என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஷர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- அவருக்குப் பதிலாக சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்ற நிலையில், அடுத்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான Gen Z குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் வன்முறை முடிவுக்கு வந்தது. முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
பிரதமராக பதவி ஏற்றதும், அடுத்த வருடம் மார்ச் மாதம் 5ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்துவற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேபாள அதிபர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயதை 18 வயதில் இருந்து, 16ஆக குறைப்பதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதன்மூலம் நேபாளத்தில் 16 வயது நிறைவடைந்தோர், வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். பொதுவாக தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் வழங்கப்படும். தற்போது இப்போதில் இருந்தே விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், 16 வயதில் விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டை பெற்றாலும், 18 வயது நிரம்பிய பின்னர்தான் வாக்கு செலுத்த முடியும்.
- தேர்ந்தெடுக்கப்படட்ட மாணவிகளிடம் பெண் ஆசிரியைகள் பேசி அவர்களை சுவாமியின் ஆபீசுக்கு அல்லது அறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
- இந்த பெண் ஆசிரியர்களில் சிலர் ஏற்கனேவே அக்கல்லூரியில் பயின்று சாமியாரின் வலையில் விழுந்த முன்னாள் மாணவிகளே ஆவர்.
டெல்லியில் பிரபல சாமியாராக வளம் வந்த சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி பாலியல் வழக்கில் தேடப்படும் குற்றவாளி ஆகியுள்ளார்.
வசந்த் கஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆசிரமத்தின் இயக்குனராக இருந்த அவர் மீது, ஆசிரமத்தின் கீழ் இயங்கும் மேலாண்மை கல்வி நிறுவனத்தில் பயின்று வந்த 17 மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு (EWS) ஸ்காலர்ஷிப் உடன் முதுநிலை டிப்ளமோ பயின்று வந்த அம்மாணவிகளை அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தனது இச்சைக்கு இணங்க வைக்க பல்வேறு வழிகளில் முயன்றுள்ளார்.
சாமியாரின் நோக்கங்களுக்கு இணங்குமாறு சில ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களும் தங்களை கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய டெல்லி போலீஸ், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்த ஆசிரம வார்டன்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் துன்புறுத்தல் உள்பட பிரிவுகளின் கீழ் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதாயறிந்த சைதன்யானந்த சரஸ்வதி தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சாமியார் எவ்வாறு மாணவிகளை கட்டாயப்படுத்தினார் என்பது குறித்து அந்த கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் மாணவர் ஒருவர் முன்வந்து பொதுவெளியில் பேசியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சாமியார், மாணவிகளை இலவசமாக வெளிநாட்டு பயணம், ஐபோன்கள், சொகுசு கார்கள், லேப்டாப்களை வழங்குவதாக அட்மிஷன் போடும் சமயத்தில் இருந்தே ஆசை காட்டத் தொடங்குவார்.
புதிய மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து வகுப்புகளுக்கு வரத் தொடங்கியதும் அவர்களில் யாரை குறிவைப்பது என்ற செயல்முறை தொடங்கும்.
அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிக மதிப்பெண்கள், வெளிநாட்டு இண்டர்ன்ஷிப் வாய்ப்புகள், பெரிய நிறுவனங்களில் பிளேஸ்மென்ட் வாய்ப்புகள் ஆகியவை வழங்கப்படும். இதை ஏற்று ஒத்துழைக்கவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை கல்லூரியில் ஒவ்வொரு நாளும் கடினமானதாக மாறும்.
இந்த மாணவிகள் இரவு தங்குவதற்கு கட்டப்படுத்தப்படுவர். யாருடன் பேச அனுமதிக்கப்படாமல் 24 மணிநேரமும் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.
இருந்தும் அடம் பிடிக்கும் சில பெண்கள் காட்டமாக நடத்தப்பட்டு கல்லூரியில் இருந்தே நீக்கப்படுவார்கள். அந்த பெண்களின் பெற்றோர்களுக்கும் அழுத்தம் தரப்படும்.
பெண்களை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் என்று கேட்டால், சைத்னயானந்த சரஸ்வதியே தனிப்பட்ட முறையில் இந்த செயல்முறையில் ஈடுபடுவார்.
ஒவ்வொரு மாணவியிடமும் தனித் தனியே சுவாமி பேசுவார். இதன் பின் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவரே சில சமயம் பாடம் பெண்களுக்கு தனியே பாடம் எடுக்க வருவார்.
இந்த சமயத்திலும் அவர் தனக்கேற்ற மாணவிகளை தேர்ந்தெடுப்பார். இதன் பின் சுவாமியால் தேர்ந்தெடுக்கப்படட்ட மாணவிகளிடம் பெண் ஆசிரியைகள் பேசி அவர்களை சுவாமியின் ஆபீசுக்கு அல்லது அறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்த பெண் ஆசிரியர்களில் சிலர் ஏற்கனேவே அக்கல்லூரியில் பயின்று சாமியாரின் வலையில் விழுந்த முன்னாள் மாணவிகளே ஆவர். அவர்கள் சாமியார் அளித்த வெளிநாடு பயணம் உள்ளிட்ட சலுகைகளை ஏற்றுக்கொண்டவர்கள்.
2016 லேயே சாமியார் மீது ஒரு ஜூனியர் மாணவி போலீசில் புகார் அளித்தார். ஆனால் பின்னர் சாமியாரின் தரப்பு வெளிநாட்டில் வேலை, unlimited ஷாப்பிங் ஆகிய ஆசை காட்டி அவரை சமரசம் செய்ய முயன்றனர்.
அந்த பெண்ணை ஹாஸ்டலில் அடைத்து வைத்து யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் செய்தனர்.
அப்பெண்ணை சாமியாருடன் 2 நாள் மதுரா பயணம் மேற்கொள்ள நிர்வாகத்தினர் கட்டாயப்படுத்தினர். அந்த பெண் பயந்து தனது வீட்டுக்கு ஓடிச் சென்றார். ஆனால் சாமியாரின் ஆட்கள் வீட்டுக்கு சென்று அவரை அழைத்துச் செல்ல முயன்றனர். பெண்ணின் தந்தை தலையிட்டதை அவர்கள் அங்கிருந்து அகன்றனர்.
மாணவிகளின் ஒரிஜினல் டாகுமெண்ட்களை அட்மிஷனின் போதே வாங்கி வைத்துக்கொள்வார்கள். இதை வைத்து சாமியார் மாணவிகளை மிரட்டுவார். கல்லூரியில் உள்ள 170 சிசிடிவி கேமராக்களும் சாமியாரின் நேரடி கட்டுப்பாட்டில் தான் இருக்கும். அவர் மீது தற்போது எழுந்துள்ள அனைத்து புகார்களும் முற்றிலும் உண்மை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சாமியார் பல அரசியல்வாதிகளுடன் இருப்பதுபோல் போலி புகைப்படங்களை வைத்துக்கொண்டும், சொகுசு கார்கள் வைத்துக்கொண்டும், தன்னை அமெரிக்க தூதர் என கூறிக்கொண்டும் ஏமாற்றி வந்ததாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
- முதல் இன்னிங்சில் இந்தியா 194 ரன்களில் சுருண்டு 226 ரன்கள் பின்தங்கியிருந்தது.
- 2ஆவது இன்னிங்சில ஆஸ்திரேலியா ஏ அணி 226 ரன்னில் சுருண்டது.
இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெற்றது. 2ஆவது டெஸ்ட் லக்னோவில் கடந்த 23ஆம் தேதி தொடங்கியது.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஏ முதல் இன்னிங்சில் 420 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ 194 ரன்களில் சுருண்டது. சாய் சுதர்சன் மட்டும் தாக்குப்பிடித்து 75 ரன்கள் அடித்தார்.
பின்னர் 226 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா ஏ 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. குர்னூர் பிரார், மனாவ் சுதர் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் மற்றும் யாஷ் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்த ஆஸ்திரேலியா ஏ 2ஆவது இன்னிங்சில் 185 ரன்னில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா ஏ 411 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
பின்னர் 412 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஏ அணி களம் இறங்கியது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் இந்தியா ஏ 2 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது, சாய் சுதர்சன் 44 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்று 4ஆவது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. சாய் சுதர்சனுடன் இணைந்து கே.எல். ராகுல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சாய் சுதர்சன் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். துருவ் ஜுரெல் 56 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
கே.எல். ராகுல் 176 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா ஏ அணி 91.3 ஓவரில் 413 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் போட்டி டிராவில் முடிந்த நிலையில், 2ஆவது போட்டியில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது.
- இது வெப்பநிலையைப் பொறுத்து பேனலை கருப்பு நிறத்தில் இருந்து தங்க நிறத்திற்கு மாற்றும் திறன் கொண்டிருக்கிறது.
- இந்த சாதனம் ஆண்ட்ராயடு 15 சார்ந்த கலர் ஓஎஸ் 15இல் இயங்குகிறது.
இந்தியாவில் ரெனோ 14 5ஜி மாடலின் புதிய வெர்ஷனை ஒப்போ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது கலாச்சார ரீதியாக ஈர்க்கப்பட்ட வடிவமைப்பு மற்றும் புதுமையான ஃபினிஷ் கொண்டுள்ளது. இந்த மாடல் வழக்கமான நிறுவனத்தின் அதே அம்சங்களுடன் வருகிறது. அதே நேரத்தில் அதன் பின்புற பேனலில் தனிப்பயனாக்கப்பட்ட தோற்றம் மற்றும் தனித்துவமான தொழில்நுட்பம் உள்ளது.
புதிய வெர்ஷன் ஒப்போ ரெனோ 14 5ஜி தீபாவளி எடிஷன் என அழைக்கப்படுகிறது. இது மண்டலா மற்றும் மயில் உள்ளிட்ட இந்திய மையக்கருத்துகளைச் சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒளி மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கும் சுடர் போன்ற ஃபினிஷ் கொண்டுள்ளது. இவை அனைத்தும் பிளாக் மற்றும் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இது மாறுபாட்டையும் ஆழத்தையும் கொண்டுவருகிறது.
ஸ்பெஷல் எடிஷன் மாடலை வேறுபடுத்தும் வகையில் ஒப்போ நிறுவனத்தின் க்ளோ-ஷிஃப்ட் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இது வெப்பநிலையைப் பொறுத்து பேனலை கருப்பு நிறத்தில் இருந்து தங்க நிறத்திற்கு மாற்றும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த நடைமுறை மற்றும் தோற்றம் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்து இருக்கிறது. இந்த சாதனம் ஏரோ-ஸ்பேஸ் கிரேடு ஃபிரேம், கொரில்லா கிளாஸ் 7i பாதுகாப்பு மற்றும் டஸ்ட், வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்கான IP66, IP68 மற்றும் IP69 மதிப்பீடுகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்போ ரெனோ 14 5ஜி ஸ்பெஷல் எடிஷன் 8GB ரேம், 256GB மெமரி மாடலின் விலை ரூ.39,999 ஆகும். பண்டிகை கால தள்ளுபடி செய்யப்பட்டு இந்த மாடலின் விலை ரூ.36,999 ஆகக் குறைகிறது. வாடிக்கையாளர்கள் கட்டணமில்லா மாத தவணை, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகள் மூலம் ரூ.3,000 வரை கேஷ்பேக், ரூ.3,000 எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.
ஒப்போ ரெனோ 14 5ஜி தீபாவளி எடிஷன் அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போன் 120Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 6.6 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது LPDDR5X RAM மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ், மீடியாடெக் டிமென்சிட்டி 8350 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இத்துடன் 80W சார்ஜிங், 6000mAh பேட்டரி கொண்டுள்ளது.
கேமராவை பொருத்தவரை OIS உடன் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைடு மற்றும் 3.5x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை அடங்கும். இத்துடன் 50MP ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சாதனம் ஆண்ட்ராயடு 15 சார்ந்த கலர் ஓஎஸ் 15இல் இயங்குகிறது. மேலும் இரட்டை ஸ்பீக்கர்கள், இ-சிம் சப்போர்ட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், மேம்பட்ட கூலிங் போன்ற அம்சங்களுடன் வருகிறது.
- சியோமி பேட் 8 ப்ரோ மாடல் ஹைப்பர் ஓஎஸ் 3 கொண்டிருக்கிறது.
- கேமராவை பொருத்தவரை 50MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சியோமி 17 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி பேட் 8 மற்றும் சியோமி பேட் 8 ப்ரோ ஆகியவை நேற்று சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய டேப்லெட்கள் ஸ்னாப்டிராகன் சிப்செட், 144Hz ரிப்ரெஷ் ரேட் உடன் 11.2-இன்ச் ஸ்கிரீன் கொண்டுள்ளன. இவை ஆண்ட்ராய்டு 16 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் 3 மூலம் இயங்குகிறது.
புதிய டேப்லெட் ஸ்டான்டர்டு மாடல் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட் கொண்டிருக்கிறது. சியோமி பேட் 8 ப்ரோ மாலில் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டிருக்கிறது. இந்த இரு மாடல்களிலும் 67W வரை சார்ஜிங் மற்றும் 9,200mAh பேட்டரியை கொண்டுள்ளது.
சியோமி பேட் 8 ப்ரோ அம்சங்கள்:
சியோமி பேட் 8 ப்ரோ மாடல் ஹைப்பர் ஓஎஸ் 3 கொண்டிருக்கிறது. இதில் 11.2-இன்ச் 3.2K (2136x3200 பிக்சல்) LCD ஸ்கிரீன், 144Hz ரிப்ரெஷ் ரேட்மற்றும் TUV ரைன்லேண்ட் சான்றிதழ் கொண்டுள்ளது.
இந்த புதிய டேப்லெட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டில் இயங்குகிறது. அட்ரினோ GPU உடன் இணைந்து, 16GB வரை ரேம் மற்றும் 512GB வரையிலான மெமரியுடன் வருகிறது. கேமராவை பொருத்தவரை 50MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
சியோமி பேட்8 ப்ரோ மாடல் 5ஜி, ப்ளூடூத் 5.4, வைபை 7 மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட், பக்கவாட்டில் கைரேகை சென்சார், டால்பி அட்மோஸ் ஆதரவுடன் குவாட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. சியோமி பேட்8 ப்ரோ மாடல் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 9,200mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
சியோமி பேட் 8 அம்சங்கள்:
சியோமி பேட் 8 மாடலில் ஸ்னாப்டிராகன் 8s ஜென் 4 சிப்செட், 12GB ரேம், 256GB மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதில் 13MP பிரைமரி கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமரா உள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் பேட்8 ப்ரோ மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதில் 9,200mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அம்சங்கள் பேட் 8 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.
சியோமி பேட் 8, சியோமி பேட் 8 ப்ரோ விலை
சியோமி 8 ப்ரோ மாடலின் 8GB + 128GB மாடலின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் ரூ. 34,500) என தொடங்குகிறது. இதன் 8GB + 256GB மாடல் CNY 3,099 (இந்திய மதிப்பில் ரூ. 38,000), 12GB + 256GB மாடல் CNY 3,399 (இந்திய மதிப்பில் ரூ. 42,700), 12GB + 512GB மாடல் CNY 3,699 (இந்திய மதிப்பில் ரூ. 46,000) மற்றும் 16GB + 512GB மாடல் CNY 3,899 (இந்திய மதிப்பில் ரூ. 48,000) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சியோமி பேட் 8 மாடலின் 8GB + 128GB மாடல் CNY 2,199 (இந்திய மதிப்பில் ரூ. 27,500) இல் தொடங்குகிறது. 8GB + 256GB மாடல் CNY 2,699 (இந்திய மதிப்பில் ரூ. 27,700) மற்றும் 12GB + 256GB மாடல் CNY 2,799 (இந்திய மதிப்பில் ரூ. 30,600) விலையில் கிடைக்கிறது.
- விஜய் வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம்.
- ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நம் வெற்றித் தலைவர், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருவதை அனைவரும் அறிவீர்கள். நாளை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், நம் வெற்றித் தலைவர் கலந்துகொள்ள உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை.
எனவே நம் வெற்றித் தலைவரின் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது கழகத் தோழர்களும் பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.
1. நம் தலைவர், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும்போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
2. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள். காம்பவுண்டு சுவர்கள், மரங்கள், மின்விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts). மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்). கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உயரமான இடங்களின் மேலே கண்டிப்பாக ஏறக் கூடாது.
3. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
4. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.
5. காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
6. வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்களைக் கண்டிப்பாக நிறுத்தக் கூடாது.
7. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.
8. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அல்லது அங்கே செல்லும் வழிகள் மற்றும் திரும்பி வரும் வழிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால். அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
9. உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.
10. நம் கழகத் தலைவரின் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போதும், தலைவரின் வருகை உள்ளிட்டவற்றின்போதும் கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மாருதி இன்விக்டோவும் பாதுகாப்பில் வலுவாக பொருத்தப்பட்டுள்ளது.
- இந்திய சந்தையில் இன்விக்டோ மாடல் மாருதியின் வரிசையில் ஒரு பிரீமியம் MPV ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
பாரத் NCAP சோதனைகளில், மாருதி சுசுகி இன்விக்டோ 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைக் பெற்றுள்ளது. மாருதி இன்விக்டோ ஆல்பா+ 7-சீட்டர் மற்றும் ஜீட்டா+ 8-சீட்டர் வேரியண்ட்களில் சோதிக்கப்பட்ட இன்விக்டோ, விசாலமானதாகவும் வசதியாகவும் இருப்பது மட்டுமல்லாமல், பாதுகாப்பிலும் பெரியதாக இருப்பதைக் காட்டியது.
இன்விக்டோ மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பிற்காக 32 இல் 30.43 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்காக 49 இல் 45 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பான கார் கிளப்பின் ஒரு பகுதியாக அமைந்தது.
பயணிகள் பாதுகாப்பு மதிப்பீடு: 30.43/32 – கிட்டத்தட்ட குறைபாடற்றது
முன்பக்க ஆஃப்செட் விபத்து சோதனையில் இன்விக்டோ சிறப்பாக செயல்பட்டது, ஓட்டுநர் மற்றும் பயணி இருவரின் தலை, கழுத்து, முழங்கால்களை பாதுகாத்தது. ஓட்டுநரின் மார்பு "போதுமானதாக" இருந்தது, மீதமுள்ளவை "நல்லதாக" இருந்தன. இருப்பினும், முக்கியமான விஷயம் என்னவென்றால், பாடிஷெல் மற்றும் ஃபுட்வெல் ஆகியவை இன்விக்டோவின் திடமான கட்டமைப்பை பிரதிபலிக்கும் வகையில் நிலையானதாக உள்ளன.
இன்விக்டோ அனைத்து முக்கிய பகுதிகளிலும் "நல்ல" பாதுகாப்புடன் பக்கவாட்டு சோதனையில் சிறப்பாக செயல்பட்டது. கடினமான பக்கவாட்டு கம்பத்தில் சோதிக்கப்பட்டபோதும், அது சிறப்பாக செயல்பட்டது, பக்கவாட்டு விபத்துகளின் போது MPVகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நிரூபிக்கிறது.
குழந்தை பயணி பாதுகாப்பு மதிப்பீடு: 45/49 – மிகவும் நல்லது
பின்புறமாக எதிர்கொள்ளும் ISOFIX மவுண்ட்களை தரநிலையாகக் கொண்டு, 18 மாதங்கள் மற்றும் 3 ஆண்டுகள் பின்புறமாக எதிர்கொள்ளும் டம்மிகளுடன் சோதிக்கப்பட்ட நிலையில், இன்விக்டோ டைனமிக் கிராஷ் செயல்திறனில் அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றது. பக்கவாட்டு மற்றும் முன்பக்க தாக்கங்கள் சரியான மதிப்பெண் பெற்றன.
மாருதி இன்விக்டோவும் பாதுகாப்பில் வலுவாக பொருத்தப்பட்டுள்ளது. அடிப்படை பாதுகாப்பை வலியுறுத்தும் ஒரு திடமான தொகுப்புடன் முன், பக்க மற்றும் திரைச்சீலைகளைப் பாதுகாக்கும் ஆறு ஏர்பேக்குகள் அனைத்து வகைகளிலும் நிலையானவை. இது பயணி பாதுகாப்பை முழுமையாக்குகிறது.
அனைத்து டிரிம்களிலும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) கிடைக்கிறது மற்றும் கடினமான ஓட்டுநர் சூழ்நிலைகளில் வாகனம் நிலையாக இருக்க உதவுகிறது.
இன்விக்டோ ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்) உடன் வரவில்லை என்றாலும், அதன் உத்தி நடைமுறைக்குரியது. அதன் வகுப்பிற்குள் உள்ள அனைத்து வேரியண்ட்களிலும் அனைத்து அடிப்படை பாதுகாப்பு அத்தியாவசியங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்திய சந்தையில் இன்விக்டோ மாடல் மாருதியின் வரிசையில் ஒரு பிரீமியம் MPV ஆக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.24.97 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ.28.61 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் டாடா சஃபாரி ஆகியவற்றுடன் அதன் டாப் எண்ட் மாடல்களுடன் நேரடியாக போட்டியிடுகிறது.
- முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
- வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான OG படம் நேற்று (செப்டம்பர் 25) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ.167 கோடியை கடந்தது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
விமர்சனங்கள் இருந்தபோதிலும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு படம் மிகவும் திருப்தியளிக்கக்கூடியதாக உள்ளது.
ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருவதாக படத்தின் கதை நகர்கிறது. வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.
- இட்லி கடை மாதம்பட்டி ரங்கராஜ் கதை என செய்திகள் பரவி வந்தன.
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படம் வருகிற 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ஆடியோ ரலீஸ் சென்னையில் நடைபெற்றது. டிரைலர் கோவையில் வெளியிடப்பட்டது.
ரிலீஸ்க்கு முந்தைய புரமோசனில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதுரையில் இட்லி கடையின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வடசென்னை 2 ஆம் பாகம் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும். 2027-ல் படம் ரிலீஸ் ஆகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இன்று திருச்சியில் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யூடியூப் பிரபலம் சுதாகர் மற்றும் கோபி ஆகியோர் தனுஷிடம் கேள்வி கேட்டனர்.
தனுஷிடம் கோபி "கோவை பக்கம் செஃப் ஒருவர் இருக்கிறார். அவருடைய கதையைத்தான் படமாக எடுத்துள்ளீர்கள் என்கிறார்கள். உண்மையா?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தனுஷ் "அந்த மாதிரில்லாம் இல்லங்க. சொந்த கற்பனைதான். என் கிராமத்தில் பார்த்த ஒருசில காதாபத்திரங்கள் என மனச பாதித்தது. அதை பயன்படுத்தி சொந்தமான கதை. கற்பனைக் கதை. ஒரிஜினல் கதாபாத்திரங்கள்" எனப் பதில் அளித்தார்.
இட்லி கடை படத்தின் டிரைலர் கோவையில் வெளியான போது, தனுஷ் படத்தையும், மாதம்பட்டி ரங்கராஜ் படத்தையும் இணைத்து நெட்டிசன்கள், மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறுதான் இட்லி கடை படம் எனத் தெரிவித்து வந்தனர்.
- நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன்.
- அ.தி.மு.க.விடம் இருந்து 2 இட்லி தி.மு.க.விடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார்.
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் 13 கோடி மக்கள்தொகை கொண்ட இனம் தமிழ் இனம். சோழன் பல்வேறு நாடுகளை படை எடுத்து வெற்றி கண்டாலும் புலி கொடியை ஏற்றினார். ஆனால் இனக்கொடியை ஏற்றவில்லை. இதனால் தமிழ் இனத்துக்கு நாடு இல்லாமல் போனது.
தாயகத்தின் விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த திலீபனின் வழியில் எங்களது இலக்கை அடைவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.
சென்னையில் தமிழக அரசு நடத்திய கல்வி விழா பாடல் வெளியீட்டு விழா போன்றே நடைபெற்று முடிந்துள்ளது. இந்த அரசு விளம்பர மாடல் அரசாகவே செயல்பட்டு வருகிறது.
அந்த விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு கல்வியாளர்களை ஏன் அழைக்கவில்லை.. கல்வி வளர்ச்சி பற்றி தமிழக அரசு பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.
இன்றைக்கு பள்ளிப் படிப்பை படித்த பிறகும் மாணவர்கள் தமிழ் எழுத முடியாமல் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழக அரசின் கல்வி சாதனையாகும்.
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 ஆட்சிகளிலும் தொழில் முதலீடு தொடர்பாக என்ன சாதித்து விட்டார்கள். ஒன்றுமே கிடையாது.
வெளிநாட்டில் இருந்து வரும் முதலாளிகள் மக்கள் நலனையா பார்ப்பார்கள். அவர்கள் லாப நோக்கோடு தான் செயல்படுவார்கள். என்னுடைய காருக்கு 5 லட்சம் சாலை வரி கட்டி உள்ளேன். பின்னர் எதற்காக சுங்கச்சாவடிகளை வைத்து கட்டணம் வசூலிக்கிறீர்கள். எங்களையெல்லாம் இதுபோன்று ஏமாற்ற முடியாது.
நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன். எனது உள்ளங்கையிலேயே அனைத்து விவரங்களும் உள்ளன. தமிழக அரசு அனைத்து இடங்களுக்குமே கருணாநிதியின் பெயரை வைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த பெயரை எல்லாம் மாற்றுவோம்.
விஜய் தற்போது பிரசாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டி கொண்டு இருக்கிறார்.
அ.தி.மு.க.விடம் இருந்து 2 இட்லி தி.மு.க.விடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார். அண்ணா, எம்.ஜி.ஆர். என இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமைதோறும் விஜய் சென்று வருகிறார்.
மண்ணரிப்பா மீன் அரிப்பா என்பதை கூட அவரால் புரிந்து படிக்க முடியவில்லை. அவரால் எழுதிக் கொடுத்ததை கூட ஒழுங்காக படிக்க முடியவில்லை.
செல்லும் இடங்களில் எல்லாம் சொன்னார்களே செய்தார்களா சொன்னார்களே செய்தார்களா என்று கேட்டால் மட்டும் போதுமா? மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாமா?
பிப்ரவரி மாதம் வரையில் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவித்திருக்கிறார் அது அவரது விருப்பம். அண்ணனின் பேச்சை கேட்காவிட்டாலும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 30-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இதுவரை 254 புதிய 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன.
- மீதமுள்ள டவர்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுவப்படும்.
சென்னை:
இந்தியா முழுவதும் 4ஜி சேவை நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. ஒடிசாவில் பிரதமர் மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் மற்றும் சென்னை தொலை பேசி தலைமை பொது மேலாளர் எஸ்.பார்த்திபன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
டிஜிட்டல் பாரத் நிதியத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவைகள் வழங்கப்படும். தமிழகத்தில் 4ஜி சேவை வழங்க 620 கிராமங்கள் கண்டறியப்பட்டன. அதில் 222 கிராமங்களில் புதிய டவர்களும் மற்றும் 35 கிராமங்களில் உள்ள 2ஜி டவர்கள் மேம்படுத்தவும் மொத்தம் 289 கிராமங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் ஒத்துழைப்புடன் 188 வருவாய் கிராமங்களிலும் வனப்பகுதியில் உள்ள 21 கிராமங்களிலும் மொத்தம் 29 இடங்களில் 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 19 கிராமங்களில் உள்ள மொபைல் டவர்கள் 4ஜி சேவை வழங்க தரம் உயர்த்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நீலகிரி, சத்தியமங்கலம், கொல்லிமலை, ஏற்காடு, பச்சமலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, ஜருகுமலை, மார்த்தாண்டம் பில்லிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொலைதூர மலை கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து 4ஜி டவர் உள்ள இடங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மொபைல் சேவை வழங்குவதற்காக சூரிய ஒளி மின்சாரம், பேட்டரி பவர் பிளாண்ட் ஜெனரேட்டர் ஆகிய கருவிகள் நிறுவப்பட இருக்கிறது.
இதுவரை 254 புதிய 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள டவர்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுவப்படும்.
நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4ஜி கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் பி.எஸ்.என்.எல். விரைவான முன்னேற்றம் தன்னம்பிக்கை மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சக்தி வாய்ந்த சான்றாக திகழ்கிறது.
இந்த நெட்வொர்க்கின் வேகம் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் பாதுகாப்பான அதிவேக நம்பகமான மொபைல் சேவையை வழங்குவதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






