என் மலர்tooltip icon

    உலகம்

    தாய்லாந்து - கம்போடியா இடையே வெடித்த மோதல்.. 14 பேர் பலி - வான்வழித் தாக்குதலால் பரபரப்பு
    X

    தாய்லாந்து - கம்போடியா இடையே வெடித்த மோதல்.. 14 பேர் பலி - வான்வழித் தாக்குதலால் பரபரப்பு

    • தாய்லாந்து வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.
    • தாய்லாந்து அனைத்து நில எல்லைகளையும் மூடியுள்ளதுடன், தங்கள் குடிமக்களை கம்போடியாவை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது.

    தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    அண்மையில் எல்லையில் ஒரு கண்ணிவெடி வெடித்ததில் ஐந்து தாய்லாந்து வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பப் பெற்றன.

    இந்நிலையில் நேற்று எல்லையில் இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கிக்கொண்டனர். தாய்லாந்து F16 விமானங்களை பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியது.

    தாய்லாந்து சுகாதார அமைச்சகம், ஒரு தாய்லாந்து வீரர் மற்றும் குழந்தைகள் உட்பட 13 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 14 வீரர்கள் மற்றும் 32 பொதுமக்கள் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. கம்போடியா தரப்பில் குறைந்தது 4 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

    எல்லையோர கிராமங்களில் இருந்து 4,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்ற மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    தாய்லாந்து அனைத்து நில எல்லைகளையும் மூடியுள்ளதுடன், தங்கள் குடிமக்களை கம்போடியாவை விட்டு வெளியேற வலியுறுத்தியுள்ளது.

    ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் இரு தரப்பினரையும் அதிகபட்ச நிதானத்துடன் செயல்படவும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கவும் வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளும் மோதலுக்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டுகின்றன.

    இதுதொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நியூயார்க்கில் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் அவசரகாலக் கூட்டம் நடைபெற உள்ளது.

    இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினைகள் இருந்து வருகிறது. இதற்கிடையே தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் மற்றும் கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹுன் சென் ஆகியோரின் தொலைபேசி உரையாடல் கசிவு தொடர்பான அரசியல் சர்ச்சையும் இந்த மோதலுக்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×