாராவில் மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி இயங்கி வருகிறது. வங்கதேசத்தின் பயிற்சி போர் விமானம் திடீரென இந்த பள்ளியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளியில் படித்து வந்த 6ஆம் வகுப்பு மாணவர்கள் 17 பேர், 2 ஆசிரியர்கள் உயிரிழந்தனர். விமானியும் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவற்றில் சிலருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீக்காயம் அடைந்தவர்களில் 6 மாணவர்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
- உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார்.
- எல்லை மீறி ஆக்கிரமித்த பகுதிகளை சுதந்திரமாக அறிவிக்க வேண்டும்.
மாஸ்கோ:
ஐரோப்பிய ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டி வந்தநிலையில் அந்த நாடோடு ரஷியா அதிபர் புதின் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறார். 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் நிதி கொடுத்தும், ஆயுதங்கள் சப்ளை செய்தும் உதவி வருகின்றன.
ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியா ஆட்களை அனுப்புகிறது. சீனா மறைமுகமாக உதவுவதாக கூறப்படுகிறது. இந்த போரில் பல்லாயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் புதிய ஜனாதிபதிக்கான தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று 2-வது முறையாக அந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றார். முன்னதாக தேர்தல் வாக்குறுதியின்போது ரஷியா-உக்ரைன் இடையேயான போரை நிறுத்துவதாக அறிவித்தார். அதன்படி ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து நேரலையில் உரையாடி அவர் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும் போரை உடனடியாக கைவிடுமாறு எச்சரித்தார். ரஷிய அதிபர் புதினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டும் போர் நிறுத்தத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும் பல நாடுகள் இந்த போரை நிறுத்த தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. இருப்பினும் எதற்கும் செவி சாய்க்காமல் இருநாடுகளும் தீவிரமான போர் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபடுகிறது.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தற்போது ரஷியாவை உடனடியாக போர் தாக்குதலை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்காக 50 நாட்கள் கெடு விதித்துள்ளார். மேலும் அதனை மீறி போர் தாக்குதலை நீடித்தால் கடுமையான பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே ரஷியாவின் அதிகாரப்பூர்வ அரசு தலைமையிடமான கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பத்திரிகையாளர்களை சந்திந்தார். அப்போது அவர் உக்ரைனுடன் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தார். அவர் கூறுகையில், "உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு எப்போதும் நாங்கள் தயார். ஆனால் எங்களுடைய லட்சியங்கள் ஈடேறும்வரை போர் தாக்குதல் தொடரும். நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதை தவிர்க்க வேண்டும். எல்லை மீறி ஆக்கிரமித்த பகுதிகளை சுதந்திரமாக அறிவிக்க வேண்டும். மேற்கத்திய நாடுகளுடனான தொடர்பை துண்டித்து ராணுவத்தை குறைத்தால் நாங்கள் புதிய அமைதி பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயார்" என பேசினார்.
- இந்தோனேசியா சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் கிரிகோரியஸ் பார்சிலோனா என்ற சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த 250-க்கும் மேற்பட்டோர் உயிரை காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர்.
தலாவுட் தீவுகளில் இருந்து புறப்பட்டு மனாடோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ பற்றியது.
தகவலறிந்து அங்கு வந்த மீட்புப் படையினர், பேரிடர் கால மீட்புக்குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாக கப்பலில் எழுந்த புகை விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது.
இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
விபத்து குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
- தென்கொரியாவில் கனமழை கொட்டி வருகிறது.
- மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
சியோல்:
தென்கொரியாவில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் அந்நாட்டில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு சுங்க்சோங் மாகாணம், குவாங்ஜூ நகரம் வெள்ளம், நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேப்யோங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மற்றும் நிவாரண முகாம்கள் மூழ்கி, கனமழையின் மத்தியில் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 2 பேர் இறந்தனர். 5 பேர் காணாமல் போயினர். மழை தொடங்கியதிலிருந்து 11 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் சூழ்ந்த பகுதியில் வசிக்கும் 13 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.






