என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் மலை கிராமங்கள் உள்பட அனைத்து பகுதிகளுக்கும் 4ஜி சேவை- பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்
- இதுவரை 254 புதிய 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன.
- மீதமுள்ள டவர்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுவப்படும்.
சென்னை:
இந்தியா முழுவதும் 4ஜி சேவை நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. ஒடிசாவில் பிரதமர் மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக பி.எஸ்.என்.எல். தமிழ்நாடு வட்டம் மற்றும் சென்னை தொலை பேசி தலைமை பொது மேலாளர் எஸ்.பார்த்திபன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
டிஜிட்டல் பாரத் நிதியத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவைகள் வழங்கப்படும். தமிழகத்தில் 4ஜி சேவை வழங்க 620 கிராமங்கள் கண்டறியப்பட்டன. அதில் 222 கிராமங்களில் புதிய டவர்களும் மற்றும் 35 கிராமங்களில் உள்ள 2ஜி டவர்கள் மேம்படுத்தவும் மொத்தம் 289 கிராமங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் ஒத்துழைப்புடன் 188 வருவாய் கிராமங்களிலும் வனப்பகுதியில் உள்ள 21 கிராமங்களிலும் மொத்தம் 29 இடங்களில் 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டு உள்ளன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 19 கிராமங்களில் உள்ள மொபைல் டவர்கள் 4ஜி சேவை வழங்க தரம் உயர்த்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் நீலகிரி, சத்தியமங்கலம், கொல்லிமலை, ஏற்காடு, பச்சமலை, கல்வராயன் மலை, ஜவ்வாது மலை, ஜருகுமலை, மார்த்தாண்டம் பில்லிகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொலைதூர மலை கிராமங்களுக்கு 4ஜி சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் அனைத்து 4ஜி டவர் உள்ள இடங்களில் 24 மணி நேரமும் தடையில்லா மொபைல் சேவை வழங்குவதற்காக சூரிய ஒளி மின்சாரம், பேட்டரி பவர் பிளாண்ட் ஜெனரேட்டர் ஆகிய கருவிகள் நிறுவப்பட இருக்கிறது.
இதுவரை 254 புதிய 4ஜி மொபைல் டவர்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள டவர்கள் அனைத்தும் டிசம்பர் மாதத்திற்குள் நிறுவப்படும்.
நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 4ஜி கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் பி.எஸ்.என்.எல். விரைவான முன்னேற்றம் தன்னம்பிக்கை மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஒரு சக்தி வாய்ந்த சான்றாக திகழ்கிறது.
இந்த நெட்வொர்க்கின் வேகம் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் பாதுகாப்பான அதிவேக நம்பகமான மொபைல் சேவையை வழங்குவதற்கான அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வழங்குகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






