என் மலர்
தலைப்புச்செய்திகள்
- முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
- வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து பவன் கல்யாண் ஓஜி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகிய படங்களை இயக்கிய சுஜித் இப்படத்தை இயக்கியுள்ளார்.
பவன் கல்யாணுடன் பிரியங்கா அருள் மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான OG படம் நேற்று (செப்டம்பர் 25) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்பதிவிலேயே ரூ.100 கோடி வசூலித்து ஓஜி சாதனை படைத்திருந்தது.
இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் உலகளவில் ரூ.167 கோடியை கடந்தது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
விமர்சனங்கள் இருந்தபோதிலும் பவன் கல்யாண் ரசிகர்களுக்கு படம் மிகவும் திருப்தியளிக்கக்கூடியதாக உள்ளது.
ஒரு மிகப்பெரிய கேங்ஸ்டர் ஒரு முக்கியமான மிஷனுக்காக மும்பை வருவதாக படத்தின் கதை நகர்கிறது. வயலன்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் வழங்கப்பட்டது.
படத்தின் இசையை தமன் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை ரவி கே சந்திரன் மற்றும் மனோஜ் பரமஹம்சா இணைந்து செய்துள்ளனர்.
- இட்லி கடை மாதம்பட்டி ரங்கராஜ் கதை என செய்திகள் பரவி வந்தன.
தனுஷ் இயக்கி நடித்துள்ள படம் இட்லி கடை. இந்த படம் வருகிற 1ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் ஆடியோ ரலீஸ் சென்னையில் நடைபெற்றது. டிரைலர் கோவையில் வெளியிடப்பட்டது.
ரிலீஸ்க்கு முந்தைய புரமோசனில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதுரையில் இட்லி கடையின் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வடசென்னை 2 ஆம் பாகம் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும். 2027-ல் படம் ரிலீஸ் ஆகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இன்று திருச்சியில் புரமோசன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யூடியூப் பிரபலம் சுதாகர் மற்றும் கோபி ஆகியோர் தனுஷிடம் கேள்வி கேட்டனர்.
தனுஷிடம் கோபி "கோவை பக்கம் செஃப் ஒருவர் இருக்கிறார். அவருடைய கதையைத்தான் படமாக எடுத்துள்ளீர்கள் என்கிறார்கள். உண்மையா?" எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தனுஷ் "அந்த மாதிரில்லாம் இல்லங்க. சொந்த கற்பனைதான். என் கிராமத்தில் பார்த்த ஒருசில காதாபத்திரங்கள் என மனச பாதித்தது. அதை பயன்படுத்தி சொந்தமான கதை. கற்பனைக் கதை. ஒரிஜினல் கதாபாத்திரங்கள்" எனப் பதில் அளித்தார்.
இட்லி கடை படத்தின் டிரைலர் கோவையில் வெளியான போது, தனுஷ் படத்தையும், மாதம்பட்டி ரங்கராஜ் படத்தையும் இணைத்து நெட்டிசன்கள், மாதம்பட்டி ரங்கராஜின் வாழ்க்கை வரலாறுதான் இட்லி கடை படம் எனத் தெரிவித்து வந்தனர்.
- நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன்.
- அ.தி.மு.க.விடம் இருந்து 2 இட்லி தி.மு.க.விடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார்.
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் 13 கோடி மக்கள்தொகை கொண்ட இனம் தமிழ் இனம். சோழன் பல்வேறு நாடுகளை படை எடுத்து வெற்றி கண்டாலும் புலி கொடியை ஏற்றினார். ஆனால் இனக்கொடியை ஏற்றவில்லை. இதனால் தமிழ் இனத்துக்கு நாடு இல்லாமல் போனது.
தாயகத்தின் விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த திலீபனின் வழியில் எங்களது இலக்கை அடைவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.
சென்னையில் தமிழக அரசு நடத்திய கல்வி விழா பாடல் வெளியீட்டு விழா போன்றே நடைபெற்று முடிந்துள்ளது. இந்த அரசு விளம்பர மாடல் அரசாகவே செயல்பட்டு வருகிறது.
அந்த விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு கல்வியாளர்களை ஏன் அழைக்கவில்லை.. கல்வி வளர்ச்சி பற்றி தமிழக அரசு பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.
இன்றைக்கு பள்ளிப் படிப்பை படித்த பிறகும் மாணவர்கள் தமிழ் எழுத முடியாமல் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழக அரசின் கல்வி சாதனையாகும்.
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 ஆட்சிகளிலும் தொழில் முதலீடு தொடர்பாக என்ன சாதித்து விட்டார்கள். ஒன்றுமே கிடையாது.
வெளிநாட்டில் இருந்து வரும் முதலாளிகள் மக்கள் நலனையா பார்ப்பார்கள். அவர்கள் லாப நோக்கோடு தான் செயல்படுவார்கள். என்னுடைய காருக்கு 5 லட்சம் சாலை வரி கட்டி உள்ளேன். பின்னர் எதற்காக சுங்கச்சாவடிகளை வைத்து கட்டணம் வசூலிக்கிறீர்கள். எங்களையெல்லாம் இதுபோன்று ஏமாற்ற முடியாது.
நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன். எனது உள்ளங்கையிலேயே அனைத்து விவரங்களும் உள்ளன. தமிழக அரசு அனைத்து இடங்களுக்குமே கருணாநிதியின் பெயரை வைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த பெயரை எல்லாம் மாற்றுவோம்.
விஜய் தற்போது பிரசாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டி கொண்டு இருக்கிறார்.
அ.தி.மு.க.விடம் இருந்து 2 இட்லி தி.மு.க.விடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார். அண்ணா, எம்.ஜி.ஆர். என இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமைதோறும் விஜய் சென்று வருகிறார்.
மண்ணரிப்பா மீன் அரிப்பா என்பதை கூட அவரால் புரிந்து படிக்க முடியவில்லை. அவரால் எழுதிக் கொடுத்ததை கூட ஒழுங்காக படிக்க முடியவில்லை.
செல்லும் இடங்களில் எல்லாம் சொன்னார்களே செய்தார்களா சொன்னார்களே செய்தார்களா என்று கேட்டால் மட்டும் போதுமா? மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாமா?
பிப்ரவரி மாதம் வரையில் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவித்திருக்கிறார் அது அவரது விருப்பம். அண்ணனின் பேச்சை கேட்காவிட்டாலும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
28-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் முதல் 30-ந்தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 30-ந்தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- இதுவரை 254 புதிய 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன.
- மீதமுள்ள டவர்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுவப்படும்.
சென்னை:
இந்தியா முழுவதும் 4ஜி சேவை நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. ஒடிசாவில் பிரதமர் மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் மற்றும் சென்னை தொலை பேசி தலைமை பொது மேலாளர் எஸ்.பார்த்திபன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
டிஜிட்டல் பாரத் நிதியத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவைகள் வழங்கப்படும். தமிழகத்தில் 4ஜி சேவை வழங்க 620 கிராமங்கள் கண்டறியப்பட்டன. அதில் 222 கிராமங்களில் புதிய டவர்களும் மற்றும் 35 கிராமங்களில் உள்ள 2ஜி டவர்கள் மேம்படுத்தவும் மொத்தம் 289 கிராமங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் ஒத்துழைப்புடன் 188 வருவாய் கிராமங்களிலும் வனப்பகுதியில் உள்ள 21 கிராமங்களிலும் மொத்தம் 29 இடங்களில் 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 19 கிராமங்களில் உள்ள மொபைல் டவர்கள் 4ஜி சேவை வழங்க தரம் உயர்த்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நீலகிரி, சத்தியமங்கலம், கொல்லிமலை, ஏற்காடு, பச்சமலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, ஜருகுமலை, மார்த்தாண்டம் பில்லிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொலைதூர மலை கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து 4ஜி டவர் உள்ள இடங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மொபைல் சேவை வழங்குவதற்காக சூரிய ஒளி மின்சாரம், பேட்டரி பவர் பிளாண்ட் ஜெனரேட்டர் ஆகிய கருவிகள் நிறுவப்பட இருக்கிறது.
இதுவரை 254 புதிய 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள டவர்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுவப்படும்.
நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4ஜி கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் பி.எஸ்.என்.எல். விரைவான முன்னேற்றம் தன்னம்பிக்கை மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சக்தி வாய்ந்த சான்றாக திகழ்கிறது.
இந்த நெட்வொர்க்கின் வேகம் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் பாதுகாப்பான அதிவேக நம்பகமான மொபைல் சேவையை வழங்குவதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செல்கிறார்.
சென்னை:
துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்த 12-ந்தேதி பதவி ஏற்றுக்கொண்டார். துணை ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிற 4-ந்தேதி, முதல் முறையாக தமிழகம் வருகிறார். அவர் தமிழகத்தில் 2 நாட்கள் தங்கி இருக்கிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.
வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) சி.பி.ராதாகிருஷ்ணன் விமானம் மூலம் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க. சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அன்று அவர் சென்னையில் தங்கி இருக்கிறார். அப்போது பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசுகிறார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணுக்கு சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள அரங்கம் ஒன்றில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, பொதுமக்கள் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.
மறுநாள் 5-ந்தேதி துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவைக்கு செல்கிறார். கோவை விமான நிலையத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கோவையில் அவர் தனது வீட்டுக்கும் செல்கிறார். அன்று முழுவதும் அவர் கோவையில் தங்கி இருக்கிறார். அப்போது அங்குள்ள முக்கிய பிரமுகர்கள் பலரையும் அவர் சந்திக்கிறார். 5-ந்தேதி இரவு அல்லது 6-ந்தேதி காலையில் அவர் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனின் தமிழக சுற்றுப்பயண திட்டம் தயாராகி வருகிறது. இன்று அல்லது நாளை அவரது சுற்றுப்பயண திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
- தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
- அக்டோபர் 1-ந்தேதி அன்று தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' வெளியாக உள்ளது.
'மெரினா' திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார் சிவகார்த்திகேயன். அதற்கடுத்து தனுஷ் நடிப்பில் வெளியான '3' படத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார். அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் 'மனம் கொத்தி பறவை', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' திரைப்படங்களில் நடித்தாலும் மக்களிடையே கலவையான விமர்சனத்தை இப்படங்கள் பெற்றாலும் வணிக ரீதியாக பெரும் வசூல் செய்யவில்லை.
தனுஷ் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளார். அதில் சிவகார்த்திகேயன், அனிருத், செண்ட்ராயன், ரோபோ சங்கர் முக்கியமானவர்கள்.
2013 ஆம் ஆண்டு வெளியான 'எதிர் நீச்சல்' திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக அமைந்தது. இப்படத்தை தனுஷ் தயாரித்தார். அதையடுத்து நடந்த பல நிகழ்ச்சிகளிலும், விருது வழங்கும் விழாக்களில் , சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக செல்வதும், பல நேர்காணல்களில் ஒன்றாக கலந்து கொள்வதுமாக இருந்தனர்.
இப்படியாக சில வருடங்களுக்கு திரையுலகில் நல்ல நண்பர்களாக இருந்து வந்த இருவரும் சில மன கசப்புகளால் பிரிந்தனர். அதன் பிறகு இருவரும் எந்த நிகழ்விலும் ஒன்றாக கலந்துக் கொள்வதில்லை. இருவரும் பொதுவெளியில் அவர்களை பற்றி பேசுவதையும் நிறுத்திக் கொண்டனர்.
இதற்கிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற 'கொட்டுக்காளி' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் பேசியது சர்ச்சையை எழுப்பியது. அவர் பேசுகையில், " நான் யாருக்கும் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்ல மாட்டேன், ஏன்னென்றால் என்னை அப்படி பழக்கிவிட்டார்கள்" என பேசியது சர்ச்சையானது.
இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. முன்னதாக 'மதராஸி' அமேசான் ஓ.டி.டி. தளத்தில் அக்டோபர் 3-ந்தேதி வெளியாகலாம் என கூறப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 1-ந்தேதியே வெளியாக உள்ளது.
அக்டோபர் 1-ந்தேதி அன்று தனுஷ் இயக்கி, நடித்துள்ள 'இட்லி கடை' வெளியாக உள்ளது. இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் 'மதராஸி' படத்தை ஓ.டி.டி.யில் அன்றைய தினமே வெளியிட்டு நடிகர் தனுஷை குறி வைக்கிறாரா என பேச்சுகளும், கமெண்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஸ்கூட்டர் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
- மாடல் தனிப்பட்ட பயணத்திற்கு மட்டுமல்ல, சிறு வணிகங்கள் மற்றும் சரக்கு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக அமைகிறது.
கைனடிக் கிரீன் எனர்ஜி அண்ட் பவர் சொல்யூஷன்ஸ் புதிய E லூனா பிரைம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய E லூனா பிரைம் மாடல் ரூ. 82,490 (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த மின்சார ஸ்கூட்டர் 110 கிலோமீட்டர் மற்றும் 140 கிலோமீட்டர் என இருவித ரேஞ்ச் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய E லூனா பிரைம், பயணிகள் பிரிவுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடல் வழக்கமான 100 சிசி மற்றும் 110 சிசி பெட்ரோல் மோட்டார்சைக்கிள்களுக்கு எதிராக நிலைநிறுத்தப்படுகிறது.
புதிய E லூனா பிரைம் மாடலில் 16 இன்ச் அலாய் வீல்கள், பிரகாசமான எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஸ்போர்ட்டியான ஒற்றை இருக்கை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல விசாலமான பகுதி ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த மாடல் தனிப்பட்ட பயணத்திற்கு மட்டுமல்ல, சிறு வணிகங்கள் மற்றும் சரக்கு பயன்பாட்டிற்கும் ஏற்றதாக அமைகிறது. இந்த ஸ்கூட்டர் ஆறு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
கரடுமுரடான நிலப்பரப்புகளுக்கு நீடித்து உழைக்கும் அதே வேளையில், செயல்திறன் மற்றும் வசதியையும் பராமரிக்கும் வகையில் E லூனா பிரைம் இருக்கும் என்று கைனடிக் கிரீன் கூறுகிறது. இந்தியா முழுவதும் 300க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்களை கொண்ட நிறுவனம், E லூனா பிரைம் மாடல் பரவலாகக் கிடைக்கச் செய்யத் திட்டமிட்டுள்ளது.
- எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!
- உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற விழா நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழா மேடையில், 'நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்று தனது முதல் மாத சம்பளத்தை தந்தையிடம் வழங்கிய பிரேமா பேசுகையில், தந்தை ஒழுகும் வீட்டில் இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில், மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!
எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள்!
உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் அமைப்புகள் வலியுறுத்தி இருந்தன.
2025-26 ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி தணிக்கை அறிக்கைகளை (TARs) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 ஆக இருந்த காலக்கெடுவை அக்டோபர் 31, 2025 வரை ஒரு மாதம் நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பல்வேறு வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஆகியவற்றை காரணம் காட்டி அவகாசத்தை நீட்டிக்க பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் அமைப்புகள் வலியுறுத்தி இருந்தன.
மேலும் தணிக்கை அறிக்கை தாக்களுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க ராஜஸ்தான், கர்நாடக உயர் நீதிமன்றங்களும் உத்தரவிட்டிருந்தன. இதையடுத்து கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
- நரேந்திர மோடி... தைரியமாக இருங்கள், டிரம்பின் அறிக்கையை எதிர்க்கவும்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது.
2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
50 சதவீத வரி உள்ளிட்ட நடவ்டிக்கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின் அளித்த பேட்டியில் இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
காங்கிரசின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட விமர்சன பதிவில்,
மோடியின் "அன்பான நண்பர்" டிரம்ப், பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிரை ஒரு சிறந்த மனிதர் என்று வர்ணித்துள்ளார்.
இந்திய குடிமக்களின் கொலைகளைத் திட்டமிட்டு இந்தியாவுக்கு எதிராக விஷத்தைக் கக்கிய அதே அசிம் முனிர் இவர்தான்.
நரேந்திர மோடி... தைரியமாக இருங்கள், டிரம்பின் அறிக்கையை எதிர்க்கவும்.
நாடுதான் முதலில் முக்கியம், நட்பு அல்ல." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசரித்துள்ளார்.
- 2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
80வது ஐ.நா. பொதுச்சபை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கூடியது. கடந்த 21ஆம் தேதி தொடங்கிய கூட்டம் 29 சாம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கிடையே காசா பிரச்சனை உள்ளிட்டவை தொடர்பாக முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்வர்களில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபும் ஒருவர் ஆவார்.
இந்த சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோரை வியாழக்கிழமை வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்திற்கு அழைத்து டிரம்ப் உபசிர்த்துள்ளார்.
இதன்போது இருநாட்டு உறவுகள்,வருங்கால திட்டங்கள் குருத்து பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிகிறது. சந்திப்புக்கு முன் அவர்கள் இருவரையும் டிரம்ப் ஒரு மணி நேரம் காக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.
2019 க்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர் வெள்ளை மாளிகை செல்வது இதுவே முதல் முறை.
50 சதவீத வரி உள்ளிட்ட நடவ்டிக்கைகளால் இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் டிரம்ப் அண்மை காலங்களாக பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வரும் சூழலில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்புக்கு பின், இருவரையும் சிறந்த மனிதர்கள் என டிரம்ப் விவரித்துள்ளார்.






