வெனிசுலா முன்னாள் அதிபரின் நெருங்கிய கூட்டாளி மீண்டும் கைது

வெனிசுலா முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா சிறை பிடித்தது. நிகோலஸ் மதுரோ மீது அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.
வெனிசுலா முன்னாள் அதிபரின் நெருங்கிய கூட்டாளி மீண்டும் கைது
Published on

கராகஸ்:

வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்கா சிறை பிடித்து தங்களது நாட்டுக்கு அழைத்துச் சென்றது. அவர்கள் மீது அமெரிக்க கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே, மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குக்காக நிகோலஸ் மதுரோவை நாடு கடத்துமாறு அமெரிக்காவிடம் அர்ஜென்டினா கோரிக்கை விடுத்துள்ளது. நிகோலஸ் மதுரோ மீது மனித உரிமை அமைப்புகளால் 2023-ம் ஆண்டு அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்சில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குக்காக அவரை அர்ஜென்டினாவுக்கு நாடு கடத்துமாறு நீதிபதி கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், முன்னாள் அதிபர் நிகோலஸ் மதுரோவின் மிக நெருங்கிய கூட்டாளியான அலெக்ஸ் சாப் வெனிசுலாவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே அமெரிக்க சிறையில் இருந்து விடுதலையான இவர், மதுரோ பிடிபட்ட ஒரு மாதத்திற்குள் மீண்டும் கைதாகி உள்ளார்.

அமெரிக்காவின் எப்.பி.ஐ. மற்றும் வெனிசுலா உளவு அமைப்பான செபின் ஆகியவை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் இவர் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com