என் மலர்
உலகம்
- மேலும் 160 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
- மண்டபத்தில் வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா சமூகத்தினரின் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள கதீஜா துல் குப்ரா மசூதியில் இன்று மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சந்தேக நபர் ஒருவர் மசூதி மண்டபத்தில் வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளார்.
இதில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 160 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
குண்டுவெடிப்பின் தாக்கத்தால் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை எந்த அமைப்பும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாதிகள் பயங்கரவாத தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் தலைநகரிலேயே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுரங்கத் தொழில் மட்டுமல்லாது, சாலைகள், எரிசக்தி மற்றும் உள்ளூர் மக்களின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும்
- சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கான ஒரு மூலோபாய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
'புராஜெக்ட் வால்ட்' என்ற திட்டத்தின் மூலம், பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள தங்கம் மற்றும் செம்புச் சுரங்கங்களை மேம்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 13 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முதலீடானது சுரங்கத் தொழில் மட்டுமல்லாது, சாலைகள், எரிசக்தி மற்றும் உள்ளூர் மக்களின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் இந்த 13 பில்லியன் டாலர்கள் முதலீடு பெரும் பொருளாதார உதவியாக இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
பலுசிஸ்தானில் ஏற்கனவே சீனா தனது சீனா-பாக்கிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) திட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தற்போது அமெரிக்காவின் இந்த திட்டம், அப்பகுதியில் சீனாவின் செல்வாக்கைக் குறைப்பதற்கான ஒரு மூலோபாய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாதக் குழுக்களின் தாக்குதல்கள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த பிரம்மாண்ட திட்டத்தைச் செயல்படுத்துவது அமெரிக்காவிற்கும் பாகிஸ்தான் அரசிற்கும் ஒரு பெரிய சவாலாக இருக்கும்.
- ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
- அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியாகியுள்ளது.
அமெரிக்கா-ரஷியா அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அல்லது குறைக்கும் நோக்கில், 2010ஆம் ஆண்டு நியூ ஸ்டார்ட் என்ற ஒப்பந்தம் செய்து கொண்டன. இதில் இரு நாடுகளும் தலா 1,550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்துக்கொள்ள முடியும். இந்த ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டு வாக்கில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது.
இதற்கிடையே அணு ஆயுத ஒப்பந்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. ஒப்பந் த்தை நீட்டிக்க ரஷியா விரும்பியது. ஆனால் அதை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கவில்லை. இதனால் இரு நாடுகள் இடையேயான அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியாகியுள்ளது. இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம்.
இந்த விஷயத்தில் ரஷியா மிகுந்த பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படும். அதேநேரம், எங்களின் தேச நலன்களுக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா். இந்த நிலையில் டிரம்ப் தனது சொந்த சமூக வலைத்தளமான ட்ரூத்-இல், நீண்ட காலம் நீடித்து நிலைக்கக்கூடிய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்த பதிவில், "நமது அணுசக்தி வல்லுநர்களைக் கொண்டு, எதிர்காலத்தில் நீண்ட காலம் நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு புதிய, மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஒப்பந்தத்தை உருவாக்க நாம் பணியாற்ற வேண்டும்ஷ" என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், காலாவதியான ஸ்டார்ட் ஒப்பந்தத்தின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வாஷிங்டனும் மாஸ்கோவும் ஒப்புக்கொண்டிருக்கிறசா என்ற கேள்விக்கு, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், "எனக்குத் தெரிந்தவரை இல்லை" என்று பதிலளித்தார்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
- அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. அவற்றை ஒடுக்க அரசு எடுத்த நடவடிக்கையால் வன்முறை ஏற்பட்டது. இதில் 6000-கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. மேலும் ஈரானை நோக்கி அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் விரைந்தன. இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இதுதொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அவசரமாக அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "ஈரானில் பதற்ற சூழல் அதிகரித்து வருகிறது. அங்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்படுதல், போக்குவரத்து இடையூறுகள், தடுத்து வைக்கப்படும் அபாயங்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்க குடிமக்கள் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறது. அமெரிக்க குடிமக்கள் ஈரானில் விசாரணை, கைது மற்றும் தடுப்புக்காவல் அபாயத்திற்கு உள்ளாகக்கூடும். அங்கு அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து இணைய தடைகளையும் எதிர்கொள்ளலாம்."
"விமானங்கள் ரத்து மற்றும் இடையூறுகள் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஈரானில் இருந்து வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை போதுமானதாக வைத்து கொள்ள வேண்டும்," என்று தெரிவித்து உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவும் நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
- அமெரிக்காவில் பல்வேறு இணையதளங்கள் மூலமாக போலியான இந்திய மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுவது குறித்து புகார்கள் எழுந்தன.
- இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட பல மாத்திரைகளில் உயிருக்கு ஆபத்தான பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் மற்றும் இந்திய நிறுவனங்களால் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் இந்திய மருந்துகளுக்கு அமெரிக்காவில் எப்போதும் கிராக்கி இருக்கிறது.
அமெரிக்காவில் இந்திய மருந்துகள் அதிக மதிப்பும் தேவையும் பெறுவதற்குக் காரணம் அவற்றின் உயர்தர தரநிலைகள், குறைந்த செலவு. மற்றும் நம்பகமான உற்பத்தித் திறன் ஆகும்.
உலகத் தரச் சான்றிதழ்களுடன் தயாரிக்கப்படும் இந்திய மருந்துகள், தரத்தில் எந்த சமரசமும் இன்றி மலிவான சிகிச்சையை வழங்குகின்றன. இதனால் அமெரிக்காவின் சுகாதார அமைப்பில் இந்திய மருந்துகள் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன.
இந்தநிலையில் அமெரிக்காவில் பல்வேறு இணையதளங்கள் மூலமாக போலியான இந்திய மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுவது குறித்து புகார்கள் எழுந்தன. மேலும் டாக்டர்கள் பரிந்துரை இல்லாமல் இந்த மருந்துகளை உட்கொண்ட 10 பேர் உயிரிழந்தது குறித்து அந்த நாட்டின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரித்தது.
இதற்காக இந்தியாவின் அமலாக்கத்துறையிடம் அமெரிக்க புலனாய்வு நிறுவனம் தகவல்கள் பெற்றது. அதன்படி இந்தியாவில் இயங்கி வந்த ஒரு சர்வதேச குற்றவியல் கும்பலுக்கு சொந்தமான 200-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் மூலமாக அமெரிக்காவில் அந்த போலி மருந்துகளை சட்டவிரோதமாக விற்றது தெரிய வந்தது.
இந்த இணையதளங்கள் முறையான டாக்டர் பரிந்துரை சீட்டு இன்றி, போலியான மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்து வந்துள்ளன. இந்த இணையதளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட பல மாத்திரைகளில் உயிருக்கு ஆபத்தான பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து போலி இந்திய மருந்துகளை விற்ற 200 இணையதளங்கள் அமெரிக்காவில் முடக்கப்பட்டன. நியூயார்க்கில் இருந்த இந்தியர்கள் உள்பட 4 பேர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- வெனிசுலா முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறை பிடித்தது.
- நிகோலஸ் மதுரோ மீது அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
கராகஸ்:
வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்கா சிறை பிடித்து தங்களது நாட்டுக்கு அழைத்துச் சென்றது. அவர்கள் மீது அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குக்காக நிகோலஸ் மதுரோவை நாடு கடத்துமாறு அமெரிக்காவிடம் அர்ஜென்டினா கோரிக்கை விடுத்துள்ளது. நிகோலஸ் மதுரோ மீது மனித உரிமை அமைப்புகளால் 2023-ம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குக்காக அவரை அர்ஜென்டினாவுக்கு நாடு கடத்துமாறு நீதிபதி கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோவின் மிக நெருங்கிய கூட்டாளியான அலெக்ஸ் சாப் வெனிசுலாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.
ஏற்கனவே அமெரிக்க சிறையில் இருந்து விடுதலையான இவர், மதுரோ பிடிபட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் கைதாகி உள்ளார்.
அமெரிக்காவின் எப்.பி.ஐ. மற்றும் வெனிசுலா உளவு அமைப்பான செபின் ஆகியவை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இவர் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் ரஷியாவுக்கு எதிரான போரில் சுமார் 55,000 வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
2022-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் போரில் இருதரப்பிலும் சுமார் 5 லட்சம் பேர் பலியானதாகவும், சுமார் 15 லட்சம் பேர் காயமடைந்தனர் என கூறப்படுகிறது.
இந்தப் போரில் ரஷியா சார்பில் 3.25 லட்சம் பேரும், உக்ரைன் சார்பில் 1.4 லட்சம் பேரும் உயிரிழந்து இருக்கலாம் என சர்வதேச ஆய்வுகள் மையத்தின் அறிக்கை கூறுகிறது.
- கிராம மக்களைச் சூழ்ந்து கொண்டு, பலரின் கைகளைக் கட்டிப் போட்டு சுட்டுக் கொன்றுள்ளனர்.
- ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய லகுராவா என்ற ஆயுதக் குழுவினர் நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
நைஜீரியாவின் குவாரா மாநிலத்தில் உள்ள 2 கிராமங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் சுமார் 200 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 3-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு, குவாரா மாநிலத்தின் வோரோ மற்றும் நுகு ஆகிய இரண்டு தொலைதூர கிராமங்களுக்குள் மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பயங்கரவாதிகள், கிராம மக்களைச் சூழ்ந்து கொண்டு, பலரின் கைகளைக் கட்டிப் போட்டு சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும், பல வீடுகள் மற்றும் கடைகளுக்கும் தீ வைத்துள்ளனர்.
இந்தத் தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய லகுராவா என்ற ஆயுதக் குழுவினர் நடத்தியதாக தெரிய வந்துள்ளது.
நைஜீரிய ராணுவம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதல்களால் ஏற்பட்ட விரக்தியிலேயே, அவர்கள் இது போன்ற கோழைத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளதாகக் குவாரா மாநில ஆளுநர் அப்துல் ரஹ்மான் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
- பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
- அதில் ஒரு பெண்ணுடன் அவர் அரை நிர்வாணமாக இருக்கிறார்.
அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000 வீடியோக்கள் மற்றும் 1.8 லட்சம் படங்களை ஜன.31ம் தேதி வெளியிட்டது.
இதில் உலகின் பல செல்வாக்குமிக்க மனிதர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, தொழிலதிபர்கள் பில் கேட்ஸ், எலான் மஸ்க், அனில் அம்பானி, பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
முன்னதாக கடந்தாண்டு வெளியான ஆவணங்களில் அமெரிக்காவுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சனின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றது.
இதனால், கடந்த ஆண்டு செப்டம்பரில் பீட்டர் மண்டேல்சனை தூதர் பதவியிலிருந்து நீக்கி பிரதமர் ஸ்டார்மர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் பீட்டர் மண்டேல்சன் தொடர்புடைய புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. அதில் ஒரு பெண்ணுடன் அவர் அரை நிர்வாணமாக இருக்கிறார்.
இதன்மூலம் எப்ஸ்டீனுடன் ர் பீட்டர் மண்டேல்சன் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தது உறுதியாகி உள்ளது.
இதனால் சர்ச்சை தீவிரமடைந்த நிலையில் பீட்டர் மண்டேல்சனுக்கு பதவி வழங்கிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. புதியதாக எப்ஸ்டீனின் கோப்புகள் வெளியானதைத் தொடர்ந்து ஸ்டார்மரின் அரசு கடும் அழுத்ததில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் பீட்டர் மண்டேல்சனின் பொய்களை நம்பி அவருக்கு பதவி வழங்கியதாகவும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் இன்று பேசியுள்ளார்.
- இளைஞன் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
- டிரம்ப் கொள்கைகள் மீது ரூத் கடும் அதிருப்தியில் இருந்தார்.
2024 நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி வெற்றி பெற்றது.
தேர்தலுக்கு முன் டிரம்ப் மீது இரண்டு முறை கொலை முயற்சி நடந்தது. முதல் முயற்சி ஜூலை மாதம் பென்சில்வேனியா பிரசார கூட்டத்தில் டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது நடந்தது.
தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 19 வயது இளைஞர் டிரம்ப்-ஐ நோக்கி சுட்டார். குண்டு டிரம்ப்பின் காதை உரசி சென்றதால் அவர் உயிர்பிழைத்தார். தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் பாதுகாப்பு அதிகாரிகளால் அங்கேயே சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இதன்பின் செப்டம்பர் மாதம் புளோரிடாவில் உள்ள தனக்கு சொத்தான மைதானத்தில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர் மீது 2வது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதிலும் குண்டு டிரம்ப் மீது படவில்லை. தூரத்தில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த ரியான் வெஸ்லி ரூத் என்ற நபரை போலீசார் துரத்திச் சென்று கைது செய்தனர்.
கொலை முயற்சி, துப்பாக்கிச் சட்ட மீறல் மற்றும் அரசு அதிகாரிகளைத் தாக்கியது உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உக்ரைன் போர் மற்றும் டிரம்ப் வெளியுறவுக் கொள்கைகள் மீது ரூத் கடும் அதிருப்தியில் இருந்ததும், அதன் காரணமாகவே இந்தத் தாக்குதலுக்குத் திட்டமிட்டதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஐலீன் கேனன், குற்றவாளியின் செயல் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டு, அவருக்கு ஆயுள் தண்டனையை விதித்து உத்தரவிட்டார்.
- பிரதமர் மோடியின் பெயரும் எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றுள்ளது.
- நிச்சயமாக ஜெஃப்ரி தனக்குத்தானே ஒரு மின்னஞ்சலை எழுதியிருக்கிறார்.
அமெரிக்க நீதிமன்றம் வெளியிட்ட 'எப்ஸ்டீன் கோப்புகள்' உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காரணம் உலகின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் பெயர்கள் அதில் இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ர்ம்ப், பிரதமர் மோடி, தொழிலதிபர் பில் கேட்ஸ் ஆவர்.
இந்நிலையில் பில் கேட்ஸ் இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்புக் கோரியுள்ளார். சமீபத்தில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில், பில் கேட்ஸ் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனால் அவருக்குப் பாலியல் தொற்று நோய் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்தத் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும், எப்ஸ்டீன் தன்னை அவதூறு செய்வதற்காகவே அத்தகைய மின்னஞ்சல்களை எழுதியிருப்பார் என்றும் பில் கேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பில் கேட்ஸ்,
"அவருடன் நான் கழித்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் வருந்துகிறேன், நான் அப்படிச் செய்ததற்கு மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன்," என்று கேட்ஸ் கூறினார். "நிச்சயமாக ஜெஃப்ரி தனக்குத்தானே ஒரு மின்னஞ்சலை எழுதியிருக்கிறார். நான் அவர் குறிப்பிட்டுள்ளவாறு எந்த மின்னஞ்சலையும் எழுதவில்லை. மேலும் அதில் உள்ள தகவல்கள் பொய்யானவை. அவருடைய உள்நோக்கம் என்னவாக இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏதோ ஒரு வகையில் என்மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்துள்ளார்." என்று தெரிவித்தார்.
மேலும் எப்ஸ்டீன் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட பிறகும் 2011 இல் அவரை சந்தித்ததாக கேட்ஸ் ஒப்புக்கொண்டார். ஆனால் ஒருபோதும் எப்ஸ்டீனின் தனியார் தீவுக்கு சென்றதில்லை என்றும் தெரிவித்துள்ளார். "அவருடன் நேரத்தைச் செலவிட்டது நான் செய்த முட்டாள்தனம், அவரைத் தெரிந்ததற்காக வருந்தும் பல நபர்களில் நானும் ஒருவன்." என்றும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இதுதொடர்பாக பேசியிருந்த பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா, எப்ஸ்டீன் தொடர்பான இந்த ஆவணங்கள் தனது திருமண வாழ்க்கையின் வேதனையான நினைவுகளை மீண்டும் கொண்டு வருவதாகவும், இது தொடர்பாக பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
- கடந்த 2023-ம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- அர்ஜென்டினா கோர்ட்டு நீதிபதி செபாஸ்டியன் ராமோஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்கா சிறை பிடித்து தங்களது நாட்டுக்கு அழைத்து சென்றது. அவர்கள் மீது அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
இந்தநிலையில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குக்காக நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்துமாறு அமெரிக்காவிடம் அர்ஜென்டினா கோரிக்கை விடுத்துள்ளது.
நிக்கோலஸ் மதுரோ மீது மனித உரிமை அமைப்புகளால் கடந்த 2023-ம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு விசாரணைக்காக நிக்கோலஸ் மதுரோவை அர்ஜென்டினாவுக்கு நாடு கடத்துமாறு அர்ஜென்டினா கோர்ட்டு நீதிபதி செபாஸ்டியன் ராமோஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.






