என் மலர்
உலகம்
- இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- இந்த பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து ஹமாஸ் குழுவினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250க்கும் அதிகமானோர் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக ஹமாஸ்க்கு எதிராக இஸ்ரேல் போர் பிரகடனம் செய்து காசா மீது கடுமையான வகையில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இஸ்ரேல்- ஹமாஸ் இடையே 20 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இரண்டு முறை பணயக்கைதிகள் பரிமாற்றத்திற்காக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
தற்போது பொதுமக்கள் பட்டினியால் வாடி வருகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான உதவி பொருட்கள் கிடைக்கும் வகையிலும், மீதமுள்ள பணயக்கைதிகளை மீட்கும் வகையிலும் போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்தது. ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் ஹமாஸ் உடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மாற்று வழிகளை பரிசீலித்து வருகிறோம். என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், பேச்சுவார்த்தைக்கு அனுப்பிய பிரதிநிதிகளை திரும்ப அழைத்துள்ளது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவது உறுதியற்ற நிலையாகவே உள்ளது.
- மாலத்தீவின் நம்பகமான நண்பர் என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது.
- மாலத்தீவுக்கு ரூ.4,850 கோடி கடன் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
மாலே:
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இங்கிலாந்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிந்த பிறகு பிரதமர் மோடி மாலத்தீவு சென்றார். மாலேயில் உள்ள வெலினா ஏர்போர்ட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிபராக பதவி ஏற்றது முதல் இந்தியாவுடன் முரண்பட்டு இருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, மூத்த மந்திரிகள் விமான நிலையத்திற்கே வந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து மாலத்தீவு குடியரசு சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு 21 குண்டுகள் முழங்க சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின், மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் பிரதமர் மோடி இருநாடுகள் இடையே வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தை முடிவில் இந்தியா சார்பில் மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், பாதுகாப்பு துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் செயல்பட முடிவு செய்துள்ளோம். மாலத்தீவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும். என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்த அதிபர் முய்சுவின் செயல் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வரும் காலங்களில் இந்தியா-மாலத்தீவு நட்புறவு முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டுமென நம்புகிறேன் என தெரிவித்தார்.
- பாலஸ்தீன அரசை அங்கீகரித்த முதல் பெரிய மேற்கத்திய நாடாக மாறும்.
- மற்றொரு ஈரானிய 'பினாமியை' உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் கூறினார். இது பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த உதவும் என்று நம்புவதாக மேக்ரோன் கூறினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "மத்திய கிழக்கில் ஒரு நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான வரலாற்று உறுதிப்பாட்டை அங்கீகரிக்கும் விதமாக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளது" என்று மேக்ரோன் கூறினார். அடுத்த செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இந்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.
இதன்மூலம் ஐரோப்பாவின் மிகப்பெரிய யூத மற்றும் முஸ்லிம் சமூகங்களைக் கொண்ட பிரான்ஸ், பாலஸ்தீன அரசை அங்கீகரித்த முதல் பெரிய மேற்கத்திய நாடாக மாறும்.
இந்நிலையில் பிரான்சின் அறிவிப்புக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறுகையில், அத்தகைய நடவடிக்கை பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாகவும், மற்றொரு ஈரானிய 'பினாமியை' உருவாக்கும் அபாயத்தை அதிகரிப்பதாகவும் கூறினார்.
மேலும், "பாலஸ்தீன நாடு இஸ்ரேலை அழிப்பதற்கான ஒரு ஏவுதளமாக இருக்கும். பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் ஒரு நாட்டைத் தேடவில்லை. அவர்கள் இஸ்ரேலுக்குப் பதிலாக ஒரு நாட்டைத் தேடுகிறார்கள்," என்று நேதன்யாகு தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவும் பிரான்சின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
- வேறு எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் இந்த பணத்தை வேறு ஒருவருக்கு கொடுக்கப்போகிறார்.
- தங்கள் துணையிடம் அன்புக்கும், சமையலுக்கும் விலையை நிர்ணயிக்கக்கூடாது என சிலர் பதிவிட்டனர்.
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருக்காக தினமும் தயார் செய்யும் மதிய உணவுக்காக அவரிடம் நாள்தோறும் ரூ.1,160 வசூலிப்பதாக தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு வீடியோவில், என் கணவர் வேலைக்கு செல்லும் போது, அவருக்கு மதிய உணவு சமைத்து கொடுக்கிறேன். இதற்காக ஒரு நாளைக்கு 10 பவுன்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.1,160 ) வசூலிக்கிறேன்.
அவர் வேறு எந்த உணவகத்தில் சாப்பிட்டாலும் இந்த பணத்தை வேறு ஒருவருக்கு கொடுக்கப்போகிறார். அதற்கு பதிலாக ஏன் எனக்கு தரக்கூடாது? என கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் இந்த வீடியோ வைரலாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். தங்கள் துணையிடம் அன்புக்கும், சமையலுக்கும் விலையை நிர்ணயிக்கக்கூடாது என சிலர் பதிவிட்டனர்.
- 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.
- நிறுவனத்தில் மிக நீண்ட காலம் உயர் பதவியை சுந்தர் பிச்சை வகித்து வருகிறார்.
கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்து வருபவர் சுந்தர் பிச்சை. தமிழ்நாட்டில் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். படிப்படியாக முன்னேறிய அவர் கூகுளின் ஆண்ட்ராய்டு பிரிவை வழிநடத்தினார்.
அந்த நிறுவன வளர்ச்சியில் இவரது பங்கு மிக சிறப்பானது. இவரது திறமையால் 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்.
இந்த பதவிக்கு வந்து தற்போது அவர் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்த நிறுவனத்தில் மிக நீண்ட காலம் உயர் பதவியை சுந்தர் பிச்சை வகித்து வருகிறார்.
சுந்தர் பிச்சை பொறுப்பேற்றது முதல் தற்போது வரை கூகுள் நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்தது. 2023-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 86.5 லட்சம் கோடி) அதிகமான உள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையில் கூகுள் அடைந்த முன்னேற்றம் நிறுவனத்தின் பங்குகளை அசுர வேகத்தில் உயர்த்தியது.
இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்குகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
முதலீட்டாளர்களுக்கும் 120 சதவீதத்துக்கும் மேலான வருமானத்தை இது வழங்கி உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் இந்த பிரமாண்ட வளர்ச்சி சுந்தர் பிச்சையை பில்லியனர் அந்தஸ்துக்கு உயர்த்தி உள்ளது. ப்ளூம் பெர்க் அறிக்கையின் படி சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரம் கோடி) டாலராக உயர்ந்து உள்ளது.
மேலும் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு ரூ. 1.2 பில்லியனாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய கோடீசுவரர் பட்டியில் சுந்தர் பிச்சை இடம் பிடித்து உள்ளார்.
ஒரு நிறுவனத்தின் நிறுவனராக இல்லாத தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் பில்லியனர் ஆவது என்பது மிகவும் அரிதான சாதனையாகும். இந்த சாதனையை சுந்தர் பிச்சை நிகழ்த்தி தமிழரின் பெருமையை உலகெங்கும் நிலை நாட்டி உள்ளார்.
- தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.
- தாய்லாந்து அனைத்து நில எல்லைகளையும் மூடியுள்ளதுடன், தங்கள் குடிமக்களை கம்போடியாவை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது.
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
அண்மையில் எல்லையில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பப் பெற்றன.
இந்நிலையில் நேற்று எல்லையில் இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கிக்கொண்டனர். தாய்லாந்து F16 விமானங்களை பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.
தாய்லாந்து சுகாதார அமைச்சகம், ஒரு தாய்லாந்து வீரர் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 14 வீரர்கள் மற்றும் 32 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. கம்போடியா தரப்பில் குறைந்தது 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
எல்லையோர கிராமங்களில் இருந்து 4,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்ற மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தாய்லாந்து அனைத்து நில எல்லைகளையும் மூடியுள்ளதுடன், தங்கள் குடிமக்களை கம்போடியாவை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது.
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இரு தரப்பினரையும் அதிகபட்ச நிதானத்துடன் செயல்படவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கவும் வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளும் மோதலுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றன.
இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரகாலக் கூட்டம் நடைபெற உள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினைகள் இருந்து வருகிறது. இதற்கிடையே தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் மற்றும் கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் கசிவு தொடர்பான அரசியல் சர்ச்சையும் இந்த மோதலுக்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
- உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த வீடியோக்களை பெற்றுள்ளார்.
- மற்றொரு மருத்துவரின் உதவியுடன் தனது இரண்டு கால்களையும் அகற்றினார்.
பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவர் காப்பீட்டுத் தொகைக்காக தனது கால்களை அகற்றிய சம்பவம் அரங்கேறி உள்ளது. 5 லட்சம் பவுண்டுகள் (ரூ. 5.4 கோடி) கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இரண்டு முழங்கால்களுக்கும் கீழே உள்ள பகுதியை அகற்றினார்.
நீல் ஹாப்பர் (49) என்ற அந்த மருத்துவர் தனது இரண்டு கால்களையும் வேண்டுமென்றே அகற்றியதாக காப்பீட்டு நிறுவனங்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் முழங்கால்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்த சில பிரீமியம் வீடியோக்களை நீல் ஒரு வலைத்தளத்திலிருந்து வாங்கியது கண்டறியப்பட்டது. அவற்றின் அடிப்படையில், அவர் மற்றொரு மருத்துவரின் உதவியுடன் தனது இரண்டு கால்களையும் அகற்றினார்.
தனக்கு இரத்த நாளப் பிரச்சினை இருப்பதாகவும், முழங்கால்கள் அகற்றப்படாவிட்டால், அது உடல் முழுவதும் பரவும் என்றும் தங்களை நம்ப வைக்க முயன்றதாக காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளன.
- துருக்கியில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.
- காட்டு தீயில் சிக்கி பல ஏக்கர் எரிந்து நாசமாகி உள்ளன.
அங்காரா:
துருக்கியின் எஸ்கிசெஹிர் மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது. இந்தக் காட்டு தீயில் சிக்கி இதுவரை பல ஏக்கர் எரிந்து நாசமாகி உள்ளன. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து அதனை அணைக்க முயன்று வருகின்றனர்.
இதில் பல ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன. எனினும் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
இந்நிலையில், பலத்த சூறாவளி காற்று வீசியதால் காட்டுத் தீயின் திசை மாறியது. தீயணைப்புப் பணியில் இருந்த மீட்புப்படையினர் அதில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 10 பேர் உடல் கருகி பலியாகினர்.
படுகாயம் அடைந்த 14 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காட்டுத் தீயில் சிக்கி கருகி பலியான தீயணைப்பு வீரர்களுக்கு அந்நாட்டு அதிபர் எர்டோகன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
- கிரிக்கெட் வெறும் ஒரு விளையாட்டு அல்ல, மாறாக அது ஒரு உணர்வும்கூட.
- இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
லண்டன்:
இங்கிலாந்து சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துப் பேசினார். அதன்பின் அவருடன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டார்.
இதுதொடர்பாக, அவர் கூறுகையில், நம் இரு நாடுகளுக்கும் கிரிக்கெட் என்பது வெறும் ஒரு விளையாட்டு அல்ல, மாறாக அது ஒரு உணர்வும்கூட. நமது உறவுகளுக்கு அது மிகப்பெரிய உருவகமுமாக உள்ளது. சில நேரங்களில் ஒரு 'ஸ்விங்' மற்றும் ஒரு 'மிஸ்' இருக்கலாம். ஆனால் நாங்கள் எப்போதும் நேராக (ஸ்ட்ரெயிட் பேட்) விளையாடுகிறோம். அதிக ரன்கள், உறுதியான கூட்டணியை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த ஒப்பீடு செய்தியாளர் சந்திப்பில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக, பங்கிங்காம் தெரு கிரிக்கெட் கிளப் வீரர்களுடன் மோடி மற்றும் ஸ்டார்மர் இருவரும் கலந்துரையாடினர்.
பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டிருக்கும் இந்நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
- பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார்.
- இரு நாடுகளுக்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
லண்டன்:
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மரைச் சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், சாண்ட்ரிங்ஹாம் இல்லத்தில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லசை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியை மன்னர் சார்லஸ் வரவேற்றார். அப்போது, மரக்கன்று ஒன்றை சார்லசுக்கு பிரதமர் மோடி வழங்கினார்.
சுற்றுச்சூழலை ஊக்குவிக்க பிரதமர் தொடக்கி வைத்த "Ek Ped Maa Ke Naam" திட்டத்தால் மன்னர் ஈர்க்கப்பட்டார் என அரச குடும்பம் தெரிவித்துள்ளது.
- 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஹல்க் ஹோகன்.
- WWE போட்டியை பிரபலமாக்கியதில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.
புளோரிடா:
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் (71), அமெரிக்காவில் காலமானார். இவர் 90ஸ் கிட்ஸ் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.
புகழ்பெற்ற அமெரிக்க மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன். WWE போட்டியை பிரபலமாக்கியதில் இவருக்கு முக்கிய இடம் உண்டு.
ஹல்க் ஹோகனின் வீரதீர ஆளுமை, தேசபக்தி விளம்பரங்கள் மற்றும் உடல்கட்டு ஆகியவற்றால் அவரது புகழ் உயர்ந்தது. அவரது மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
- வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். லண்டன் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது பிரதமர் மோடியின் 4-வது இங்கிலாந்து பயணம் என்றாலும் ஸ்டாமர் இங்கிலாந்து பிரதமராக பதவியேற்ற பின்பு அவர் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியா- இங்கிலாந்து உறவுகளின் வரலாற்றில் சிறப்புமிக்க நாளாகும். வர்த்தக ஒப்பந்தத்தால் இரு நாடுகளுக்கும் அதிக பலன் கிடைக்கும். பல ஆண்டுகளுக்குப் பின் இந்தியா- இங்கிலாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது மகிழ்ச்சி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






