என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
- விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் சாலை மைய தடுப்பு மற்றும் லாரி மீது மோதி கார் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை கொளத்தூரில் இருந்து கேரளாவுக்கு காரில் பயணம் செய்த சம்சுதீன், ரிசி, மோகன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த அப்துல் அஜீஸ், தீபக் ஆகிய இருவரும் காயங்களுடன் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் நடத்திய விசாரணையில், தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- நன்னிலம் வட்டம் கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது.
- விஜயதசமி நாளில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியை தொடங்கும் சடங்குகளும் நடத்தப்படுவது வழக்கம்.
நவராத்திரி பண்டிகையின் நிறைவாக சரஸ்வதி பூஜை, விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நேற்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது. அக்டோபர் 2-ந்தேதியான இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது. ஒட்டக்கூத்தரால் பாடல் பெற்ற தலமான இங்கு ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி விழா விமரிசையாக நடைபெறும்.
இன்று கல்வி, கலைகள், தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை வைத்து வழிபடுவது வழக்கம். இதனால் சரஸ்வதி தேவியின் அருளால் தொழில்கள் சிறப்படையும், வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படும், தொடங்கும் செயல்களில் வெற்றி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
விஜயதசமி நாளில் வித்யாரம்பம் எனப்படும் குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வியை தொடங்கும் சடங்குகளும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோவிலில் வித்யாரம்பம் வழிபாடு நடந்தது. நெல்மணியில் 'அ' என எழுத வைத்து குழந்தைகளுக்கு கற்றலை பெற்றோர் தொடங்கி வைத்தனர்.
- குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குலசேகரன்பட்டினம்:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
8-ம் திருவிழாவான நேற்று காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
இரவில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலத்தில் அம்மன் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
9-ம் திருவிழாவான நேற்று இரவில் அம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் கல்வி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த நிலையில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர சம்ஹாரம் 10-ம் திருவிழாவான இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி காலையில் 6 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.
இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்ற பிறகு, இரவு 12 மணிக்கு அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவில் முன்பாக எழுந்தருளி மகிஷா சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நள்ளிரவு 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது. 2 மணிக்கு அம்மன் சிதம்பரேசுவரர் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.
நாளை அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிதம்பரேஸ்வரர் கோவில் அபிஷேக மேடையில் வைத்து அபிஷேக ஆராதனை நடைபெறும். அதன்பிறகு அம்மன் திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தேர் நிலைக்கு வந்தவுடன் அதிகாலை 5 மணிக்கு கோவில் கலையரங்கத்தில் அம்மன் எழுந்தருளி அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகிறது.
- டிவிஎஸ் XL100 ஹெவி டியூட்டி 16-இன்ச் அலாய் வீல்களுடன் டியூப்லெஸ் டயர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
- கிரே, புளூ மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் வழங்கப்படுகிறது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அதன் பயன்பாட்டு இரு சக்கர வாகனமான XL100 ஹெவி டியூட்டியின் புதிய டாப்-எண்ட் அலாய் வீல் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ரூ. 59,800 (எக்ஸ்-ஷோரூம்) விலையில், இந்த வேரியண்ட் அறிமுகமாகி இருக்கிறது.
புதிய வேரியண்ட் அதன் தோற்றம், பாதுகாப்பு மற்றும் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பல புது அம்சங்களைக் கொண்டுவருகிறது. டிவிஎஸ் XL100 ஹெவி டியூட்டி 16-இன்ச் அலாய் வீல்களுடன் டியூப்லெஸ் டயர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய வயர்-ஸ்போக் அமைப்பை மாற்றுவது மட்டுமல்லாமல், எளிதாக பஞ்சர் பழுதுபார்க்கும் கூடுதல் வசதியையும் வழங்குகிறது.
XL100 ஹெவி டியூட்டி புது வேரியண்டில் LED ஹெட்லைட், டைப்-ஏ யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், என்ஜின் கில் ஸ்விட்ச் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்டர் ஆகிய வசதிகளும் உள்ளன. இயந்திர ரீதியாக, இது 4bhp மற்றும் 6.5Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 99.7cc, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது ஒற்றை-வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் XL100 ஹெவி டியூட்டி 4 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவையும் 89 கிலோ எடையையும் கொண்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 58 கிலோமீட்டர்கள் ஆகும். இது கிரே, புளூ மற்றும் ரெட் என மூன்று வித நிறங்களில் வழங்கப்படுகிறது.
- மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
- ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
புதுடெல்லி:
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 156-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாத்மா காந்தியின் நினைவிடங்களில் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், டெல்லியில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர்களும் மரியாதை செலுத்தினர்.
- ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
- ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கிய முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் மக்களை சென்றடைவதை கண்காணிக்கும் முறையிலும், கட்சி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் இந்த சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ராமநாதபுரம் செல்கிறார். ராமநாதபுரத்தில் கள ஆய்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்க உள்ளார். பேருந்து நிலையம், அறிவுசார் மையம், சமூக நீதி மையம் உள்ளிட்டவற்றை அவர் திறந்து வைக்கிறார்
ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார்.
முதலமைச்சர் பயணத்தின் எதிரொலியாக இன்றும், நாளையும் அங்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- தீமை மற்றும் பொய்யின் மீது நன்மை மற்றும் நீதியின் வெற்றியை விஜய தசமி கொண்டாடுகிறது.
- தைரியம், ஞானம் மற்றும் பக்தி எப்போம் நம் பாதைகளை வழிநடத்தட்டும்.
புதுடெல்லி :
நாடு முழுவதும் இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தீமை மற்றும் பொய்யின் மீது நன்மை மற்றும் நீதியின் வெற்றியை விஜய தசமி கொண்டாடுகிறது. தைரியம், ஞானம் மற்றும் பக்தி எப்போம் நம் பாதைகளை வழிநடத்தட்டும்.
எனது சக இந்தியர்களுக்கு இனிய விஜய தசமி வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
- ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் தேர்,
- குழந்தைகள் கல்வி தொடங்க உகந்த நாள்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-16 (வியாழன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : தசமி பிற்பகல் 3.45 வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம் : உத்திராடம் காலை 6.52 வரை பிறகு திருவோணம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : பகல் 1.30 முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : நண்பகல் 12.30 முதல் 1.30 வரை மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை
குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா
ஒப்பிலியப்பன் கோவில் சீனிவாசர் தேர், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா சூரசம்ஹாரம், விஜயதசமி, குழந்தைகள் கல்வி தொடங்க உகந்த நாள்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மகிழ்ச்சி
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-பகை
கடகம்-மறதி
சிம்மம்-அச்சம்
கன்னி-நலம்
துலாம்- முயற்சி
விருச்சிகம்-நன்மை
தனுசு- அனுகூலம்
மகரம்-நட்பு
கும்பம்-போட்டி
மீனம்-பக்தி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பராசக்தி வழிபாட்டால் பலன் கிடைக்கும் நாள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். கடந்த சில நாட்களாக தாமதப்பட்டு வந்த காரியங்கள் இன்று துரிதமாக முடியும்.
ரிஷபம்
நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். நாட்டுப்பற்றுமிக்க நண்பர் ஒருவரால் உங்கள் வீட்டுத் தேவைகள் விரைவாக நடைபெறும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள்.
மிதுனம்
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும் பயணங்களில் கூடுதல் கவனம் தேவை.
கடகம்
ஆலய வழிபாட்டால் அமைதி கூடும் நாள். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிவீர்கள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகலாம். விரயங்கள் அதிகரிக்கும்.
சிம்மம்
தேசப்பற்று மிக்கவர்களால் திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
கன்னி
ஆதாயம் அதிகரிக்கும் நாள். இல்லத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெறும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.
துலாம்
வாக்குவாதங்களைத் தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
விருச்சிகம்
அம்பிகை வழிபாட்டால் இன்பம் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு உதவி செய்வர். பொருளாதார நிலை உயரும்.
தனுசு
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
மகரம்
இடம், பூமி வாங்கும் எண்ணம் மேலோங்கும் நாள். இல்லம் தேடி நல்ல தகவல் வரும். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். தொழில் வளர்ச் சிக்காக எடுத்த முயற்சி கைகூடும்.
கும்பம்
பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக செலவிடுவீர்கள்.
மீனம்
தெய்வ வழிபாட்டால் திருப்தி ஏற்படும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் நேர்மைக்கு பாராட்டு கிடைக்கும்.
- உத்தர பிரதேசத்தில் யானை ஒன்றை ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- யானை திருடு போனது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராஞ்சி:
சாதாரணமாக ஒரு பொருளைத் திருடுபவர்கள் மறைத்து வைக்கக்கூடிய அளவிலேயே சிறிய பொருட்களை மட்டுமே திருடுவார்கள். ஆனால் தற்போது ஒட்டகம், பஸ் போன்ற உருவத்தில் பெரியவற்றையும் திருடிச் செல்கிறார்கள் பலே திருடர்கள்.
இதற்கிடையே, உத்தர பிரதேசத்தில் மிகப் பெரிய யானையையே ஒரு கும்பல் திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர் நரேந்திர குமார் சுக்லா. இவர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஜெயமதி என்ற பெண் யானையை ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார். அங்குள்ள பலாமு மாவட்டத்தின் சுகூரில் யானையுடன் அவர் தங்கி இருந்தார்.
இந்நிலையில், அந்த யானை மாயமானது. இதுதொடர்பாக மேதினி நகர் போலீசில் நரேந்திர குமார் சுக்லா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, யானையை தேடி வந்தனர்.
பீகார் மாநிலம் சப்ராவில் ஒரு கும்பல் பெண் யானை ஒன்றை ரூ.27 லட்சத்துக்கு விற்றதாக ஜார்க்கண்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்த போலீசார் அங்கிருந்த யானையை மீட்டனர். அதே நேரம் யானையை திருடி விற்ற கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
- ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு உள்நாட்டு கலவரம் வெடித்தது.
- பிரதமர் அஷ்ரப் கனியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு உள்நாட்டு கலவரம் வெடித்தது. இதில் பிரதமர் அஷ்ரப் கனியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி அமைத்தனர்.
இதைத் தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகள், கடுமையான கட்டுப்பாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதும் இணைய சேவை திடீரென முடங்கியது. இதனால் அங்கு இணைய சேவையை பயன்படுத்தும் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மட்டுமின்றி இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தலைநகர் காபூலில் இணைய சேவை வழங்கும் நிறுவனம் சார்பில் பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள ஒளியியல் இழைகள் (ஆப்டிகல் பைபர் ஒயர்கள்) சேதப்படுத்தப்பட்டதே இதற்கு காரணம் என முதல்கட்டமாக தெரிய வந்துள்ளது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆளும் தலிபான் அரசின் தலையீடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை முதலிடத்தில் உள்ளது.
- நிதி மோசடி அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி
தேசிய குற்ற ஆவண காப்பகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் பதிவாகும் குற்ற வழக்குகளின் புள்ளிவிவரங்களை வெளியிடுவது வழக்கம்.
இந்நிலையில், பொருளாதாரம் மற்றும் சைபர் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வு முடிவுகளை சமீபத்தில் அந்த அமைப்பு வெளியிட்டது. அதன் விபரம் வருமாறு:
கடந்த 2023-ல் நம் நாட்டில் நிதி மோசடி அதிகம் நிகழ்ந்த மாநிலங்களில் 27,675 வழக்குகளுடன் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. தெலுங்கானா 26,321 வழக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 19,803 நிதி மோசடி வழக்குகளில் மகாஷ்டிரா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2023-ல் பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழ்ந்த பெருநகரங்களில் மும்பை 6,476 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது. இது, முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 484 வழக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. தெலுங்கானாவின் ஐதராபாத், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகியவை பொருளாதார குற்றங்கள் அதிகம் நிகழும் பெருநகரங்களின் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கடந்த 2023-ல் சைபர் குற்றங்கள் அதிகம் பதிவான நகரமாக கர்நாடகாவின் பெங்களூரு உள்ளது. இங்கு மட்டும் 17,631 வழக்குகள் பதிவானது தெரியவந்துள்ளது. தெலுங்கானாவின் ஐதராபாத் 4,855 வழக்குகளுடன் இரண்டாமிடத்திலும், மும்பை 4,131 வழக்குடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.






