என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமைதோறும் வரும் விஜய் - சீமான் விளாசல்
- நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன்.
- அ.தி.மு.க.விடம் இருந்து 2 இட்லி தி.மு.க.விடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார்.
சென்னை:
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகம் முழுவதும் 13 கோடி மக்கள்தொகை கொண்ட இனம் தமிழ் இனம். சோழன் பல்வேறு நாடுகளை படை எடுத்து வெற்றி கண்டாலும் புலி கொடியை ஏற்றினார். ஆனால் இனக்கொடியை ஏற்றவில்லை. இதனால் தமிழ் இனத்துக்கு நாடு இல்லாமல் போனது.
தாயகத்தின் விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் உயிர் நீத்த திலீபனின் வழியில் எங்களது இலக்கை அடைவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.
சென்னையில் தமிழக அரசு நடத்திய கல்வி விழா பாடல் வெளியீட்டு விழா போன்றே நடைபெற்று முடிந்துள்ளது. இந்த அரசு விளம்பர மாடல் அரசாகவே செயல்பட்டு வருகிறது.
அந்த விழாவில் கலந்து கொண்டு பேசுவதற்கு கல்வியாளர்களை ஏன் அழைக்கவில்லை.. கல்வி வளர்ச்சி பற்றி தமிழக அரசு பேசுவதற்கு எந்த தகுதியும் கிடையாது.
இன்றைக்கு பள்ளிப் படிப்பை படித்த பிறகும் மாணவர்கள் தமிழ் எழுத முடியாமல் கிளறிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் தமிழக அரசின் கல்வி சாதனையாகும்.
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய 2 ஆட்சிகளிலும் தொழில் முதலீடு தொடர்பாக என்ன சாதித்து விட்டார்கள். ஒன்றுமே கிடையாது.
வெளிநாட்டில் இருந்து வரும் முதலாளிகள் மக்கள் நலனையா பார்ப்பார்கள். அவர்கள் லாப நோக்கோடு தான் செயல்படுவார்கள். என்னுடைய காருக்கு 5 லட்சம் சாலை வரி கட்டி உள்ளேன். பின்னர் எதற்காக சுங்கச்சாவடிகளை வைத்து கட்டணம் வசூலிக்கிறீர்கள். எங்களையெல்லாம் இதுபோன்று ஏமாற்ற முடியாது.
நான் எதையும் எழுதி வைத்து படிக்க மாட்டேன். எனது உள்ளங்கையிலேயே அனைத்து விவரங்களும் உள்ளன. தமிழக அரசு அனைத்து இடங்களுக்குமே கருணாநிதியின் பெயரை வைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த பெயரை எல்லாம் மாற்றுவோம்.
விஜய் தற்போது பிரசாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டி கொண்டு இருக்கிறார்.
அ.தி.மு.க.விடம் இருந்து 2 இட்லி தி.மு.க.விடமிருந்து 2 இட்லி என எடுத்துக் கொண்டு செயல்படும் அவர் எப்படி மாற்றத்தை ஏற்படுத்துவார். அண்ணா, எம்.ஜி.ஆர். என இரண்டு சனியன்களை கையில் எடுத்துக்கொண்டு சனிக்கிழமைதோறும் விஜய் சென்று வருகிறார்.
மண்ணரிப்பா மீன் அரிப்பா என்பதை கூட அவரால் புரிந்து படிக்க முடியவில்லை. அவரால் எழுதிக் கொடுத்ததை கூட ஒழுங்காக படிக்க முடியவில்லை.
செல்லும் இடங்களில் எல்லாம் சொன்னார்களே செய்தார்களா சொன்னார்களே செய்தார்களா என்று கேட்டால் மட்டும் போதுமா? மக்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாமா?
பிப்ரவரி மாதம் வரையில் விஜய் பிரசாரம் செய்வதாக அறிவித்திருக்கிறார் அது அவரது விருப்பம். அண்ணனின் பேச்சை கேட்காவிட்டாலும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






